தமிழன்பனைப் படிப்பவர் ....கவிதையாவது நிச்சயம்...குறைந்த பட்சம் ஒரு காகிதமாகவாவது...

erode tamizhanbanஒரு வித போதைக்குள் மிதக்க விட்டு மாயம் செய்யும் ஜாலங்களின் சூட்சுக் குறியீடுகள் அவைகள்......படிக்க விட்டு படைக்க விடும்..அற்புத காகிதங்களின் அண்டாக்கா கசம் கவிதைகள்....

"நான் தூங்கப் போகிறேன்

என்றான் கவிஞன்

நான் விழித்துக் கொண்டிருக்கிறேன்

என்றது கவிதை..."

தூக்கி வாரி போடுகிறது எனக்குள்...தூக்கம் தொலைக்கிறேன்.... கவிதை தேடுகிறேன்...

கவிதைக்கும் கவிஞனுக்கும் இருக்கும் இடைவெளியை எப்படி நிரப்புகிறார் பாருங்கள்....

பக்கத்துக்கு பக்கம்... அவர் பற்றிய பிரமிப்புகள்... அவர் காலத்து விரல்கள் நடுங்கிக் கொண்டுதான் எழுதுகின்றன.. அத்தனை உயரம்... அவர் படைப்பு....இத்தனை பெரிய ஆளுமையிடமா இயல்பாக நின்று புகைப்படம் எடுத்தேன்... கணினிக்குள் தேடி மீண்டும் புகைப்படம் பார்த்தேன்... அது நானல்ல... என்பது போல நின்று கொண்டிருக்கிறார்... ஆம்.. அவர்..அவரல்ல. அவர் என்பது கவிதை.. அது காட்டுக்குள் திரியும்... பெயரில்லாத பறவை... கூடில்லாத வெளி. உருகி..... சேர்ந்து..... இணைந்து.... பிடித்து.. அடித்து... இறுக்கி... வளைத்து..... நெளித்து...... கலைத்து...... சலித்து.. செய்யப்பட்ட தமிழின் அன்பு...

கடந்த அக்டோபர் 18ல் சென்னையில் வெளியிடப் பட்ட இந்த புத்தகத்தை தொகுத்தவர் புதுசேரியைச் சார்ந்த... எழுத்தாளர் தி. அமிர்தகணேசன் அவர்கள்...தமிழுக்கு இதை விட ஒரு சேவையை எப்படி செய்ய?, என்பது போல இப்போது என் கையில் தவழும் இந்த புத்தகம்... கேட்கிறது.... அது பொக்கிஷ தூவலாய்.. ஒவ்வொரு பக்கத்திலும்... அற்புதங்களைக் கொண்டு கோர்க்கப் பட்டிருக்கிறது....அந்த வகையில் நாம் திரு அமிர்தகணேசன் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளை உரித்தாகத்தான் வேண்டும்.... சிதறிக் கிடந்த நுட்பங்களை அவர் கவிதையில் கோர்த்தார் என்றால்... அவர் படைப்புகள் பற்றிய செய்திகளை நுட்பமாக இவர் கோர்த்திருக்கிறார்...கோர்க்க கோர்க்க பார்க்கும் பரவசம்.... தீர்க்க தீர்க்க உருகும் நவரசம்...

புதுச்சேரியிலுள்ள சபானாந்தாச்சார்யா பதிப்பகம் வெளியிட்ட இந்த புத்தகம்...அறிவுக் களஞ்சியத்தின் கூட்டு என்றால் அது மிகை அல்ல.... நாடறிந்த தமிழன்பனை... இன்னமும்... இளம் படைப்பாளிகள்... படிப்பாளிகளிடம்... விசாலமாக கொண்டு சேர்க்கும் இலகுவான ஈர்ப்பு.....சுருங்கித் தவிக்கும் அறிவுக்கு நிரம்ப தீர்க்கும் இஸ்திரிப் பெட்டி...எப்படி இந்த மனிதனால் இத்தனை எழுத முடிந்தது என்று வியந்து வியந்து.. நெருங்க பயந்து தரிசிக்கிறேன்.... அவர் பற்றிய அறிமுகமே.. ஆழ் கடலைப் போல விழுங்க காத்திருக்கையில்..... இனி அவர் படைப்புகள்... கொன்று வீழ்த்தி.. கவிதையாகி விடும் என்றே நம்புகிறேன்.. கவிதையாவதைத் தவிர கவிஞனுக்கு பேரு வேறு என்ன...?

