திராவிடர் இயக்கம் பிற்படுத்தப்பட்டவர்களுக்காகப் பாடுபட்டது.அது தாழ்த்தப் பட்டோருக்கு விரோதியான இயக்கம் என்பதைப் போன்று சில கருத்துக்களை ஒரு சில கூட்டம் பரப்பி வருகின்றது. இந்த வாதத்தை உடைக்க இந்த நூல் கூறும் வரலாற்றை கொஞ்சம் விரிவாகப் பார்க்க வேண்டும். இந்நூல் 1937-ல் இருந்த சமூக அரசியல் சூழலும், சுயமரியாதை இயக்கம் ஆற்றிய பணி களையும் எடுத்துக் கூறுகின்றது. பின் 1937-ல் இறுதியில் நடந்த வன்கொடுமையை எடுத்துரைக்க ஆரம்பிக்கிறது. இந்நூலின் அறிமுகத்தைப் பார்ப்பது மட்டும் இல்லாமல் இந்த நூலில் கூறப் பட்டுள்ள கருத்துக்கள் சிலவற்றை விரிவாகப் பார்க்க வேண்டியுள்ளது.

நீடாமங்கலம் தீண்டாமைக் கொடுமை நடந்த சமயத்தில் சுயமரியாthiruneelakandan book 450தை இயக்கம் ஆற்றிய எதிர்வினை, சுயமரியாதை இயக்கம் எதிர்கொண்ட எதிர்ப்புகளும், பிரச்சனைகளையும் அச்சமயத்தில் தாழ்த்தப்பட்ட தலைவர்கள் என்று கூறப்பட் டோரின் நிலைப்பாடு, அவர்கள் ஆற்றிய எதிர் வினை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது.

நீடாமங்கலம் இழி வன்கொடுமை:  

1937-ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி ‘தென் தஞ்சை ஜில்லா காங்கிரசின் 3ஆவது அரசியல் மாநாடு’ நடந்தது. இம்மாநாட்டின் தலைவராக ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் இருந்தார். இம்மாநாட்டின் வரவேற்புத் தலைவராக இருந்து அந்த மாநாட்டை முன்னின்று நடத்தியவர் டி.கே.பி. சந்தான ராமசாமி உடையார் என்பவர் ஆவார். இவர் பெரும் நிலவுடைமையாளர். மன்னார்குடி, கும்ப கோணம், பாபநாசம் தாலுக்காக்களில் சுமார் 900 ஏக்கர் நஞ்சை நிலத்திற்கு சொந்தக்காரர். இவருக்கு ‘$வெங்கடேஸ்வரா பிலிம்ஸ்’ நிறுவனமும் தஞ்சையில் இருந்தது. மேலும் இவரது மாளிகையும்,அரிசி ஆலையும் நீடாமங்கலம் ஓட்டூரில் அமைந்திருந்தது.

மாநாட்டின் பிற்பகுதியில் சமபந்தி விருந்துண்ணல் நடந்தது. சாதி, மத பேதமின்றி அனைவரும் வந்து உணவருந்தலாம் என்று மீண்டும், மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கு வேடிக்கை பார்க்க நின்றிருந்த சில தாழ்த்தப்பட்ட விவசாய கூலித்தொழிலாளர்கள் சற்று பயத்துடன் உணவருந்த அமர்ந்தனர்.

“மாநாட்டில் உணவருந்திக் கொண்டிருக்கும் போதே டி.கே.பி.சந்தான ராமசாமி உடையாரின் தூண்டுதலின் பெயரில் அவரது ஏஜெண்டான சபாபதி உடையார் வந்து அவர்கள் தலைமுடியைப் பிடித்து “ஏண்டா பள்ளப்பயல்களா? உங்களுக்கு இவ்வளவு ஆணவமா? இந்தக் கூட்டத்தில் வந்து சாப்பிடலாமா?என்று கேட்டு பக்கத்தில் கிடந்த சவுக்கு கட்டையை எடுத்து அம்மூவரையும் அடித்தார்” அடி தாங்க முடியாமல் அலறினர். இவர்களின் சத்தம் கேட்டு போலீசார் அவர்களை அடிக்காமல் சமாதானம் செய்து மாநாட்டில் இருந்து அவர்களை வெளியேற்றினர். மேலும் சில தாழ்த்தப்பட்ட தோழர்கள் பந்தியை விட்டு எழுந்து சென்றனர்.

