அரசியலமைப்புச் சட்ட அறிஞரும், ஹார்வர்ட் சட்டப் பள்ளியின் முன்னாள் மாணவருமான பேராசிரியர் ஜி மோகன் கோபால் பெங்களூரில் உள்ள தேசிய சட்டப் பள்ளியின் முன்னாள் துணைவேந்தர் ஆவார். நேஷனல் ஜூடிசியல் அகாடமியின் (National Judicial Academy) முன்னாள் இயக்குனரான இவர், உலக வங்கி, ஏடிபியில் பணிபுரிந்தவர் மற்றும் செபியின் உறுப்பினராகவும் இருந்தார். ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் தற்கால ஆய்வுகளின் (Rajiv Gandhi Institute of Contemporary Studies) முன்னாள் இயக்குனருமான கோபால், உச்ச நீதிமன்றத்தில் EWS ஒதுக்கீட்டுத் திருத்தத்திற்கு எதிராக முதன்மை வழக்கறிஞராக வாதிட்டார். 2019 ஆம் ஆண்டில் ஆராய்ச்சி மற்றும் திட்டமிடல் மையத்தின் (CRP) தலைவராக அப்போதைய இந்திய தலைமை நீதிபதியால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முனைவர் மோகன் கோபால், EWS இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் முதன்மை வழக்கறிஞராக வாதாடினார். அவருடன் ஒரு கலந்துரையாடல்
மனோஜ் சிஜி: EWS (பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினர்) தீர்ப்பு இந்தியாவில் இட ஒதுக்கீட்டின் அடிப்படைக் கட்டமைப்பை எவ்வாறு மாற்றுகிறது? 3-2 என்ற அளவில் பெரும்பான்மை நீதிபதிகள் EWS இட ஒதுக்கீடு செல்லும் என அளித்த தீர்ப்பு குறித்து நீங்கள் ஆச்சரியப்பட்டீர்களா?
மோகன் கோபால்: பெரும்பான்மை நீதிபதிகள் திருத்தத்தை ஆதரித்ததில் எனக்கு ஆச்சரியமில்லை. குறைந்தபட்சம் ஒருவராவது EWS இட ஒதுக்கீட்டை செல்லாது என அறிவிப்பார் என நம்பினோம். இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு அளித்துள்ளனர். இது அவ்விரண்டு நீதிபதிகளின் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை, தொழில்முறை ஒருமைப்பாடு, தொழில்முறை தரம் ஆகியவற்றைப் பேசுகிறது. இந்தத் தீர்ப்பு உண்மையில் இட ஒதுக்கீடு குறித்த அறிவு வளத்தை நமக்கு அளித்துள்ளது என்று நினைக்கிறேன்.
முதல் விசாரணையிலேயே, இது சாதாரண வழக்கு அல்ல என்று நான் நீதிமன்றத்தில் தெரிவித்தேன். EWS வழக்கை சமூக நீதியின் ADM ஜபல்பூர் (எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தி அரசால் தடை செய்யப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் குறித்த வழக்கு, இந்திராகாந்தி அரசின் நடவடிக்கை சட்டப்படி செல்லும் எனும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது) என்று அழைத்திருப்பேன். தற்போது நீதிமன்றத்தின் முடிவையும் மூன்று பெரும்பான்மை தீர்ப்புகளைப் படித்த பிறகு, இது "சமூக நீதியின் ஜாலியன் வாலாபாக்"என்று நான் கூறுவேன். உச்ச நீதிமன்றம் வருங்காலத்தில் தனது முடிவுக்காக நீண்ட காலத்திற்கு வருந்தும் தீர்ப்பு என்ற பொருளில் ஜபுல்பூர் ADM என்றும், அரசியலமைப்புச் சட்டத்தின் பல அடிப்படைக் கொள்கைகளையும், சமூக நீதியின் அடிப்படைக் கட்டமைப்பையும் படுகொலை செய்ததால் சமூக நீதியின் ஜாலியன் வாலாபாக் என்றும் அழைப்பேன்.இந்தத் தீர்ப்பின் மூலம் மிகக் கடுமையாக பலிவாங்கப்பட்டது இட ஒதுக்கீடு எனும் கொள்கையாகும். பிரதிநிதித்துவ ஜனநாயகம் தான் ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண் என்ற கருத்து அரசியலமைப்புச் சட்டத்தில் பிண்ணிப் பிணைந்துள்ளது. இட ஒதுக்கீடு என்பது பிரதிநிதித்துவத்திற்கான முக்கியமான கருவி. அதைவிட சிறந்த கருவியைக் கண்டுபிடித்தால், இட ஒதுக்கீட்டை அரபிக்கடலில் எறிவோம்
அபூர்வ விஸ்வநாத்: விசாரணையின் கடைசி நாளில், நீங்கள் SC, ST, OBC வகுப்பினரை EWS ஒதுக்கீட்டில் சமரசத்தை முன்மொழிந்தீர்கள். இந்த திட்டம் எப்படி வேலை செய்யும்?