அறிஞர் பெருமக்கள்... கவிஞர்கள்...கனவான்கள்... என்று வலிமை நிறைந்த பேனாக்களில்.... வழியும் மைகளில்... தமிழன்பனை சொட்டுகிறது... தமிழ்... முத்துக்கள் கவிதை ஆக காத்திருப்பது போல... எனக்குள்.. மிரட்சியை பெருமளவு குவிக்கிறது.... அவர் பற்றிய சிந்தனை... எப்படி இந்த படைப்பாளியை இத்தனை நாள் என் அறிவுக்குள் கொண்டு போகாமல் விட்டேன்... என்று குட்டிக் கொள்ளும் கையில்.. இந்த புத்தகம்... கம்பீரமாய் புரள்கிறது..... வெறி பிடித்த கனவுக்குள்... தமிழ் பேசும்.. வார்த்தைகளை.... கண்டு உணரும் நொடியில்... நிச்சயம் நான் இல்லை.... பின்.... அவர்.....அவர் மட்டுமே.....அவர் உங்களை அவராக மாற்றிக் கொண்டு பின் கவிதையாக மாற்றி விடுவதில்... வல்லவர்... பேசிப்பாருங்கள்.... நல்லவர்...

எதைப்பற்றியும்.... எழுதி இருக்கிறார்.... எதைப் பற்றியும்... எழுதி இருக்கிறார்... அரசியல்... வாழ்வு.. கலாசாரம்.. அன்பு.. காதல்.. காமம்.. நட்பு.. பண்பு... தேடல்.. தொலைதல்.. மரணம்... நம்பிக்கை.. பிறப்பு... உயிர்ப்பு.. கடவுள்... சாத்தான்.. என்று அவர் தேடும் பட்டியல் நீள்கிறது..... நன்றாக படித்தால்.. உங்களைப் பற்றியும் இருக்கலாம்..ஏனெனில் என்னைப் பற்றியும் இருக்கிறது...

பழமையை புதுமைக்குள் சரியாக புகுத்தி விட்ட, மாயம் தெரிந்தவர்.... பார்க்கும் பிழையைக் கூட கவிதையாக்கி சரி செய்துவிடும்.. சூத்திரதாரி.... கடவுளை பிறகு யோசிப்போம்... கவிதையை முதலில் யாசிப்போம்...என்று படிப்பவரை சுயம் தேட வைத்து விடும்...வல்லமைக்காரர்...

இந்திய நெருடா.... தமிழன்பன் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.... இருந்தால்....படித்துப் பாருங்கள்... பின் சரணடைவீர்கள்...

"உயர் சாதிக்காரன் வீட்டில்

ஒரு குழந்தை பிறந்தால்

உச்ச நீதிமன்றத்தில்

ஒரு நாற்காலி

துடைத்து வைக்கப் படுகிறது

ஒடுக்கப் பட்டவன் குடிசையில்

ஒரு குழந்தை பிறந்தால்-அந்த

தாயின் கனவில் புதிதாய் ஒரு

கழிப்பறை திறக்கப் படுகிறது"

-என்று ஒரு கவிதையை காட்டி தமிழன்பன் கவிதைகளில் தலித்தியக் கூறுகளும் கூராகவே இருக்கிறது என்று முனைவர் பா.. ரவிக்குமார் சுட்டிக் காட்டுகிறார்...நிஜமாலுமே சுடுகிறது.... சுட சுட... காயம்.. மெய்யாகி... பொய், கண்ணில் படுகிறது...

