மலையகத் தமிழர்களாக மாறிப்போன புலம்பெயர் தமிழர்களின் இடப்பெயர்ச்சி குறித்த பதிவுகள் குறைவு. மு. சிவலிங்கம் எழுதிய ‘பஞ்சம் பிழைக்கவந்த சீமை’ அதை நிறைவு செய்கிறது.
தமிழ்நாட்டின் திருச்சி - அரியலூர் - வாலிகண்டபுரம் வட்டார முருக்கன்குடி எனும் சிற்றூரிலிருந்து வாழ்வின் வளம் தேடி இலங்கைக்குச் செல்லும் இளைஞர்கள்... வேலாயுதம், அர்ச்சுணன், தாண்டவன், பழனி, சீரங்கன் என்று பஞ்ச பாண்டவர்கள் போல புறப்பட்ட இவர்களின், பயணத்தை வைத்து பஞ்சம் பிழைக்கப் போன தமிழர்களின் வாழ்க்கைப் பாதையைச் சித்திரிக்கிறது இந்நெடுங்கதை.
வறுமை, பசி, பட்டினி நிரந்தரமாகிவிட்ட அந்நியராட்சியில் அரசாங்கமும், தனியார் ஏஜெண்ட்களும் பொய், புரட்டுகளைச் சொல்லி கூலிகளாக காலனிய நாட்டுப் பணப்பயிர்த் தோட்டங்களுக்கு தமிழர்களைக் கப்பல் ஏற்றினார்கள். தீரா நோயாய் மாறிப்போன வறுமைச்சுழலில் இருந்து தப்பி வளம் காணா வாழலாம் என்ற பெருங்கனவில் கங்காணிகள், ஆள்கட்டிகளின் வழி பரதேசப்பயணம் தொடங்கியது.
ஆள்கட்டி கங்காணிகள் முன்பணம் கொடுத்து ஆட்களைத் திரட்டினார்கள். அப்படி அரியலூர், திருச்சி வட்டாரத்திலிருந்தும் பிற பகுதிகளில் இருந்தும் ஆயிரம் பேர் புறப்படுகிறார்கள். கண்டிக்குப் பயணப்பட்ட இவர்கள் காட்டுவழிப்பயணம், படகு வழிப் பயணம், கால்நடைப்பயணம் என மாறி மாறி பயணிக்கிறார்கள். திருச்சியிலிருந்து ஒற்றையடிப் பாதை, வண்டிப்பாதைகளில் நடந்து செல்கிறார்கள். பாம்பனை அடைந்து அங்கிருந்து இராமேஸ்வரம் தனுஷ்கோடி செல்கிறார்கள். தலைமன்னார் பயணத்தின் இடையில் ஐவரில் அர்ச்சுனன், தாண்டவன் இல்லாமல் போய் வேலாயுதம், பழனி, சீரங்கன் ஆகிய மூவரும் பயணத்தைத் தொடர்கிறார்கள். பசி, பிணி, பாம்புக் கடி, விஷத்தாக்குதல், மிருக வதை... என நூறு, இருநூறு மனிதர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள். இறந்த உடல்களை மிருகங்களுக்கு விட்டுவிட்டு, வழிப்பறி, இனவெதிர்ப்பு என எல்லா துயரங்களையும் தாங்கி வயிற்றுப்பாட்டுக்காய் தொடங்கியப் பயணத்தை மாத்தளையில் முடிக்கிறார்கள். அப்போது ஆயிரத்தில் ஐநூற்று ஐம்பது பேரே மிஞ்சுகிறார்கள்.
அடுத்து, ஆள்கட்டி கங்காணிகள் கையிலிருந்து தோட்டக் கங்காணிகள் கைகளுக்கு மாறுகிறார்கள். கண்டி மேமலை கோப்பித் தோட்டம் உருவாக காடழிப்பில் தொடங்கி, காபித் தோட்டங்களை பணம் காய்க்கச் செய்வது வரை தமிழ்க்கூலிகளின் உழைப்பு அடித்தளமாகிறது. காபிக்கு அடுத்து தேயிலை வருகிறது. தோட்டங்கள் மாறுகிறது. முதலாளிகள் மாறுகிறார்கள். ஆனால் வாழ்வு அதே நிலையில்தான். ஆண்களும், பெண்களும் படாதபாடு படுகிறார்கள். பெண்களின் நிலை கூடுதல் பரிதாபம். ஏமாற்றும், மோசடியும் பெருகி அதிகாரத் திமிர்த்தனங்களும் அதிகரிக்கின்றன.
உழைப்பாளிகள் தங்களை உணரத் தலைப்படுகிறார்கள். ஆங்கிலத் துரைகள், தமிழ்க் கங்காணிகள் எதிர்ப்பின் முகம் பார்க்கத் தொடங்குகின்றனர். ஆங்காங்கே உரிமை கோரல் எதிர்ப்புகள். மூன்று கொலைகள் விழுகின்றன. வேலாயுதமும் அவனது பிற கூட்டாளிகள் சிலரும் கைது செய்யப்படுகிறார்கள். சீரங்கமும் பழனியும் வேறு தோட்டங்களில் பணி செய்து ஊர் திரும்புகிறார்கள். ஊரில் வேலாயுதமும் நண்பர்களும் வந்த கப்பல் மூழ்கிச் செத்துவிட்டார்கள் என்ற வதந்தி பரவி அவனது அப்பாவும் அம்மாவும் அதிர்ச்சியில் இறந்து போன செய்தியும், அவனது முறைப்பெண் பாப்பாத்தி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்ட செய்தியும் வந்து சேர்கின்றன. வழக்கிலிருந்து விடுதலை அடைகிறான். வேலாயுதம் இங்கு ஆதிக்கக் கொலை செய்யப்பட்ட பூபதியின் மனைவி சரஸ்வதியை மணந்து மகன் பசுபதியை ஏற்று, ஒரு புதிய மகளையும் பெற்றெடுக்கிறான். பத்தாண்டுகள் கழித்து 1874 இல் தமிழ்நாட்டுக்கு திரும்புகிறான். தோட்டத் தொழிலாளர்கள் உரிமைக்கு கோ. நடேசய்யர் குரல் கொடுக்கிறார். சங்கம் பிறக்கிறது. கட்சிகள் வருகின்றன. இலங்கையில் தோட்டத் தொழிலாளர் நிலை கேள்விக் குறியாகிறது. சங்கம், தலைவர்கள், அமைச்சர்கள் இருமுகம் காட்டுகிறார்கள். முதலில் சென்ற தமிழர்களின் அடுத்தடுத்த தலைமுறையினர் அங்கேயே வாழவும் சிலர் தாயகம் திரும்பவும் செய்வதோடு நாவல் நிறைவடைகிறது.
புதுமைப்பித்தனின் துன்பக்கேணி, கோகிலம் சுப்பையாவின் தூரத்துப் பச்சை வரிசையில் ‘பஞ்சம் பிழைக்க வந்த சீமையும்’ அமைகிறது.
“பிரித்தானிய பெருந்தோட்டம் வியாபாரிகளின் விவசாயத்தை நம்பி வந்த தென்னிந்தியக் கிராமத்துக் குடிகளின் நீண்ட நடைப்பயணம், உலக வியப்புக்குரியதாகும். தாய் மண்ணிலிருந்து, கானகத்துக்கூடாக நீண்ட நடையிலும்... கடல்பயணத்திலும்... மீண்டும் மன்னார்... மலைநாடு வரையிலும் கடந்து வந்த ‘பாதையில்’ பல்லாயிரக்கணக்கானோர் மடிந்து போன நிகழ்வுகள் மறைக்கப்பட்டன! உலகமறியாத ஒரேயரு துயர வரலாறு, தென்னிந்தியத் தமிழர்கள் பிரிட்டிஷ்காரர்களின் பின்னால் பெருந்தோட்டச் செய்கைக்காக குடியேற்ற நாடுகளை நோக்கி கடல் கடந்து, அல்லல்பட்டு, அழிந்து போன வரலாறாகும்”என ஆசிரியர் உரையில் மு. சிவலிங்கம் சொல்வது மிகச்சரி.
இது நவீன ஆற்றுப்படை; துயர் பயணப்படைப்பு. தோட்டத் தொழிலாளர் புலப்பெயர்வின் ரிஷிமூலம். ஆசிரியர் சகபயணியாய் நின்று படைத்துள்ளார்.
புலம்பெயர் தொழிலாளரின் புலப்பெயர்வின் முன்னும் பின்னுமாக வாழ்வியல் பதிவுகள் இந்நாவலின் பெருஞ்சிறப்பு. அந்த வகையில் இப்படைப்பு ஒரு வரலாற்று சமூக ஆவணமாகத் திகழ்கிறது.