மோகன் கோபால்: ஒரு நபர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பது அந்த நபர் அந்த வகை இட ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது மட்டுமே. எனவே SC, ST, OBC என்பது பல்வேறு வகையான பலவீனங்களை அளக்கும் அளவுகோல்களின் தொகுப்பாகும். இவை அனைத்தும் இறுதியில் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 46 க்கு செல்கிறது, 46 ஆவது பிரிவு, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் பொருளாதார நலன்களை, குறிப்பாக பட்டியலின, பழங்குடியினரின் நலன்களை அரசு பாதுகாக்கும் என்று கூறுகிறது. அரசாங்கத்தின் கூற்றுப்படி, EWS இட ஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 46 இன் படி உருவாக்கப்பட்டது. எனவே பல்வேறு வகையான பலவீனங்களை அடையாளம் கண்டு, குறிப்பிட்ட அளவுகோல்களுடன் தொடர்புடைய பலவீனத்தை அடையாளம் காண்கிறோம். SC, ST, OBC வகுப்பினர் பிரதிநிதித்துவம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள் என்பதே பிரச்சினையின் சாராம்சம்.
அனந்தகிருஷ்ணன் ஜி: இட ஒதுக்கீடு என்பது பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதே என்பதை ஒப்புக்கொள்கிறேன். SC, ST, OBC வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட 50 விழுக்காட்டில் இருந்து EWS இட ஒதுக்கீட்டிற்கு 10 % எடுக்கப்படவில்லையே. அது அப்படியே இருக்கப் போகிறதே. 50% பொதுப் பிரிவினரின் இடங்களில் இருந்து தானே 10% குறைந்துள்ளது.
மோகன் கோபால்: பாஜக அரசு ஏன் அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 15 (4), 16 (4) ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்? சமூக ரீதியாகவும், கல்வியிலும் முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதே உங்கள் நோக்கமாக இருந்தால், அதை வெளிப்படையாகவும் நேரடியாகவும் கூறுவது தானே உங்கள் முதல் பொறுப்பு. கல்வியிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர், குறிப்பாக SC, ST வகுப்பினர் மீது அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று கூறும் 46வது பிரிவின் கீழ் இந்த சட்டத்தை உருவாக்குகிறோம் என்று ஏன் ஒன்றிய அரசு கூறுகிறது? மேலும் 46 ஆவது பிரிவின் கீழ் சட்டம் இயற்றும் எனச் சொல்லும் அரசு SC, ST வகுப்பினரை தவிர்த்துவிட்டு சட்டம் இயற்றுவதாக கூறுவதேன்?
