நவீனத் தமிழ் இலக்கியத்தில் இன்று நாவல் எனும் வகைமை புதுப்பாய்ச்சலோடு வருகின்றது. கவிதை, சிறுகதை, பிற வகை எழுத்துக்கள் போல் அல்லாமல் முழுமைத்தன்மை பெற்று விளங்கவேண்டிய முன் நிபந்தனையால் நாவல் உருவாக்கம் பெரும் கலை உழைப்பாகத் திகழ்கின்றது. வெறும் சாகசக் கற்பனைகளால் கதையளந்த” காலம் மலையேறிவிட்டது. இலக்கியம் அதன் முழு பரிமாணத்தோடும் தன்னை நிறுவிக் கொள்ளும் காலம் இது.
புள்ளிவிவரங்கள், ஆண்டுகள், நிகழ்வுகள், நபர் களால் ஆனது வரலாறு. மனிதர்கள், மனித உறவுகள், மனிதச் சிந்தனைகள், முரண்கள் ஆகியவற்றின் காட்சிச் சித்திரங்கள் படைப்பாகின்றது. வரலாற்றில் படைப்பும், படைப்பில் வரலாறும் சாத்தியம் தான். ஓர் இலக்கியப் படைப்பில் உண்மை நிகழ்வுகளாக வரலாற்று மூலங் களைக் கையாள்வது சவாலானது. எதையும் அப்படியே சொல்லிவிடமுடியாது.
எடுத்துரைப்பில் படைப் பாளியின் கைவண்ணம் மட்டுமல்ல விழிக்கோணமும் முக்கியமாகின்றது. சொல்பவரைப் பொறுத்து நோக்கும் போக்கும் தீர்மானமாகும். உள்ளதைச் சொல்வதைத் தாண்டியும், நுகர்வோர் மனங்களில் விவாதங்களை அதன் வழியே முடிவுகள் நோக்கிய நகர்வை நிகழ்த்து பவையாகப் படைப்புகள் அமையவேண்டும்.
எழுத்தாளர் முருகவேள் “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்”, “எரியும் பனிக்காடு” முதலான மொழிபெயர்ப்புகள் வழி தமிழ் எழுத்துலகில் அறிமுகமானவர். வரலாறும், தொன்மமும் கைகோர்க்க நவீன வாழ்வின் சிக்கல்களை, சிந்தனைப் போக்குகள் குறித்த உரையாடலின் வழி சாத்தியப்படுத்திய “மிளிர்கல்” அவரின் முதல் நாவல். செறிவும் நுட்பமும் அழகும் கை கூடிய படைப்பு அது. அவரின் பேருழைப்பில் சமகால வரலாற்று ஆவணப் படைப்பாக வெளிவந்திருப்பது “முகிலினி” நாவல்.
1836-இல் ஆர்தர் காட்டனால் திட்டமிடப்பட்டு நூற்றாண்டுகள் கடந்து 1946-இல் பிரகாசம்காருவால் அடிக்கல் நாட்டப்பட்ட பவானி அணை கட்டும் பணி 1949-இல் தொடங்குகிறது. 1953-இல் அணை கட்டிமுடிக்கப் படுகின்றது. இதிலிருந்து அறுபது ஆண்டுகளின் வரலாற்றுச் சுவடுகள் “முகிலினி” நாவலாக விரிகின்றது.
Òமுதல் முதலாக இங்கு வந்து நின்று இந்த ஆற்றைப் பார்த்த போது அது நேரடியாக வானத்து முகில்களில் இருந்தே பெருகி வருவது போல ராஜூவுக்குத் தோன்றியது. அப்புறம் பவானி என்ற வடமொழிப் பெயர் அவனுக்குப் பிடிக்கவில்லை. ராஜூ பின்னால் கைகளை கட்டிக் கொண்டு உலாவியபடி இந்தக் காடுகளும் மலைகளும் சூழ்ந்த பிரதேசத்தின் வசீகரத்தையும் இந்த ஆற்றின் அழகையும் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பான்.
முகில்களிலிருந்து பாய்த்தோடி வருபவள் இவள். முகில்களைப் போன்றவள்.
ஒரு நாள் முகிலினி என்ற பெயர் அவன் மனதில் தோன்றியது. ராஜூவுக்கு அந்தப் பெயர் மிகவும் பிடித்து விட்டது. அன்றிலிருந்து இந்த ஆற்றை முகிலினி என்றே நினைத்து வந்தான்”. (ப. 97) விடுதலைக்குப் பின் தொழில்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. பருத்தியிலிருந்து பஞ்சை எடுத்து நூலாக்கி ஆடையாக்கும் மில் தொழிலில் கோவையின் கண்ணம்மநாயுடு ஈடுபடுகிறார். இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் பருத்தி விளைச்சலும், பஞ்சு உற்பத்தியும் குறைகிறது. பருத்தி விளைநிலங்கள் அதிக அளவில் பாகிஸ்தான் பகுதிக்குச் சென்றதும் ஒரு காரணம்.