பிழைப்புக்காக அயலக செல்லும் முன், ஊரில் உறவுகளிடம் விடை பெறுதல், அச்சம் தரும் பயணக்கதைகள், பயண வழி, பயணத் துணை, கங்காணிகளின் கொடுஞ்செயல்கள், இழப்புகள், துயரங்கள், தோட்டங்கள், தோட்ட வேலையின் சிக்கல்கள், தங்குமிடங்கள், பெண்களுக்கான வன்கொடுமைகள், நம்பிக்கைகள், வழக்காறுகள், எதிர்ப்புணர்வுகள், நவகாலனியக்கூறுகள் நாவல் முழுக்க விரவிக் கிடக்கின்றன. இந்த வாழ்வும், வலிகளும் ஓர் இனத்தின் வாழ்வுக்கான போராட்டம். அது முடியாதது தொடரும். மாற்றம், புதுமை மலரும் என்ற நம்பிக்கையை இப்படைப்பு முன்வைக்கிறது.
வாழ்க்கையைத் தேடிப் புறப்பட்டப் பயணம், அன்றாடம் வாழ்வின் முடிவை அதன் விளிம்பைக் காட்டிக் கொண்டே நடைபிண மனநிலையை உருவாக்கி விடுகிறது. வயிற்றுப் பிழைப்புக்குமாக ஊசலாடும் மனித இருப்பை உயிர்ப்போடு இந்நெடுங்கதை காட்சிப்படுத்தி விடுகிறது.
பஞ்சமும் பரிதவிப்பும்
ஆண்டாண்டு காலமாக பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண்ணில் வாழ முடியாத நிலை ஏற்பட்டு பிழைப்புத் தேடி இளம் தலைமுறை செல்ல நேரிடுகிறது. “பஞ்சத்த இதுக்கு மேல தாங்கிக்க ஏலாது... பணக்காரங் கிட்ட நஞ்ச புஞ்ச இருந்தப்போ... கம்போ, குரக்கனோ, கேவரோ, சோளமோ, கஞ்சி காச்ச சரி கெடச்சிச்சி வெள்ளக்கார நாய்க நெலத்த பறிச்சிகிட்ட பொறகு, யாரால என்னா செய்ய முடியும்? இப்ப இந்த ஏரி கூட அவனுக்கு சொந்தமா போச்சி, தெரியும்ல? அவன் நெனச்சா தான் இனிமே நமக்கு தண்ணி கூட கெடைக்கும்.” “ எல்லா ஏரியும் வெள்ளைக்காரன் சர்க்காருக்கு சொந்தமாச்சு. தண்ணிக்கும், வயல் நெலத்துக்கும் காணிக்காரங்க வரி கட்டணும், சொந்த வயக்காட்டுல வெவசாயம் செய்ய முடியாது! தோட்டம் கொத்த முடியாது...! எல்லாமே சர்க்காருக்கு சொந்தமாம். அவனுங்க எறக்குமதி செய்ற ஜாமான்களை பணங்குடுத்து வாங்கித் திங்கணுமாம். பணத்துக்கு எங்க போறது...?” “ஊரவுட்டு மட்டுமில்லை; நாட்டவுட்டே போவ வேண்டியிருக்கும்” (பக். 2-3)
இந்த நிலையைப் பயன்படுத்த காலனி அரசு முனைந்தது. தன் ஏஜெண்ட்டுகள் வழியாகவும் தனியார் கங்காணிகள் வழியாகவும் மனிதக் கூலிகளை தங்களது காலனி நாடுகளில் உள்ள பணப்பயிர்த் தோட்டங்களுக்கு ஏற்றுமதி செய்தது. மக்கள் கூடும் கோயில் போன்ற இடங்களில் நோட்டீஸ் அறிவிப்பு ஒட்டப்பட்டது. கூலிகளாகச் செல்ல பெயர்ப்பதிவு செய்வோருக்கு கடனாக முன்பணமும் தரப்பட்டது. பயணம் போகிறவர்கள் தங்கள் குடும்பத்துக்கு தேவையான உணவு, உடை, பண்ட பாத்திரங்கள் வாங்கவும் பயணக் கைச்செலவுக்கும் இப்பணம் பயன்பட்டது. அதோடு உறவினர்களோடு கறிவிருந்தும் நடந்தேறியது. “செல்லான் குடும்பத்துல மட்டுமில்ல மச்சினே... காத்தமுத்து, தொப்புலான், ஆண்டி, ராமசாமி குடும்பத்துக்கும் மூனுநாளா தீபாவளி நடக்குது! கெடா அறுத்து, சம்பா பொங்கி, கூத்தும் கும்மாளமும் நடத்துக்கிட்டு இருக்கு...!”
‘என்ன விசேஷம்ல...?’
‘கண்டி சீமைக்கு போறாஹலாம்...!’
“வீசக்கார சங்கிலிதான் ஆளுக்கட்டியாம். முன் பணம் குடுத்துட்டு போயிறாக்காய்ங்கலாம்! ஆறு நாளுல அக்கர கௌம்பணுமாம்...!” (ப.2).
முன்பணம் பெறுபவர்கள் கங்காணிகளால் கடுமையாக மிரட்டப்பட்டார்கள். சர்க்காரும், போலீசும் சும்மாவிடாது என்று எச்சரிக்கப்பட்டார்கள்.
கண்டிக்குத்தான் போறமுன்று
கறிசோறு தின்னுப்புட்டு...
தோணிஏற மாட்டோமுன்னு
தொங்கலியே ஒளிஞ்சிக்கிட்டா
தொலைச்சுடுவான் ஆளுகட்டி...! (ப. 9)
எனப் பாடும் அளவுக்கு நிலைமை இருந்தது. பயணத்தைப் பற்றியும், தோட்ட வேலையைப் பற்றியும், அங்கு பொருள் ஈட்டி அடையப் போகும் பலன்களைப் பற்றியும் ஆள்கட்டி கங்காணி விலாவாரியாகச் சொல்கிறான்.
“கெவனமா கேட்டுக்கோ சிலோன் போற பயணத்துல சமுசியம், பயம் இருந்தா, பயந்தாங் கொள்ளிக எல்லாரும் ஓரமா நில்லு...! துணிச்சலானவென் மட்டும் ஒழுங்கா கேட்டுக்கோ! காடு, மேடு ஏறன்ணும்... நம்மூரு நீலகிரி மாதிரி இருக்கும். கூதல் ஜாஸ்தியாயிருக்கும். கடலு மேல போவணும். சொந்த ஊர்ல்லாயிருந்து தேவிபட்டணம், பாம்பன் ராமேஸ்வரம் போற வரைக்கும் நடராசா தான் புரியுதா...”? (ப.10)
“கண்டி சீம, இருவத்திரெண்டு கட்ட தூரம்லே! கடல் தண்ணியக் கடந்தா மன்னாரு! ஓங் குப்பத்துலவெட்ட வெளிக்கி போயிட்டு வர்றதூரம்...! அங்க வெளிக்குப்போனா சூத்து கழுவ தண்ணி கெடைக்கும்! அங்க திங்கப் போற தீனி, கொஞ்ச நாளையில் ஒங் குண்டியில கொழுப்ப வெச்சிரும்...! ஒங்கோயி ஙொப்பன தவுற எல்லாமே கெடைக்கும்! நீ விருப்பப்பட்டா பொண்டாட்டி கூடகிடைக்கும்” (ப. 10). சங்கிலி கங்காணி கிண்டலாய் பேசினாலும் எளிய மனிதர்கள் நடப்பு நலிந்த வாழ்வைக் கடக்கும் கனவை சுமந்து தானே பயணப்படுகிறார்கள். பயண வழிக் கொடுமைகள் ஒருபுறம் என்றால் ‘நரபலி’ போன்ற காட்டுமிராண்டி வழக்கங்களும் பயமுறுத்தின. கொழும்பு கண்டி நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் போது நடந்த ‘நரபலி’ குறித்தக் கதைகளும் உண்டு.
நரபலி
“அந்த மூன்று இளைஞர்களையும் பாலம் கட்டும் இடத்திற்கு அழைத்து வந்திருந்தார்கள். பாலம் நிர்மாணிக்கும் ஓர் உயர்ந்த கட்டடத்தின் அருகில் பூசையை ஆரம்பித்தார்கள். கருப்பன் கங்காணியும், சீமைத்துரைகளும் வந்து விட்டார்கள். அந்த மூவரையும் சாம்பிராணி போடச்சொன்னார்கள். கண்களை இறுக மூடிக்கொண்டு பால் போல் எரிக்கும் அந்த பௌர்ணமி வெளிச்சத்தில் கிழக்குத்திசையைப் பார்த்துக் கும்பிடச் சொன்னார்கள்.