சூரியப் பிறைகள் - ஊமை வெயில் - காலத்திற்கு ஒரு நாள் முந்தி - தீவுகள் கரையேறுகின்றன - அந்த நந்தனை எரித்த மிச்சம் - என் வீட்டு எதிரே ஓர் எருக்கஞ்செடி - ஒரு வண்டி சென்ரியூ - கதவைத் தட்டிய பழைய காதலி - தோணி வருகிறது - குடை ராட்டினம் - தமிழோவியம் - இவர்களோடும் இவற்றோடும் - விடியல் விழுதுகள் - நிலா வரும் நேரம் - நாம் இருக்கும் நாடு - தமிழன்பன் கவிதைகள் - திரும்பி வந்த தேர்வலம் - ஊர் சுற்றி வந்த ஓசை - வார்த்தைகள் கேட்ட வரம் என்று நீளும் அவரின் தலைப்புகளில் பாருங்களேன்.... கவிதைகளை....

தமிழன்பன் வளர்க்கும் எருக்கஞ்செடியை தனக்கு தெரியும் என்று கவிஞர் புவியரசு கூறும் இடத்தில்.....வானம்படி தூக்கி செல்வதாக மிதக்கிறது.. படிப்பவர் வானம்... படித்தவர் வானம் சிதறுகிறது கவிதையை...

"இரைப்பையைக்

காலியாகவே

வைத்திருங்கள்

வந்தே மாதரத்தை

வறுத்துத் தருவார்கள்..." என்ற கவிதையில் வெளிப்படும் தமிழன்பனின் நியாயமான கோபத்தை சுட்டிக் காட்டும் முனைவர் தி. லீலாவதி மானுட ஆன்ம தரிசனமே கவிதை என்கிறார்...ஆன்மாவின் வெளிப்பாடு.... அது உள் நிரம்பிய சூழ்... அது கொண்ட வெளி... கவிதையாவதில் தான்... மனம் வாழ்கிறது...

கோவை ஞானியின் திறனாய்வு...புல்வெளி பூத்த சூரியன்களாய் உருகுகிறது.... உருக்குகிறது...

"பட்டாம் பூச்சிகள்

இல்லாத ஊரில்

வண்ணங்கள் யாரோடு

பேசும்..."

-என்ற தமிழன்பனின் நிறத்துக்கு சிறகு கொடுக்கும் கோவை ஞானி.. நம்மைக் கூட்டிக் கொண்டு போய் காட்டுவது......

"பெயர்களை

மாற்றி வைத்தால்

பூக்கள்

வருத்தப்படுமா" என்று கேள்வியோடு.....திரியும் இன்னொரு தமிழன்பனை... ஆம்... அவரின் நிறம் மாறும்.. வரம் மீறும்... உரம் ஏறும்... கரம் கவிதை வாரும்...

"மகாகவியை நெருங்கி விட்டார்" என்பது கோவை ஞானியின் சொல்... அது... ஞானத்தின் புல்....அது அசையும் மலையில்.... நாம் ஓர் அதி காலையாவதும் அந்தி மாலையாவதும்.. நம் விருப்பம்... விருப்பங்களில்.. நிறைவதில்லை... ஆன்மா... அது பசி கொண்ட புலியின் உருமலில்.. ஒரு தமிழன்பனின் காகிதம் போல கிடக்கிறது...

"எவன் ஒருவன் கவிதையைப் படிக்கும் போது தன்னை மறந்து ஓங்கிய இன்பம் எய்துகிறானோ அவன் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு வரிகூடக் கவிதை எழுதாதவன் ஆயினும் அவனே உண்மைக் கவிஞன் ஆவான்" என்கிறார் ஓர் அறிஞர்... "என்று.. சிலம்பொலி சு. செல்லப்பன் சுட்டிக்காட்டுவது அத்தைய உணருதலை தமிழன்பனின் கவிதைகள் செய்யும் என்பதைத்தான்.....அது உங்கள் கற்பனையின் கற்பனையாக இருக்கிறது... அது உங்கள் நிஜத்தின் நிஜமாக இருக்கிறது....அது உங்களின் தத்துவங்களின் தத்துவமாக இருக்கிறது....

உச்சியில்-

மரணம் , அவற்றின்

பொய்ம்மை நாக்கைப்

புறத்தே

தள்ளியது போலக்

கொடிகள்!"

