ஆதாரம் இல்லாததால்
பூட்டன் வந்தான் வரத்தான் என்றார்கள்
ஆனால் அவரும் இங்குதான் பிறந்திருந்தார்
பாட்டனும் வாப்பாவும் நானும்
எனது பேரனும் இந்த மண்ணில்தான் எருதாகி உழுதுதோம் உழுகிறோம்
இன்று எரிகிறோம்
தனது பூர்வீக புலத்தில்
கிட்டிப்புள்,கிளித்தட்டு
மாங்கொட்டை தெத்தலென
மாவும் பூவும் பிஞ்சும் காயும் பழமுமென
மண்ணை வாசித்தவனை தூசித்தவாறு மல்லுக்கட்டியபடி
மறித்துக் கடிக்கொண்டு
நுண்காவி பற்றி பெண்காவி பேச அபிநயத்துடன் கட்டுக்கதைகள்
அவிழ்த்து விடப்படுகின்றன
எங்களது நிலத்தை
கூறுபோட்டும்
இருப்பை குறை பட்டும்
எல்லை விளையாட்டுதான் ஆதியிலிருந்தே
இங்கு அரங்கேறிக்கொண்டிருக்கிறது
ஆட்சியென வரும்போது ஆளுக்காள் மாறியிருக்கிறார்கள்
தவிர
விளையாட்டு அதுதான்
சாமர்த்தியமாக
மிகவும் திட்டமிட்டு ஒவ்வொரு கட்டங்களிலும்
ஆதிக்க வேட்கையுடன் நகர்த்தப்படும்
காய்கள் அனைத்தும்
ஒன்றின்பின் ஒன்றான
முன்னகர்தல்கள்
மூடி மறைக்கப்பட்டு
எதைச் சொன்னாலும்
காவல் பொம்மைகளும் கையசைக்க
நீதி மறுக்கப்பட்டு
கட்டுக்கதை என்றுதான்
இறுதியில் முற்றுப் பெறுகிறது.
ஏன் அண்மைய சிங்களக் கொத்து
கருத்தடைக் கலவரம் காடழிப்பு
இன்னும் ஏற்க இயலாத ஏராளம்
கட்டுக்கதைகள்
வாப்பா எழுதிவைத்த குறிப்புகளென
அந்தப் பழைய றங்குப்பெட்டிக்குள்
இன்னும் இருக்கிறது இதுபோல்
ஒரு கட்டுக்கதை!
- ரோஷான் ஏ.ஜிப்ரி