அவர்களும் அவ்வாறு செய்யவே, பூசை செய்பவன் உடனே அவர்களை அடித்தளம் வெட்டியிருக்கும் குழிக்குள் தள்ளி விட்டான்...! குழுமியிருந்த கூலியாட்கள் கற்களை வேகவேகமாக குழிக்குள் உருட்டிவிட்டார்கள். அவசர அவசரமாக மணல், சிமிந்தி சாந்துகளைக் கொட்டினார்கள். வெள்ளைக்காரர்கள் கண்களை மூடிக் கொண்டார்கள். கங்காணி பலமாகச் சிரித்தான். ‘சீமத்தொரைமார்களே! நரபலி குடுத்துட்டோம். இதுக்கு மேல கட்டு ஒடையாம கட்டடம் ஏந்திரிக்கும் பாருங்கோ' என்று வீரதீரமாகப் பேசினான்” (ப.6).
புறப்பாடு
வேலாயுதம் பயணம் தொடங்கும் முன், அவனது அக்காள் மகள் அவனின் முறைப்பெண் பாப்பாத்தி அவனிடம் நடந்து கொண்ட முறை, ஏறக்குறைய திருமணம் ஆகி, ஆகாமல் அயலகம் செல்லும் பலரின் வாழ்வின் சிறுதுளிதான்.
“அவள் அவனிடம் வெட்கத்தைவிட்டு கேட்டாள். அவனை இழுத்துப் பிடித்து காதுக்குள் வாயை வைத்து சூடு தெரிக்க குசுகுசுத்தாள். ‘மாமா, இந்த மூனு நாளைக்கும் நானும் நீயும் புருசன் பொண்டாட்டியா சேந்து இருக்கணும்!’ ‘பாப்பு..! மடத்தனமா பேசுறியே, நா வெளித்தேசம் போயிவர்ற வரைக்கும் ஒன்னையத் தொடமாட்டேன்னு சொன்னது மறந்து போச்சு?' ‘மாமா..! நா ஆம்பள சொகத்துக்கு அலைலீயே மாமா! ஒனக்காக நான் புள்ள பெத்துக்கணும். நீ போன பொறகு நா முழுகாம இருக்கிற சங்கதி சேரிக்குள்ளேயும், ஊருக்குள்ளேயும் தெரிஞ்சிருக்கணும். நான் கெட்டுப் போவணும். அதுதான் எனக்கு பாதுகாப்பு. இல்லேன்னா எங்கப்பன் என்னையை கலியனுக்கு கட்டி வெச்சிடும்’ அவள் தேம்பித் தேம்பி அழுதாள்” (ப. 25).
அப்படியே நடந்து பாப்பாத்தி கருவுற, வேலாயுதம் செத்துப்போனதாக வந்த வதந்தியில் கரு கலைய, தனக்கும், பெற்றோருக்கும் உதவிய கலியனை மணக்க நேர்கிறது. வேலாயுதமோ பல்லாண்டுகள் பாப்பாத்தியை நினைத்தே விரதம் இருப்பது போல தனிக்கட்டையாகக் காலம் கழிக்கிறான்.
தங்குமிடங்கள்
நடைப்பயண வழியில் ‘திருச்சி - சிலோன் பயணிகள் தங்குமிடங்கள்’ உருவாகியிருந்தன. காட்டு வழிப் பயணத்தில் இளைப்பாற, சமைத்து சாப்பிட ஆங்காங்கே தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கோயில்கள், மடங்கள் தவிர்த்து இதற்கெனவே செட்கள், தண்ணீர்த் தொட்டிகள் அமைத்திருந்தார்கள்.
பயண அவதி
பயணத்தில் மக்கள் பெரும் அவதிப்பட்டார்கள். நீண்ட தூரம் நடத்தறியாதவர்கள், வயோதியர்கள், நோயாளிகள், பெண்கள், கைக்குழந்தைகள்... வயிற்றுப்பாட்டிற்கான பெருவலியை அனுபவித்துச் சென்றார்கள். “மூச்சுக்குத்து, மாரடைப்பு, இடுப்புப்புடி, மண்டகுத்து, மொழங்காலு சுலுக்கு, ஆஸ்துமா, காச்சல்னு போனதுக... அப்புறம் சாட்டு சீவாத்து, சிறுத்த, புலி, விரியன், புடையன், வண்டு, கொளவின்னு போனதுக” (ப. 40) என இறப்புக் கணக்கு வந்துகொண்டே இருந்தது.
காலனிய நாடுகளுக்கு தென்னிந்தியர்கள் கூலித்தொழிலாளர்களாக செல்ல உடனடிக்காரணமாக அமைந்தது. உலகில் அடிமை முறை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டதுதான். அதுவரை அடிமைத் தொழிலில் உடலுழைப்பு நல்கிய ஆப்பிரிக்கர்கள் விடுதலை ஆனார்கள். ‘உடல் உறுப்புகளாலும் இதயங்களாலும் நாங்கள் மனிதர்களாகிவிட்டோம்’ என்று அவர்கள் ஆர்ப்பரித்தார்கள்.
பணப்பயிர் சாகுபடியில் நுழைந்திருந்த வெள்ளை முதலாளிகள் மாற்றுகளைத் தேடத் தொடங்கினார்கள். உலகில் எப்பகுதி மக்களை விடவும் பொருத்தமானவர்களாகத் தமிழர்கள் இருந்தார்கள்.
“தென்னாப்பிரிக்க கறுப்பர்களைப் போலவே உடல் பலத்திலும், பணிவிலும், அப்பாவிந் தன்மையிலும் அனைத்து குணாதிசயங்களிலும் ஆப்பிரிக்க அடிமைகளைப் போலவே எந்த துயரங்களையும் தாங்கிக் கொண்டு மிருகங்களைப் போன்று உழைத்துக் கொடுப்பதற்கு இந்தியாவின் தென்பகுதி தமிழர் எனும் இனத்தைக் கண்டுபிடித்துள்ளோம்...! அவர்கள் பட்டினியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ரொட்டித் துண்டுகளைத் தேடி நகரத்துக்கு செல்வதற்கும் தயாராகவிருக்கிறார்கள். அங்கே மழை என்ற சங்கதியே கிடையாது...! மண்ணெல்லாம் வெடித்து வாயைப் பிளந்து கிடக்கின்றன. ஊர்முழுக்க தூசி... காற்றடித்தால் தூசி மழைதான் பெய்யும்! தூசிப்புயல் வீசும்! “நீங்கள் வேண்டிய மட்டும் அவர்களைச் சொந்தமாக்கிக் கொள்ளலாம்” (ப.47) என மெட்ராஸ் ஆளுநர் தோட்ட முதலாளிகளிடம் சொல்வார். இந்தியத் தமிழர்கள் தோட்டத் தொழிலாளர்களாக மாறியது இப்படி தான்.
தப்பு அடித்தல்
பறை எனும் இசைக் கருவி தமிழர்களின் ஆதியிசைக் கருவி. காலப்போக்கில் தீண்டாமை நுழைந்து போர்ப்பறை சாப்பறையாகி விட்டது. பயணம் தொடங்கும் போதே ‘தப்பு’ செய்து கொண்டு ஆள்கட்டி வரச் சொல்லி இருந்தான். இரண்டு இடங்களில் அது பயன்படுகிறது. ஒன்று வழிநடையில் காட்டு மிருகங்களிடம் இருந்து காத்துக்கொள்ள, மற்றது தோட்டத்தில் ஆட்களைத் திரட்ட. மன்னாரிலிருந்து மாத்தளை நோக்கிச் செல்லும் காட்டுப் பாதையில் சங்கிலி தப்படிக்க கட்டளையிட்டான். “காட்டுக்குள்ள நொழைஞ்சி போற நேரம் தப்படிச்சிக் கிட்டே போவணும்...! ஆன, சிறுத்த, பிலி, இன்னொம் காட்டுமுருகங்க இருந்தா பயந்து தூர ஓடிப்போகும்! நம்மகிட்ட எந்த சனியனும் வராது..! காட்டுப் பயணத்துல பாதுகாப்பு ஆயுதம் நமக்கு வேற ஏதும் கிடையாது” (ப. 68). பயணவழி காடாக, கரடு, முரடாக இருந்தது. பாதை என்று ஒன்று இல்லை.
“பாதையும் வெட்டி
பயணம் சென்றோம்”
எனப் பாடும்படிக்கு வழிகளை ஏற்படுத்திக் கொண்டு சென்றார்கள்.
பயணக் கொடுமை
வழியில் நடந்த துயரங்கள் எழுத்தில் வார்க்க முடியாத சோகச் சித்திரம். நடைபயணத்தில் சிலரைக் காணவில்லை. சங்கிலியும் சில இளைஞர்களும் பின்னோக்கித் தேடி வருகிறார்கள். இதோ அந்தக் காட்சி.
