முதலில் “எரியும் பனிக்காடு” என்னும் இந்நூலின் அட்டைப்படம் புவி வெப்பமயமாகுதல் பற்றியதாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டது.  மேலும் தலைப்பு ”சொல் முரணனியாய்” அதாவது, வெற்றி தோல்வி, இன்ப துன்பம், மேடு பள்ளம் என்ற வரிசையில் பனி என்றால் குளிர்ச்சி, எரிதல் என்றால் வெப்பம் இப்படி ஏதாவது இருக்கும் என்று என் சிற்றறிவு என்னை சிந்திக்க வைத்தது.

eriyum panikaduசற்றேறக் குறைய ஒரு வருடகாலமாகவே இந்த எரியும் பனிக்காடு நூலின் அனல் காற்று என் மேல் வீசத் தொடங்கி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.  ரெட் டீ என்ற பெயரில் பி.எச். டேனியல் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு முப்பத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய மகளின் அனுமதி பெற்று தமிழில் இரா. முருகவேள் அவர்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்திருப்பதாய் அறிந்த போதும் எனக்கு பெரிய ஈர்ப்பு எதுவும் ஏற்படவில்லை.

மொழி பெயர்ப்புப் புத்தகங்கள் பெரும்பாலும் அதன் நேட்டிவிட்டியை இழந்து டப்பிங் செய்யப் பட்ட ஆங்கிலப் படங்களைப்போல் இருந்து விடுவதால், ஆரம்பத்திலிருந்தே இந்நூல் அடிக்கடி கண்ணில் பட்டாலும் அதை ஒதுக்கி வைத்து விட்டு அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு புத்தகத்தை வாங்கி சென்று விடுவேன்.  ஒரு முறை பேராசிரியர் மணி அவர்கள் இப்புத்தகத்தைப் பற்றி சிலாகித்துப் பேசினார். மற்றொருமுறை  பாரதி புத்தகாலயத் தோழர் இளங்கோ அவர்கள் எனக்கு இப்புத்தகத்தை பரிந்துரை செய்தார்.  எனக்கு சந்தேகம். புத்தகமோ பொன்னுலகம் பதிப்பகம் சார்ந்தது. ஆனால் பரிந்துரை செய்வதோ பாரதி புத்தகாலயத்தைச் சார்ந்தவர் என்பதால் என்னால் மறுக்க முடியவில்லை.

என் எதிர்மறை எண்ணங்களை எல்லாம் ஒரு பாலித்தீன் கவரில் போட்டுக் கட்டி மனதின் ஓரத்தில் போட்டுவிட்டு வாசித்துத்தான் பார்ப்போமே என வாங்க நினைக்க புத்தகத்தின் பக்கங்கள் என்னை எக்கச்சக்கமாய் மிரட்டியது. ஏனெனில் மொத்த பக்கங்கள் 334. இது தேவையா என்ற எண்ணத்துடன் ஒரு முறை மேலோட்டமாய் புரட்டிப் பார்த்து விடலாம் என்ற நப்பாசையில் பக்கங்களைத் திருப்ப,  ”நீங்கள் கதகதப்பாய் உறிஞ்சிக் குடிக்கும் ஒவ்வொரு துளி தேனீரிலும் கலந்திருக்கிறது எமது உதிரம்” என்ற ஆதவன் தீட்சண்யாவின் வைர வரிகள் மிகச்சரியாய் மின்னி மறைந்தது.

“அற்பத்தனமான இந்தியர்கள் அவ்வளவு நல்லெண்ணத்துடன் தேயிலைத் தோட்டங்களில் தங்களுக்கு அளிக்கப்பட்ட வேலையைச் செய்யாமல் அங்கிருந்து ஓடிவிடுகின்றனர்.  அங்கு வேலை செய்வதை விட தங்கள் கிராமங்களில் பட்டினி கிடப்பதையே விரும்புகின்றனர்” என்ற வரிகள் என் மனதிற்குள் ஊடுருவி இந்நூலை வாசித்தே தீருவது என்ற எண்ணத்தைத் தூண்டியது.

இந்நூலை வாசிக்க வாசிக்கத்தான் நான் இதுவரை இந்நூலைப்பற்றி கொண்டிருந்த தவறான எண்ணங்கள் தவிடு பொடி ஆவதை உணர முடிந்தது.