கண்ணம்மநாயுடுவின் மகன் கஸ்தூரிசாமி நாயுடு காலத்துக்கேற்ப தொழிலை வளர்க்க விரும்பு கிறார். அவர் திருமணம் செய்யும் பழைய காங்கிரஸ் காரரான சௌந்தர்ராஜன் மகள் சௌதாமினியும் உடன்பயணியாகிறார். கோவை மில் முதலாளிகள் ஒன்று கூடி ஆலோசிக்கின்றனர்.
வெளிநாடுகளில் செயற்கை நூலிழைத்தயாரிப்பு குறித்துக் கவனம் திரும்புகிறது. இத்தாலியிலிருந்து “பெர்னான்டினோ” என்ற வல்லுநர் வரவழைக்கப் படுகிறார். ஆலோசனை நடைபெறுகிறது. பெரும்பணம் முதலீடு தேவைப்படுகின்றது. மலைக்கிறார்கள், கஸ்தூரி சாமியும் அவரது உறவினர் ஜனார்த்தனும் சொந்த பந்தங்களின் உதவியோடு முதலீடு செய்து “டெக்கான் ரேயான்” சிறுமுகையில் பிரம்மாண்டமாக எழுகிறது. இத்தாலியானா விஸ்கோவிடம் இருபத்திநான்கு சதவீதப்பங்குகள் இருக்கின்றன. முதலமைச்சர்
அடிக்கல் நாட்டிவைக்கிறார். சலுகையில் மின்சாரமும், தண்ணீரும், மின்நிலையமும் கிடைக்கின்றன. மலைக்கு நிகரான செயற்கைக் குன்றாய் “டெக்கான் ரேயான்” காட்சி தருகின்றது. தொழிலாளர்கள் போதிய சம்பளம் பெறுகிறார்கள். இறக்குமதி, ஏற்றுமதி, அன்னியச் செலாவணி என மில் லாபமீட்டுகிறது. மில் உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது, உப தொழில்களான ரசாயனப் பொருள்கள், உரங்கள் தயாரிப்பும் நடக்கிறது.
இதற்கிடையே பன்னாட்டு மூலதனப் பங்கு கைமாறுகிறது. இந்திய பெருமுதலாளியமும், பன்னாட்டு நிதி மூலதனமும் கைகோத்து உள்ளூர் முதலாளிகள் வெளியேறும் நிலை ஏற்படுகிறது. கால ஓட்டத்தில் ஆலைக்கழிவுகள் பவானி ஆற்றில் (முகிலினி) கலந்து பளிங்கு போல் இருந்த தண்ணீர் பயனற்றுப் போகிறது. நிலம் மலடாகிறது. உயிர்கள் சாகின்றன. மக்கள் எழுச்சி முகிழ்க்கிறது. உரிமைப் போராட்டமும், சட்டப் போராட்டமும் வெடிக்கிறது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், நீதிமன்றம், களப் போராட்டம் ஆகிய பல் முனைகளில் மக்கள் போராடுகிறார்கள். வழியேயின்றி ஒரு நாளில் ஆலை மூடப்படுகின்றது. கோவையில் தொழிலாளர் - மக்கள் போராட்ட அடையாளமான விஸ்கோஸ் போராட்டம் இரத்தமும் சதையுமாக நாவலில் பதிவாகின்றது, இது நாவலின் ஒரு தளம்.
மலை, காடு, மலை வாழ்மக்கள் உரிமைகள் அவர்களின் தன்னுணர்வுமிக்க போராட்டங்கள் சார்ந்த பதிவுகள் மற்றொருதளம்.
விஸ்கோஸ் ஆலை மூடப்பட்ட பின்னால் அந்த ஆலையின் ராட்சச எந்திரங்களை, உலோகக் கம்பிகள், பொருள்களை இரவோடு இரவாகப் பல நாட்கள் மக்கள் கொள்ளையிடுவது, காவல்துறையும் கைகோர்த்து நடக்கும் கொள்ளை குறித்த பதிவுகள் மற்றொருதளம்.
உரங்கள், பூச்சிக் கொல்லிகள் விளைவாக மலட்டுத் தன்மை, நோய்கள் ஆகியவற்றுக்கு எதிராக இயற்கை வாழ்வு, வேளாண்மை, நம்மாழ்வார் போன்றோரின் முன்னெடுப்பு இதிலும் கஸ்தூரிசாமியின் பேரன் ராஜ் குமார் பாலாஜி போன்றோர் ஈடுபட்டு வணிகமாக்குவது இன்னொருதளம்.
சேகுவேராவை வணிகப் பொருளாக்க முயன்று ஓஷோ வழியாக தானே சாமியாராக மாறும் திருமகன் (ஆஷ்மான் சுவாமிகள்) இன்னொரு தளம்.
