சாயம் போன பின்னும்
நீ அணிவித்த சட்டையில்
நீ சாய்ந்த காலமிருக்கிறது
நீ தந்த ஒவ்வொரு புத்தகத்திலும்
நான் படித்து முடியாத
உன் சிணுங்கல்கள்
நீ பரிசளித்த குல்லாக்களில்
கலர் கலர் நிலவுகள்
கற்பனை எனினும்
நீ பாதி கடித்த
கடலை மிட்டாய்க்கு
கண்டிப்பாக காதல் வாசம்தான்
நீ நிரப்பும் பெட்ரோலுக்குள்
மினுமினுக்கும்
ஈரவெளி பாலையில்
ஒற்றைப் பறவை இவன்
நீ தந்த வாசனை திரவியம்
முடிந்த பிறகும்
நீ பேசிய வாசங்கள் அதில்
நீ முத்தமிட்டு நகர்ந்த பிறகும்
மூச்சு விட்டு முத்தம் பூசும்
உன் முடிவிலி நான்
மலையடிவார மாலை நேரங்களில்
இந்த ஒற்றை யானை
வேண்டுவதெல்லாம்
நீ காட்டிக் கொடுக்கும்
செண்பக பூக்களைத்தான்
- கவிஜி