மதவெறி பிடித்த மதத்தலைவர்கள் மதப்பிரச்சாரம் மூலமாக மக்களைத் திரட்டினாலும் பெரும் மக்கள் இயக்கத்தை வழிநடத்த முடியாதளவு குறுகிய பார்வை கொண்டவர்களாக இருந்தமையால் அவர்களின் செல்வாக்கு மங்கி, காலனியாதிக்கத்துக்கு எதிரான மதம்சார் இயக்கம் மடியத்தொடங்கியது. இவர்தம் வன்முறை நடவடிக்கைகளைக் காரணம் காட்டி காலனித்துவ ஆளும் வர்க்கம் இவர்களை இலகுவாக ஒடுக்கக் கூடியதாகவும் இருந்தது. இந்தியாவிலும் இந்துமதம் சார்ந்த குறுகிய அரசியல் செய்து வந்த இந்திய காங்கிரஸ் கட்சி பெரும் மக்கள் கட்சியாக வடிவெடுக்க முடியாமல் திணறியது. இதை மாற்றியமைத்தவர்களில் மகாத்மா காந்தி முக்கியமானவர். காங்கிரஸ் கட்சியை பெருமக்கள் இயக்கத்துக்கு தலைமை தாங்கும் கட்சியாக அகில இந்தியக் கட்சியாக மாற்றியமைக்க காந்தி உட்படப் பல புதிய காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு உத்திகளைக் கையாண்டனர்.

பிரித்தானியக் காலனியாதிக்கம் இத்தருணம் இந்தியாவில் எதிர்கொண்ட நெருக்கடியை இலங்கையில் எதிர்கொள்ளவில்லை. காந்தி இந்தியாவில் ஏற்படுத்திக் கொண்டிருந்த மாற்றத்தை ஒரு சொட்டும் காப்பியடிக்க வக்கற்ற நிலையிலேயே இலங்கை மதம்சார் உயர்வர்க்கம் இருந்தது. அவர்கள் பிரித்தானியக் காலனியாதிக்கத்தைச் சந்தோசமாக ஏற்றுக்கொண்டு தமது விசுவாசத்தைக் காட்ட முண்டியடித்தனர்.

இத்தருணத்தில் ‘படித்த’ இளைஞர்கள் சிலர் ஒன்று கூடி இலங்கை இளையோர் சபையை (Lanka youth league) உருவாக்கினர். இலங்கையில் அரசியற் குறிக்கோள்களோடு உருவாக்கப்பட்ட முதலாவது அமைப்பிது. தொழிற்சங்கவாதிகள் மற்றும் மாணவர்களை ஒன்றிணைத்து இவ்வமைப்பு உருவானது. இவ்வமைப்பும் 1924இல் உருவான யாழ்ப்பாண மாணவர் காங்கிரசும், இலங்கை வரலாற்றை மாற்றியமைத்தன. இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான சுதந்திரப் போராட்ட வேறுபாடு இங்கிருந்துதான் தொடங்குகிறது. இந்தியாவில் காங்கிரஸ் கட்சியடைந்த மாற்றம் இலங்கையில் நிகழவில்லை. மாறாகச் சுதந்திரக் கோரிக்கை வர்க்கத் தெளிவுடைய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

வெளிநாடுகளில் குறிப்பாக, இங்கிலாந்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த இந்திய-இலங்கை மாணவர்கள் பலருக்குப் பிரித்தானியத் தொழிற்சங்க இயக்கங்களுடன் பரிச்சயம் ஏற்பட்டது. பிரித்தானியத் தொழிலாளர்களின் பலத்தை அவர்கள் அனுபவ ரீதியாகப் பார்க்க முடிந்தது. இந்த மாணவர்கள் நாடு திரும்பியதும் பல்வேறு தொழிற்சங்க - அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பிரித்தானியாவில் இருந்தது போன்று காலனிய நாடுகளில் பலமான தொழிலாளர் கட்சி இல்லாததால் இவர்கள் பணிகள் ஒரு குறுகிய வரையறையைத் தாண்டிச் செல்ல முடியாத நிலையிருந்தது. முதலாளித்துவ சனநாயகம் முற்றாக வளர்ச்சியடையாததாலும் உள்ளூர் முதலாளித்துவ சக்திகள் பலவீனமான நிலையில் ஏகாதிபத்தியத்துக்கு ‘எடுபிடியாக’ செயலாற்றியதாலும் தொழிலாளர் நலன்சார்ந்து இயங்கியவர்களின் தலையில் பெரும் பொறுப்பு விழுந்தது. முதலாளித்துவ சனநாயகக் கோரிக்கைகள் உட்படப் பல்வேறு அடிப்படைக் கோரிக்கைகளை முன்னெடுக்கும் பணியையும் இவர்கள் ஏற்றுக்கொள்ள நேரிட்டது.