இப்படி நாவல் பல அடுக்குகளில் இயங்குகிறது. கண்ணம்மநாயுடுவின் தொழில் தொடக்கம் “ராபர்ட் ஸ்டேன்ஸ், ஸ்டேன்ஸ் மில்லைத் தொடங்கிய போது அதற்கு பஞ்சு கொண்டு வந்து கொடுக்கும் வேலையை கஸ்தூரிசாமியின் அப்பா கண்ணம்மநாயுடு செய்தார். அடுத்தக் கட்டமாக பஞ்சில் இருந்து விதைகளைப் பிரித் தெடுக்கும் ஜின்னிங் பாக்டரி தொடங்கினார். விதை நீக்கம் செய்யப்பட்ட பஞ்சுதான் நூல் நெய்வதற்கு ஏற்றது. ராபர்ட் ஸ்டேன்ஸிசும் இதை ஊக்குவித்தார். பின்பு ஜின்னிங்கிலிருந்து நூல் உற்பத்தி செய்யும் ஸ்பின்னிங்குக்கு மாறவேண்டியிருந்தது. அப்புறம் ஆடை நெய்யும் வீவிங். இதற்கெல்லாம் முதலீடு வேண்டும். அப்போதும் இதே போல் நெருக்கடிதான்” எனச் சுட்டப்படுகின்றது.
அதே போல ரேயான் பற்றிய விளக்கம், “1884 - இல் கவுண்ட் ஆஃப் சார்டோனேவால் சார்டோனே இழை உருவாக்கப்பட்டது. இது அழகாகவும், மலிவாகவும் இருந்தது. ஆனால் எளிதில் தீப்பிடிக்கக் கூடியது. எனவே கடைகளில் விற்பது தடை செய்யப்பட்டது. பின்பு 1905 - இல் செயற்கைப்பட்டு எனப்படும் ரேயான் விற்பனைக்கு வந்தது. அப்போது இதன் பெயர் விஸ்கோஸ் ஃபைபர். சூரிய ஒளியைப் போல் பளிச்சென்று இருப்பதாலும், பருத்தியைப்
போல குணங்கள் கொண்டிருப்பதாலும் ரேயையும், காட்டனையும் இணைத்து ரேயான் என்று பெயர் சூட்டப்பட்டது”.
இப்படி தொழில் நுட்ப விவரங்கள், இயந்திரங்கள், கருவிகள், அதன் செயல்பாடுகள், இரசாயனங்கள் அதன் விளைவுகள்... என அத்தனையும் துல்லியமாக நாவலில் இடம் பெறுகின்றன.
வரலாறும் அரசியலும் விவாதப் புள்ளிகளாக முன்வைக்கப்படுகின்றன. பொருளாதாரமும் தான். காங்கிரஸின் வெற்றி தோல்விகள், காந்தியத்தின் போதாமைகள் நூலிழையாய் நாவல் முழுக்கப் பதிவாகின்றன. காந்திக்கு மாற்றாக தாகூர் முன்மொழியப் படுகிறார். ஜெ.பியும் வினோபாவும், ஜெ.ஸி.குமாரப் பாவும் வந்து போகிறார்கள். இராஜாஜியும் காமராசரும் அவரவர் சாய்வுகளின் வழி அலசப்படுகிறார்கள்.
காங்கிரஸை அப்புறப்படுத்தி அண்ணா அரியணை ஏறுதலும், அவர் மறைவுக்குப்பின் நாவலர், பேராசிரியரைத் தாண்டி மு.கருணாநிதி ஆட்சியைப் பிடிப்பதும், பின் எம்.ஜி.ஆர் கட்சித் தொடங்கி ஆட்சிக்கு வருவதும் நாவலில் இடம் பெறுகின்றது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து மார்க்சிஸ்ட் கட்சி உருவாவது பின் அதிலிருந்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் உருவாவதும் நாவலில் சுட்டப்பெறு கின்றது.
இந்தி ஒழிப்புப் போராட்டம் ,1964 பஞ்சம், 1965 அன்னியச் செலாவணிச் சட்டம், குடால் கமிஷன், போர்டு பவுன்டேசன் அறிக்கை... என வரலாற்றுக் குறிப்புகள் ஆங்காங்கே நாவலில் இணைந்து முன் செல்கின்றன.
நாவலின் கதையை கதைமாந்தர்கள் ஏந்திச் செல்கிறார்கள். வகை மாதிரி பாத்திரப்படைப்பு நாவலின் யதார்த்த அழகாக மிளிர்கிறது. ஓரிரு தலைமுறைகளின் வழி ஏற்ற இறக்கங்கள் வாழ்க்கைச் சித்திரங்களாகின்றன. கண்ணம்மநாயுடுவின் மகன் கஸ்தூரிசாமி நாயுடு சௌந்தர்ராஜ நாயுடுவின் மகள் சௌதாமினி இவர்களின் மகன்கள் கிருஷ்ணகுமார் - லதா, இராஜேஷ்குமார், கிருஷ்ணகுமாரின் மகன் ராஜ்குமார் பாலாஜி. இந்தக் குடும்பம் செல்வச் செழிப்பின் குறியீடாகக் காட்டப்படுகின்றது. அரசியல் செல் வாக்கும், சமூக அந்தஸ்தும், ஆயிரம் கோடிச் சொத்தும் உயர் மேட்டுக்குடி வாழ்வுமாக இந்திய முதலாளியத்தின் மாதிரியாக இக்குடும்பம் விளங்குகிறது. இதில் கஸ்தூரி சாமிக்கு எந்த வகையிலும் குறைவில்லாத ஆளுமை மிக்கவராக சௌதாமினி படைக்கப்பட்டுள்ளார். ஒரு வகையில் இக் குடும்பத்தின் “உச்சமாக” நிற்பவர் சௌதாமினி எனச் சொல்லலாம்.