1925 ஆம் ஆண்டு, ஒரு டிசம்பர் இரவு எனத் தொடங்கும் முதல் வரியும், உயிரியல் ரீதியாகப் பார்த்தால் விலங்குகளிலேயே வேட்டையாடுவதில் மிகவும் திறமை வாய்ந்தவன் மனிதன்தான் என்ற வில்லியம் ஜேம்ஸின் வரிகளும் இன்று வரை எந்த மாற்றமும் அடையாத அடிமட்ட தேயிலைத் தோட்டத்  தொழிலாளிகளின் அல்லல்களை நம் கண்முன்னே காட்ட முயற்சிக்கிறது.

ஒரு சமுதாயத்தை ஆண்டாண்டு காலமாய் அடிமைப்படுத்தி, அவர்களுக்குள் ரத்தமும் சதையும் தாண்டி இளகிய மனமும் நல் இதயமும் உண்டு என்பதை மறந்து மனச்சாட்சியே இல்லாமல் ரணப்படுத்திக்கொண்டே இருக்கும் கொடிய மனித மிருகங்களை இது போன்ற  நூல்கள் எத்தனை முறை அம்மணப்படுத்தினாலும் அவமானமே படாமல் அதுவே தங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய பெருமை என்று ஆணவத்துடன் சொல்லித்திரியும் அயோக்கியர்களுக்கு மேலும் ஒரு சவுக்கடி இந்நூல்.  ஒரு துளிகூட நேட்டிவிட்டி மாறாமல் தமிழ்ப்படுத்தியிருக்கும் இரா. முருகவேள் மிகச்சிறந்த படைப்பாளி என்பதை நாசூக்காய் நிரூபித்துவிட்டார்.

கருப்பன் வள்ளி இடையே இழையோடும் காதலும் , அவர்கள் படும் பெரும்பாட்டையும், தங்களுக்குத் தாங்களே கண்ணீரால் கரைத்துக்கொள்ளும் நிலையையும், எங்கிருந்தாவது ஒரு ஆறுதல் கரம் அவர்களின் வாழ்வை வருட வராதா என்ற ஆதங்கத்தையும் இந்நூல் கடைசிவரை தக்கவைத்துக் கொண்டே இருக்கிறது.  அன்றிலிருந்து இன்று வரை நேர்மையானவர்களுக்கு ஏற்ற இடம் எது என்பதைத் தேடுவதிலேயே நின்றுவிடுகிறது.

“பெரும்பாலும் வெள்ளைத் தோல் ஒன்றே ஒன்றுதான் அவர்களுடைய தகுதி.  அவர்களது தாய் மொழி ஆங்கிலம் என்பதால் அவர்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள்.  இல்லை பிளடி இங்கிலீஷ் பேசுகிறார்கள்” போன்ற வரிகள் அடிமை விலங்கு கொஞ்சம் கொஞ்சமாய் துருப்பிடித்து விரிசலடையத் தொடங்கி விட்டது என்பதற்கான அறிகுறியாய் ஆறுதல் தருகிறது.

முதலை நீலிக் கண்ணீர் வடிப்பதும், புலி புதர்மறைவிலிருந்து தாக்குவதும் அதன் இயல்புதான்.  ஆனால் ஆசை வார்த்தைகளால் வெள்ளேந்தியான பாமர மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் சங்கரபாண்டி போன்ற ஆட்கள் இப்பொழுதும் நமக்கு இணையாகவே நடைபோடுகிறார்கள் என்பதை ஒருபோதும் மன்னிக்க முடிவதே இல்லை.  ஏனெனில் மிருகங்கள் தன் இயல்பிலிருந்து தன்னை மாற்றிக் கொள்வதில்லை.  ஆனால் மனிதன் மட்டுமே எல்லா மிருகங்களின் குணங்களையும் கொண்டு யாரும் எதிர்பாராத வேளையில் தாக்குவதோடு மட்டுமல்லாமல், தான் செய்த ஒவ்வொரு செயலுக்கும் நியாயம் கற்பிக்கிறான் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் மேஸ்திரி, வெள்ளைக்காரத் துரை வொய்ட் போன்றவர்கள்.  இங்கே பெயர்கள் வேண்டுமானால் கற்பனையாய் இருக்கலாம்.  ஆனால் கதை உண்மைதானே என்பதில் உறுதியாய் இருக்கிறது.  ஆசை வார்த்தைகளும், தேனொழுகும் பேச்சும் ஏமாற்றக் கிடைத்த கருவி.  அது இன்று வரை எப்படிப் பழுதில்லாமல் செயல்படுகிறது என்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து ஆனைமலை எஸ்டேட்டுக்கு கூலி ஆட்களை ஆட்டுமந்தைபோல் அடைத்து அழைத்து வருவதிலேயே நிர்ணயித்து விடுகிறது ஒவ்வொருவரின் தலையெழுத்தும்.  எஸ்டேட் நிர்வாகத்தின் நிஜமுகம் எப்படி தோலுரித்துக் காட்டப்பட்டாலும், கையறு நிலையில் கடத்தப்படும் தொழிலாளிகளை யாராலும் காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது.  தன்மானம் உள்ளவன் கூட கோபத்தை வெளிக்காட்டமுடியாமல் கூண்டில் அடைக்கப்பட்ட சிறகொடிந்த பறவையாய் வாழ்வைக் கடத்துகிறார்கள் என்பதை முத்தையா என்ற கதாபாத்திரம் முழுசாய் விவரிக்கிறது.