“அங்கே இருவர் நின்று கொண்டிருந்தார்கள். இரண்டு பேர் தரையில் கிடந்தார்கள்! ‘என்ன மசக்கமா?’ என்று ஓடினான் மாறப்பன். நின்று கொண்டிருந்த வாலிபர்கள் அழுதபடி சொன்னார்கள்.” ‘ரெண்டு பேரையும் இத்தோ தண்டி பொடையன் பாம்பு கடிச்சிருச்சி... பாம்ப பாத்த நாங்க இந்தத் தடியால அடியோ அடின்னு அடிச்சோம்... அது ஒடம்ப உப்பி உப்பி காட்டிட்டு காட்டுக்குள்ள ஓடிப் போயிரிச்சி... இவுங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரத்துள்ள மசக்கம் போட்டு விழுந்துட்டாங்க. பேச்சுமூச்சு கிடையாது. தொட்டுப் பாருங்கண்ணே!’ என்றான் ஒரு இளைஞன். இரண்டு பேரையும் புரட்டிப்புரட்டிப் பார்த்தான் மாறப்பன். அவனுடன் வந்தவர்களும் தூக்கிப் பார்த்தார்கள். நாடியைப் பிடித்துப் பார்த்தார்கள்... நெஞ்சில் காதை வைத்துக் கேட்டார்கள். இதயத் துடிப்பு நின்றிருந்தது. கைகால்கள் விறைந்து, கண்கள் அகலத்திறந்து கிடந்தன. விசம் ஏறி உடல்கள் நீலநிறமாயிருந்தன” (ப. 77). அவர்களைக் காப்பாற்றத்தான் முடியவில்லை. அடக்கம் செய்யவாவது செய்யலாம் என்றால் அதற்கும் வாய்ப்பு இல்லை. அப்படியே விட்டுவிட்டு காட்டு மிருகங்கள் பார்த்துக் கொள்ளும் என்று பயணத்தைத் தொடர்கிறார்கள்.
பயணம் நெடியதும் கொடியதுமாகி விட்டது. “மன்னார் காட்டிலிருந்து மதவாச்சி வரும் வரை பாம்புக் கடியினால் இறந்து போனவர்களே அதிகமாகவிருந்தனர். பட்டப் பகலில் சிறுத்தைகள் மனிதரை கவ்வி இழுத்துக் கொண்டு போவதைக்கண்டு அலறி சத்தம் போடுவதைத் தவிர வேறொன்றும் அவர்களால் செய்ய முடியாதிருந்தனர்.
புதருக்குள் பதுங்கியிருக்கும் சிறுத்தைகளும், புல்லுக்குள் பதுங்கியிருக்கும் பாம்புகளும் அவர்களது மரணத்தை நிர்ணயித்துக் கொண்டிருந்தன. அந்தக் கானகப்பயணத்தில் தடுமாறித் தத்தளித்து நகர்ந்து கொண்டிருந்தன. அவர்களுக்குப் பின்னால் மரணம் பத்தடி தள்ளியே வந்து கொண்டிருந்தது.
ஓடையில் நீர் அள்ளி சமையல் செய்த பின்னர், நீராடி வந்து சாப்பிட்டப் பின்னர். நீரோடையின் மேல் பகுதியில் காட்டெருமையின் அழுகிய சடலம் கிடப்பதைக் கண்டு வாந்தி எடுத்தவர்களும் வாந்தி பேதியால் இறந்தவர்களின் கதைகளும் இந்தப் பயணத்தில் மதவாச்சி காட்டில் நடந்ததை நினைத்து வருந்தினார்கள்”. (ப. 90)
வழியில் அருவி போன்ற அமைப்பும் ஆறும் குறுக்கிட்டன. மக்கள் அப்படியே நின்றார்கள். சங்கிலியனும் அவன் கூட்டாளிகளும் யோசித்தார்கள். அருகில் இருந்த வேடர் பாலத்தில் மக்களை நடக்கச் சொன்னார்கள். சிலர் சென்ற நிலையில் பாரம் தாங்காமல் பாலம் உடைந்து, இருபது பேர்களுக்கு மேல் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்கள். அவர்களை மீட்கவோ, காக்கவோ வழியின்றி வேறு மரப்பாலம் வழியாக சங்கிலியன் அழைத்துச் சென்றான். வேலாயுதமும் அவனது நண்பர்களும் ஆவேசம் கொண்டார்கள். என்ன செய்வது?
“மதவாச்சிக்கும், அநுராதபுரத்துக்கும் இடைப்பட்ட காடுகளில் கிட்டகிட்ட மனித எலும்புக் கூடுகளும், மண்டையோடுகளும் கிடந்தன. “எலும்புக்கூடுக கெடக்குற தெசையிலத்தான் நாம நடக்கணும்... அதுகதான் நமக்கு பாத காட்டும்!” என்றான் சங்கிலியன்.” (ப.109)
“மண்டை ஓடுகள் எல்லாமே நமது மக்களுடையது தான். மரணத்தைச் சுமந்து கொண்டு, காடுகளைக் கடந்து கொண்டிருப்பவர்களின் மூச்சு நின்று போகின்ற இடங்களிலெல்லாம் இந்த ஓடுகளும், கூடுகளும் குவிந்து விடுகின்றன. இவை சிலோன் பூர்வீக வாசிகளின் கூடுகளாயிருக்க முடியாது”. (ப.109)
இச்சூழலில் துயரம் பெருக்கெடுக்க,
பாதையிலே வீடிருக்க
பழனிச்சம்மா சோறிருக்க...
எருமத் தயிரிருக்க
ஏண்டி வந்தோம் கண்டி சீமை (ப.110)
என மக்கள் பாடும் நிலை உருவானது.
வேலாயுதம், பழனி, சீரங்கன், காசி போன்ற இளைஞர்களுக்கு யோசனை சொல்லி வழி நடத்தும் பெரியவராக இருந்த ‘சன்னாசி’ காட்டில் நடக்க முடியாமல் பின்தங்கி விட்டார். அவரைத் தேடிச் சென்றால் உட்கார்ந்த அவரால் எழ முடியவில்லை. அவரது சிறிய வயது மகன் தூக்கிவர முயல்கிறான். முடியவில்லை. எல்லோரும் விசனப்படுகிறார்கள். மகனக்கூட விட்டு நடக்கலாம் என்றால் முன்பண முதல் போட்ட சங்கிலியன் மிரட்டி முடியாது எனச் சண்டை போடுகிறான். வேறு வழியின்றி சன்னாசி எனும் பெரியவரை நடுக்காட்டில் விட்டு விட்டு பயணத்தைத் தொடரும் பரிதாபநிலை.
“தங்களது வழிப்பயணத்தில் எத்தனையோ பேர்களின் உடல்களை காட்டுச் செடிகளுக்குள் மறைத்து வைத்து விட்டு வந்த வேலாயுதத்துக்கும் நண்பர்களுக்கும், சன்னாசி உயிரோடு மரத்தடியில் உட்கார வைத்துவிட்டு வந்து கொடுமையிலும் கொடுமையாகவிருந்தது; எல்லோரும் மௌனமாக நடந்தார்கள். நடைச்சத்தமும், சன்னாசியின் மகனின் விசும்பலுமே வழி நெடுகிலும் கேட்டுக் கொண்டிருந்தது. பையனை இறுகப் பிடித்துக்கொண்டே நடந்தார்கள். அவன் எந்த சந்தர்ப்பத்திலும் திரும்பி ஓடும் மன நிலைலேயே தயாராகவிருந்தான்” (ப.116). மன்னாரிலிருந்து மாத்தளையை அடையும் காலக்கணக்கெடுப்பு அதிர்ச்சி தந்தது.
“திருச்சி மாவட்டம் பெரம்பலூர் கிராமத்து, காளி கோவில் மைதானத்தில் ஆயிரம் பேர்கள் என்று சங்கிலியன் சொன்னான். பாம்பனுக்கு வந்ததும் தொள்ளாயிரம் பேர்கள் என்றான். மன்னார் கரை இறங்கியதும் நூற்றி ஐம்பது கடலோடு போக, எழுநூற்று ஐம்பது என்று மன்னார் இறங்கு துறையில் சொன்னான். இப்போது... நாளந்தை தங்குமிடத்தில் ஐந்நூற்று ஐம்பது” (ப. 132).
கம்பளி
தோட்டத் தொழிலாளர்களின் தவிர்க்க முடியாத புழங்கு உடையாக கம்பளி திகழ்கிறது. நாவலில் கம்பளி பற்றிய பதிவு சிறப்பாக இடம் பெற்றுள்ளது.
“கம்பளி என்பது ஒன்பது அடி நீளமாகவும், மூன்றரை அடி அகலமாகவும் நெய்யப்பட்ட போர்வையாகும். அது பருத்தி போன்ற துணி என்று எவரும் நினைத்துவிடக்கூடாது. செம்மறியாட்டு மயிர்களை இங்கிலாந்திலிருந்து கொண்டு வந்து, இந்தியாவில் அதற்கென செய்யப்பட்ட நெசவுயந்திரத்தில் நெய்து எடுப்பார்கள். மயிர் ஒவ்வொன்றும் ஒட்டிக் கொள்வதற்காகப் புளியங்கொட்டையில் பசை செய்து பூசி இருப்பார்கள்.
