ஒரு நாள் அம்பேத்கரும் அவருடைய அண்ணனும் தங்கள் தந்தையை வரவேற்கத் தொடர் வண்டி நிலையத்திற்கு மாட்டு வண்டியில் சென்று கொண்டிருந்தனர். பயணத்தின்போது அவர்கள் மாட்டு வண்டி ஓட்டியிடம் பேசிக் கொண்டு வந்தனர். பேச்சின் இடையில் அம்பேத்கரின் சாதியைப் பற்றி வினவினான் வண்டிக்காரன். அம்பேத்கர் தம்முடைய சாதியைச் சொன்னதும் வண்டிக்காரனுக்கு வந்ததே சினம்! உடனடியாக வண்டியை நிறுத்திவிட்டான். "யாரைக் கேட்டு வண்டியில் ஏறினீர்கள்? உடனடியாக இறங்கி ஓடி விடுங்கள்" என்றான். அம்பேத்கருக்கும் அவருடைய அண்ணனுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. இருவரும் வண்டிக்காரனுடைய செயலைப் பார்த்து வெலவெலத்துப் போய்விட்டார்கள். இவர்களுடைய தயக்கத்தைப் பார்த்த வண்டிக்காரன் வண்டியில் இருந்து அவர்களைக் கீழே தள்ளி விட்டான். பின்னர், “வண்டியைக் கழுவி விட வேண்டும். இவர்கள் இருவரும் வண்டியைத் தீட்டாக்கி விட்டார்கள்” என்று கூறியவாறு சென்றான் அவன்.

இந்நிகழ்வு அம்பேத்கரின் மனத்தில் உளைச்சலை ஏற்படுத்தி விட்டது; சாதியக் கொடுமைகளை எண்ணி அந்தப் பிஞ்சு நெஞ்சம் வருந்தியது. இது போன்ற சில நிகழ்வுகள்தாம் பின் நாளில் அவரை ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவாகப் போராடத் தூண்டின. 

அனுப்பி உதவியவர்: அகரன்

Pin It