அடுத்து தொழிலாளி வர்க்கத்திலிருந்து மேலெழும் ராஜூ, ஒரு வகையில் இந்நாவலின் நாயகனும் இவர்தான். நொய்யலாற்றங்கரையில் பிறந்து வளர்ந்து பிழைப்புக்காக பவானிக்கு இடம் பெயர்ந்து இயற்கை ஈடுபாட்டில் வனமும் மலையும் முகில் கூட்டமும் கலந்த பழைய பவானிக்கு “முகிலினி” எனப் பெயரிட்டு அழைக்கிறான். ஒடுக்கப்பட்ட வகுப்பில் பிறந்து இராணுவத்தில் சேர்ந்து பின் கஸ்தூரியின் நட்பால், அறிமுகத்தால் மில் வேலைக்குச் சேர்கிறான்.
ஆங்கிலமும், தூயத்தமிழும், கொஞ்சம் தெலுங்கும் இராணுவப் பணி சிநேகமும் முதலாளியோடு நெருக்கப் படுத்துகிறது. பணிநிலையில் கொஞ்சம் நாகரிகப் பொறுப்பில் இருக்கிறான். கவிதை ஏக்கமும் இலக்கிய நாட்டமும் மிக்கவன். தியாகராஜபாகவதர் போல தோற்ற முடையவன். நாடகக்காரன். திராவிட இயக்க அனுதாபி. தமிழ்த் தேசியன். கம்யூனிஸ்டோடு முரண்படுபவன்.
அவரது மனைவி மரகதம். மகள் மணிமேகலை. மருமகன் சொக்கலிங்கம். பேரப்பிள்ளைகள் ஆனந்தி, கௌதம், நெறியான ஆள் ராஜு, மரகதம் ஆசிரியை. சௌதாமினிக்கு சற்றும் குறைவில்லாத வகையில் மரகதம் படைக்கப்பட்டுள்ளார். இக் குடும்பம் எப் பொழுதும் சாதியை வெளிப்படுத்திக் கொள்ளாத, உள்மறைத்து வாழும் தன்மையுடன் வெளிப்படுகின்றது. அம்பேத்கரின் அரிச்சுவடி போல கல்வி ஒன்றுதான் கடைத்தேற்றம் என்பதற்கான காட்சியாக இவர்கள் படைக்கப்பட்டுள்ளார்கள். அதே நேரத்தில் சாதியின் கோரமுகம் ஆங்காங்கே சுட்டிக் காட்டப்படுகின்றது. ராஜூவின் பேத்தி ஆனந்தியை ஒருவன் காதலிப்பதாகக் கூறி, பெண் கேட்டுவருகிறார்கள். பெண்ணுக்கு அப்படியன்றும் விருப்பமில்லை. எப்படித் தவிர்ப்பது? சொக்கலிங்கம் - ஆனந்தியின் அப்பா சொல்கிறார்:
குண்டைப் போட்டுட்டேன்”
என்ன குண்டு? மணிமேகலை பயத்துடன் கேட்டாள்.
நாம யாருன்னு சொல்லிட்டேன்”.
சாதி எப்படி வெடிகுண்டு போல செயல்படுகிறது. பார்த்தீர்களா? ராஜூவின் வாரிசு போல அவரது பேரன் கௌதம் வழக்கறிஞராக, இயற்கை விவசாயியாக அற்புத இளைஞனாக வலம் வருகிறான். பரிணாம வளர்ச்சி இது வாகத் தானே இருக்கமுடியும்? நாளைய நம்பிக்கையை இதைவிட எப்படி ஓர் இலக்கியப்படைப்பில் விதைக்க முடியும்?
இந்த இரண்டுக்கும் பெருமுதலாளிக்கும் நவீனத் தொழிலாளிக்கும் இடையில் நிற்பவர் ஆரான். இராஜூவின் உயிர்த் தோழன். அடித்தளச் சாதி. படிக்காதவர். உடல் உழைப்பாளி. மில் தொழிலாளி. ஏழெட்டுப் பிள்ளைகள். கம்யூனிஸ்ட் கட்சி. தொழிற் சங்கம். போராட்டம் எனக் கழிகிறது வாழ்க்கை. இளமையில் தந்தையை, உடன் பிறந்தாரை பெரும் நோய்(பிளேக்)க்குப் பலி கொடுத்தவர். போராட்டங் களால் உரம் பெற்றவர். சி.பி.ஐ, சி.பி.எம், எம்.எல்... என எல்லா இயக்கத்தோடும் தலைவர்களோடும் பயணித்தவர். பல பத்தாண்டுகள் மில் வேலை செய்தும் ஒண்டக் குடிசை கூட இல்லாதவர்.
