கண்காணிப்பு காமிராக்களிடையே
கழிகிறது காலம்
கழிவறை படுக்கையறை
தவிர்த்து
கண்காணிக்கப் படுகிறோம்
நிர்வாக விதிகளை மீறுகிறோமா?
இருபத்திநாலு மணி நேரமும்
கண்கொத்தி பாம்பாக
கண்காணிக்கிறார் நிர்வாகி
கூடவே
பெண் பணியாளர்கள்
அகஸ்துமாஸ்த்தாக
கண்ட இடங்களில்
சொறிந்து கொள்வதையும்
குனிந்து எழும்போது தெரியும்
சேலை விலகல்களையும்
வங்கியில்
தியேட்டரில்
பார்களில் கோவில்களில்
பூங்காக்களில் சாலைகளில்
கண்காணிப்பு காமிராக்கள்
சுற்றிச் சுழல்கின்றன
சாமானியர்களுக்குத் தான்
கண்காணிப்பு சங்கடங்களும்
கட்டுப்பாடுகளும்
குண்டு வைப்பவர்கள்
முதல் குறியாக
கண்காணிப்பு காமிராக்களைத்தான்
தகர்க்கிறார்கள்
எதிரியைப் பிறகு பார்க்கலாம்
முதலில்
துரோகியைத் தீர்த்துக் கட்டச் சொல்கிறது
தீவிரவாதம்.
விலக்குதல்
எனது கைகளில்
விழுந்தது
விலக்கப்பட்ட கனி
சுவைத்தேன்
வாழ்வின் முதல் ருசி
தெரிந்தது
விலக்கப்பட்டதொன்று
கடவுளும்
அறிவுக்கு வித்தென்று
சாத்தானும் மொழிந்தனர்
சாத்தானின்
நேசனானேன்
கடவுளை விலக்கி.
- வித்யாஷங்கர்