பொருந்தாத மணம்
என்னும் பூட்டுக்கு
சாவியைத் தொலைத்தவள்
புக முடியாத
இருட்குகைப் போல்
இல்வாழ்வை வெறுக்கிறாள்

வாழ்வின் இயலாமைகளை
மதுக்கோப்பைக்குள்
பனிக்கட்டிகளாக
கரைத்துவிடும் நல்வாய்ப்பு
பெண்களுக்கு அருளப்படவில்லை

தன் வாழ்க்கைக்கு
வழிவிடாத
தெய்வங்களை மன்றாடி
தன் வழிபாட்டால்
தண்டிக்கிறாள்

திறந்திருக்கும்
கோயில் கதவுகளின்
புனிதங்கள் தான்

அவள்
வாழ்வின் வாசல்களை
மூடிவைத்தது அறியாமல்

முடிவற்ற துயரங்களுக்கு
முடிவற்ற நம்பிக்கைகள்
தேவைப்படுகின்றன

குடுகுடுப்பைக்காரன்
தொடங்கி
குறிசொல்லும் யாவரையும்
பின்தொடர்வது மட்டுமே
அவளின் ஆறாத காயங்களுக்கு
ஆறுதல் ஒத்தடங்கள்

தர்கா வாசலில் தலைவிரித்தாடும்
பெண்ணின்
தாம்பத்ய முரண்களில்
பேய் பிடித்தாட்டுகிறது

தப்பித்து செல்ல
வழியற்ற பறவைகள்
வாழ்வின் கனிகள்
வசப்படாமல்
தன்னைத் தானே
கொத்திக்கொள்கின்றன

- அமீர் அப்பாஸ்

Pin It