கிருஷ்ணமூர்த்தி அய்யரும், இராமசாமி உடையாரும்

இந்நிலையில் மாநாட்டில் உணவருந்தியவர்கள் அனுமந்தபுரம் பண்ணையைச் சார்ந்தவர்கள் என்பதை அறிந்த டி.கே.பி.சந்தான ராமசாமி உடையார், அந்தப் பண்ணைக்குத் தகவலைக் கூறியுள்ளார். 29.12.1937 அன்று காலை தாழ்த்தப் பட்ட தோழர்கள் அறுவடை செய்து கொண்டிருந் தனர். அப்போது அங்கு வந்த பண்ணை ஏஜெண் டான கிருஷ்ணமூர்த்தி அய்யர், “கூட்டத்தில் பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டது யார்? அவர் களைக்  கொண்டு வா” என்று  சொன்னார்.

முதலில் தேவசகாயம் போனார். அப்போது அய்யர், அவனைச் சும்மா கொண்டு வருகிறாயே அடி.. படவாவை! என்று ஆணையிட்டார். பின்னர் தலையாரி மாணிக்கம் என்பவர் தாக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் விளா மரத்தில் கட்டி வைத்து மீண்டும் தடிக் கம்பால் அடித்தனர். மேலும் மொட்டையடிக்கச் சொல்லி அய்யர் கட்டளை யிட்டார். தேவசகாயம் உள்ளிட்ட சில தாழ்த்தப் பட்ட தோழர்களுக்கு மொட்டையடிக்கப்பட்டு, தலையிலும், வாயிலும் சாணிப்பால் ஊற்றி அவமானப் படுத்தப்பட்டனர் என்பதை களத் தகவல்கள் மூலமாகவும், ‘குடிஅரசு’, ‘விடுதலை’ ஆகிய ஏடுகளின் மூலமாகவும் சான்றுகளை இந்நூலின் ஆசிரியர் கொடுக்கின்றார்.

சுயமரியாதை இயக்கத்தின் எதிர்வினை

நீடாமங்கலத்தில் தாழ்த்தப்பட்ட தோழர்கள் மீது நடைபெற்ற இக்கொடிய இழிவன்முறையை சுயமரியாதை இயக்கத் தோழர்கள் முதலில் அம்பலப்படுத்துகின்றனர்.  “ஹரிஜனங்களுக்குக் காங்கிரஸ் மரியாதை” என்ற தலைப்பிட்டு, துண்டறிக்கைகளை வெளியிட்டனர். விடுதலையும் இவ்வன்முறையை ஹரிஜனங்களுக்கு காங்கிரஸ் மரியாதை - பந்தியில் இருந்து சாப்பிட்டவர்களுக்கு அடி! தலைமயிர் மொட்டை! சாணி அபிஷேகம்! தென் தஞ்சை அரசியல் மாநாடு, அலங்கோலம்!  என்று தலைப்பிட்டு 03.01.1938-ல் வெளியிட்டது. இந்நிகழ்வை அம்பலப்படுத்தி, வெளி உலகிற்குத் தெரியப்படுத்தியது சுயமரியாதை இயக்கமும், விடுதலையும் தான் என்பதை நூல் ஆதாரத்துடன் பதிவுசெய்கிறது.

