நுங்குகள் காய்த்துக் குலுங்கும் கோடையில்தான்
பனைமீது படர்ந்த கொவ்வைக் கொடியின்
நிகழ்த்துக்கலை தொடங்கியது
பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள நுங்கு விற்பவனிடம்
நாள்தோறும் மூன்றுகண்
நுங்கு சீவி
உறிஞ்சுவேன் நான்
உன் இருவிழி நுங்குகளால்
தூரத்தில் இருந்தே எனை உறிஞ்சுவாய் நீ
நுங்கு வண்டின்னா என்னம்மா என்று கேட்கும்
நம் பிள்ளைகளிடம்
சொல்லிக் கொண்டிருக்கிறாய்
ஆன்ட்ராய்டு போனில் விளையாடியபடி
நம்மை உறிஞ்சி சுவைத்த வெயிலின் காதலை .

- சதீஷ் குமரன்

Pin It