தீப்பிடித்து எரிகிறது பஞ்சுமிட்டாய்
துளித்துளியாய்க் கிள்ளி
ஆயிரம் நாவுகளில் வைக்கிறாய்.

தீஞ்சுவையின் பாதை
ரயிலென வானேறி வளைந்து
இருளின் ஆழத்தில் குதிக்கிறது.
உள்ளிருந்து விண்மீன்களை அள்ளி வீசுகிறோம்
தித்திப்பைப் பிழிந்து வழிகிறது மழை.

மண்ணில் விழுந்த இலைகளால்
மூடிக் கொள்ளும் வேர்கள்
பூமி பூப்படையும் வாசனையை
மேல் நோக்கி அனுப்புகிறது.

பித்து கொள்ளும் இரவின் முகத்தில்
குளிர்புகை தடவுகிறோம்
முகர்ந்தவுடன் விரிந்து
அலையுமதைக் கட்டி வைக்கும்
கயிறு செதுக்க
உடலில் நுழைந்து
காதல் நரம்புகளை
கண்வளரச் செய்கிறோம்.

உயிர் ததும்பும் கடல்களை
கண்களில் ஊற்றிக் கொண்டதும்
உப்புக் கரிக்கும் முத்தங்களின் அலை
ஆழத்திற்கு மீண்டும் இழுக்கிறது.

எரித்துகள்கள் பூத்துக் கிடக்கும் விரல்கள்
சொக்கப்பனைக்கு தயார் செய்யும் போது
கதவைத் திறந்து அணைக்கிறேன்
கன்னத்தில் அறை விழுகிறது.

உடலிலிருந்து பிடுங்கும்
மயிலிறகுக் கனவுகளை
பரஸ்பரம் சரி பார்க்கும் போது
ஒவ்வொரு முறையும்
வண்ணங்கள் நம்மை ஏமாற்றிவிடும்தானே ?

- இரா.கவியரசு

Pin It