உலகின் வேறெந்த நாகரிகங்களிலும் தென்படாத இந்துக்களின் பிரத்யேக வழக்கமான தீண்டாமை எனும் சமூக அருவருப்பு குறித்து மிக விரிவான ஆய்வை மேற்கொண்டிருக்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர். தீண்டத்தகாதவர்கள் எனும் வகுப்பினர் இருந்து வரும் நாகரிகத்தை - இந்து நாகரிகத்தை - நாகரிகம் என்று அழைப்பதற்கே அருகதையற்றது எனக் கடுமையாக சாடும் அம்பேத்கரின் முன்னுரையில் இருந்து தொடங்குகிறது இந்நூல் 'தீண்டத் தகாதவர்கள் யார்? அவர்கள் ஏன் தீண்டத் தகாதவர்கள் ஆக்கப்பட்டனர்?'.
"வேறு ஒரு நாடாக இருந்திருந்தால் இத்தகைய வகுப்பினர் இருந்து வருவது மனச்சான்றை குத்திக் குடைந்திருக்கும்; அவர்களது மரபு மூலம் பற்றி ஆழமான ஆய்வு நடந்திருக்கும். ஆனால் ஓர் இந்துவின் மனத்தில் இவை இரண்டுமே நிகழவில்லை. இதற்கான காரணம் வெளிப்படையானது, இந்த வகுப்பினர் இருந்து வருவதை இரங்கத் தக்கதாகவோ, அவமானகரமானதாகவோ கருதவில்லை." தீண்டாமை/ தீண்டத் தகாதவர்கள் குறித்து இந்திய ஆய்வுப் புலத்தில் ஏன் ஆய்வுகள் மேற்கொள்ளப் படவில்லை என்பதற்கு அம்பேத்கர் முன்வைக்கும் பதிலைத் தான் மேற்கோள் காட்டியிருக்கிறேன்.
இந்த ஆய்வின் மூலம் அவர் முன்வைக்கும் புதிய கோட்பாடுகளை முன்னுரையிலேயே குறிப்பிட்டுவிட்டு, அந்த கோட்பாடுகளை பின்வரும் இயல்களில் நிறுவியிருப்பார்.
இந்துக்களிடமும், இந்துக்கள் அல்லாதவர்களிடமும் பேணப்படும் தீண்டாமை குறித்து முதல் இரண்டு இயல்களில் விவாதிக்கப் படுகின்றன. உலகின் பிற பண்டைய சமுதாயங்களில் தூய்மைக்கேடு, தீட்டு, புனிதத்தன்மை கெடுதல், மாசுபடுதல், கறைப்படுத்தல் ஆகியவை குறித்த கண்ணோட்டமும், இவற்றை துடைத்தெறிவதற்கான வழிமுறைகளும் இருந்திருக்கின்றன. ஆனால் இந்த கண்ணோட்டங்கள் நிரந்தரமானவை அல்ல. அதாவது ஒரு குறிப்பிட்ட வகுப்பாரை நிரந்தரமான தீண்டாமைக்கு ஆட்படுத்துபவை அல்ல. இவை குறிப்பிட்ட நிகழ்வுகளில், சூழ்நிலைகளில் மட்டுமே தோன்றி மறைபவை. இவை தனிநபர்களையோ அல்லது அந்த நபருடன் சம்மந்தப் பட்டவர்களையோ மட்டுமே பாதிக்கக் கூடியவை. இவை அனைத்திற்கும் மாறாக இந்துக்கள் கடைபிடிக்கும் தீண்டாமை நிரந்தரமானது. அது குறிப்பிட்ட வகுப்பினர் மீது காலங்காலமாக சுமத்தப்பட்டு வருகிறது. இது மிகவும் கொடிய முறை.
தீண்டத் தகாதவர்களின் வாழ்நிலை, வாழ்விடம் குறித்து இயல்கள் 3, 4, 5 மற்றும் 6 ஆய்கின்றன. தீண்டத் தகாதவர்கள் கிராமத்துக்கு வெளியே வசிப்பது ஏன் எனும் கேள்விக்கு அம்பேத்கர் 'சிதறுண்ட பிரிவினர்' எனும் அனுமானக் கோட்பாட்டை முன்வைக்கிறார். நேரடியான ஆதாரங்கள் இல்லை என்றாலும் விடுபட்டுப் போன வரலாற்றுக் கண்ணிகளையும், வரலாற்றின் பல்வேறு சூழ்நிலைகளையும் இணைத்து தனது கோட்பாட்டை நிறுவுகிறார். இதன் மூலம் அவர் கண்டடையும் முடிவு: தீண்டத்தகாதவர்கள் தீண்டாமைக்கு ஆளாவதற்கு முன்பிருந்தே கிராமங்களுக்கு வெளியே வசித்து வந்திருக்கிறார்கள். அதாவது தீண்டாமை அவர்களை கிராமத்துக்கு வெளியே தள்ளவில்லை.
