தலையை ஒளித்துக் கொள்ளும்
குடையணிந்து செல்பவர்களின்
கால்களைக் கவ்வி
ஏறுகிறது மழை.
உழுத வயலில் இறங்கி
தூங்கும் விதைகளின் வயிற்றில்
முட்டி முட்டி நிரம்புகிறது உயிரின் பாடல்.
வளைந்த கொம்புகளில் தாமரை சூடி
குளத்தை ததும்பச் செய்யும் எருமைகளை
கரையிலிருந்து குதிக்கும் சிறார்கள்
ஓட விடுகிறார்கள்.
ஒளியைக் குடித்து
குளிர் புகையாய் ஊதும் இருள்
மண்வாசனையோடு
நுழைகிறது வீடுகளில்.
தேநீர் இன்னும் தயாராகவில்லை
முற்றத்திலிருந்து தெறிக்கும் துளிகள்
பல்லாங்குழியிலும் தாயக் கட்டத்திலும்
மாறி மாறி விளையாடுகின்றன.
வெளியே தனித்தலையும் மழை
வெவ்வேறு உருவங்களாக
வீட்டுக்குள் நடக்கிறது
அம்மா குளிர்ந்திருக்கிறாள்
அப்பா வாசனை கசிகிறார்
அக்கா தளும்பிக் கொண்டே இருக்கிறாள்
ஒழுகும் வீடென்பதால்
எல்லா மழையும்
ஒன்றாக சேர்ந்து மூச்சு விடுகிறது.
சதுரங்க சேனைக் காய்களைப் போல
கூரையிலிருந்து சொட்டும்
மழையில் முகிழ்த்து
உள்ளே நுழையும் கார்காலம்
தாவரங்களை அழைத்து வருகிறது
ஆட்டுக்குட்டிகளும் வந்த பிறகு
கதவை அடைக்க முடியாமல்
மழையாகவே மாறுகின்றன
எல்லா வீடுகளும்.

- இரா.கவியரசு

Pin It