பகலில் என் உடலாகவும்
இரவில் என் உயிராகவும்
நீயே இருக்கிறாய் என்பதை
உன் வாசம் நுகரவியலாத தொலைவில்
நான் வந்திருக்கையில் உணர்கிறேன்.
அதனால் தான் இங்கே
ஆதவன் வெளிச்சத்தில் ஆவியாய் அலைகிறேன்;
சந்திர ஒளியில் சவமாய்க் கிடக்கிறேன்.
வேரறுந்த கொடியாய்
மனம் துவளும்போது தான் தெரிகிறது,
நாம் வேறுவேறு இல்லை என்பது.
உன் “மெய்” வாசத்தை,
உலர்ந்த உதடுகளின் சில்லிப்பை,
அனுபவிக்க இயலாமல்
கொதிக்கும் போதுதான் புலனாகிறது
அந்த அனுபவத்தின் மகத்துவம்.
திருமணத்தை எதிர்நோக்கும் காதலர்களோ,
குழந்தையை எதிர்பார்க்கும் தம்பதிகளோ இல்லை நாம்!
மகனுக்கு மணமுடிக்கும் வயதாகி விட்டது தான்
மறுப்பதற்கில்லை!
ஆனாலும் நம் மண மேடையில் ; அதிகாலையில்
குளித்து முடித்த உன்
கூந்தலிலிருந்து கொட்டிய நீர்த்துளிகளின்
ஈரம் இன்னும் என் இதயத்தில்!
உன் ரகசியங்களை
இருளில் எனக்கு நீ அறிமுகம் செய்த
இரவின் பிரமிப்பு இன்னும் எனக்குள்
நீ குழந்தையான நேரங்களில்
நான் தாயானதும்
நீ தாயான தருணங்களில்
நான் உன் குழந்தையானதும்
சருகாகக் கூடிய நினைவுகளா அவை?
என் மன்னிக்கத் தகாத தவறுகளால்
கொதித்துக் குமுறிய பின்னும்
காதலாகிக் கசிந்து
இமயமலைப் பனிபோல் என்னில் உருகி வழிவாயே !
வயதுக்கு வந்த பிள்ளைகள்
தூங்கக் காத்திருந்து
இந்த வயதில் மூத்த பிள்ளையின் பசி போக்க
புதிதாய் வயதுக்கு வந்த
பெண்ணின் நாணத்தோடு வருவாயே !
விழிகளால் தரிசித்து..
விரல்களால் ஸ்பரிசித்து..
விநாடிகளாய் மணிப்பொழுதுகள்
விரைந்த காலத்தை நினைக்க, நினைக்க
அய்யோ!
உயிர்மூச்சே பெருமூச்சாய்
உருமாறிப் போகிறதே!
மதுரமாய் வழியும் ஆறுதல்கள்
ஆதுரமாய் வருடும் ஸ்பரிசங்கள்
காதலை ருசிக்க வேறென்ன வேண்டும்?
இது மனதில் துளிர்த்த அன்பா?
உடலில் படர்ந்த ஆசையா? என்ற
பட்டிமன்றத்துக்கான தீர்ப்பை
திருவள்ளுவரே எழுதவில்லை.
கிளைகள் உடலிற் கிளைத்திருந்தாலும்
விதையூன்றி வேர் விட்டது உயிரிலல்லவா?
சுவர் மேல் பூசிய சுண்ணாம்பல்ல,
காய்ந்தபின் உதிர;
கற்களைப் பிணைத்த சுண்ணச் சாந்து!
காயக்காயத்தான் வலிவாகும்.
ஆசை வருவதற்கு ஒரு வயதுண்டு!
போவதற்கு?
தலையில் நிற மாற்றம் ;
முகத்தில் நிறைய மாற்றம் ;
மனம் மட்டும் மாறவேயில்லையே!
புத்தம்புது வீடுமில்லை
துள்ளிக் குதிக்க வலுவுமில்லை
மண்ணில் படுத்து வானைப் பார்த்தபடி
நேற்றைய நினைவுகளை
அசைபோட வேண்டுமென
ஆசை துடிக்கிறது
“உண்டலின் உண்டதறல் இனிது” என
வள்ளுவன் சொல்ல வில்லையா?
உனக்குள் நானிறங்க
உடல் திறன் போய்விட்டது தான்
காமமும் காதலும் தாய்மையும் கனிந்த அமிழ்தப் பிழிவான
கடைக்கண் பார்வையால்
என் உடலை உலுக்கி உயிருக்குள் ஊடுருவுவாயே
அந்த உன்மத்த நிலை பற்றிய நினைவுகளால்
கொதித்துக் கிடக்கிறதென் கூடு.
பிரிவு கொடியது ;
அதனினும் கொடியது ஆடிக் களைத்த வயதில்!

- வெண்மணி

Pin It