பாவங்களின் ஒத்தடத்தில்
உடைந்து வழிகிறது உடல்

தனிமைகளின் கண்ணாடிகள்
மோதி உடைகின்றபோது
பீறிடுகின்றன பதிவு பிம்பங்கள்

தாழிட்ட கதவைத் திறக்க முடியாமல்
மீண்டும் மீண்டும்
மையத்தில் சுழல்கிறது
ஒடுங்கிய காற்று

கண்ணீரை வடிகட்டிய தேநீரில்
எங்கிருந்தோ ஒளிந்து கொண்ட உப்பு
எரிய ஆரம்பிக்கிறது நாக்கில்

பயந்து துப்புவதற்கு மனமின்றி
ருசியை விழுங்கிப் புதைக்கிறது
தொண்டை

பார்வைகளைக்
கடலுக்குள்
உதைத்தனுப்பும் முகங்கள்
செத்து மிதக்கும்
மீன்களைக் கவனிக்காமல்
நீந்திக் கொண்டே இருக்கின்றன.

- இரா.கவியரசு

Pin It