ambikavathiபொதுவுடைமை தத்துவத்தையும், அதன் நடைமுறையையும் செயலூக்கமுடன் இணைத்து மக்களுக்கு அளித்து வெற்றிகண்டவர் இலக்கியப் பேராசான் ப.ஜீவா அவர்கள்.

பொதுவுடைமை இயக்கத்தின் தலைசிறந்த எழுத்தாளர், பேச்சாளர், நாடகக் கலைஞர், இலக்கியவாதி என்று பன்முக ஆற்றல் மிக்க மன்னை மு.அம்பிகாபதி, இலக்கியப் பேராசான் ப.ஜீவா அவர்கள் முன்னெடுத்த பண்பாட்டு அரசியலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு செயல்பட்டவர்.

திருவள்ளுவர், கம்பன், பாரதியை ஆழக்கற்ற அவரது அரசியல் பணி மன்னார்குடி செண்பகா திரையரங்கக் கூடத்தில் 1955-களில் தொடங்கியது. 1964 முதல் 1969 வரை நகர்மன்ற உறுப்பினர்.

1969 ஆம் ஆண்டில் இந்தோ சோவியத் நட்புணர்வுக் கழகத்தின் தஞ்சை மாவட்டத்தலைவராக செயல்பட்ட நேரத்தில் கவிஞர் கண்ணதாசன், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் ஆகியோருடன் மாஸ்கோ பயணம். காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாஸ்கோ சென்ற மன்னை மு.அம்பிகாபதி பொதுவுடைமைக் கொள்கையினால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்டாக இந்தியா திரும்பினார்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

என்ற வள்ளுவரின் குறளும்,

‘எல்லோரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை உடையாரும் இல்லை' என்ற கம்பனின் காவியத்தின் பொதுவுடைமை பொருத்தப்பாடும்,

‘உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் ஒருமை உளராகி உலகியல் நடத்திடவேண்டும்’ என்ற வள்ளலாரின் வாய்மொழியிலும்,

‘எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் ஓர் விலை, எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்ற பாரதியின் வரிகளை உள்ளத்தில் உரமேற்றிக் கொண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

கடந்த 1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவராக செயல்பட்ட காலகட்டத்தில் குறைந்தபட்ச கூலி நிர்ணயச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்கு தலைமையேற்றுக் கடுங்காவல் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

1970 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் 18 வரை நில மீட்சிப் போராட்டத்தை முன்னெடுக்க கட்சி அறைகூவல் விடுத்தது. தஞ்சை மாவட்டத்தில் மத்திய செயற்குழு உறுப்பினர் தோழர் என்.கே.கிருஷ்ணன், தோழர் ஏ.எஸ்.கே.அய்யங்கார் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றன.

வடபாதிமங்கலம், குன்னியூர், வலிவலம், நெடும்பலம், பூண்டி, கபிஸ்தலம், உக்கடை, பெருகவாழ்ந்தான் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற நில மீட்சிப் போராட்டத்தில் பங்கேற்று அன்றைய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் மன்னை மு.அம்பிகாபதி உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

வங்கிகளை, தேசியமயமாக்க நடைபெற்ற போராட்டம், தனியார் பேருந்துகளை அரசுடைமையாக்கக் கோரிய போராட்டம், கிராமராஜ்யம் உள்ளிட்ட ஏராளமான போராட்டங்களில் முன்னின்று சிறைசென்றவர்.

பொதுவுடைமை இயக்கத்தின் சார்பில் மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்யப்பட்டு சமரசமின்றி செயல்பட்ட தோழர்கள் ப.ஜீவா, பி.ராமமூர்த்தி, மணலி கந்தசாமி, எம்.கல்யாணசுந்தரம் போன்றவர்களின் மக்கள் நலனை பிரதிபலிக்கும் சிறப்புமிக்க உரைகள் தமிழக சட்டமன்ற வரலாற்றில் சிறப்புமிக்கவை.

இன்றளவும் வீரியம் குறையாதவை. இத்தகைய சித்தாந்த மரபு வழி நின்று, சட்டமன்றத்தில் செயல்பட்டவர் மன்னை மு.அம்பிகாபதி.

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 1977 மற்றும் 1980 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர். சென்னை கடற்கரை சாலையில் இலக்கியப் பேராசான் ஜீவா அவர்களுக்கு சிலை அமைக்க வேண்டும் என சட்ட மன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தியவர்.