nehruஇந்தியாவிலும் பார்க்க பலவீனமாயிருந்த இலங்கை முதலாளித்துவ சக்திகள் தம் அரசியலை முன்னெடுக்க எந்தக் கட்சியுமற்று – ஏகாதிபத்தியத்துக்கு உதவும் பணியை மட்டுமே செய்தனர். இந்தியா உட்படப் பெரும்பான்மை காலனித்துவநாடுகளில் இதே சிக்கலை எதிர்கொண்ட இடதுசாரிகள் தாம் ஒரு தனிப்பலமாக வளருவதற்குப் பதிலாக முதலாளித்துவ சக்திகள் வளர இடம் கொடுத்தமைக்குப் பல காரணங்கள் உண்டு. முதலாளித்துவ சனநாயக வளர்ச்சியற்ற நாடுகளில் முதற் கட்டமாக முதலாளித்துவ சனநாயகத்தை வளர்த்து அதன் பிறகு தொழிலாளர் புரட்சியைக் கட்டவேண்டும் என்ற கட்டம் கட்டமாக புரட்சியை முன்னெடுக்கும் செயற்திட்டத்தைத் தேசியம் தோய்ந்த ஸ்டாலினிய வேலைத்திட்டம் முன்னெடுத்தமைக்குக் காலனித்துவ நாடுகளில் தொழிலாளர் இயக்கங்களுக்குப் மாபெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அடிப்படை சனநாயகக் கோரிக்கைகளை வென்றெடுக்க ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்னெடுக்க அவர்கள் முதலாளித்துவ சக்திகளுடன் கூட்டுச் சேரப் பணிக்கப்பட்டார்கள். இச்செயல் முதலாளித்துவ சக்திகளைப் பலப்படுத்தி இடதுசாரிக் கட்சிகளை சுக்குநூறாக உடைத்தது. இந்திய காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கும் கொள்கைத் தெளிவுக்கும் முக்கிய பங்காற்றியவர்கள் இடதுசாரிகளே என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால் இலங்கை வரலாறு வேறு திசையில் சென்றது. முதலாளிகளை எதிர்த்து தொழிலாளர் இயக்கம் தனிச் சக்தியாக வளரத்தொடங்கியமை இலங்கையில் நிகந்தது. தொழிலாளர் இயக்கம் முக்கிய அரசியல் சக்தியாக வளரக்கூடிய நிலை ஏற்பட்டமை உலகவரலாற்றில் இலங்கை வரலாறு தனித்துவமான வரலாறாக - இடதுசாரிகளைப் பொருத்தவரை மிக முக்கியமான வரலாறாக கணிக்கப்படுவதற்கு ஏதுவாகியது.

பிரித்தாளுதலும் தொழிலாளர் ஒற்றுமையும்

சுதந்திரக் கோரிக்கையுடன் வளர்ந்த இயக்கத்தை அடக்கும் நோக்குடன் அப்போது சிலோன் கவர்னராக இருந்த வில்லியம் மான்னிங் கவுன்சில் சட்டமாற்றத்தைக் கொண்டுவந்து 1921ல் முதலாவது தேர்தலை நடத்தினார். இந்த முதலாவது தேர்தலில் 13 சிங்களவர்களும் 3 தமிழர்களும் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிங்கள, தமிழ் உடைவு ஏற்பட இது காரணமானது. இதற்கு முன்பு ஒவ்வொரு இனத்திற்கும் பிரதிநிதியாக ஒரு உறுப்பினர் நியமிக்கப்பட்டிருந்தமையால் சம அந்தஸ்து வழங்கப்பட்டதான உணர்விருந்தது. கவுன்சிலில் பங்குபற்றுபவர்களின் தொகை அதிகரிக்கப்பட்டுத் தேர்தல் நடத்தியபோது பெரும்பான்மை ஆசனங்கள் பெரும்பான்மை இனத்தவர்களுக்குச் செல்வது தவிர்க்க முடியாததாகியது. ஆங்கிலேயர்களின் முதற்தரமான விசுவாசிகளாக அவர்களுக்கு மிகவும் நெருங்கியவர்களாகத் தம்மைக் கருதி வந்த தமிழ் உயர் வர்க்கத்தினர் இந்தப் புதிய பாகுபாட்டை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். 1920க்கு முன்னர் இருந்தபடி சமபங்கு நிலமைக்குச் செல்லும்படி மீண்டும் சட்டம் மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலாகத் தமிழ் உயர் வர்க்கத்தினர் முன்னெடுத்தனர்.