தேயிலையை எப்படி பறிப்பது என்பது முதற்கொண்டு, குளிருக்கும் மழைக்கும் கம்பளியை எப்படி உடலில் சுற்றிக்கொள்வது, பொது மேலாளர் வொய்ட் (துரை) ன் பாலியல் சில்மிசங்களை எப்படி எளிதாய் எடுத்துக் கொள்வது, தப்பிப் போக நினைத்தவர்களுக்கு ஏற்பட்ட நடைமுறை சிக்கல்கள் என ஏராளமான எண்ணிலடங்கா விபரங்களை உயிரோட்டமாய் விவரிக்கிறான் முத்தையா.

பாலியல் அத்துமீறல்களைக் கண்டு அதிர்ந்து போகும் வள்ளி போன்ற பெண்கள் எப்படியெல்லாம் கீழ்த்தரமாய் பழிவாங்கப் படுகிறார்கள் என்பதையும், அனுபவமுள்ள பெண்கள் அதை எவ்வளவு எளிதாக எடுத்துக் கொண்டு “தொர வெளயாடுறாறு” என்று சொல்லி சிரித்துக் கொள்வதுமாய் சித்தரிக்கப் பட்டுள்ள பெண்களின் கையறு நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருப்பது இக்கதையின் பலம் மற்றும் பலவீனம் எல்லாமே.  “சகுனம்கூட தப்பாய்த்தான் இருக்கும்போல” என்ற வள்ளியின் குரல் விரக்தியின் உச்சம்.

“மொத்தம் அறுநூறு பேர் இருந்த டிவிசனில் சுமார் எழுபத்தைந்து பேர் காய்ச்சலுக்குப் பலியாகினர்.  அவர்களில் பாதிப்பேர் குழந்தைகள்” என்ற செய்தி பிறருக்குச் சம்பவமாயும் இழந்தவர்களுக்கு சாபமாயும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

”கணவனை நினைத்து அழுது புலம்புவதற்கு முத்துலட்சுமி ஒரு நாள் அனுமதிக்கப்பட்டாள்.  மறுநாள் தேயிலைக் காட்டுக்கு விரட்டி அடிக்கப்பட்டாள்” போன்ற வரிகளில் தமிழ் மொழிபெயர்ப்பில் தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார் இரா. முருகவேள். 

பட்டினி, நோய், சாவு இந்த மூன்றும் அடித்தட்டு மக்களின் உடன் பிறந்த சாபம் என்பதை பயன்படுத்தி அவர்களை எப்படி சித்திரவதை செய்தாலும் அதைக் கேட்க நாதியில்லை என்பதை முதல் அத்தியாயத்தில் தொடங்கி கடைசி அத்தியாயம் வரை அழகியல் தன்மை என்ற பெயரில் வர்ணிக்காமல் எதார்த்த நடை போடுகிறது இக்கதை.  இதை திரும்பத் திரும்ப வட்டமிட்டும் காட்டப்படுகிறது. 