எந்நிலையிலும் தொழிலாளி வர்க்கத்தை, இயக்கத்தை விட்டுக் கொடுக்காதவர். இவர் ஒரு வகையில் இந்திய உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதி. தன்னையே சமூகத்திற்காய் அழித்துக் கொள்ளும் மெழுகுவர்த்தி மனிதர்களின் வார்ப்பு. சந்தர்ப்பவாத, பிழைப்பு அரசியல்வாதிகள் மத்தியில் இன்றைக்கும் நிமிர்ந்து நிற்கும் கம்யூனிஸ்டு களின் ஒற்றை அடையாளம் Ôஆரான்’. கொள்ளை யடிக்கும் கும்பலில் சேர்ந்தால் சூதும், குடியும், மாதும்தான் சேரும். அழிந்து போவதைத்தவிர வேறு வழியில்லை என்பதை - கொள்ளையை எந்த விதத்திலும் நியாயப்படுத்தாமல் நாவலில் சொல்கிறார். அதே நேரம் சந்துருவுக்காக வாதாடி வெல்வது, சந்தர்ப்பவாதத்தால் தவறு செய்து, திருந்தி வாழ நேரும் பாத்திரமாக சந்துருவைப் படைத்திருப்பது அற்புதம்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், நீதிமன்றம் ஆகிய வற்றின் செயல்பாடுகள், விருப்பு வெறுப்புகள் துல்லிய மாகக் காட்சிப்படுத்தப்படுகின்றன. மக்கள் திரள் போராட்டம் மட்டும் வெல்லாது. சட்டம், தொழில் நுட்ப விவரங்களும் வேண்டும் என்பதையே விஸ்கோஸ் போராட்டம் உணர்த்தி நிற்பதை நாவல் உறுதி செய்கிறது.
இயற்கை வேளாண்மை என்பது இன்றைய காலத்தின் கட்டாயம். நம்மாழ்வார் போன்றவர்கள் நீண்ட நெடிய சோதனை முயற்சிகளின் வழி வந்து சேர்ந்த இடம். ஆனால் அதுவும்கூட ஏழை எளியவர் களுக்கு எட்டாக்கனியாக்கப்படுவதை - வணிகமும், நுகர்வுக் கலாச்சாரமும் காவு கொள்வதை கௌதம், அரசு ஆகியோரின் உழைப்பு, செயல்பாடுகள், விவாதங்கள் வழி நாவல் சுட்டிச் செல்கிறது.
எண்பதுகளில் கோவைக்கு வந்து சேர்ந்த புதிய வஸ்துக்கள் தியானமும் யோகமும். வாழ்க வளமுடன், ஈஷா யோகா போன்று பல குழுக்கள் மனம், ஆன்மீகம், கடவுள் எனத் தொடங்கியதன் பின்னணியில் வளர் முகத்தில் இந்துத்துவமாக இன்று ஆகி நிற்பதன் பின்புலத்தை - சேகுவேராவில் தொடங்கிய கர்னல் திருமகன், ஓஷோ வழி ஆஸ்மான் ஸ்வாமியாக உருவெடுப்பதையும் நாவல் விட்டுவைக்கவில்லை.
நாவலில் வரலாற்றையும் மக்கள் பண்பாட்டையும் கதை ஓட்டத்தோடு பல இடங்களில் பதிவு செய்கிறார்.
அந்தக்காலத்தில் திரைப்படத்தின் மீது பொது மக்களுக்கு இருந்த அபிமானத்தை, ராஜூ தியாகராஜ பாகவதரைப் பார்க்க கோவையிலிருந்து திருச்சிக்கு சென்ற நிகழ்வு மூலம் அறியமுடிகிறது.
Òயாருப்பா நீ, எந்த ஊரு?” ஜாதி சொல்லியாக வேண்டும். Òகோயமுத்தூருக்குப் பக்கத்தில வெள்ள லூருங்க. கோனாரு”. கோனார் பெண்களும் கைகளில் சங்கு அணிந்திருப்பார்கள். எனவே அது வாயில் வந்து விட்டது.
ஊரிலேயே ராஜூ மட்டும் தான் ஜாதியை மாற்றிச் சொல்பவன். மற்றவர்களுக்கு அது வரவே வராது. உனக்கு மரியாதை வேண்டுமென்றால் இதெல்லாம் செய்யத்தான் வேண்டும் என்பது ராஜூவின் நினைப்பு.
ராஜூ தலையசைத்தான். எதிரே நின்றிருந்த ஆளுக்கு ரவுத்திரகாரமான கோபம் வந்தது.
Òஆம்பள பொம்பளன்னு எத்தன பேருடா காடுதோட்டத்தை விட்டுட்டு ஓடி வருவீங்க?. ஊருல ஒரு நாளு கூத்து பாத்தமா, உட்டமான்னு இல்லாம, இது என்னடா பொழப்பு? எல்லாரும் பாகவதர் ஆகிட முடியுமா? அவனுக்கு உன்னையெல்லாம் நெனைக்க நேரமிருக்குமாடா? போடா. போ. ஊருல போய் பொழைக்கிற வேலையைப் பாரு”. (ப.58 )
அக்கால யதார்த்தப்பதிவு.
