சூலத்தால் எழுதப்பட்டவன்
இனி பாடலாம் நாமகரணத்தின் ஆரோகனத்தை
எதிர்கருத்து பேசினால்
நினைவில் இருக்கட்டும்
அறுத்தெறியப்படும் உனது நாக்கை.

எழுதுவதற்காக அல்ல
பேனாவை உடைத்தெறி
ஒரு கை உனது நிர்வாணத்தை மறைக்கவும்
இன்னொரு கை ஓட்டுப்போடவும்
விதிக்கப்பட்டவை
தெருவில் கூடி கலகம் செய்தால்
மனதில் வை
துண்டிக்கப்படும் உனது கழுத்தை.

பெருங்குருதி சிந்திய சமகாலத்தின் தடங்களை
வரைந்த தூரிகைகளை தூரயெறி
நாமக்கட்டியில் தீட்டிவை
புதிய தேசமொன்றின் புனைவுக்கதைகளை.
முடிந்தவரை
கண்களை காதுகளை வாயைப் பொத்திக்கொள்.

குடிக்கவும்
குண்டி கழுவவும்
தண்ணீர் இன்றி நாறிக்கிடந்தாலும்
சோற்றுக்கு டிங்கியடித்தாலும்
குந்த குடிசையற்று வீதியில் கிடந்தாலும்
பரவாயில்லை.. வாழப் பழகு.

இராமாயணத்தையும் மகாபாரதத்தையும்
கருவிலிருந்தே போதனை செய்.
இல்லையெனில்
கர்மாவை விதித்த
அவதாரப் புருஷர்களின் மண்ணில்
யோனியிலிருந்து பிறந்த மனிதர்கள் வாழத் தகுதியற்றவர்கள்

ஆகவே
மனிதக்குருதிக்கு அலையும் கடவுள்களின் கொலைக்களமாகிய மண்ணில்
இனி வாழ்வதற்கு இரண்டு வழிகள் தான் இருக்கின்றன

எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு நடைப்பிணமாக சாவது
அல்லது
தெருவில் இறங்கிப் போராடி வாழ்வது.

"ஜெய் பாரத் மாதாகி ஜே"

- பாரதி கவிதாஞ்சன்

Pin It