50% பேர் இட ஒதுக்கீடு பெறாதவர்கள் என்று மீண்டும் மீண்டும் கூறப்படுகிறது. ஆனால், இட ஒதுக்கீடு பெறாதவர்களை பெண்களுக்கான இட ஒதுக்கீடு, விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடுகளைப் பெற ஏன் அனுமதித்தீர்கள்? இது EWS விதியின் படி தகுதிக்குறைபாடு இல்லையா? இரட்டை இட ஒதுக்கீடு இல்லையா? எனவே OBC, SC, ST இட ஒதுக்கீடு மட்டுமே இரட்டை இட ஒதுக்கீடாக மாறுகிறது. அந்த வகையில் EWS இட ஒதுக்கீடு பெறாத மக்களுக்கானது அல்ல. வசிப்பிடம் சார்ந்த இட ஒதுக்கீடு, அரசு அதிகாரிகளின் குழந்தைகளுகான இட ஒதுக்கீடு மற்றும் பல இட ஒதுக்கீடுகளை பெறத் தகுதியுடையவர்களுக்கான இட ஒதுக்கீடு. ஆனால் SC, ST, OBS ஜாதியில் பிறந்திருந்தால் EWS இட ஒதுக்கீடு தர முடியாது என்று அரசு கூறுகிறது. OBC க்ரீமிலேயர் பிரிவினர் எங்கே போவார்கள்? இந்த 10% இடக் குறைப்பால் அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிரீமி லேயர் எனச் சொல்லி OBC பிரிவில் இருந்து விலக்கப்பட்டவர்கள் 50% பொதுப்போட்டி இடங்களில் மட்டுமே போட்டியிட இயலும். அந்த வகையில் அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனந்தகிருஷ்ணன் ஜி: ஆனால் 50% எடுக்கப்பட்ட 10% EWS ஒதுக்கீடு என்பது உயர்சாதி பிரிவு அல்லவே. இது பொதுவான பிரிவு. இது மத அடிப்படையிலும் இல்லை. சரிதானே?
மோகன் கோபால்: அது இல்லை. சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பும் (SEBC) மத அடிப்படையிலானது அல்ல. எல்லா மதமும் அதில் இருக்கிறது. வர்ணங்கள், ஜாதிகள், மதங்கள், பிராந்தியங்களைக் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் வகையாகும். ஆனால் அத்தைகைய சமூகங்களுக்கு அரசுத் துறையில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை. இது சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களை வெற்றிகரமாக ஒன்றிணைத்த கருத்தாக்கங்களில் ஒன்றாகும். நாடு முழுவதும், நாங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று சொல்கிறார்கள். பிரதிநிதித்துவம் இல்லாத வகுப்பினர் தங்கள் பிரதிநிதித்துவத்திற்காக போராடுகிறார்கள்.
பொதுப்பிரிவு இடங்கள் அனைவருக்குமானது. அனைவரையும் பற்றி அக்கறை கொண்டவர்கள் எனில், ஏன் OBC கிரீமிலேயர் பற்றி கவலை தெரிவிக்கவில்லை? அவர்களும் தங்கள் 10% இடங்களை இழக்கிறார்கள் ஆனால் 10% EWS இட ஒதுக்கீட்டால் OBC சமூகங்கள் பயனடையவில்லை. எனவே இது முரண்பாடுகளால் நிறைந்துள்ளது. உண்மையில் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்ய நீங்கள் சிரமப்படுவதால் தான் இப்படிப்பட்ட முரண்பாடு. பாஜக அரசு உண்மையில் செய்ய விரும்புவது உயர் சாதியினருக்கான ஒரு தனித்த இட ஒதுக்கீட்டை உருவாக்குவதுதான். பாஜக அரசு செய்ய விரும்புவதை, உண்மையில் செய்ய முடியாது. இது வேறுபட்ட அளவுகோல் என்று பாஜக அரசு வெறுமனே சொன்னால், அந்த அளவுகோல் பொருந்தக்கூடிய எவருக்கும் EWS இட ஒதுக்கீட்டைத் தரலாம். எனவே, வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குழு, தனிநபர்கள் அல்ல, எனது பார்வையில், பிரதிநிதித்துவத்திற்கு தகுதியானவர்கள். மார்க்சியக் கண்ணோட்டத்தில் அவர்களை ஒரு தொழிலாளி வர்க்கமாகக் கருதி, தொழிலாள வர்க்கத்திற்குப் பிரதிநிதித்துவம் கொடுக்கலாம். நான் எனது சொந்த மாநில (கேரள) அரசிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இதற்காக நான் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். ஏன் கேரளாவில் தொழிலாளி வர்க்கத்திற்கு EWS இட ஒதுக்கீடு கொடுக்கவில்லை?