வாழ்க்கையில் எளிய மக்களின் துய்ப்பு அவர்களின் உணவு ஒன்றுதான். உழைப்பாளிகளின் உணவுப் பண்பாட்டைப் பாருங்கள்:
“ஜானகிராமன் மூக்கை உறிஞ்சியபடி சற்றுத் தள்ளிக் கைநீட்டிக் காட்டினான். அடுத்ததாக இருந்தது சாப்ஸ்மாணிக்கத்தின் கடை. கொஞ்சம் எலும்பும் நிறையக் கறியுமான ஆட்டுக்கறித்துண்டை உப்பு, புளி, காரம் தடவி பொறித்து எடுப்பதற்குப் பெயர்தான் சாப்ஸ். மாணிக்கம் கடை சாப்ஸ் என்றால் வெள்ளைக்காரர் களுக்கு மிகவும் பிடிக்கும். ரேஸ்கோர்ஸிலிருந்து பட்லர் களும், டிரைவர்களும் வந்து வாங்கிக்கொண்டு போவார்கள். வெள்ளைக்காரர்களின் ருசி மாணிக்கத்துக்கு அத்துப்படி. நமது ஆட்களுக்கு இளஞ்சிவப்பான மென்மையான கறிதான் பிடிக்கும். கறியை குழம்பு வைத்து தின்பார்கள். வெள்ளைக்காரர்களுக்கு கறி சிவப்பாக முற்றியிருக்க வேண்டும்.
வறுத்தத் துண்டுகள் கறுஞ்சிவப்பு நிறத்தில் கண்ணைப் பறிக்க வேண்டும். சற்றே கருகிய மசாலா வாசத்துடன் சாப்ஸிலிருந்து வரும் மனம் எப்பேர்ப்பட்டவனையும் கிறங்கடித்துவிடும். மாணிக்கம் நான்கு மணிக்கு மசாலா அரைக்கத் தொடங்குவான். அந்த மனம் தெரு முழுக்கப் பரவிவிடும். அதை கறியில் பிரட்டி ஒரு அண்டா மூடியில் பரப்பி வைப்பான். அடுப்பைப் பற்றவைத்து விட்டு பீடி குடிக்கத் தொடங்கி விடுவான்.
முக்கால் மணி நேரத்திற்குமேல் வெந்த பிறகு கம்மென்று இங்கிலீஷ் மனம் ஊரைத்தூக்கத் தொடங்கிவிடும். ஆரான் மாணிக்கத்தின் ரசிகன். ஜானகிராமனுக்கு சாராயம் குடித்துவிட்டால் மாட்டுக்கறி வேண்டும். ஜானகி ராமன், ராஜூ, ஆரான் மூவரும் இரண்டு கடைக்கும் நடுவே இருந்த மரபெஞ்ச்சில் உட்கார்ந்தார்கள். ஜானகிராமன் சிவப்பேறிய விழிகளால் ராஜூவைப் பார்த்தான்”.(ப. 68)
கம்யூனிஸ்ட் கட்சியைக் குறை கூறுவதை எதிர்த்து விவாதிக்கும் போது ஆரான் பழைய சம்பவங் களை நினைவு கூர்கிறான்:
“அது எனக்குத் தெரியாது. உன்னையும், என்னையும் கோழி மாதிரி கூடைக்குள்ளப் போட்டு மூடுனப்ப பாப்பாங் கட்சிதானே வந்துச்சு” என்றான் ஆரான்.
Òராஜூ கனமான ஆயுதத்தால் தாக்குண்டது போல துடிதுடித்துப் போனான். அவன் அடியோடு மறக்க விரும்பிய நாட்கள் அவை. தமிழன் பெருமை, வரலாறு, பண்பாடு பற்றி சண்டமாருதமாகப் பொழிந்தான். ஆரான் பதில் பேசவில்லை. ஆனால் அன்றிலிருந்து இன்று வரை ராஜூ கட்சிக்கு எதிராகப் பேசும் ஒவ்வொரு சொல்லும் அன்று ஆரான் சொன்ன அந்த இரண்டு வரிக்கு எதிரான வாதங்கள் தான்”. (ப.84)
ரேயான் தொழிற்சாலை தொழிலாளிக்கு சம்பளத்தை ஓரளவு நியாயமாக வழங்கியது. அன்று 165 ரூபாய் பெரிது. சம்பள நாள் குதூகலம் நாவலில்:
“சம்பளம் 165 ரூபாய் எண்ணி வைக்கப்பட்டது.
தொழிலாளர்கள் சைக்கிள்களில் நெசவு செய்யும் வீடுகளை நோக்கிப் பறந்து வந்தனர்.
தறியோட்டும் குடும்பத் தலைவர்கள் வீட்டு முன் நின்று கைகூப்பி Ôஒரு நாலு நாள் பொறுங்க. ஒரு அணா அட்வான்சு குடுங்க போதும். வந்து சேலையை எடுத்துட்டுப்போங்கÕ என்று கெஞ்சினர். யாருக்கு நின்று கேட்க பொறுமையிருந்தது? ஆட்கள் கூட்டம் சைக்கிளின் வேகத்தைக்கூடக் குறைக்காமல் பறந்து கொண்டே இருந்தது.