அந்த நீண்டப் போர்வையை இரண்டாக மடித்து, ‘கொங்காணி’ செய்து தலையில் மாட்டிக்கொள்வார்கள். கம்பளிப் போர்வை கெண்டைக்கால் வரை தொங்கும் குளிரிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கு கதகதப்பான சுகத்தைத் தரும். நனைந்து விட்டால் ஐந்து, ஆறு இராத்தல் பாரமாகிவிடும். கம்பளி, மழையில் தொழிலாளர் நனையாமல் இருப்பதற்காகவும், குளிரிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவுமே அறிமுகப்படுத்தப்பட்டது.
கம்பளி இன்னுமொரு முக்கிய தேவைக்கும் அவசியப்பட்டது. ஆரம்பக் காலத்தில் காடுகளை அழித்துக் கொண்டிருந்த போது உயிர் கொல்லும் குளவிப் பூச்சிகள், தேனிப்பூச்சிகள், இன்னும் பெயர் அறியாத விஷ வண்டுகள் காட்டுக்குள் முதன்முதலாக நுழையும் மனிதர்களைத் தாக்குவதற்கு படையெடுத்து வரும் அந்தத் தாக்குதலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கம்பளி மயிர்களில் சிக்கிக் கொண்ட பூச்சிகள், திமிற முடியாமல் மாட்டிக் கொள்ளும் போது ஏனைய பூச்சிகள் பயந்து பறந்து போய்விடும்! கம்பளியில் மாட்டிய பூச்சிகளைத் தரையில் அடித்து மிதித்துக் கொன்று விடுவார்கள். கம்பளிபோடாத வெய்யிற் காலங்களில் குளவிகளால் கொட்டப்பட்டு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலைத் தளத்திலேயே இறந்து போனார்கள்”. (ப.137)
தோட்ட மக்களுக்கு கம்பளி மிக அவசியப்பட்ட அன்றாட வாழ்க்கைத் தேவைகளுள் ஒன்றாகிவிட்டது. படுக்கை விரிப்பாகவும், விருந்தினர்களுக்கு ஜமக்காளமாகவும், பந்திப் பாயாகவும் பயன்பட்டது. “கல்யாணத்துக்குப் போனாலும் கம்பிளியும் கையுமாய் போ” என்ற பழமொழி உருவானது. மேலும் கங்காணிகள் பொய்க்கணக்கு எழுதவும் கம்பளிகள் பயன்பட்டதை நாட்டுப்பாடல்கள் பதிவு செய்து உள்ளன.
பாரம் கொடுத்தல்
கங்காணிகள் தாங்கள் கூட்டி வந்த கூலித் தொழிலாளர்கள் தோட்ட உரிமையாளர்களான ஆங்கிலத் துரைகளிடம் கையளிப்பது பாரம் கொடுத்தல் எனப்பட்டது. “இப்ப ஒங்க எல்லாரையும் சீமான் தொரகிட்ட பாரம் குடுக்கப் போறேன்...! என்றான் சங்கிலியன்”. (ப.134)
மலையக வாழ்வு
மலையடிவாரங்களிலேயே கோப்பி தேயிலைத் தோட்டங்கள் அமைந்திருந்தன. அவற்றின் அருகிலேயே தொழிலாளர் தங்குமிடங்களும் அமைக்கப்பட்டன. அருகில் இருந்தால் அதிகம் உழைப்பைப் பெறலாம் என்பதுதான் நோக்கம். தோட்டங்களை முதலாளிகள் ‘எஸ்டேட்’ என்றார்கள். தங்களது விருப்பமான பெயர்களை ஆங்கிலத்தில் சூட்டிக் கொண்டார்கள். கங்காணிகள் தொழிலாளர்களிடம் கலந்து கொண்டு தமிழில் பெயர்கள் வைத்துக் கொண்டார்கள் “கல்மதுரை, தென்மதுரை, தங்க மலை, கல்லு மலை, மேமலை, புலிகண்டாமலை, ஆனைக்காடு, மந்திமலை, குரங்குமலை, பிசாசு மலை, உச்சிமலை, மல்லிகைப்பூ, சந்திர காந்தி, சூரிய காந்தி, குடமல்லி, கொத்தமல்லி, ராசா தோட்டம், ராணிதோட்டம், அந்தோனிமலை, மேகமலை,
சாஞ்சமலை, பழுங்கு மலை, வழுக்குப்பாறை என்றெல்லாம் பெயர்கள் அமைந்தன. இவை பெரும்பாலும் காரணப் பெயர்களாகவே இருந்தன. ஆங்கிலத்தில் அல்பிய, பிரஸ்டன், டிரேட்டன், விக்டன், மேபீல்ட், பெயாபீல்ட், தோர்ன்பீல்ட், ப்ளக்வேட்டர், ப்ரெஸ்வோட்டர். எனப் பெயர்கள் இட்டார்கள். (ப.140)
கோப்பித் தோட்டப் பணிநிலைகள்
கோப்பித்தோட்ட பல்வேறு பணிகள் பல நிலைகளில் நடைபெறும். தொழிலாளர்கள் காலநிலை, பயிர் பருவங்களுக்கு ஏற்ப பணிகளைச் செய்வர்.
பழம் பறிப்பது
“ரத்தச் சிவப்பு பழங்களையும், சிவப்பேறிய பழங்களையும் பறித்துக் கொண்டு போனார்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும், கை தவறியேனும் பச்சைக் காய்களைப் பறித்து விட்டால், தொலைந்து போய்விடும் அன்றைய நாள் சம்பளம்..! சம்பளம் மட்டுமல்ல, அடியும் உதையும் சரமாரியாகக் கிடைக்கும். பெண்களென்று கூட பார்க்காமல், தலை மயிரைப்பிடித்து குலுக்கி ஆட்டுவார்கள்.
குட்டிச் சாக்கு நிறையும்படி பழங்களைப் பறித்து பொட்டலுக்குக் கொண்டு வர வேண்டும். பொட்டலில் குட்டிச்சாக்கு பழங்களை கோணிச்சாக்கில் கொட்டி நிறைப்பார்கள். சுமந்து செல்லும் அளவுக்கு பாரத்தை நிறைப்பார்கள்” (ப. 147)
“கோண கோண மலையேறி
கோப்பிபழம் பறிக்கையிலே
ஒருபழம் தப்பிச்சின்னு
ஒதைச்சானாம் சின்னத்தொரை...!” (ப. 146)
என நாட்டார் பாடலில் இடம்பெறும் அளவுக்கு பழம்பறித்தல் முக்கியத்துவம் பெற்றதாகிறது.
பழங்களைக் கீழே எடுத்து வருதல்
மலையிலிருந்து சுமக்கும் அளவு பழங்களைச் சாக்குகளில் கட்டி மலையடிவாரத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். கர்ப்பிணிப் பெண்களும் கூட மிகக் கொடிய இப்பாதையில் நடந்தே தீர வேண்டும். “மலையுச்சிலிருந்து அடிவாரம் வரைக்கும் ஐம்பது யார் தூரத்துக்கு ஒரு வேலையாள் நிற்பான். கோப்பி மூட்டை அப்படி அப்படியே ஒவ்வொருவரது தோள் பட்டைக்கும் மாறிக் கொண்டிருக்கும்.
மலையுச்சியிலிருந்து அடிவாரம் வரைக்கும் படிக்கட்டுகளோ, பாதையோ கிடையாது. நடையில் உண்டாகிய ஒத்தையடி பாதைகள் உருவாகியிருக்கும். பாதை வழுக்கும் தன்மை கொண்டது. எவரும் வழுக்கி விழுந்தால், உச்சியிலிருந்து உருண்டு அடிவாரத்தில் போய்தான் கிடப்பார்கள். மூட்டைச் சுமையோடு வழுக்கி விழுந்தவர்களில் எத்தனையோ வேலையாட்கள் கழுத்து முறிந்து செத்துப்போன சம்பவங்களும்” (ப. 148).
