ஆட்சிக்கு எதிராகத் துரும்பைக் கிள்ளி
அசையுங் காற்றில் எறியினும் அச்செய்கை
காட்சிக்குத் தூணிலடித்தாற் போல் தோற்றிக்
கடுந்தண்டனைச் சட்டம் சீறிப்பாயும்
மாட்சியுற மன்னர்க்கு இடித்துரைப்பார்
மருங்கிருக்க வேண்டுமென்பார் வள்ளுவர்தாம்
மீட்சியுறுங் கருத்துரைக்க முடியா ஆட்சி
மிடிமைக்கு விழவுகாண முடியாதோ சொல்.

கறைமுகத்தைத் தாழிட்டு நம் கண்முன்பு
களிமுகத்தில் ஒளிபூக்கும் அரசினர்கள்
“நிறைமுகத்தின் ஆட்சி நடத்துகின்றோம்” என்பார்.
நிழல்முகத்தை இருள் திரையில் காட்டும் சூரர்.
முறைமுகத்தின் கண்விழிக்கு ‘இமை, யாமெ’ன்று
முளைமுகத்தில் முழுமரத்தைக் காட்டும் வீரர்.
துறைமுகத்தில் மட்டுமின்றிக் கப்பல் தன்னை
நுரைமுகத்தில் நிறுத்துகின்ற கெட்டிக்காரர்.

முரசடிக்கும் பணநாயக ஆட்சிதன்னில்
‘முறைவாசல்’ செய்வாரே வாழ்வார்; நேர்மை
விரல் சுட்டின் தன்தலையை இழந்து சாகும்.
வெறுமையிலே பசுமைகளின் மயக்கத் தோற்றம்.
அரசியலமைப்புச் சட்டம் தந்துள்ள
அனைவர்தம் அடிப்படையாம் உரிமை இன்று
கரவியலாய்த் தூக்கிலிடப் படுங் கேட்டுக்குக்
கருத்துரைத்தால் நாவோடு ஆவி போகும்.

எழுந்ததடா மராட்டியத்தில் புயலின் வீச்சு
எறிந்ததடா இறுமாப்பின் காலைத் தூக்கி!
விழுந்ததடா சாணக்கிய மூளைச்சாவு
விழுந்ததடா புரட்சிஉளி இருள்செ துக்கி
பொழிந்ததடா புதுமழையே காய்ந்த நெஞ்சில்
பொலிந்ததடா மணங்கமழும் நெருப்புப் பூக்கள்
கிழிந்ததடா அதிகாரப் பணச்செருக்கு
கிளைத்ததடா நம்பிக்கைப் புதுவெளிச்சம்.

வன்புணர்வும் பெண்ணெரிப்பும் வெறியின் செய்தி
வாசிப்பா? அருவருப்பின் ஆர்ப்பரிப்பா?
பெண்மலர்மேல் வண்டுகளின் அமிலவீச்சா?
பெருங்காவல் அறமன்றம் ‘நத்தைத்’ தீர்ப்பா?
வெங்கூட்டுப் புணர்ச்சி விகார நாட்குறிப்பா?
மெல்லினங்கள் வல்லினத்துப் பசித்தீச்சோறா?
பொன்மயில்கள் சாம்போது ஊளைக் கூச்சல்
பொறுமையாக விழிக்கட்டும் சோம்பல் நீதி.

- பேராசிரியர் இரா.சோதிவாணன்

Pin It