அடுத்து இரண்டு மூன்று மணிநேரத்தில் தியேட்டர் மேட்டில் ஒரு அதிசயம் நடந்தது. ஞாயிறு மட்டுமே திறந்திருக்கும் பாய் கடை இன்று ஜெகஜோதியாகக் காட்சியளித்தது. பாய் எங்கிருந்தோ ஆடுகளை ஓட்டிக் கொண்டு வந்திருந்தார். ஆட்டுத்தொடைகளை கூடையில் போட்டு எடுத்துக்கொண்டு கிருஷ்ணா நகர் குடியிருப்புக்குச் சென்றார்.Ó
பன்னன்டணா. அப்படியே வாங்கிக்கங்க
தெருமுழுக்க மணமணக்கத் தொடங்கியது. தெருவில் செல்பவர்களுக்கும் வாயூரத் தொடங்கியது.
அண்ணே மணக்குது?
ஒரு வா சாப்டுட்டு போறது?
அங்கையும் அதுதான்
அடுத்தமாதம் ஏழாம்தேதி கம்பெனியை விட்டு வெளியே வந்த தொழிலாளிகள் அசந்துபோனார்கள். மேட்டுப்பாளையம் சாலையில் ஒரு புத்தம் புதிய கடைத்தெரு முளைத்திருந்தது. அனைத்து மேட்டுப் பாளையம் துணிக்கடைகளும், மளிகைக் கடைகளும் முன்னால் பந்தல் கூரைபோட்டு கடை திறந்திருந்தன. கோவையிலிருந்து கூட கடைகள் வந்திருந்தன”. (பக். 119-120)
மலை, காடு ஆகிய இடங்கள் தனிநபர் ஆதிக்கத்துக்கு வருவதற்கு முன் தொல்குடிகளின் நிலங்களாக இருந்ததை நாவல் இப்படிப் பதிவு செய்கிறது:
இந்த முறை இவர்கள் தயாராக இருந்தார்கள். இருளில் கற்கள் குண்டுகள் போலப் பறந்துவந்து முன்னால் வந்தவர்களைத் தாக்கின. ஓடிவந்தவர்கள் நெஞ்சிலும், தலையிலும் அடிபட்டு சேற்றில் வழுக்கி விழுந்தனர். வந்தவர்கள் தயங்கி நின்றதும் ராமக்கா கருக்கருவாளை வீசியபடி அவர்களை நோக்கிப் பாய்ந்தாள்.
வீர்வீரென்று அடித்துக்கொண்டிருந்த எதிர் காற்றில் முடிபறக்க இழுத்துச்சொருகிய வெள்ளைச் சேலையோடு சேற்றில் கால் புதைய அஞ்சாமல் முன்னேறினாள் அவள். தாக்கவரும் அந்த வெறி கொண்ட மனிதர்களின் கரங்களில் இருக்கும் கடப்பாரைகளும், வீச்சரிவாள்களும், கழிகளும் தன்னை எதுவும் செய்ய முடியாது என்று அவள் உறுதியாக நம்பியது போலிருந்தது. ராமக்காவின் மகன்களும் மற்றவர்களும் பேய்க்கூச்சலுடன் அவள் பின்னே ஓடினர். தாக்க வந்த கூட்டம் அடிபட்டு ரத்தம் ஒழுக ஓடியது.
ஒவ்வொரு இரவும் போர்க்களம் தான். வேறு வழியில்லை. விட்டுக்கொடுத்தால் உழைப்பு முழுக்கப் போய்விடும். ஒண்ட வேறு இடமுமில்லை. உயிரைக் கொடுத்தாவது பிடித்த நிலத்தைக் காக்கவேண்டிய தேவை இருந்தது. ராமக்கா இந்த பாறைக்கருகே கருக்கருவாளை கையில் பிடித்தபடி இரவு முழுவதும் மாரிமுத்துவை கைப்பிடியாக அழைத்துக்கொண்டு உறங்காமல் சுற்றி வந்தாள். எவன் வந்தாலும் வெட்டிச் சாய்க்கும்படி சொன்னாள்.
அவர்கள் வாரக்கணக்கில் இரவு முழுவதும் பாறையில் வாட்கள், கற்களோடு காத்திருப்பார்கள். மாரிமுத்துவும் கையில் கல்லோடு நிற்பான். சேற்றில் விதைக்கப்பட்டிருந்த கம்புப்பயிர் உயிரை விட முக்கியமானதாக இருந்தது. அணைக்காடு முழுக்க இடம் பிடிக்க மூர்க்கமான சண்டைகள் நடந்தன. இன்னும் கொஞ்சநாள் போயிருந்தால் என்ன நடந்திருக்குமோ? அதற்குள் கம்யூனிஸ்ட் தலைவர் வெள்ளிங்கிரி தலையிட்டு பொதுப்பணித் துறையோடு பேச்சுவார்த்தை நடத்தி தண்ணிக்காட்டில் விவசாயம் செய்பவர்களுக்கு டோக்கன் கொடுக்கச் செய்தார். அதற்கு ஒரு சிறிய வாடகையும் வசூலிக்கப்பட்டது. இந்த ஆறேழு ஆண்டுகளில் இன்னாருக்கு இன்ன இடம் என்பது உறுதியாகிவிட்டது”. (பக். 169- 170)
தலைமுறை மாற்றம் வணிகத்திலும் நிகழ்கிறது. காலத்துக்கேற்ப தங்களை முதலாளிகள் மாற்றிக் கொள்வதை - இயற்கைப் பொருள் தயாரிப்பு குறித்தபதிவாக,
“அப்பா, தாத்தா இன்னுமா நீங்க ஆர்கானிக்கும் மாறலை? உலகம் முழுவதும் எங்கோ போயிட்டிருக்க. நீங்க இன்னும் பழைய மாதிரியே இருக்கீங்களே! ” என்றான்.