அடுத்து, காபிகொட்டையை ஊரவைத்து இடிப்பது முக்கியமான பணி. “இடிச்ச கொட்டைகள தொட்டிக்குள்ள கொட்டி கழுவணும், தோல் நீக்கணும்... இடிபடாத கொட்டைகளை தனியா பொறுக்கி சேக்கணும்... வைக்கணும்.” (ப.155)
நோய்கள்
தோட்டத் தொழிலாளர்களை புறநோய்கள் போலவே அகக்கொள்ளை நோய்களும் தாக்கி அழித்தன. காலரா, மலேரியா தாக்கி இறந்தவர்கள். வேலையை விட்டு விட்டுத் தாயகம் பயணப்பட்டவர்கள் ஏராளம். “கோப்பிச் செய்கையில் ஈடுபட்ட தொழிலாளர்களையும், தோட்ட உரிமையாளர்களையும் சொல்லி வைத்தாற் போல் கொலரா நோய் தாக்கியது. இந்த நோயை கொள்ளை நோய் என்றார்கள். தொழிலாளர்கள் சாரி சாரியாக மந்தைகளைப் போல இறந்து கிடந்தார்கள். புதைப்பதற்கு சக தொழிலாளர்கள் கிடைக்காததால், அந்தந்த இடங்களில் அழுகிய பிணங்கள் துர்நாற்றத்தை அள்ளி வீசிக் கொண்டிருந்தன. அந்த நாட்களில் வெள்ளைக்கார சீமைத்துரைமார்களும் பல பேர் கொள்ளைநோய்க்கு பலியானார்கள். முதலாவது கோப்பித் தோட்டத்தை உண்டாக்கிய ஜோர்ஜ்பேர்ட் துரையும், கொலரா நோயினாலே இறந்து போனார். தொழிலாளர்கள், நோய்வந்தால், வைத்தியசாலைக்குப் போகின்ற பழக்கம் அறவே கிடையாது. பக்கத்து கிராமங்களிலிருக்கும் சிங்களவரிடம் நாட்டு வைத்தியம் செய்வதும், பேய் விரட்டும் ‘கட்டடி’யிடம் போவதுமாக இருந்தார்கள். அதனால் இவர்களிடையே நோய் கூடுதலாகப் பரவத் தொடங்கியது.” (ப.161)
பாஸ்புத்தகம் - துண்டுமுறை
கோப்பிக் காலம் முடிந்து தேயிலைக் காலம் தொடங்கியதும் புதிய பணியிடத்தில், புதிய முதலாளியிடம் கையளிக்கப்பட்டனர். தொழிலாளர் வாழ்வில் பாஸ் புத்தகம், துண்டு முறை முதலியன முக்கியமானவை.
“கடனைக்காட்டி பயமுறுத்தும் கங்காணியின் கணக்குப் புத்தகத்தை பாஸ் புத்தகம் என்பார். அந்தப் புத்தகத்தில் கூலித் தொழிலாளர்கள் தென்னிந்தியாவில் எந்த கிராமத்தில், எந்த ஜில்லாவில், எந்த தாலுக்காவில், எந்த ஜாதியில் என்ற விபரமும் அவர்கள் பாம்பனிலிருந்து புறப்பட்ட நாள்முதல் மாத்தளைக்கும் கண்டி முகாமுக்கும் வந்த நாள் வரையிலான விபரங்கள் எழுதி வைக்கப் பட்டிருக்கும்.
தொழிலாளிக்கு வழங்கப்பட்ட ரேசன் அரிசி, பருப்பு, கொச்சிக்காய், உப்பு, புளி, மாசி, கறுவாடு, எண்ணெய் என்ற உணவுப் பொருட்களின் விபரங்களெல்லாம் எழுதப்பட்டிருக்கும் அந்த புத்தகம் எந்தநேரமும் கங்காணியின் உடலில் ஒட்டியிருக்கும் கோட்டுப்பைக்குள்ளேயே வைத்திருப்பான்” (ப.169).
“ஒரு ஆளை இன்னொரு தோட்டத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டுமானால், அந்த ஆள் தற்போது வேலை செய்த தோட்டத்துக்கு கொடுக்க வேண்டிய கடன் தொகை, ஒரு துண்டு சீட்டில் எழுதப்பட்டிருக்கும். அது கடன் அட்டையாக கருதப்படும். அந்தத் துண்டோடுதான் தொழிலாளர்கள் புதிய தோட்டத்துக்குப் போவார்கள். அதைத் துண்டுமுறை என்பார்கள்”. (ப.170)
“கடன் துண்டு, கூப்பன் மாதிரி கடுதாசி அட்டையாகவிருக்கும் ஒரு தோட்டத்துக்குப் போகவிருக்கும் தொழிலாளருக்கு தனித்தனியே எழுதிக் கொண்டு வந்திருக்கும் கடந்துண்டுகளை கங்காணி வாசித்தான். கடனை கட்டி கட்டி, இன்னும் தீராதகடன் இருப்பதாக கங்காணி வாசிக்கும் போது, தொழிலாளர் கூக்குரலிட்டனர்”. (ப. 203)
பெண் வதை
தோட்டத் தொழிலில் ஈடுபடும் பெண்கள் படும் இன்னல்கள் சொல்லி மாளாது. தனிப்பெண்கள் சக தொழிலாளர்களால் இன்னலுக்கு உள்ளாவது, துரைமார்கள் விரும்பும் பெண்களை கங்காணிகள் வற்புறுத்திக் கொண்டு செல்வது, கங்காணிகளும் வரம்பு மீறி பெண்களை பாலியல் வல்லுறவு செய்வது என அவை நீளும்.
“கோப்பிக் காட்டுல, தேயிலக் காட்டுல வேல செய்றப்போ அவனுங்களுக்கு புடிச்சிருந்தாதான் அந்திக்கு கங்காணி கிட்ட சொல்லி, அவனுங்க கூடாரத்துக்கு கூட்டிக்கிட்டு வரச்சொல்லுவானுங்க... கறுப்பா, காப்பிரி மாதிரி இருக்குற பொம்பளைகளதான் அவனுகளுக்கு புடிக்கும்... கங்காணி வாச சவுக்காரம் குடுத்து, குளிச்சுப்புட்டு, சுத்தமா கூடாரத்துக்கு வரச் சொல்லுவான்.
அப்படி அவனுக ஆசப்பட்ட உருப்படிகள கூட்டிக்கிட்டு போர கங்காணி கிட்டேயும் அந்த அப்பராணி பொம்பள படுக்கணும்.” (ப.174)
இப்படியான அக்கிரம வரிசையில்தான் பூபதியின் மனைவி சரஸ்வதி அம்மை கண்ட தருணத்தில் கங்காணியும் அடியாட்களும் துரையிடம் தூக்கிச் செல்ல, பிரச்சனை முற்றி பூபதி கொலையாகிறான். வேலாயுதமும் அவன் நண்பர்களும் கங்காணியையும் கூட்டாளிகளையும் பலி தீர்த்து மூன்று கொலை விழுகிறது.
சங்கு ஊதுதல்
பறையடித்து மக்களைத் திரட்டியது போல அதிகாலை வேலைக்கு ஆயத்தப்படுத்த சங்கு ஊதுவது வழக்கத்தில் இருந்தது. தொழிற்சாலைகளில் வேலை தொடங்கும், முடியும், இடைவேளை நேரங்கள் சங்கூதி அறிவிப்பு ஆவது போல தோட்டங்களில் சங்கு ஊதுவர். கங்காணிக்கு வேண்டிய நபரே சங்கூதுவார். பின்னர் கங்காணிக்கு உதவியாளாகி, புதிய கங்காணி ஆகிவிடுவதும் உண்டு.
“கொப்பி தோட்டத்து சங்கை, சிங்கமலை அடிவாரத்தில் இருக்கும் சுரங்கத்துக்கு மேலே நின்றுதான் அம்மாசி ஊதுவான். சின்ன தரவளை, பெரிய தரவளை, மல்லிகைப்பூ, டம்பறை, மறுபக்கம் பளிங்குமலை, அந்தோணி மலை வரை கேட்கும். இந்த சங்கு சத்தத்தைத் தொடர்ந்துதான் மற்றைய தோட்டத்து சங்கு சத்தங்கள் கேட்கத் தொடங்கும்”.(ப.225)
சீட்டரிசி
உழைப்பாளிகள் தங்களின் சுக, துக்கங்களுக்குத் தேவையான பண்டம் பாத்திரங்களுக்காக சேமிப்பது வழக்கம். நாள், வாரம், மாதம் என்ற கணக்கில் ‘சீட்டு’ சேர்ந்து தேவையானவர்கள் அதனை எடுத்துப் பயன்படுத்துவர். இன்றைக்கும் சிறந்த சிறுசேமிப்பாக இது விளங்குகிறது. தோட்டத் தொழிலாளர்களின் ‘சீட்டரிசி’ நடைமுறையினை நாவல் பதிவு செய்துள்ளது.
“அருக்காணி கல்யாணம்... மரணம்... போன்ற நிகழ்வுகளுக்கு இவர்கள் இவ்வாறே சீட்டரிசி சேகரித்துக் கொள்வார்கள். கிழமையில் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு சுண்டு வீதம் ‘சீட்டு’ பிடிக்கும் வழமை ஒரு பாரம்பரியமாக வளர்ந்து வந்தது”. (ப. 235)
லயம்
லயம் என்பது தோட்டத்தொழிலாளர்களின் குடியிருப்புக் காலனி. லயத்து வீட்டு அறையை ‘காம்பரா’ என்றார்கள். இவை போத்துக்கீசியச் சொற்கள். சிங்களவர்கள் இப்படி அழைத்ததால் தமிழ்த் தொழிலாளர்களும் அப்படியே அழைத்தனர்.