என்று தமிழன்பனின் வரிகளுக்கு நயம் சேர்க்கிறது.. வல்லிக்கண்ணன் அவர்களின் உரை....தமிழன்பனின் கவிதைகளில் சமூக அரசியல் நோக்குகள் வெளிப்படுகின்றன என்று புகழாரம் சூட்டுகிறார்...கவிதைகளில் அவர் எடுத்துச் சொல்கிற கருத்துகளில் புதுமை வேகமும் புரட்சித் தன்மையும் காலத்தின் தேவையும் ஒலி செய்கின்றன... என்று சுட்டிக் காட்டுகையில்.... அது இன்னும் கூடித்தான் இருக்கிறது என்று சுட்டிக் காட்ட தோன்றுகிறது...

தமிழன்பனின் ஐந்து கவிதைத் தொகுப்புக்கும் முன்னுரை எழுதிய முனைவர் வ. ஜெயதேவன் அவர்கள்... வரிக்கு வரி.. தமிழன்பன் அவர்களை நிரப்புகிறார்..... அது ஒன்றும் மிகை அல்ல..அது சாலச் சிறப்பு... கால நிறைப்பு....

"திருவள்ளுவர், இளங்கோ, கம்பர், பாரதி, அவன் தாசன், என்று தொடரும்- சுடரும் தனித்துவக் கவித்துவ உச்சங்களின் தொடர்ச்சியாக இன்று நம்மிடையே வாழ்பவர் ஈரோடு தமிழன்பன் ஆவார்.." என்று கூறுகிறார்.... அது பொய்யில்லை... நிஜம்... தமிழன்பன் கவிதைகளை உள்வாங்க ஒரு முறை அவரின் மேடைப் பேச்சைக் கேட்க வேண்டும்... இந்த வயதிலும்.. எத்தனை ஆளுமை கொண்ட கர்ஜனை அது...தெளிவான உச்சரிப்புக்கு அவர் உதாரணம் என்று நான் கூற வேண்டியதே இல்லை.. அதை தொலைக்காட்சிக் செய்திகள் சொல்லி விட்டன...... எப்போதோ சிறு வயதில் நான் கண்ட பஞ்சாயத்து டிவிக்களில் செய்திகள் வரும் போது எழுந்து போய் விடும் கூட்டத்தில்... பட்டும் படாமல் பட்ட உருவம் அது என்று இந்நாளைய நினைவுத் தொடர்ச்சியில் நான் பொருத்திக் கொண்டேன்.. பொருந்துவது அவரின் கலை.. தமிழைக் கரைத்து குடித்தவர் என்றால் அது சத்தியம்... கரைத்துக் குடிக்கவும் அவருக்கு சாத்தியம்....

"தமிழன்பனின் மின்மினிக் காட்டில் யார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம்... வழியில் இருட்டு இல்லை.. என்கிறார்... கம்பம் சாகுல் அமீது...

"யார் உடைத்தாலும்

யாழ் உடைந்து விடும்

ஆனால்

யார் மீட்டினாலும்

யாழ் இசை தருமா?"-என்று கேட்ட தமிழன்பன் என்ற கவிதைக்கார ஓவியனிடம் "ஒரு நாள் தூரிகை கேட்டது... என்னை ஏன் வரையவில்லை" என்று.... கவிதைகளின் எளிமையையும் ஆழத்தையும் தத்துவமாக்கிய தமிழன்பனை பற்றி பேசி, அவரை சாட்சிக் கவிதைக்காரன் என்கிறார்... கம்பம் சாகுல் அமீது.

"பாடுபொருளைத் தெரிந்து கொண்ட பின் அதனைக் கட்புல வடிவமாக விரித்துரைக்கும் வித்தகம் இவரது பல கவிதைகளில் ஊடுருவி இருக்கிறது...கவிதையைப் புதிய கோணத்தில் காண முடிவது இதனால்தான்... எதிர்பாராத விதத்தில் கருத்துப் புலப்பாடு கண்முன் விரிவதற்கு காரணமும் அதுதான்..a poet is like a photographer who shoots a subject from an unexpected angle- Alice Schertle என்ற கருத்தோடு பொருந்தி போவதாக முனைவர் இராம. குருநாதன் மகாகவி தமிழன்பனுக்கு மகுடம் சூட்டுகிறார்.... ஆம்.... காட்சிகளின் சதுரத்தை.. கொஞ்சம் மேலும் கீழும் இழுத்து செவ்வக காகிதத்துள் நிரப்பி விடுவதில்... எதிர்வினை பார்வையின் பிம்ப நிழல்... ஒளிந்து கொள்ளலாம்.. மெலிந்து துள்ளலாம்.... கலைந்து அள்ளலாம்...நான் மூன்றும்... மற்றும்.. அடுத்த ஒன்றிலும்... படிந்துக் கிடந்தேன்.. படிமமாய்...என்பதும் அவரே....