குஜராத்தில் EWS இட ஒதுக்கிட்டை செயல்படுத்துவது போல் கேரளாவில் ஏன் செயல்படுத்த வேண்டும்? EWS இட ஒதுக்கீட்டிற்கு தகுதியான வகைகளின் பட்டியலைக் கொடுத்து, அதற்கு மேல் இந்தந்த ஜாதிகளுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என எழுதப்பட்டிருக்கும் ஒரு உத்தரவை கேரள அரசு வெளியிட்டது. இடதுசாரி அரசு என்ற முறையில் உழைக்கும் வர்க்கத்தினருக்கு மட்டுமே 10% EWS இட ஒதுக்கீடு தருகிறோம் என்று கூறியிருக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க விரும்பினால், அதைச் செய்யுங்கள். எங்களைப் பொறுத்தவரை, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் என்பது தொழிலாளி வர்க்கம்.
மனோஜ் சிஜி: நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் திருத்தச் சட்டத்தை காங்கிரஸ் ஆதரித்ததும், தீர்ப்புக்குப் பிறகு, மன்மோகன் சிங் காலத்தில், சின்ஹோ கமிஷன் நியமனம் செய்யப்பட்டது என்று கூறி, நாங்கள் தான் EWS இட ஒதுக்கீட்டிற்கு சொந்தக்காரர்கள் என பெருமிதப்பட்டதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்பட்டீர்களா?
மோகன் கோபால்: இல்லை, எனக்கு ஆச்சரியமில்லை.
பி வைத்தியநாதன் ஐயர்: வருமான அடிப்படையிலான அளவுகோல் இட ஒதுக்கீட்டிற்குத் தகுதி பெறும் என்பதை கிட்டத்தட்ட ஒப்புக் கொள்கிறீர்கள். பெரும்பான்மைத் தீர்ப்பு வழங்கிய மூன்று நீதிபதிகளீன் தீர்ப்பு அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக் கோட்பாட்டை மீறுவதாக இல்லையா?
மோகன் கோபால்: எனக்கு உடன்பாடு இல்லை. 'பொருளாதார அளவுகோல்' என்று எதைச் சொல்கிறோம் என்பதைப் பொறுத்தது. பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் என்று சொல்லி, நிதி ஆதாரத்திற்கான அளவுகோல்களை அரசு வழங்கியுள்ளது. வருமானம், சொத்துக்கள், மற்றும் பல. அவை பொருளாதாரப் பலவீனம் அல்ல. இப்போது சமூக ரீதியிலும், கல்வியிலும் பின்தங்கிய நிலையில் உள்ள பட்டியலின வகுப்பை ஆராயும்போது, பொருளாதாரம், பன்முகத்தன்மை போன்ற பரந்த கருத்துக்குள் வரும். சமூகப் புறக்கணிப்பு, பிரதிநிதித்துவமின்மை, பொருளாதாரப் பிரதிநிதித்துவமின்மை போன்ற அனைத்தும் இதில் அடங்கும்.
அம்ரித் லால்: ராம் மனோகர் லோஹியா பாலின அடையாளம் பின்தங்கிய நிலையின் அளவுகோலாக இருக்கலாம் எனப் பேசினார். ஜாதி வேறுபாடின்றி பெண்களை OBC வகுப்பினராகக் கருத வேண்டும் என்றார். எனவே, இட ஒதுக்கீட்டின் பின்னணியில் பரந்த பல பரிமாணங்களைக் கொண்ட அளவுகோல் பற்றிப் பேசுவது தேவையா?