கண்டிய தமிழ் விரோதத்தைப் பயன்படுத்தி எவ்வாறு பிரித்தாளும் உத்தியைப் பயன்படுத்தலாம் என்று தவித்துக் கொண்டிருந்த வில்லியம் மான்னிங்கிற்கு தமிழ் உயர்வர்க்கத்தினர் பெரும்பான்மைச் சிங்களவருக்கு எதிராக ஏற்படுத்திய அதிருப்தி அரிய சந்தர்ப்பத்தை வழங்கியது.

இருப்பினும் அவர் நினைத்தபடி எதிர்ப்பை அடக்குவது இலகுவாக இருக்கவில்லை. 1910-19ம் ஆண்டுகாலப் பகுதியில் முதலாம் உலகப் போரின் போது குறைந்த உலக வியாபாரத்தைத் தொடர்ந்து பண்டங்களின் விலைகளில் பாரிய சரிவு ஏற்பட்டிருந்தது. அதனால் தொழிலாளர் சம்பளங்களைக் குறைத்தும் மேலதிக சம்பள உயர்வு செய்யாமலும் தமது இலாபத்தை அதிகரிக்க பிரித்தானிய கம்பனிகள் முயற்சி செய்தன. இதை ஏற்க மறுத்த தொழிலாளர்கள் (தோட்டத் தொழிலாளர்கள் உட்பட) போராட்டத்தில் இறங்கினர். 1919ல் இருந்து 1921 ஈறாக நடந்தேறிய பல்வேறு வேலை நிறுத்தங்கள் இலங்கை வரலாற்றில் தொழிலாளர்களின் அறுதியான நடவடிக்கையை முதன்முதலாகத் தொடக்கி வைத்தது. வேலை நிறுத்தங்கள் மூலம் பல்வேறு துறைத் தொழிலாளர்கள் பல்வேறு இனத் தொழிலாளர்கள் ஒன்றுபடக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. அக்காலத்தில் மிக முக்கிய வேலைத்தளமாகவிருந்த கொழும்புத் துறைமுகத் தொழிலாளர்களும் இரயில்வே தொழிலாளர்களும் மிக முக்கியமான பல வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டனர். வேலை நேரத்தைக் குறைக்கும்படியும் சம்பள உயர்வு செய்யும்படியும் அவர்கள் கோரினர்.

வளர்ந்துவரும் தொழிலாளர் இயக்கத்தை சரியானபடி அவதானிக்கத் தவறிய பிரித்தானிய ஆளும் வர்க்கம் மேலும் லாபம் பெருக்கும் நோக்குடன் ஒரு புதிய வரியை அமுலுக்குக் கொண்டுவந்தது. இந்த வரியின்படி (poll tax) இலங்கைவாழ் ஒவ்வொரு ஆணும் 2 ரூபாய் வரிசெலுத்தவேண்டும் அல்லது 6 நாள் கட்டிட வேலைகள் செய்தாகவேண்டும் என்று கோரப்பட்டது. இதற்கெதிராக இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். இலங்கை இளையோர் சபையின் தலைமை உறுப்பினராக இருந்த ஏ. ஈ. குணசிங்கே இந்த வரிக்கெதிரான போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தினார். வேறு வழியற்ற அரசு 1922ல் இந்த வரியை இரத்து செய்தது. இந்தப் போராட்டத்தின மூலம் பலம் பெற்ற தொழிலாளர்கள் ஒன்றிணைந்து சிலோன் தொழிலாளர் சங்கம் என்ற இலங்கையின் முதலாவது தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்தனர். இதைத் தொடர்ந்து 1923ல் நடந்த பொது வேலை நிறுத்தத்தை இச்சங்கம் முன்னின்று ஒழுங்குபடுத்தியது. இலங்கையில் தொழிலாளவர்க்கம் முறைப்படி பலப்பட்டுவருவதைப் பிரித்தானிய ஆளும் வர்க்கத்துக்குச் சரியானபடி எடுத்துக் காட்டியது இந்தப் பொது வேலை நிறுத்தம்.