இன வேறுபாடு, இழிவான தொழில் ஆகியவற்றுக்கும், தீண்டாமையின் தோற்றத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதை உரிய சான்றாதாரங்களுடன் மறுக்கிறார். இழிவான தொழில்கள் அடிமைகளால் செய்யப்பட்டன. அடிமைகள் எல்லா வருணத்திலும் இருந்திருக்கிறார்கள். இன்று இழிவாகக் கருதப்படும் துப்புரவுத் தொழில்களை அன்று பார்ப்பனர் முதல் சூத்திரர் வரை அந்தந்த வர்ணத்தைச் சார்ந்த அடிமைகளே செய்து வந்துள்ளனர் என்று நாரத ஸ்மிருதி கூறுகிறது.
தீண்டாமைக்கான மூலகாரணங்களாக அம்பேத்கர் முன்வைப்பது பெளத்தர்கள் மீதான வெறுப்பும், மாட்டிறைச்சி உண்பதும் தான்.
1910ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது பின்பற்றப்பட்ட இந்துக்கள் அல்லாதவர்களை வேறுபடுத்திக் காட்டும் சோதனைகளில் பின்வருபவை தீண்டத் தகாதவர்களை குறிப்பவை: 1. பார்ப்பனர்களிடம் இருந்து மந்திரம் பெறாதவர்கள், 2. பார்ப்பனர்களை மதக்குருக்களாக பெற்றிராதவர்கள், 3. பார்ப்பன மதக்குருக்களை ஏற்காதவர்கள், 4. இந்து ஆலயங்களில் அனுமதிக்கப்படாதவர்கள் மற்றும் 5. மாட்டிறைச்சி உண்பவர்கள், பசுவைப் போற்றாதவர்கள். இவற்றை பெளத்தர்களோட தொடர்பு படுத்தி தீண்டாமைக்கான தொடக்கப் புள்ளியாக பெளத்த வெறுப்பு இருந்திருக்கிறது என்கிறார் அம்பேத்கர்.
மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் இந்துக்களிடமும், பார்ப்பனர்களிடமும் இருந்து வந்துள்ளது. பார்ப்பனர் அல்லாதாரை விடவும் பார்ப்பனர்கள் அதிகம் இறைச்சி உணவு உண்டிருக்கிறார்கள். யாகத்தில் பலியிடப்படும் விலங்குகளின் இறைச்சி பார்ப்பனர்களுக்கு எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதை ஆத்ரேய பிராமணம் விரிவாக எடுத்துரைக்கிறது. வரலாற்றில் இத்தகைய சூழல் மாறுவதற்கும், சைவத்தை நோக்கிய பார்ப்பனர்களின் புரட்சிக்கும் காரணம் பெளத்தத்தின் அகிம்சைக் கோட்பாடும், உயிர்பலி எதிர்ப்பும் ஏற்படுத்திய நெருக்கடி தான். பெளத்தர்களை விடவும் மேலாதிக்கம் செலுத்த தங்களை புனிதர்களாகக் காண்பித்துக் கொள்ள பார்ப்பனர்கள் மேற்கொண்ட தந்திரோபாய உத்தி தான் தீவிர சைவத்தை கடைப்பிடிக்கத் தொடங்கியது.
பார்ப்பனர்களும், இந்துக்களும் மாட்டிறைச்சியைக் கைவிட்ட பின்னர் சிதறுண்ட பிரிவினர்களான தீண்டத் தகாதவர்கள் ஏன் அதைக் கைவிடவில்லை என்ற கேள்விக்கு அம்பேத்கர் கூறுவது: பசு புனிதமானதாக, பசுவதை பஞ்சமாபாதங்களில் ஒன்றாகக் கருத்துப்பட்டது என்றாலும், பசுவைக் கொன்று தின்ற இந்துக்களையும், பார்ப்பனர்களையும் மட்டுமே இந்த விதி கட்டுப் படுத்தியது. மாறாக தீண்டத் தகாதவர்கள் உண்டது இறந்து போன மாட்டிறைச்சியைத் தான். எனவே பசு பாதுகாப்பு விதிகள் தீண்டத் தகாதவர்களை உறுத்தவில்லை. எனவே தீண்டத் தகாதவர்கள் மாட்டிறைச்சி உணவை தொடர்ந்து உண்டு வந்திருக்கிறார்கள். மேலும் இந்துக்களைப் போன்று உணவுப் பழக்கத்தை மாற்றி அமைத்துக் கொள்ள போதிய பொருளாதார வசதியற்ற வறிய நிலையில் இருந்து வந்ததும் இதில் கவனிக்கப்பட வேண்டியவை. இதன் காரணமாகவே இந்துக்களால் அவர்கள் தீண்டாமைக்கு ஆளாக்கப் பட்டார்கள்.
மேலாதிக்கம் பெறுவதற்கு புத்த மதத்துக்கும் பார்ப்பனியத்துக்கும் இடையே நடைபெற்ற போராட்டத்தில் இருந்தே தீண்டாமை தோன்றிற்று என்பதே அம்பேத்கரின் துணிபு. தீண்டாமை எனும் கொடிய வழக்கத்தின் தோற்றம் குறித்த அறிவும், தெளிவும் ஜாதி ஒழிப்பு செயற்பாட்டில் நமக்கு நிச்சயம் தேவையான ஒன்று. அத்தகைய வரலாற்றுத் தேடலை பூர்த்தி செய்வதாக இருக்கும் புரட்சியாளர் அம்பேத்கரின் இந்த ஆய்வு நூல்.
- சரவணன் பெருமாள்