மோகன் கோபால்: சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய நிலைக்கு சாதி ஒரு அளவுகோல் அல்ல. ஒரு குழு 15 அல்லது 20 அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும், அவற்றில் ஒன்றில் கூட ஒரு குறிப்பிட்ட சாதியில் இருக்க வேண்டும் என்று கூறவில்லை. சாதி என்பது ஒரு வகுப்பாக இருக்கலாம் அல்லது ஒரு குழுவாக இருக்கலாம். ஆனால் ஒரு வர்க்கம் என்பது சாதியல்ல. எந்தவொரு குழுவும் அல்லது சமூகமும் 15-20 அளவுகோள்களில் தகுதி பெற்றால், அந்தக் குழு சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பாக (SEBC) இருக்கலாம். திருநங்கைகள், அனாதைகள், தெருவோரக் குழந்தைகளுக்குப் பிரதிநிதித்துவம் இல்லாததால், அனாதைகளை பிற்படுத்தப்பட்ட வகுப்பாக மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை கேட்டுக்கொண்ட நிலையில், சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய வகுப்பாக திருநங்கைகளை உருவாக்கியுள்ளோம். அவர்களுக்கு அது தேவை. எனவே, குரல் கொடுக்க இயலாத, போதிய பிரதிநிதித்துவம் இல்லாத எந்தக் குழுவையும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குக் கொண்டு வந்து இட ஒதுக்கீட்டின் மூலம் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்,
ஆனால் சமூக ரீதியாகவும் கல்வியிலும் முன்னேறிய உயர்சாதியினர் வங்கியில் பணம் குறைவாக வைத்துள்ளனர் அல்லது குறைவான சொத்துக்கள் வைத்துள்ளனர் என்பத்ற்காக அவர்களை SEBC வகுப்பில் சேர்க்க இயலாது. ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு கிடையாது. ஆனால் சாதிகள் இட ஒதுக்கீட்டிற்கு தகுதியானவை. ஆனால் உண்மையில் சாதி அடிப்படையிலான முதல் இட ஒதுக்கீடு இந்த EWS இட ஒதுக்கீடு ஆகும்.
அனந்தகிருஷ்ணன் ஜி: மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு ஒரு பிரச்சனையாக இருக்காதா? நீங்கள் அதை ஆதரிப்பீர்களா?
மோகன் கோபால்: ஒரு மதத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கவில்லை. நாம் ஒரு குழுவைப் பார்க்கிறோம். தரவுகளின் அடிப்படையில் பல்வேறு மதச்சார்பற்ற அளவுகோல்களின் தொகுப்பைப் பயன்படுத்துகிறோம். எனவே, அதே தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, ஜாட்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக்கக் கூடாது என்று பரிந்துரைத்தது. ஆனால் அது அரசியல் ரீதியாக மீறப்பட்டது. முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீடு இல்லை. குழுக்கள், சாதிகள் மற்றும் சமூகங்கள் ஆகியவற்றிற்குத் தான் இட ஒதுக்கீடு உள்ளது. இது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையத்தில் அவர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்ப வார்த்தையாகும். சாதி மற்றும் சமூகங்கள் சில குறிப்பிட்ட குறைபாடுகளை சந்திக்கின்றன, இதன் விளைவாக பிரதிநிதித்துவம் இல்லை. எனவே அவர்களுக்கு இட ஒதுக்கீடு தரப்படுகிறது.
தீப்திமான் திவாரி: உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, EWS ஒதுக்கீட்டை எதிர்க்கும் பீகார் கட்சியான RJD யும், சட்டத்தை ஆதரித்த JDU கட்சியும் EWS இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டிற்கும் மேலாக இட ஒதுக்கீட்டை அதிகரிக்கச் செய்கிறது என்று கூறியுள்ளன. அது இன்று புரிகிறது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, பீகார் சட்டசபையில் அப்படி ஒரு தீர்மானம் கொண்டு வந்தால், அது நீதிமன்றத்தின் விசாரணைக்கு செல்லுபடியாகுமா?
மோகன் கோபால்: அது ஊகம். ஆனால் கொள்கை அடிப்படையில் ஒரு விஷயம் முக்கியமானது, அதை பி.ஆர்.அம்பேத்கரும் அரசியல் நிர்ணய சபையில் வெளிப்படுத்தினார். அனைவருக்கும் சமவாய்ப்பு (equality of opportunity) கொள்கையை பாதுகாக்க வேண்டும் என்றார். ஏன் அப்படிச் சொன்னார்? ஏனென்றால், ஒடுக்கப்பட்ட மக்கள் போராடியதால்தான் அரசியலமைப்புச் சட்டத்தில் அனைவருக்கும் சமவாய்ப்பு உள்ளது. 1950 ஆம் ஆண்டுக்கு முன் இந்த நாட்டில் சமத்துவ உரிமை இருந்ததில்லை. ஆகஸ்ட் 27, 1947 அன்று தலித் உறுப்பினர்களான எஸ்.நாகப்பாவும் முனுசாமி பிள்ளையும், அரசியலமைப்பு நிர்ணய சபையில் 'நாங்கள் ஊமையாக இருக்கலாம், படிப்பறிவில்லாதவராக இருக்கலாம், ஆனால் எங்களுக்கு உரிய பங்கு வேண்டும்’ என்றனர். நாகப்பா ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறப் போவது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தாலும், தலித்களாகிய நாங்கள் இந்துக்கள் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள் என்று பயப்படுகிறோம். ஏனெனில் அவர்கள் மீண்டும் இந்து ராஜ்ஜியத்திற்கு எங்களை அழைத்துச் செல்வார்கள் என்றார். மேலும் அவர்கள் பட்டியலின் மக்களை ஒடுக்குவதற்காக சதுர்வர்ணத்தை மீண்டும் கொண்டு வருவார்கள். எனவே எங்களுக்கு உரிய பங்கு வேண்டும் என்றார். உயர்சாதி இந்துக்களுக்கு பிரதிநிதித்துவம் கூடாது என்று நாங்கள் கூறவில்லை. அனைவருக்கும் சமமான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்கிறோம்.