பிரித்தானியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் இலங்கையிலும் செல்வாக்கு செலுத்தின என்பதையும் நாம் கவனத்திற்கொள்ளவேண்டும். 1923ல் இங்கிலாந்தில் நடந்த தேர்தலில் எக்கட்சியும் இறுதிப் பெரும்பான்மை பெறமுடியாமல் கூட்டாட்சி அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து முதன்முதலாகத் தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்தது. விரைவில் லேபர் ஆட்சி சரிந்தபோதும்- லேபர்க் கட்சி தலைமைகள் தொழிலாளர் நலன்களை முன்னெடுக்க பின்வாங்கியபோதும்- அதையும் மீறி தொழிலாளர்கள் சக்தி பலப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து 1926ல் இங்கிலாந்தில் நடந்த பொது வேலை நிறுத்தம் பிரித்தானிய சாம்ராஜ்யத்தை ஒரு உலுக்கு உலுக்கியது. பல பிரித்தானியக் காலனிகளில் இது பலத்த தாக்கத்தை உருவாக்கியது. இது காலனியத் தொழிலாளர்கள் தமது போராட்டத்தை முன்னெடுக்க பலத்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் வழங்கியது.

இந்தச் சூழ்நிலையில் தான் பிரித்தானிய ஆழும் வர்க்கம் தமது காலனிகளைத் தக்க வைத்துக் கொள்ளத் தவித்துக்கொண்டிருந்தது. இலங்கையைப் பொறுத்தவரை சிங்கள் -தமிழ் ஆளும் வர்க்கம் தமக்குள் எவ்வித உடன்படிக்கைக்கும் வரமுடியாமல் இருந்தது ஆட்சியாளர்களுக்குப் பெரும் ஆறுதலை ஏற்படுத்தியது.

சுதந்திரத்துக்காகப் போராடியது யார்?

எதிர்ப்பைக் கட்டுப்படுத்தவும் ஏற்கனவே சமூகத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த பிளவுகளைப் பயன்படுத்தித் தமது ஆதிக்கத்தை நிறுவவும் ஆட்சியாளர் மீண்டும் சட்டமாற்றங்களைக் கொண்டுவந்தனர். பிரித்தானிய காலனிய நிர்வாகி சேர் கியூ கிளிபர்ட் இலங்கை சட்டமைப்பு போதாது என்று அறிவித்து சரியான சட்டத்தை உருவாக்க ஏர்ள் டொனமூர் (Earl Donoughmore) தலைமையில் ஒரு கமிசனை அமைத்தார்.

‘நாம் உருவாக்கும் புதியமுறை இலங்கையரை சுய அரசாட்சி செய்ய பயிற்சிப்படுத்தித் தயாராக்கும் நோக்கில் இருக்கும்’ என்று காலனியாதிக்கத்தினர் வெளிப்படையாக அறிவித்தனர். உள்நாட்டில் -மற்றும் ஜரோப்பா, கரீபியனில் பிரித்தானியா எதிர்கொண்ட நெருக்கடிகள் காரணமாகத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய உள்ளூர் உயர் வர்க்க சக்திகளை உருவாக்குவதன் மூலம் தொடர்ந்தும் காலனித்துவ வளங்களைத் தமது கட்டுபாட்டில் வைத்துக் கொள்ளமுடியும் என்ற கணிப்பீட்டில் அவர்கள் செயற்பட்டனர். மேற்கண்ட உறுதியைச் சிலோன் தேசிய காங்கிரசுக்கு அவர்கள் வழங்கிய போதும் சி.தே.கா ன் உயர்வர்க்கத் தலைமைகள் அதன் தேவையைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அத்தருணம் பிரித்தானியாவை நோக்கி வைத்த கோரிக்கைகள் கேலிக்கிடமானவை.

பிரித்தானிய ஆளும் வர்க்கம் பயப்பட்டதைப் போன்றே இவர்களும் தொழிலாளர் பலம் பெருகுவதைக் கண்டு பயந்தனர். அதனால் மிக பிற்போக்குத்தனமான கோரிக்கைகளை அவர்கள் முன்னெடுத்தனர். பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படக்கூடாது என்று அவர்கள் கோரினர். அக்காலத்தில் மிகப்பெரிய தொகையான 50 ரூபாய்க்குக் குறைவாகச் சம்பளம் எடுப்பவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படக்கூடாது என்றும் அவர்கள் கோரினர். யார் தமது ‘வாக்கை’ புத்திசாலித்தனமான முறையில் பாவிக்கத் தகுதியானவர்கள் என்ற நீண்ட விவாதங்களில் அவர்கள் ஈடுபட்டனர்.