“சைவம் சாப்பிடறவங்க எல்லா வகையான பழங்களையும், கீரைகளையும் சாப்பிடறதில்லை.  குறிப்பிட்ட பழங்களையும், கீரைகளையும் மட்டும்தான் சாப்பிடறாங்க.  அதே போல் அசைவம் சாப்பிடறவங்க குறிப்பிட்ட சிலவகை கறிகளை மட்டுமே சாப்பிடறாங்க” என்ற சில பளிச்சிடும் தத்துவார்த்த உண்மைகள் ஆதங்கமாய் வெளிப்படுகிறது.   மருத்துவமனையில் நோய்வாய்ப் பட்டிருக்கும் போதுகூட வள்ளி மாட்டுக்கறிக்காக ஏங்குவது வாசிப்பாளர்களை பரிதாபம் கொள்ளச்செய்கிறது.  மாட்டுக்கறியின் மேல் இவ்வளவு மோகமா என்ற கேள்வியும் நம்மில் எழவைக்கிறது.

கள்ளுக்கடை ஏன் இல்லை என்பதற்குத் தரப்படும் விளக்கம்தான் நகைச்சுவையின் உச்சம்.  “கள்ளுக்கடை இருந்தால் கூலிகள் குடிச்சுட்டு மேஸ்திரிகளை வம்புக்கு இழுப்பார்களே” என்பதுதான்.  அதே அத்தியாயத்தில் உத்தியோகஸ்தர்கள் விருந்து என்ற பெயரில் “குடியை” கொண்டாடும்போது,  ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனிச் சட்டமா என்ற கேள்வியை முன்வைக்கிறது.  ஒருசாராருக்கு குடி கேவலமாகவும் ஒரு சாராருக்கு குடி கெளரவ அந்தஸ்தாகவும் அன்றிலிருந்து இன்று வரை மாறவில்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

கதையின் தொடக்கத்திலிருந்தே பாவாடை செல்வாக்கு மேலோங்கியுள்ளதை காணமுடிகிறது.  ஒவ்வொரு மட்டத்திலும் தங்களுக்குத் தேவையான சலுகைகளைப் பெற ஏதோ ஒரு வகையில் பாவாடை செல்வாக்கு உண்மைதானோ என்ற சந்தேகத்தையும் முன் வைக்கிறது. 

கற்பு, கலாச்சாரம், மரபு, ஒழுக்க நெறி என்று பாடம் நடத்தும் தன்னொழுக்கப் பாடங்கள் வெறும் பேச்சளவுக்குத் தானோ, அது நடைமுறை வாழ்க்கைக்கு இல்லை போலும் என்ற எண்ணத்தை எல்லோர் மனதிலும் ஆழப்பதிந்து விடுமோ என்ற பயமும் நமக்குத் தொற்றிக் கொள்வதை மறுக்க முடியவில்லை.

இத்தனை ரணகளத்திலும், ஜோஸ்யன், தாயத்து கொடுப்பவன், மந்திரம் மாயம் செய்பவன் என்ற பெயரில் இடையிடையே வந்து மூடநம்பிக்கையை விதைத்தும் அல்லது ஏற்கெனவே விதைக்கப்பட்டு விருட்சமாய் பரவியிருக்கும் மூட நம்பிக்கையைப் பயன்படுத்தி மிக சுலபமாய் பணம் பறிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை மிக அப்பட்டமாய் படம்பிடித்துக் காட்டுகிறது இந் நூல் என்றால் அது  மிகையாகாது.

ஒரு கம்பவுண்டரை டாக்டர் என நம்ப வைப்பதும், அவனும் தன்னை ஒரு டாக்டராக நினைத்துச் செயல்படுவதும் மனித உயிரின்மேல் காட்டும் மெத்தனத்தன்மையைக் காட்டுகிறது.  இது போன்ற மட்டரகமான ரசனை ஆங்கிலேயர்களைத் தவிற வேறு யாருக்கும் தோன்ற இயாலாது.

தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளிகளின் ஊதிய குறைவு ஒரு புறம் என்றால் அதில் பணிபுரியும் உத்தியோகஸ்தர்களின் நிலைமை மறுபுறம்.  இரண்டையும் ஒற்றுமைப் படுத்தமுடியாது என்றாலும் ஊதியவிகிதத்தில் உள்ள முரண்பாடுகள் இன்று வரை தீர்க்கப்படாமலே உள்ளது என்பதற்கு பெரிய காட்டு ஐயா அப்பாவு, தலைமை குமாஸ்தா ஜான்சன், டாக்டர் குரூப், சாமிதாஸ், மாணிக்கம் போன்றோர் உரையாடல் முன்வைக்கிறது. 