ஆகாஷ் ஜோஷி: பல ஆண்டுகளாக பாராளுமன்றம், நீதித்துறை, நிர்வாகத் துறை என அனைத்து இடங்களிலும் பிரதிநிதித்துவம் பற்றி நிறைய விவாதங்கள் நடைபெற்றுள்ளன. கூடுதல் நீதிபதிகளைக் கொண்ட அமர்வில் இட ஒதுக்கீடு குறித்து விரிவான, தீவிரமான விவாதம் நடத்த வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறீர்களா?
மோகன் கோபால்: ஆம். நிச்சயமாக நடத்தப்பட வேண்டும். அதில் பங்குபெறும் நீதிபதிகள் அனைத்து வகுப்புகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் விதமாக இருக்க வேண்டும் என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகும். அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதி சோனியா சோட்டோமேயர் நீதிபதி ஆவதற்கு முன் நிகழ்த்திய உரையில் ஒரு ஏழை லத்தீன் பெண்ணாக, வெள்ளையின நீதிபதியை விட சிறந்த நீதிபதியாக இருப்பேன் என்று அவர் நான்கு முறை திரும்பத் திரும்பச் சொன்னார். வெள்ளைக்காரர்கள் சிலர் எதிர்த்தனர். அவர், சொன்ன சொல்லை திரும்பப் பெறப் போவதில்லை. ஏனென்றால், ஒரு பெண்ணாக, எந்த ஆணுக்கும் கிடைக்காத வாழ்க்கை அனுபவத்தை நான் பெற்றிருக்கிறேன். ஒரு லத்தின் அமெரிக்கராக, எந்த வெள்ளைக்காரனுக்கும் இல்லாத வாழ்க்கை அனுபவத்தை நான் பெற்றிருக்கிறேன் என்று பதிலடி தந்தார். எனவே நீதித்துறையில் முடிவுகளை எடுக்கும்போது, அனைவரின் அனுபவங்களையும் பிரச்சினைகளையும் கவலைகளையும் கவனிக்க வேண்டும். தகுதி பற்றி சிலர் பேசுகிறார்கள். உச்ச நீதிமன்ற நீதிபதிக்கான தகுதிக்கான அளவுகோல்கள் என்ன? வயது, அனுபவம் தவிர வேறு தகுதிகள் உண்டா? எனவே, எல்லா நிலைகளிலும் அதிக பிரதிநிதித்துவம் கொண்ட நீதித்துறை நிச்சயமாக நமக்குத் தேவை.
சௌரவ் ராய் பர்மன்: இந்தச் சட்டத்திருத்தம் கணிசமான அளவுக்கு பல அரசியல் கட்சிகளின் சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இச்சட்டத் திருத்தம் செல்லும் என உச்ச நீதிமன்றத்தின் முடிவில் அரசியல் வர்க்கத்தின் ஆதரவு எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது?
மோகன் கோபால்: நீங்கள் சொல்வது சரிதான். இது பாராளுமன்றத்தில் ஏறக்குறைய ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டதா? நீண்ட வாதங்கள் மேற்கொள்ளப்பட்டனவா? என்ற கேள்விகள் உண்டு. இருப்பினும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் நிச்சயமாக அரசியல் வர்க்கத்தின் ஒருங்கிணைவிற்கு கருத்து வலு இருக்கிறது.