"தமிழன்பன் திராவிடச் சிந்தனையில் மலர்ந்து பொதுவுடமைச் சித்தாந்தத்தில் தம்மை ஒப்படைத்து, உலகப் பார்வையில் உலகக் குடிமகனாக உலாவரும் கவிஞராக தம் இருப்பை நிலையாக அடையாள படுத்திக் கொண்டிருக்கிறார்.." என்ற இவரின் கூற்று முற்றிலும் உண்மை என்று முனைவர் தி. லீலாவதி எடுத்துக் கூறும் தமிழன்பனின் இந்தக் கவிதை சான்றளிக்கிறது.....

"உலகனாய் இருக்கும் நான்

நிச்சயமாய் இந்தியன்...

அதைவிடச்

சத்தியமாய்த்

தமிழன்

தமிழனாக இருப்பதற்குத்

தடை போட்டால்

இந்தியனாய்த் தொடர்வது பற்றிச்

சிந்திக்க வேண்டி வரும்...."

எத்தனை பெரிய கேள்விக்கு... இந்த சிந்தனையின் அளவு... நம்மை சார்ந்தது....

தமிழின் மரபின் இரும்புக் கோட்டையிலிருந்து கவிதைக்கு விடுதலை அளித்துப் புதுக் கவிதை படைத்தவர் தமிழன்பன் என்கிராரி ஏ. எஸ். சஜ்ஜாத் புகாரி. ஹைக்கூ, சென்ரியூ, லிமரிக்கூ, வகையில்... கஜலையும் தமிழில்... இயற்றி... இலக்கியக் கொடையாக அளித்திருப்பதாக இவர் கூறுகிறார்... உண்மை...அதை,

"ஆழங்கள் உரையாடக் கரையோரம் வருமா?

வருமென்றால் ஆழமென்ற பெயரையவை பெருமா?" என்று எழுதி...நிரூபிக்கிறார்....தமிழன்பன். திரும்ப திரும்ப நிருபிப்பதில்... திரும்பி நின்று... அரூபமாகிறது... அவரின் வெளி...

"கர்த்தரே, மரணத்தின் முன்கூட ஒரு கடைசிப் போஜனம் உமக்கு இருந்தது... முதல் போஜனத்துக்கு முன்னாலாயே நாங்கள் முடிந்து விடுகிறோம்..." என்று காலம் காலமாக் ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருப்பவர்களின் குரலாக தமிழன்பன் குரல் ஒலிக்கிறது... அது மீண்டும் சிலுவையை சுமக்கிறது என்று கூறும்..முனைவர் வ. ஜெயதேவன் தமிழன்பனின் சிலுவையை நம் மீது ஏற்றி விடுகிறார்... சரி.. அவர் மட்டும் சுமக்க சிலுவை என்ன தனி உடமையா... அதுவும் பொது உடமைதானே...? என்று எண்ணத் தோன்றுகிறது...எண்ணங்களின் வழியாக புதுக் கேள்வியை புகுத்தி விடும் அவர்.. கேட்கவும் செய்கிறார்..

"திக்குகளின் புதல்வர்கள்

தேச வரம்பற்றவர்"

என்ற வரிகளில் தமிழன்பனின் சமூக கண்ணோட்டம் பிரகடனப்படுத்தப்படுகின்றது" என்று கூறும் செ. யோகநாதன்...சிந்திக்க வைக்கும் கவிதைகளை கொண்ட அவரை உள் வாங்குங்கள் என்கிறார்....