‘ஹரிஜன மந்திரிக்கும் மேயருக்கும் சவால்’ என்ற தலைப்பில் வெளியான தலையங்கம் முக்கியமான ஒன்று. மேலும், அவ்வூரில் இருந்த தாழ்த்தப்பட்ட தோழர்கள் பெரியாரிடம் நேரடியாக முறையீடு அளித்தனர். அம்முறையீடு விடுதலையில் 19.01.1938 முதல் பக்கத்தில் வெளிவந்தது. பி.சாமியப்பன், பி.உத்தராசி, ம.கோவிந்தசாமி, வை.வீரமுத்து, முருகையா, சாமியப்பன், பேச்சிமுத்து ஆகிய தாழ்த்தப்பட்ட தோழர்கள் கையொப்பமிட்டு முறையீடாக அளித்தனர். அம்முறையீட்டின் வாயிலாக அவர்கள் பெரியார் மீது வைத்திருந்த நம்பிக்கையை உணரமுடிகிறது.

“...நாங்கள் இந்த கொடுமையிலிருந்து எங்களை மீட்பதற்குத் தங்களைத் தவிர வேறொரு வரும் இல்லையென்றே எண்ணும்படியான நிலைமைக்கு வந்துவிட்டோம். ஆகவே தங்க ளுடைய வாழ்நாளிலேயே எங்களுடைய விமோ சனத்தை அடையும் மார்க்கத்தைக் காண்பிக்கும்படி மன்றாடி வேண்டிக் கொள்கிறோம்.” என்று அந்த முறையீட்டில் பெரியாரை கேட்டுக் கொண்டனர். அம்முறையீடு நூலில் 116-ஆம் பக்கத்தில் முழுவதுமாக கொடுக்கப்பட்டுள்ளது.

தினமணிக்கும் - குடி அரசுக்கும் கருத்துப்போர்

இதன் பிறகு தினமணிக்கும் சுயமரியாதை இயக்க ஏடுகளான ‘விடுதலை’மற்றும் ‘குடிஅரசு’ ஏடுகளுக்கும் வன்கொடுமை நிகழ்வை ஒட்டி கருத்துப்போர் நடந்தது.

03.01.1938-ல் ‘விடுதலை’யில் வெளியான செய்திக்கு ‘தினமணி’ ஏடு 18.01.1938 “சுயமரியாதைக் காரர், புளுகு, தென் தஞ்சை தலைப்பிட்டு வெளியிட்டது. ‘தினமணி’ வெளியிட்ட மறுப்பைத் தொடர்ந்து ‘குடிஅரசு’ம், ‘விடுதலை’யும் கருத்துப் போரை தொடுத்தது. மேலும், விடுதலையில் ‘புளுகுவது எது, ‘தினமணி’யா? ‘விடுதலை’யா? என்ற தலைப்பிட்டு கேள்விக்குட்படுத்தியது.

03.01.1938 ஆம் நாள் ‘விடுதலை’யில் வெளியிட்ட செய்திக்கு 18.01.1938 வரை அமைதி காத்தது ஏன்? என்றும் இச்செய்தியினால் நேரடியாக பாதிக்கப்பட்ட டி.கே.பி.சந்தான உடையார், பண்ணை ஏஜெண்ட் கிருஷ்ணமூர்த்தி அய்யர் ஆகிய இருவரும் அமைதி காப்பது ஏன்? என்றும் ‘விடுதலை’ கேள்வி எழுப்பியது. ‘தினமணி’யுடன் கருத்துப்போர் என்ற தலைப்பின் கீழ் நூலில் பக்கம் 37-45 வரை ‘தினமணி’ பரப்பிய அவதூறுக்கு ‘விடுதலை’யும், ‘குடிஅரசு’ம் வெளியிட்ட மறுப்பும் விரிவாக ஆசிரியர் கொடுத்துள்ளார்.