தண்டனையும் வெகுமதியும்
தவறு செய்யும் தொழிலாளர்களை - கங்காணியை எதிர்ப்பது, உரிமைகளைக் கேட்பது, பெண்களை மோசமாக நடத்துவதை எதிர்ப்பது... என எது செய்தாலும் கடுமையாக உயிர்ப்பறிப்பு தண்டனை தரப்பட்டது. அன்றாடம் வேலைக் காட்டில் அடிப்பது, உதைப்பது, அவமானப்படுத்துவது வாடிக்கை. அதே நேரத்தில் மேற்படி தண்டனை என்பது உயிரோடு மரத்தில் கட்டிவைத்து மிருகங்களுக்கு இரையாக்குவது. அல்லது சாகடித்து மிருகங்களிடம் போட்டுவிடுவது. இப்படிச் செய்யும் கங்காணிகள், அடியாட்கள் நிர்வாகத்தால் கூலி உயர்வு வெகுமதி தந்து பாராட்டப்பட்டார்கள்.
“அந்த தோட்டத்தில் புலிகண்டாமலை என்ற கொழுந்து காடு இருக்கிறது. சிறுத்தைகள் மேயும் அந்த மலையில், எதிர்த்துப் பேசும் தொழிலாளர்களைக் கொண்டு போய் மரங்களில் கட்டிவைத்து விட்டு வந்து விடுவார்கள். இரவில் சிறுத்தைகள் வந்து, அடித்து உடலை இழுத்துக் கொண்டு போய்விடும், இவ்வாறு கொலைகள் செய்யும் அடியாட்களுக்கு துரையும் கங்காணியும் மாறிமாறி இரட்டைக் கூலி கொடுப்பார்கள்”. (பக். 238 - 239)
சுமைதாங்கி கல்
தோட்டத்தில் கர்ப்பிணிகளாக இருக்கிற பெண்களுக்கு தனிச் சலுகை இல்லை. தப்பித்தவறி இடறி விழுந்தால் மரணம் தான். இப்படி மரணங்கள் நேரும் போது அவர்கள் நினைவாக சுமை தாங்கி கல் நடுவது தோட்டத் தொழிலாளர் வழக்கம்.
“கர்ப்பஸ்திரி கந்தையா சம்சாரம் (பழனியம்மா) கற்பாறையில் வழுக்கி விழுந்து, அங்கேயே சீவன் போய், கம்பளியில் தொட்டில் கட்டி வீட்டுக்கு சுமந்து செல்கிறார்கள்...! பரட்டையன் தாயோழி...! கர்ப்பஸ்திரிகளுக்கு ரோட்டோரம் நெரகுடுக்க மாட்டான்... கர்ப்பஸ்திரி... பழனியம்மாவுக்கு நடந்து காவு இல்லை... கொல...! என்று அரப்புலி சத்தமிட்டான்” (ப. 271). என்று சாவும் அதற்கு எதிரான மக்கள் எழுச்சியும் நாவலில் பதிவாகிறது. சுமைதாங்கி பற்றி மூத்தவர் வீரமலை வழி சொல்லப்படுகிறது.
“பழனியம்மா தூக்கிச்சொமந்த பாரத்த எறக்கி வைக்காம போயிட்டா... அவ ஞாவகமா சன நடமாட்டம் செய்ற பாதையில, மூனு ரோட்டு, நாலு ரோட்டு பிரியிற சந்தியில ‘சொமதாங்கி கல்லு’ நாட்டி வைக்கணும்! என்றார். வாலிபர்களுக்கு ‘சொமதாங்கி கல்லு’ பற்றி புரியவில்லை... சுமைதாங்கி கல் நாட்டி வைக்கும் மரபு ரீதியிலான பழக்கம், தென்னிந்தியாவில் தமிழ்க் கிராமங்களிலிருந்து வந்தது. கர்ப்பவதிகள் பிரசவிக்காமல் இறந்து போனால் அவர்களுக்காக இப்படி ஞாபகார்த்தக் கல் நாட்டுவார்கள். அந்தப் பாதைகளில் சுமைகள் சுமந்து செல்லும் வழிப்போக்கர்கள் தங்களது சுமையை, அந்தக் கல்மேல் இறக்கி வைத்து விட்டு சிறிது நேரம் இளைப்பாறிச் செல்வார்கள். தனிக்கல்லில் ஐந்தடி உயரம் எட்டு இஞ்சி அகலம் தூண் செதுக்கி இரண்டு தூண்களை மூன்றடி இடைவெளியில் நாட்டி, அதன் மேல் இன்னொரு தூணை ஏற்றி வைத்திருப்பார்கள். அது சுமையை வைப்பதற்கும், தூக்குவதற்குமான உயரத்தில் நாட்டப்பட்டிருக்கும்”. (ப.273) இந்த நினைவினை,
“சொந்தம் உறவு என்று
சுமைதாங்கி நின்னமாதா!
சுமைய இறக்காம நீ
சொர்க்க லோகம் போனதென்ன!
என்ன பெத்த மாதா உனக்கு
சுமைதாங்கி கல்லு வச்சோம்!”
என்கிறது நாட்டார் பாடல்.
நம்பிக்கைகள்
மனிதர்கள் எங்கு வாழ நேரிட்டாலும் அவர்களுடன் இருப்பது நம்பிக்கைகள். இப்புதினத்திலும் ஆங்காங்கே நம்பிக்கைகள் பற்றிய குறிப்புகள் இடம் பெறுகின்றன. இரவு தனியாகப் பயணம் செய்பவர்களை எதுவும் அண்டாதிருக்க அவர்களுடன் சில பொருட்களை வைத்து அனுப்புவர்.
“காட்டு வழியாக வீட்டுக்குப் போகும் அவனுக்கு, பேய், பிசாசு அண்டாதிருக்க சோற்றுப் பொட்டலத்தில் கரிக்கட்டை, தகரத்துண்டு வைத்திருந்தாள்”. (ப. 195)
புலம் பெயர்ந்து வருபவர்கள் தங்களுடன் தங்கள் சாமிகளையும், தல விருட்சங்களையும் கொண்டு வருவது மரபு. நாவலில் இந்த நம்பிக்கை இடம் பெறுகிறது.
“முனியாண்டி கோவிலுக்குச் சென்றான். ஒரு குத்துக்கல், ஒரு சூலாயுதம், வளர்ந்து வரும் ஒரு ஆலங்கன்று, பச்சைப் பந்தல், கூரையோ, கட்டிடமோ அமைந்த கோவிலல்ல. அந்தக் காலத்தில், இவர்களுக்கு முன்பு இந்த தோட்டத்துக்கு வந்தவர்கள் தாங்கள் கொண்டு வந்த ஆலம் பழத்து விதைகளைத் தூவி கன்று உண்டாக்குவார்கள். தங்களது நண்பர்கள், உறவினர்கள் தோட்டங்களில் வேலை செய்யும் போது இறந்து போகும் இடங்களில் இவ்வாறு ஆலங்கன்றுகளை நாட்டுவார்கள். காடு மேடுகளில் தாங்கள் பயப்படும் இடங்களிலெல்லாம் ஆலங்கன்றுகளை நாட்டி, சூலாயுதம் நாட்டு வைப்பார்கள். அது ஏதாவது ஒரு காவல் தெய்வமாக மாறிவிடும். கருப்பு சாமியோ, காளியோ, மாடனோ, முனியாண்டியோ, வனத்து சின்னப்பரோ, ஏதாவதொரு காவல் தெய்வம் உண்டாக்கப்பட்டிருக்கும்” (ப.212). நாட்டார் சாமிகள் அதன் பரவல் குறித்து இதன் மூலம் உணரலாம்.
உணவு
மக்கள் வாழ்வின் உயிர் நாடி உணவு. பயண வேளையிலும் ஊருக்கு ஊரு உணவு வேறுபாடுகள் காணப்படுவது நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பயணம் புறப்படும் முன் கோழி அடித்து விருந்து வைப்பது வழி நெடுக தானிய உணவுகளைப் புசித்தும் காய் கனிகளைத் தின்றும் பசியாறுவது, வெள்ளைக்கார துரை ஆட்டுக்கறி, மாட்டுக்கறி தின்பவர்களுக்கு தனித்தனியே உணவு பரிமாறுவதும் சித்திரிக்கப்படுகிறது.
“லண்டன் தொரமார்களுக்கு விருப்பமான ஊரு... தேனுல ஊற வச்ச மான் இறைச்சி கெடைக்கும்... இந்த ஊரு சனங்களுக்கு சோளம், நெல்லரிசி எல்லாம் தாராளமா நம்ம சீமானுங்க குடுத்து வச்சிருக்காங்க...இவுங்க ஆக்கி வச்சிருப்பாங்க... நாம சாப்புட வேண்டியது... அம்புடுதான்.” (ப. 107)
சிங்களவர்களின் பிரதான உணவாக சோளம் விளங்குவது சுட்டப் பெறுகின்றது.