"கவிதையோடு தொடர்ந்து வாழ்வது என்பது சொல்வதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கும் அழகே வடிவான மனைவியோடு வாழ்வதற்கு ஒப்பானதாகும்" என்று முனைவர் க. பஞ்சாங்கம் தமிழன்பன் பற்றி பேசுகிறார்...ஏறத்தாழ நாற்பது ஆங்கு ஆண்டு காலம் கவிதையோடு வாழ்வதும், பதினைந்து நூல்களை வெளியிடுவதும்.... தமிழன்பனுக்கே சாத்தியம்... என்கிறார்... மேலும் அவரே தொடர்கிறார்... இந்நூற்றாண்டின் கவிஞன் என்பதை நிலை நிறுத்தி விட்டார் என்று துணிந்து கூறலாம் என்றும் கூறும் போது... வியப்புக்குள் செல்லாமல் இருக்க முடியவில்லை...வியக்க வியக்க பார்த்து.... அறிவைத் தணிக்க தணிக்க.....படிக்க... இன்றே தேடுகிறேன்....தெள்ளிய கவிதை நீரோடையில்.... மனதால் முன்னமே நீந்துகிறேன்....

இங்கு பிறந்ததால் தமிழன்பன் ஆனார்.. அங்கு பிறந்திருந்தால் 'நெருடா'வாகி இருப்பார் என்று நானும் துணிந்தே கூறுகிறேன்...

நெருடாவை அதே எரிமலையோடு தமிழுக்கு கொண்டு வந்தவர் தமிழன்பன்... நெருடா, காப்ரியெலின் மீது தீராத பற்று கொண்டவர்...என்பது குறிப்பிடத்தக்கது.... இருவருமே.. தென் அமெரிக்க சித்தாந்தங்களை மாற்றி அமைத்தவர்கள்.... நெருடாவின் கவிதைகளை "சே".. தன் சட்டை பையில் எப்போதும் வைத்திருப்பார் என்பது.... தோட்டாக்களை கவிதைகளாக்கவும் முடியும் என்பதற்கு சான்று...அந்த மூவரின் நியாயமான கோபங்களும்.... சமுதாய சிந்தனைகளும்... தமிழாய் மாறி விட்ட காலப் பெருமை தமிழன்பனையே சாரும்... பாரதிதாசனின் "கொலைவாளினை எடடா... மிகக் கொடியோர் செயலறவே..."-யின் நீட்சி தமிழன்பன் என்றால் அதுதான் நிஜம்... அந்த வாளின் சொட்டல்.. தமிழன்பன் கவிதையாகி நிற்கிறது.....

"ஒரு பொருள் குறித்து அல்லது ஒருவர் குறித்துக் கடுமையான எதிர்மறையான கருத்தினை, பொறுப்புணர்வின்றி, கண்டன முறையிலான, சூடான விமர்சனத்தை வெளியிட்டு மகிழும் போக்கு இன்றைய தமிழிலக்கிய உலகில் அதிகரித்து வருகிறது.. இங்கும் சாதி உணர்வு, குழு மனப்பான்மை , அரசியல் பகைமை நடைமுறைப் படுத்தப் படுகிறது. ஆதாய நோக்கில் முக்கியமானவர்களை அல்லது அதிகாரத்தில் உள்ளவர்களை மிகைப்படியாகப் புகழ்ந்து பிழைப்போர் பெருகி வருகின்றனர்...விருதுகளையும், பணப்பரிசுகளையும் கேட்டுப் பெறுவது, அதற்கென ஆதரவு திரட்டுவது, ஆசை நிறைவேறாத நிலையில் தூற்றுவது, புலம்புவது காட்சி ஆகி வருகிறது...தமிழை முறையாகக் கற்றுத் தெளிந்த படைப்பாளிகளை விரல் விட்டு எண்ணி விடலாம் . வாழ்க்கையை உற்றுணர்ந்து, அதை நேசிக்கும் தமிழ்ப் படைப்பாளிகள் வெகு சிலரே...."- என்று தோழர் ஜீவா ஒரு முறை கூறியதாக ஞாலன் சுப்பிரமணியன் கூறுகிறார்... அவர்களில் தமிழன்பன் கண்டிப்பாக முதன்மையாக இருக்கிறார்.... என்று...தமிழ் கூறுகிறது...