மானஸ் ஸ்ரீவஸ்தவா: கல்வி நிறுவனங்களிலும், இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது அல்லது குறைப்பது பற்றி அல்லாமல், இடங்களின் எண்ணிக்கை, வேலை வாய்ப்பு என விவாதம் செய்ய வேண்டும் என்று மாணவர்கள் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். இட ஒதுக்கீடு அதிகரிப்பு அல்லது குறைப்பு என்ற இந்த வாதம் ஆளும் அரசியல் கட்சிகள் வேலை வழங்குவதில் தனது இயலாமையை மறைக்க எடுக்கும் ஒரு வழி என்று நினைக்கிறீர்களா?
மோகன் கோபால்: ஆம். முக்கியமான கருத்து. இட ஒதுக்கீடு என்பது வெறுமனே வேலை வாய்ப்புகள், கல்வி நிறுவன இடங்களைப் பெறுவற்காக என்ற குழப்பம் இருப்பதால், இட ஒதுக்கீட்டிற்கு போதுமான பிரதிநிதித்துவம் என்ற உயர்ந்த அரசியலமைப்பு நோக்கம் இருப்பதை உணராமல் உள்ளது. இந்த குழப்பத்தை பிரிக்க வேண்டும். எனவே இட ஒதுக்கீடு பற்றிய விவாதத்தை பிரதிநிதித்துவம் பற்றிய விவாதத்திற்கு மாற்ற வேண்டும்.
இந்த நாட்டில் இரண்டு வகையான இட ஒதுக்கீடுகள் இருப்பதை இப்போது உணர்ந்துள்ளோம். ஒன்று பிரதிநிதித்துவத்திற்கான இட ஒதுக்கீடு. அதைப் பற்றி ஒரே மூச்சில் பேச முடியாது. இட ஒதுக்கீட்டில் இரண்டு எதிர் எதிர் கருத்துக்கள் உள்ளன. எனவே, பிரதிநிதித்துவத்திற்காக போராடுவதற்கான பலவீனமான கருவியாக இட ஒதுக்கீடு மாறிவிட்டது என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும், அதாவது பிரதிநிதித்துவத்திற்கான போராட்டத்தை நாம் தீவிரப்படுத்த வேண்டும்.
அபூர்வ விஸ்வநாத்: அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் உள்ளிட்ட பெரிய சட்டங்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் போது நீதித்துறை சுதந்திரம் அல்லது நீதித்துறையின் செயல்பாடுகளை உள்ளடக்கிய வழக்குகளைத் தவிர, உச்ச நீதிமன்றம் எப்போதும் பாராளுமன்றம் அல்லது அரசுக்கு ஆதரவாகவே இருந்து, அரசின் திருத்தத்தை அனுமதிக்கிறது. இதற்கு நீங்கள் உடன்படுகிறீர்களா?
மோகன் கோபால்: அரசியலமைப்பின் ஒரு பகுதியான அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மீதான நீதித்துறை மறுஆய்வு பற்றி பேசுகிறோம். அரசியலமைப்புச் சட்டத் திருத்த வழக்குகளை விசாரிக்கையில், அப்படியான திருத்தம் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மீறுகிறதா இல்லையா என்ற அளவுகோலில் மட்டுமே நீதிமன்றம் அதைச் சோதிக்க முடியும். எனவே நீதிமன்றத்தால் அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் ரத்து செய்யப்பட்ட நிகழ்வுகள் எட்டு முறை மட்டுமே நிகழ்ந்துள்ளன. நீதித்துறை சுதந்திரம், நீதித்துறை அதிகாரம் ஆகியவற்றைக் கேள்விக்குள்ளாக்காத திருத்தத்தை உச்ச நீதிமன்றம் பொதுவாக ரத்து செய்யவதில்லை. அதனால்தான் 5-0 என்று தீர்ப்பு வரும் என நினைத்தேன்.
நன்றி IndianExpress.com இணையதளம் (2022, நவம்பர் 15 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)
தமிழ் மொழியாக்கம்: லோக நாயகி