தமது கோரிக்கைகள் இலங்கையில் ஒரு அதி உயர்வர்க்கத்தை உருவாக்கும் நோக்கில் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழக் காரணமாகலாம் என்றும் பெருமையுடன் அவர்கள் பிரித்தானிய நிர்வாகிகளுக்கு தெரிவித்தனர். அதையும் விடக் கேவலமாகச் சிலோன் தேசிய காங்கிரசின் தலைவர்கள் சிலோன் இன்னும் சுதந்திரத்துக்குத் தயாரில்லை என்று வாதிட்டனர்.

ஆனால் டொனமூர் கமிசனுக்கு எதிராக பலத்த எதிர்ப்பு வேறு இடத்தில் இருந்து கிளம்பியது. லண்டனில் சிலோன் மாணவர் அமைப்பின் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் டொனமூர் கமிசனுக்கு எதிர்ப்பை ஒருங்கமைக்க முன்வந்தனர்.

லண்டனில் கம்யூனிச கட்சி ஒழுங்கமைத்திருந்த ஏகாதிபத்தியத்துக்கு எதிரான மாநாட்டில் இவர்கள் கலந்துகொண்டனர். அதைத் தொடர்ந்து டொனமூர் கமிசனுக்கு எதிராக லன்டனில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டது. இந்த மாணவர்கள் பல முக்கிய அரசியற் பாடங்களை கற்றுக்கொண்ட வருசமாக இருந்தது 1929.

லெனினின் மறைவைத் தொடர்ந்து சோவியத் யூனியனில் ஸ்டாலினும் அவரது சகாக்களும் அதிகாரத்தைத் தம் முழுக் கட்டுபாட்டில் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியிருந்தனர். அதையொட்டி ட்ரொட்ஸ்கி உட்படப் ரஷ்யப் புரட்சியை வழிநடத்திய பலர் வேட்டையாடப்பட்டனர். நிர்வாகமயப்பட்ட ஸ்டாலினிஸ்டுகள் தமக்கெதிரான அனைவரையும் கொன்று தள்ளினர். ஸ்டாலினிஸ்டுகள் எவ்வாறு ரஷ்யப் புரட்சியை முடிவுக்கு கொண்டுவருகிறார்கள் என்பது இடது சாரிகள் மத்தியில் வெளிச்சத்துக்கு வரத்தொடங்கியிருந்தது. ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்கள் பலராலும் படிக்கப்பட்டு இடதுசாரி இயக்கங்களில் பலமாக விவாதிக்கப்பட்டது. ஒரு நாட்டுக்குள் சோசலிசம் சாத்தியமா? சனநாயக மத்தியத்துவம் என்றால் என்ன? காலனித்துவ நாடுகளில் புரட்சிக்கான போராட்டத்தை எவ்வாறு முன்னெடுப்பது?. போன்ற விடயங்கள் ஆழமாக விவாதிக்கப்பட்டது.

சர்வதேச சோசலிச பார்வையுடைய, பாட்டாளி மக்கள் சனநாயகத்தில் அக்கறையுடய பலர் ஸ்டாலினிய இறுக்குப்பிடியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து விலகத் தொடங்கியிருந்தனர். தமது படுகொலைகளை மூடிமறைக்க ஸ்டாலினிஸ்டுகள் பெரும் பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துத் தமக்கெதிராகப் பேசுபவர்கள் அனைவரையும் துரோகிகள், காட்டிக்கொடுப்போர் என்று வர்ணித்தனர். இந்த விவாதங்களில் ஈடுபட்ட இலங்கை மாணவர்கள் பலர் ட்ரொட்ஸ்கியின் தெளிவான மார்க்சிய விளக்கங்களால் கவரப்பட்டனர். குறிப்பாக காலனித்துவ நாடுகளில் புரட்சி பற்றித் தெளிவாக விளக்கிய ‘நிரந்தரப்புரட்சி’ சார்ந்த எழுத்துக்கள் மிகச்சரியான விளக்கம் தருவதைப் பல உரையாடல்கள் விவாதங்கள் மூலமும், தமக்கிருந்த காலனித்துவ நாடு பற்றிய அரசியல் பொருளாதார அறிவு மூலமும் இவர்கள் உணர்ந்துகொண்டனர். 1930ல் நாடு திரும்ப முதல் பிலிப் குணவர்த்தன முதலானவர்கள் ட்ரொட்ஸ்கியுடன் நேரடி தொடர்புகொள்ள முயற்சி செய்தது கவனத்திற் கொள்ளப்படவேண்டியது.