நல்ல படைப்பாளியை இன்னும் கொண்டாடாத தேசமாகவே நம் தேசம் இருக்கிறது.. அதை மாற்றுவோம்.... நல்ல படைப்புகளைக் கொண்டாடுவோம்....தமிழை கொண்டாடுபவனை கொண்டாடினால்தான் தமிழ் வாழும்... வளரும்...ஒரு படைப்பாளி தன்னை உருக்கியே படைப்புகள் நெய்கிறான்...இன்றைய தலைமுறைக்கு... செல்லும் பாதையெங்கும்...தொழில்நுட்பங்கள் இடைவெளி நிரப்பியே இருக்கின்றன...... அது மட்டுமல்லாமல் அவர்களிடமும்.....ஆர்வம்...சற்று தூரத்திலேயேதான் இருக்கிறது.. கவிதைகள் என்று சிலர் எழுதுவது சகிக்கவில்லை..மூன்று வரிகளை மடக்கிப் போட்டால்.. அது கவிதை ஆகி விடுகிறது.... காதலோடு நின்று போகும் கவிதைகள் சிலருடையது...வீதிக்கு ஒரு கவிஞன் உருவாகட்டும்... ஆனால்... அதற்கான தகுதியை வளர்க்க வேண்டாமா... எழுத ஆசை கொண்டவர்கள் முதலில் படிக்க வேண்டும்... எழுத்து ஜாம்பாவான்களைக் நிரம்பக் கொண்ட மொழி நமது.... எழுதுவதெல்லாம் இலக்கியம் ஆகி விடாது... இலக்கியத்தை எழுதாமல் தமிழ் வளராது...தமிழன்பனின் கவிதைகளை தவிர்த்து உங்களால் கவிதைக்குள் போகவே முடியாது... என்பது கவிதை சத்தியம்...ஆக, படியுங்கள்... அலசுங்கள்... உணருங்கள்... புதிதாக நீங்கள் உங்களை உணர்வீர்கள்... அது.. புது சிறகை உங்களுக்கு கண்டிப்பாக பூட்டும்.. அத்தகைய வானத்தை இந்தப் புத்தகம் ஆங்கங்கே சிதறிப் போகிறது....சிதறிப் போவதே.... சிலிர்க்கிறது என்றால்... சிலிர்த்து கர்ஜிக்கும் எழுத்துக்கள் என்ன செய்யும்...! செய்வதைக் கொண்ட காணுதல்... தமிழன்பனின் வரிகளில்... நீங்கள் கிடைக்கலாம்... நீங்களும் கிடைக்கலாம்.... கிடைப்பது அதுவாக இருப்பதில்.... எதுவும்... அதுவாகி உணரலாம்.... உணர்த்துவது அவராகி அவரே கவிதையான வெளியை கண்டடைதலை.. ஒரு கூடு விட்டு கூடு பாய்தலைப் போல மாயங்கள் நிகத்தி விடுகின்றன...

இப்படி அறிவுப்பெட்டகத்தை திறக்க சொல்லி சாவி கொடுக்கும்... கைகளில் மிதந்து உருவான இந்த " தமிழன்பன் ஒரு மகாகவி " நூலை தொகுத்த ஆசிரியர், எழுத்தாளர் தி. அமிர்தகணேசன் அவர்களுக்கு நாம் நன்றிகளை மீண்டும் கூறியே ஆக வேண்டும்... திறவுகோலின் தத்துவத்தை நான் அறிந்தேன்.... அறிய வேண்டியவர்களுக்கு....

ஆசிரியர் - தி. அமிர்தகணேசன்

சபானந்தாச்சார்யா பதிப்பகம்

புதுசேரி

விலை. ரூ.300/-

புதுக்கவிதை ஒரு 'மகாகவி'யையைத் தோற்றுவிக்க முடியுமானால் அது தமிழன்பனாகத்தான் இருக்க முடியும்....

பாரதியை மகாகவி என்று வரலாறுதான் தீர்மானித்தது... தமிழன்பனின் இடத்தையும் வரலாறே தீர்மானிக்கும் என்று முடிக்கிறார்.. ச. செந்தில்நாதன் அவர்கள்....

மகாகவிக்கான அத்தனை சிறகுகளும் தமிழன்பனிடம் இருக்கிறது... அவரிடம்தான் இருக்கிறது.... என்பதை இன்னொரு முறை நினைவூட்ட அவரைப் படித்து விடுங்கள்.... .....அதுதான் தமிழைக் கொண்டாடுவது....

- கவிஜி

Pin It