வருடம் முழுதும் உழைத்தாலும் தாங்கள் பட்ட கடனை திருப்பிச் செலுத்த இயலாமல் திறந்த வெளி சிறைக்கூடத்தில் வாழும் தேயிலைத் தோட்டத்து தொழிலாளிகளின் நலம் காக்க இன்று வரை எந்த நல்ல உள்ளம் கொண்டவரும் இல்லை என்பது வேதனையளிக்கிறது.

வெள்ளைக்காரர்களின் ஆளுமையை இன்றளவும் மெச்சிக் கொண்டிருக்கும் ஒரு சிலரின்  கண்களில் வொய்ட் போன்றவர்களால்தான் இன்றளவும் பாமரமக்களின் நிலை மாறாமல் சீரழிப்பட்டது என்பது ஏன் இன்னும் உணராமல் இருக்கிறார்கள்  என்ற வேதனையான குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது.

முதலில், எஜமான் முன்னாடி தொப்பியோ, செருப்போ போட்டுட்டு நிக்கக் கூடாது.  மழை பெஞ்சாலும் குடையை விரிச்சுட்டு நிக்கக் கூடாது.  மேனேஜரைப் பார்த்தா சலாம் துரைகளேன்னு சொல்லணும். எப்பவும் மாஸ்டர் அல்லது எஜமான் அப்படின்னுதான் சொல்லணும்.  நல்ல துணி மணி போடக்கூடாது.  எப்பவுமே கிழிஞ்ச ஒட்டுப் போட்ட சட்டையும் கால் சட்டையும்தான் போடணும்.  செருப்பும் கிழிஞ்சு தெச்சதாதான் இருக்கணும்.  இதையெல்லாம் தாண்டி காதே கூசும் அளவுக்கு பேசப்படும் வசவு வார்த்தைகள் என இத்தனை இத்தியாதி இத்தியாதிகளை வெள்ளைக்காரத் துரைகளுக்கு கற்றுக் கொடுத்தது யாராய் இருக்கும் என்ற கேள்வியும் நம் மண்டைக்குள் குடையாமல் இல்லை.

இந்த நாவலில் தன்மானத்தைப் பிடிப்புடன் பிரதிபலிக்க படைக்கப்பட்ட கதாபாத்திரம் டாக்டர் ஆபிரஹாம்தான் இந்நூலின் உண்மையான ஆசிரியர் என்பதை மொழி பெயர்ப்பாளர் மிகச் சூட்சுமமாய் சுட்டிக்காட்டி விடுகிறார்.

இந்த தேயிலை தோட்டத்து எஸ்டேட்கள் எத்தனை இயற்கை வளங்களைக் கொண்டிருந்தாலும் அங்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் தொழிலாளர்கள் இன்று வரை சுத்தமான சுவாசக்காற்றை சுவாசிக்க நேரமில்லாமல் தங்களின் வேதனை கலந்த மூச்சுக் காற்றையே மலை முழுவதும் பரப்பி வைத்துச் சென்றிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.

ஒவ்வொரு கோடையிலும், சுற்றுலா என்ற பெயரில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ இருந்து மலைகளை அழுக்காக்கிச் செல்லும் மனிதர்களே, எங்கிருந்தாவது ஒரு உதவிக் கரம் நீளாதா என ஏங்கித் தவித்து வெளிவிடும் தேயிலைத் தோட்டத்து தொழிலாளிகளின் ஆதங்கத்தையும் உணர்ந்து வாருங்கள் என்பதுதான் எனது இந்நூல் விமர்சனத்தின் வேண்டுகோள்.  இந்த நாவலாசிரியரின் வேண்டுகோள்.  மொழிபெயர்ப்பாளரின் வேண்டுகோள்.  இப்புத்தகத்தை தமிழில் அச்சிட்ட பொன்னுலம் பதிப்பகத்தாரின் வேண்டுகோள். 

மகாபாரதத்தில் சொல்லப்பட்டது போல் தர்மத்தில் சிறந்த தர்மம் எதுவென்று கேட்டால், பிறர் படும் துன்பத்தைக் கண்டு கண்ணீர் விடுவது அல்லது வருந்துவது.  இந்நாவலை வாசித்தவுடன் நான் வருந்தி  கண்ணீர்த் துளிகளை சிந்திவிட்டேன்.  ஆனால் நீங்கள்....?

- வே.சங்கர்

Pin It