இதே தருணம் வடக்கில் யாழ்ப்பாண இளையோர் சபையில் செயற்பட்டுவந்த மாணவர்கள் இந்தியத் தேசியக் காங்கிரசின் நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். முதலாவது தேர்தல் நடந்தபோது அதைப் பகிஸ்கரித்த அவர்கள் உடனடிச் சுதந்திரக் கோரிக்கையை வைத்திருந்தனர். சிலோன் காங்கிரசைப் போலன்றி இந்தியக் காங்கிரஸ் அங்கு வந்திருந்த சைமன் கமிசனுக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்தது. இளம் சோசலிஸ்டுகள் என்று தம்மை அழைத்துக் கொண்ட காங்கிரஸ் இளையோர் பிரிவு பல போராட்டங்களை முன்னின்று நடத்தியது. இளம் சோசலிஸ்டுகளில் முக்கிய தலைவர்களில் ஜவர்கலால் நேருவும் ஒருவர். இதைத் தொடர்ந்து இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயம் செய்தனர். வந்தவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்துக்கு வந்து இளையோர் சபையுடன் உரையாடியது குறிப்பிடத்தக்கது. 1927ல் காந்தியும் 1931ல் நேருவும் இலங்கை வந்தனர்.

நேரு இளைஞர்களை நேரடி போராட்டத்தில் குதிக்கும்படி தூண்டினார். அவர் யாழ்ப்பாணத்தில் வழங்கிய உரை முக்கியமானது. ‘சுதந்திரத்துக்கான போராட்டம் உன்னதமான போராட்டமே. ஆனால், இந்தச் சுதந்திரப் போராட்டம் யாருக்காக? அது எவ்வாறு நாட்டின் மிகவும் ஒடுக்கப்படும் மக்களையும் தொடுகிறது என்பதைப் பற்றியும் ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றியும் நாம் நன்றாக தெரிந்துகொள்ள வேண்டும்’ என்று நேரு அறிவுறுத்தினார்.

ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகளுக்குப் பயணங்களை மேற்கொண்டுடிருந்த ஈ.வே.ரா. பெரியார் அவர்களும் தமது பயண முடிவில் இலங்கைக்கு வந்து தங்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது. மார்க்சியத்தால் கவரப்பட்ட அவர் ஸ்டாலினிய எல்லைகளை மீறமுடியாத பிரச்சினையுடன் திரும்பியிருந்தமையும் அதுபற்றி நாடு திரும்பிய பொழுதில் இலங்கை இந்திய இடதுசாரிகளுடன் உரையாடியமையும் இங்கு குறிப்பிடுவது அவசியம்.

இதைத் தொடர்ந்து இலங்கைக்கு வந்த இன்னுமொருவர் இ.தே.கா தலைவர்களில் ஒருவர் கமலாதேவி சட்டோபாத்யா. தன்னை ஒரு பெண்ணியவாதியாகவும் சோசலிஸ்டாகவும் அடையாளப்படுத்திக்கொண்ட இவர், யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் பல பொதுக்கூட்டங்களை ஒழுங்குபடுத்த உதவினார். பிரிந்திருந்த பல இளையோர் சபைகளை ஒன்றுபடுத்த உதவினார். 1931ல் பல்வேறு இளையோர் சபை ஒன்றுகூடி இளையோர் காங்கிரசை உருவாக்கியன. ஏய்லின் பெரேரா அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இளையோர் காங்கிரஸ் உடனடியாக சுதந்திரம் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. இளையோர் காங்கிரசின் தொடக்கக் கூட்டத்தில் கமலாதேவி பேசினார். சோசலிசக் கருத்துக்களால் கவரப்பட்டு லண்டனிலிருந்து திரும்பிய சிங்கள-தமிழ் மாணவர்கள் உடனடியாக இளையோர் காங்கிரசில் இணைந்தனர்.