“யார்கிட்ட என்ன பேசறே?” என்றார் கிருஷ்ண குமார்.
“உரமும் பூச்சி மருந்தும் தயாரிக்கற டெக்கான் அக்ரோ கெமிக்கல்ஸ் ஓனர்கள் கிட்டதான்” பாலாஜி சிரித்தான். “அது ஒரு காலம் அப்பா. அப்ப நெருக்கடி இருந்துச்சு. எப்பாடுபட்டாவது விளைவிக்க வேண்டி யிருந்தது. இப்ப காலம் மாறிடிச்சு. இந்த உரத்துக்கும், பூச்சி மருந்துக்கும் எதிரா எவ்வளவு அவேர்னஸ் வந்திட்டிருக்கு தெரியுமா? நிலத்தைக் காப்பாத்தணும், காத்தைக் காப்பாத்தணும், காட்டைக் காப்பாத்தணும் எவ்வளவு ரிசர்ச் நடந்துட்டிருக்கு. உங்களுக்கு அதெல்லாம் தெரியாதுன்னு பொய் சொல்லாதீங்க”
கிருஷ்ணகுமாரும், லதாவும், பயந்திருப்பது கஸ்தூரிசாமிக்கும், சௌதாமினிக்கும் நன்றாகத் தெரிந்தது. ஃபிளையிங் கிளப், கிளைடர் என்று இருந்த விளையாட்டுப்பையனா இவன்? சித்ரிதா வாய்விட்டுச் சிரித்தாள். அடிக்கடி அமெரிக்கா செல்லும் போது ராஜ்குமாரிடம் பேசி விவாதித்து வந்த அவளுக்கு இந்த மாற்றம் புதிதாகத் தெரியவில்லை. கிருஷ்ணகுமாருக்கு கோபம் வந்து நெற்றி சுருங்கியது. ஆனால் ஒரு வருடம் கழித்து வந்திருக்கும் பையனிடம் உடனடியாகக் கோபப்பட அவர் விரும்பவில்லை. கஸ்தூரிசாமியைப் பார்த்தார். கஸ்தூரிசாமி பதில் பேசாமல் முறுவலித்தார். “பார்க்கலாம்” (பக். 294 - 295)
நாவலின் மையக்களம் கோவை மில் தொழி லாளர்கள் போராட்டம். எனவே, இடதுசாரிகள் விட்ட இடங்கள் பற்றிய விவாதக்களமாகவும் நாவல் அமை கின்றது. சுற்றுச்சூழலும் மார்க்சியமும் எதிர் எதிரான வையா? மில்லை மூடி சூழலைக்காப்பதா? என்பன போன்ற முரண்கள் விவாதப்பொருளாகின்றன. அதே போல சாதியும், வர்க்கமும் பற்றிய விவாதங்கள்- ஏகபோகமும் உள்ளூர் முதலாளியமும் பற்றியவை... என நாவலின் கூர் நீள்கிறது.
அடிப்படையில் நாவலின் வெற்றி அதன் திறந்த மனப்பக்குவத்தில் இருக்கிறது. ஜனநாயகம் கொடி கட்டிப் பறக்கிறது. எல்லாக் கருத்துக்கும் உரிய இடம் அளிக்கப்படுகின்றது. சிக்கல்கள் வழி தீர்வுகளை நோக்கிப் பயணிக்கும் பொறுப்பு வாசகர்களிடம்தான். இதுவே எழுத்தாளர் முருகவேளின் பலம் எனப் பார்க்கிறேன்.
ஒரு வித எள்ளல் நாவல்முழுக்க, அறுபதாண்டுகால தமிழ் மக்களின் வாழ்க்கைக் கவித்துவமாக எழுத்தாக்கப் பட்டுள்ளது. அன்பு, காதல், வாஞ்சை, நட்பு, தோழமை, ஆக்ரோஷம் என சகல உணர்வுகளும் சேர்ந்து பிசைந்து மனித உறவுகள் முன்னிலை பெறுவது சிறப்பு.
அமைப்பு தேவை. ஒற்றுமை தேவை. போராட்டம் தேவை. மாறும் என்பதைத் தவிர எல்லாம் மாறக்கூடியது தான் என்ற ‘அரசியல்’ அறமாக நாவலில் முன்மொழியப் பட்டுள்ளது.
முகிலினி ஆசிரியர் : இரா.முருகவேள்
வெளியீடு: பொன்னுலகம் பதிப்பகம்
4/413, பாரதி நகர்,
3-வது வீதி, பிச்சம்பாளையம் அஞ்சல்,
திருப்பூர் - 641 603
விலை: ரூ. 375/