“அன்று இரவு சாப்பாடாக சோளக்கதிர்களை, உப்பு நீர் சேர்த்து அவித்து வைத்திருந்தார்கள். ஒருவர் எத்தனை கதிர்களை வேண்டுமானலும் கடித்துச் சாப்பிடலாம். சோளம் சிங்கள குடிவாசிகளின் பெருமதிமிக்க உணவாகும். கம்பு, கேவர், குரக்கன், மக்கா சோளம்யாவும் தென்னிந்தியர்களின் பிரதான உணவாக இருந்தது”. (ப.107)
“நாளத்தை தங்குமிடத்துக்கு நூறு மறாத்தல் பெறுதியான மரை இறைச்சி கிடைத்திருந்தது. கட்டுவலையில் சிக்கிய மரை ஒன்றை கிராமத்தான் ஒருவன் வெட்டித்துப்பரவு செய்து பெரிய காசுக்கு தங்கு மடத்துக்கு விற்றிருந்தான். மரை இறைச்சி, மான் இறைச்சியைப் போலவே இருக்கும்”. (ப. 130)
அதே போல அடித்தள மக்களின் விருப்ப உணவான கருவாடு பல இடங்களில் இடம் பெறுகிறது. தோட்டத்தில் வழங்கப்படும் ரேஷன் பற்றிய பதிவு:
“ஒரு கூலியாளுக்கு உப்பு ஒன்னேகா றாத்து, மாசி அரறாத்த, நெத்திலி ஒரு றாத்த... பருப்பு ஒரு கொத்து... பயிறு ஒரு கொத்து... காய்ஞ்ச கொச்சிக்கா முக்கா றாத்த. அரிசி ஒரு பொச, (புசல்) புளி ஒன்னேகா றாத்த, ஈர வெங்காயம் (சின்னவெங்காயம்) ஒரு றாத்த, கொத்தமல்லிகா கொத்து” (ப.195).
கூலி
தோட்டத் தொழிலாளிகளுக்கு அவர்களின் உழைப்புக்கேற்ற கூலி எப்போதும் கிடைத்தது இல்லை. சொற்ப கூலியையும் பொய்க்கணக்குச் சொல்லி கங்காணிகள் எடுத்துக் கொண்டனர். பல ஆண்டுகள் உழைத்தும் கடனாளிகளாக ஊர்த்திரும்ப இயலாநிலை. உரையாடலில் அங்கு இருந்த கூலி நிலவரம் இடம் பெறுகிறது.
“மொத வருசம் முடியிற வரைக்கும் ஒரு ஆம்பளைக்கி 10 சிலிங்கு குடுக்குறாங்க. 18 வயசுக்கு மேல இந்த சம்பளம் கெடைக்குது 18 வயதுக்கு கீழ 8 சிலிங்கு குடுக்குறாங்க. பன்னெண்டு வயசு, பதினஞ்சி வயசு பக்கிகளுக்கு (பையன்கள்) 6 சிலிங்கும், பத்து பன்னெண்டு வயசு பக்கிகளுக்கு 5 சிலிங்கும் குடுக்குறாங்க”.
“பொம்பளைக்கு, அதாவது 18 வயசுக்கு மேல 6 சிலிங்கும், 15, 18 வயசு புள்ளைகளுக்கு 5 சிலிங்கும் 12, 15 வயசு புள்ளைகளுக்கு 4 சிலிங்கு, 10, 12 வயசு புள்ளைகளுக்கு 3 சிலிங்கும் குடுக்குறாங்க. இதுதான் தொரமாரு சங்கம் குடுக்கும் சட்டப்படி சம்பளம்” (பக்க.188). சிலிங் என்பது இலண்டன் நாணயம்.
திருமணம் - பெண் கேட்டல்
நாவலில் தொழிலாளர்கள் திருமணம் போன்ற வாழ்க்கை நிகழ்வுகள் மிக எளிமையாக நடைபெறுகின்றன. கோயிலில் மாலை மாற்றி,
மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டால் அதுதான் திருமணம். அருக்காணி திருமணமும், வேலாயுதம் சரஸ்வதியை மறுமணம் செய்து கொள்வதும் சித்திரிக்கப்படுகின்றன. பெண் கேட்டு உறுதி செய்வதை இப்படி நடத்துகிறார்கள்.
“மூக்கன் வீட்டில் கம்பளியை விரித்துப் போட்டார்கள். பெரியவர், தனது சம்சாரத்தோடும், வேலாயுதத்தோடும் நான்கு கூட்டாளிகளையும் கூட்டிக்கொண்டு போனார் முறைப்படி ஒருவர் கேள்வி கேட்டார், “என்ன சங்கதியாவந்திருக்கீங்க?”
“ஒங்க வூட்ல ஒரு பூவு இருக்கிறதா கேள்விப் பட்டோம். அந்த பூவ எம் பேராண்டி காத்தானுக்கு கேட்டு வந்தோம்” என்றார் பெரியவர்.
அவ்வாறு சம்பிரதாயக் கதைகள் நான்கு வீடுகளிலும் நடந்தன. (நான்கு திருமணப்பெண்கள்) ஒரு புதன் கிழமை, பங்குனிமாதம், நான்கு மாப்பிள்ளைகளுக்கும் 4ம் நம்பர் மலையிலிருக்கும் வழிப்பிள்ளையார் கோவிலில் கலியாணம் நடந்தேறியது”. (ப.213)
நாட்டார் பாடல்கள்
நாவல் முழுக்க நாட்டர் வழக்காறுகள் விரவிக் கிடக்கக் காணலாம். மக்களின் துன்ப துயரங்களின் வடிகாலாக நாட்டார் பாடல்கள் திகழ்கின்றன. தோட்டத் தொழிலாளர் வாழ்வின் ஓர் அங்கமாக இப்பாடல்கள் விளங்குகின்றன. முழுப் பாடல்களும் தராமல் சூழலுக்கு ஏற்ப சில வரிகளில் நாவலில் ஆங்காங்கே இவை இடம் பெறுகின்றன.
தோட்டங்கள் இருக்கும் மலைதான் தொழிலாளர்க்கு எல்லாமும் ஆக விளங்குவதை,
கூனி அடிச்ச மலை
கோப்பி கன்னு நட்ட மலை
அண்ணனை தொலைச்ச மலை
அந்தோ தெரியுது பார்...! (ப. 138)
வாழ்வாதாரமாகவும் அதே நேரத்தில் உறவுகளைக் காவு கொடுத்த பலி பீடமாகவும் மலை அமைந்துவிடுகிறது. சொல்லொணா துயரங்கள் கொடுமைகள். உயிர் மட்டுமாவது மிஞ்சுமா என்ற கவலையை,
“கண்டி கருப்பாயி
கம்பளத்து மீனாட்சி
ஒத்தக்கட ராமாயி - ஒன்
உசுரு இருந்தா போதுமடி...!” (ப. 167)
எனப்பாடி தீர்க்கின்றனர். கூலிக் கணக்கு எப்படியும் தொழிலாளி வயிற்றில் அடிக்கும் பிணக்காகவே இருந்திருக்கிறது.
ஓடி ஓடி கொழுந்தெடுத்தேன்
ஒரு கூடை கொழுந்தெடுத்தேன்
பாவி கணக்கப்புள்ளை
பத்து ராத்தல் சொல்லுறானே...! (ப. 184)
இது கணக்கப்புள்ளை காரியம் என்றால், கங்காணி கொடுமை இதோ.
தோட்டம் பெரளியில்லே
தொரை மேலே குத்தமில்லே...
கங்காணிமாராலே
கணபெரளியாகுதய்யா...! (ப. 240)
வேலை நேரம் எப்படியெல்லாம் வதைக்கிறது என்பதை,
தண்ணி கருத்திருச்சி
தவளசத்தம் கேட்டிருச்சி
புள்ளையும் அழிதிரிச்சி
புண்ணியரே வேலை விடு...! (ப. 257)
இவை தோட்டத் தொழிலாளர் வாழ்வின் விளைச்சல். நாட்டார் மரபில் பரவி உள்ளன. அறியப்படாத வரலாற்றை மலையகத் தமிழர்களின் வாழ்க்கை நெடும்பயணத்தின் இலக்கிய சாட்சியாக மு.சிவலிங்கம் ‘பஞ்சம் பிழைக்க வந்த சீமை’ அமைகிறது.
பஞ்சம் பிழைக்க வந்த சீமை, வரலாற்று நெடுங்கதை, முசிவலிங்கம் | குறிஞ்சித்தமிழ் இலக்கிய மன்றம்,
கொட்டகலை | 2015 | ரூ.650/-
- இரா.காமராசு