நேரு முதலானவர்கள் தங்களைச் சோசலிஸ்டுகள் என்று அழைத்துக் கொண்டாலும் சோசலிசம் பற்றிய அல்லது ஒரு சோசலிசப் புரட்சியை எவ்வாறு முன்னெடுப்பது என்ற பரந்த அறிவு அவர்களுக்கு இருக்கவில்லை என்பதை இங்கு குறிப்பிட்டாகவேண்டும். இருப்பினும் ஒடுக்கப்பட்ட மக்கள் - மிக முக்கியமாக ஒடுக்கப்பட்ட சாதியினர் சுதந்திரப் போராட்டத்தில் இணைவதற்கு இந்த இடதுசாரிய சரிவு முக்கிய பங்காற்றியது என்பது மிகையான கூற்றல்ல.

sjv_selvanayagamஇளையோரின் இடதுசாரிப் போக்கை கடுமையாக எதிர்த்த தமிழ் உயர்வர்க்கம் அவர்களை உடைக்க சாதியைப் பயன்படுத்தியமையையும் நாம் இங்கு அவதானிக்க வேண்டும். பெரும்பான்மையான உயர் வர்க்கத்தினர் மேற்சாதியைச் சேர்ந்தவர்களே. அதேபோல் பல இளையோர் காங்கிரஸ் தலைவர்களும் உயர்சாதியை சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். அவர்கள் ‘புரட்சிகர’ கருத்துக்களாற் கவரப்பட்டுத் தம்மைப் புரட்சியாளர்களாகக் கருதியபோதும் சாதியம் சார்ந்த தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாதவர்களாகவே இருந்தார்கள். யாரும் துணிந்து சாதியத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கத் தயங்கினர். இந்த முரண்பாடு 1931ல் சங்கானையில் ஒடுக்கப்படும் சாதியினர் தாக்கப்படுவதற்கு வழியேற்படுத்தியது,

பறையர் சாதியினர் ‘மேளமடிக்க’ ஆள்பிடிப்பதை எதிர்த்த வெள்ளாள சாதியினர் பறையர் சாதியினரை படுமோசமாகத் தாக்கினர். வெள்ளாளர்களுடைய செத்த வீடுகளில் மேளமடிக்கும் பறையர் சாதியினர் தமது சொந்தச் செத்த வீடுகளில் மேளமடிக்க ஆள் பிடிக்கக்கூடாது என்று ஆதிக்கசாதிகள் தடுத்திருந்ததை மீறியதைத் தொடர்ந்து இத்தாக்குதல் செய்யப்பட்டதாக வெள்ளாளர் காரணங் கூறினாலும், இத்தாக்குதலுக்குப் பின்னால் பல காரணங்கள் இருந்தன. ஒடுக்கப்படும் சாதியினர் எவ்விதத்திலும் பொருளாதார ரீதியாக அரசியல் ரீதியாக பலப்படக்கூடாது என்ற வெள்ளாள ஆதிக்க சாதிய ஆதங்கமே இதற்கு முதற்காரணம்.

இக்காலத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு எதிராக நிகழ்ந்த கொடூரத் தாக்குதல்களை அனைத்து அதிகாரப்பூர்வ வரலாற்றுப் புத்தகங்களும் மூடி மறைத்துப் பேசுவதைப் பார்க்கலாம். இரும்புக் கம்பிகளால் ஆதிக்கசாதியினர் பலரது மண்டைகளை உடைத்தும் கோடாரியால் வெட்டியும் கொட்டில்களை எரித்தும் அவர்கள் செய்த அகோரத்தாக்குதல்களுக்கு ஏராளமான ஒடுக்கப்படும் சாதியினர் பலியாகினர். இதை எதிர்த்துப் போராட எந்தச் சக்தியும் முன்வரவில்லை. இதைச் சாதகமாகப் பயன்படுத்திய தமிழ் உயர் வர்க்கம் தமிழ் இளையோரின் தேர்தல் பகிஸ்கரிப்பை வெற்றிகரமாக முறியடித்து 1934ல் மீள்தேர்தலை நிகழ்த்த வழியேற்படுத்தினர். இத்தேர்தலில் பருத்தித்துறையிலிருந்து ஜி.ஜி பொன்னம்பலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட இளைஞர்களான எஸ்.ஜே.வி செல்வநாயகம், கே.பாலசிங்கம், வி.துரைசுவாமி முதலானவர்கள் தேர்தலில் பங்குபற்றவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தொடரும்...

- சேனன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It