சட்டமன்ற நிகழ்வுகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்பவேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலையில்லா கால நிவாரணம், கருப்புப் பண ஒழிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக சட்டமன்றத்தில் வாதாடியவர்.

தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டதன் பின்னனி உணர்வுபூர்வமானது. தமிழக சட்டமன்றப் பேரவையில் கடந்த 1981-ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் நிறுவப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மன்னை மு.அம்பிகாபதி பங்கெடுத்துப் பேசும் போது ருஷ்ய மொழியின் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்கென மாஸ்கோவில் ஒரு பல்கலைக்கழகம் இருப்பதையும், கவிஞர் கண்ணதாசன், இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோருடன் 1968-ஆம் ஆண்டில் தான் அங்குச் சென்றதையும் குறிப்பிட்டு பேசுகிறார்.

மேலும், தமிழ் மொழிக்கென்றே ஒரு பல்கலைக்கழகம் நிறுவுவது குறித்து ஆய்வு செய்ய ஒரு வல்லுனர் குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறார்.

இதையடுத்து, மதுரை காமராஜர் பல்கலைக் கழகத் துணை வேந்தர் வ.சுப.மாணிக்கம் அவர்களின் தலைமையில் ஒரு வல்லுனர் குழுவினை அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் அமைத்தார்கள். கடந்த 1981 ஜனவரி மாதம் மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்ட பேரறிஞர்கள் பலரும் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று மேநிலை ஆராய்ச்சிக்கு மிகுந்த தேவை என்பதை வலியுறுத்தினர்.

தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட வளர்ச்சிமன்ற கூட்டத்தில் மன்னை மு.அம்பிகாபதி அவர்களின் முயற்சியில் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

தமிழக சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இப்பல்கலைக்கழகத்தை அமைக்கலாம் என்ற கருத்து வந்த போது, மன்னை மு.அம்பிகாபதி குறுக்கிட்டு மதுரையில் ஏற்கெனவே பெருந்தலைவர் காமராஜர் பெயரில் பல்கலைக்கழகம் இருக்கிறது.

எனவே கம்பராமாயணம் படைத்த கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த தேரழந்தூர் இருக்கும் தஞ்சை மாவட்டத்தில் பல்கலைக்கழகம் அமைத்தால் அது பொருத்தமாக இருக்கும் என வலியுறுத்துகிறார்.

தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலையும் முதல்வரிடம் மன்னை மு.அம்பிகாபதி அளிக்க, அவரது கோரிக்கையினை ஏற்றும், வல்லுனர் குழு அறிக்கையினை பரிசீலித்தும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தினை தஞ்சாவூரில் நிறுவுவது என்று அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். அறிவித்தார்.

மிதிவண்டியில் இருவர் செல்ல அனுமதி, தொழிலாளர் நலன் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை சட்ட மன்றத்தில் பேசி சட்ட வடிவமாக்கியவர்.

மகாகவி பாரதியார் நற்பணி மன்றத்தின் தலைவராக செயல்பட்டு தஞ்சையில் பாரதியார் சிலை அமைத்தவர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், இந்தோ சோவியத் நட்புறவுக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

"காலமெனும் ஆழியிலும்
காற்று, மழை, ஊழியிலும்
சாகாது கம்பனவன் பாட்டு...
அது தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு...!

என்று கம்பன் புகழ்பாடிய கவிஞர்.கண்ணதாசன் வழியில் நின்று கம்பனை ரசித்தவர். கம்பன் கழகத் தலைவராக செயல்பட்டு மார்க்சிய தத்துவங்களை கம்பனின் பாடல்களில் இணைத்து ஆய்வு செய்தவர்.

மேடைகள் தோறும் மார்க்சிய மெய்ஞானத்தை எதார்த்த மொழியில் பேசி வெகு மக்களின் சிந்தனைத் திறனை தட்டியெழுப்பிய மன்னை மு.அம்பிகாபதி கடந்த 14.07.2020 அன்று தனது சிந்தனையை நிறுத்திக் கொண்டார்.

கார்ல் மார்க்ஸ் காட்டிய வழியில், ஜீவா பேசிய மொழியில் மன்னை மு.அம்பிகாபதி வாழ்கிறார்.

அமுதாபாரதி

 

Pin It