காங்கிரஸ் தரப்பிலும் எதிர்வினைகள் ஆரம்பித்தன. காங்கிரஸில் அன்றிருந்த சில நிகழ்வை மறைக்கவும் மேலும் அவர்கள் அந்த சம்பவம் நடக்காததைப் போல் எதிர்வினை ஆற்றினர். சிலரோ அந்த எதிர்வினைக்கு அதாவது சம்பவம் உண்மை என அறிந்தும் அவர்கள் உடன்பட்டே எதிர்வினை ஆற்றியிருக்கின்றனர்.

“06.02.1938 அன்று நீடாமங்கலத்திற்கு நேரில் சென்று உண்மையை அறிந்து வந்த காங்கிரசின் சட்டமன்ற செயலாளர் (பார்லிமென்டரி செக்ரடரி) பி.எஸ்.மூர்த்தி ‘நீடாமங்கலம் கொடுமை உண்மையே’ என்று தஞ்சை ஜில்லா ஆதிதிராவிடர் சங்கம், கருப்பூர் வால்டயர் வாலிபர் சங்கம் என்ற சுயமரியாதை சங்கம் ஆகியவற்றிடம் வெளிப் படையாக தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது”

அவதூறு வழக்கு

“நீடாமங்கலம் வன்நிகழ்வு தொடர்பான வழக்கைப் பொறுத்த வரையில் டி.கே.பி.சந்தான உடையாரின் வழக்கறிஞர் கொடுத்திருந்த வக்கீல் நோட்டீசைத் தொடர்ந்து 12.02.1938 அன்று திருத்துறைப்பூண்டி மாவட்டத் துணை ஆட்சியர் முகாமில் ‘விடுதலை’ வெளியீட்டாளர் ஈ.வெ.கிருஷ்ணசாமி, ‘விடுதலை’ ஆசிரியர் எஸ்.முத்துசாமி பிள்ளை ஆகியோர் மீது மானநஷ்டவழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் முதல் எதிரியாக ஈ.வெ.கிருஷ்ணசாமியும் இரண்டாவது எதிரியாக எஸ்.முத்துசாமி பிள்ளையும் சேர்க்கப் பட்டிருந்தனர்.”  

“இவ்வழக்கு 20.03.1938 ஞாயிறு காலை 11 மணிக்குத் தஞ்சாவூர் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் கருணாகர மேனன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.”

“வழக்கு விசாரணையானது தஞ்சை வல்லம் முகாமில் 5,6,7,8 ஏப்ரல் 1938 ஆகய நாட்களில் தொடர்ந்து நடைப் பெற்றது”

நீடாமங்கலம் வழக்கு குறித்த செய்திகளை அவ்வப்போது ‘குடிஅரசு’, ‘விடுதலை’ ஏடுகள் வெளியிட்டு வந்தது. இந்த வழக்கில் டி.கே.பி.சந்தான ராமசாமி உடையார் அளித்த சாட்சியங்களை ‘விடுதலை’ தொடர்ந்து வெளியிட்டு வந்தது. பின்பு வழக்கு விசாரணை 03.05.1938 அன்று முடிவுக்கு வந்தது. விடுதலை மீது குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது. ஒன்றரை மாதம் கழித்து அந்த வழக்கின் மீது மறுவிசாரணையும் 15.06.1938 அன்று முடிந்தது. தீர்ப்பு வழங்கப்பட்டது. விடுதலை மீது அவதூறு வழக்கு போடப்பட்டது.

நீடாமங்கலம் வன்முறை குறித்து தகுந்த சாட்சியங்கள் இல்லை என்று மாஜிஸ்திரேட் சி.கருணாகரமேனன் தன் தீர்ப்பில் குறிப்பிட்டி ருந்தார். நீடாமங்கலம் வன்கொடுமை பொய்யாக்கப் பட்டது.

“நீடாமங்கல வன்கொடுமை குறித்து இது காறும் தொகுத்துக் கொண்ட கருத்துக்களின் சாரமானது விவாதங்களை எழுப்பும் பல கேள்விகளாக நம் முன் வருகின்றது. இவ்விவாதங்களின் கருத்தியல் நீட்சி, திராவிட இயக்கம், தாழ்த்தப் பட்டோர் ஆகிய இரு தரப்பினரிடையே உள்ள உறவுநிலை குறித்து இன்று நிலவிவரும் - பெரும் பாலும் எதிர்மறை நோக்கிலானதாகவே காண லாகும் - கருத்துப் பகிர்வுகளுக்கு ஒரு வரலாற்றுப் பரிமாணத்தை அளிப்பதாக அமைகின்றது.” என்று பக்கம்-87-ல்  நூலின் முடிவுரையில் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளின் மெளனம்

மேலும் “மீட்கப்பட்ட மூவருள் ஒருவரான ஆறுமுகத்தை, பெரியார் தன்னுடன் வைத்துக் கொண்டதாகவும் அவருக்குக் காவல்துறையில் அரசு வேலை பெற்றுத் தந்ததாகவும் தற்போது அவரது குடும்பம் சென்னையில் வாழ்வதாகவும் களத் தகவல்கள் (கா.அப்பசாமி, நீடாமங்கலம், 07.03.2011) கூறுகின்றன” என்று பக்கம் 88-ல் ஆசிரியர் பதிவு செய்கிறார்.  

அதே பக்கத்தில் ஆசிரியர் வன் நிகழ்வு நடைபெற்ற அதன் சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அறியப்பட்ட தாழ்த்தப்பட்டோர் தலைவர்களான ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, என்.சிவராஜ், எல்.சி.குருசாமி, எச்.எம்.ஜெகந்நாதம் போன்றோர் பொதுத்தளத்தில் இது குறித்து ஏதும் பேசாமல் மெளனமாகவே இருந்துள்ளனர்.

தாழ்த்தப்பட்டோரின் பிரதிநிதியாக அன்றைய காங்கிரஸ் அமைச்சரவையில் பதவி வகித்துக் கொண்டிருந்த வி.ஐ.முனிசாமி பிள்ளை, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான குழந்தை வேலுப்பிள்ளை நயினார் போன்றோர் வன்முறை நிகழ்ந்ததை மறுத்து, தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான நிலையையே எடுத்திருந்தனர்.” என்று நூல் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

பக்கம் 89-ல் “இந்நிலையில் தாழ்த்தப் பட்டோரின் பெருந்தலைவர்கள் இவ்வன்நிகழ்வு குறித்து ஏன் பேசாமல் இருந்தனர். அவர்களின் இம்மெளனத்திற்குப் பின்புலமாக விளங்கிய சமூக-அரசியல் கருத்து நிலை யாது? என்ற கேள்விகள் எழுகின்றன.” என்று நூலின் ஆசிரியர் ஆ.திருநீலகண்டன் குறிப்பிடுகிறார்.

மேற்கண்ட கருத்தின் மூலம் திராவிடர் இயக்கமோ, பெரியாரோ, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பதும் - பார்ப்பனியத்தை மட்டும் எதிர்த்து பிற்படுத்தப் பட்டோரின் நலனைக் காக்க செயல்பட்டது என்பதும் - பெரும் நிலவுடைமையாளரையும், பிற்படுத்தப் பட்டோரையும் பெரியாரோ, திராவிடர் இயக்கங்களோ எதிர்க்கவில்லை என்பதும் - திராவிடர் இயக்கங்களை பிற்படுத்தப்பட்டோரின் இயக்கமாகவும், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான இயக்கமாகவும் சித்தரித்து கூறிவரும் - சில கூட்டங்களின் வாதங்களை இந்நூல் தகர்த்து விட்டது.

புத்தகத்தின் விலை: ரூ175, கிடைக்குமிடம்:காலச்சுவடு பதிப்பகம், கே.பி.சாலை, நாகர்கோவில்-629001

 ஆசிரியர்: பேராசிரியர் ஆ.திருநீலகண்டன்

Pin It