அரசு ஊழியர்கள், அரசு ஆசிரியர்கள், போக்குவரத்துத் துறை ஊழியர்கள் அனைவரது கோரிக்கைகளையும் ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றுவோம் என்று கடந்த 2021 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்து திமுக பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது. ஆனால் இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் போக்குவரத்து துறை ஊழியர்கள் வாக்குறுதியை நிறைவேற்றக் கூறி போராட்டங்களை மீண்டும் தொடங்கி இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் திமுக அரசு தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் பழைய கொத்தடிமை வேலை முறையை மீண்டும் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த வழி செய்யும் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது. திமுகவை ஆட்சியில் அமரவைத்த கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையிலும் கூட்டணி தர்மத்தை விட கார்ப்பரேட் சேவையே முக்கியம் என்பதை திமுக அரசு நிரூபித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக திமுக அரசு நீதிமன்ற மேல்முறையீடுகள் மூலமும் தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையில் நடத்துனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவருக்கு ஒய்வூதியம் வழங்க மறுத்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக மேல் முறையீடு செய்த வழக்கில், தேவையற்ற மேல் முறையீடு செய்து நீதி மன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாகத் தெரிவித்து தமிழ்நாடு அரசுக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்த நிகழ்வு கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது. அடுத்தாக, கடந்த திசம்பர் மாதம் தூய்மைப் பணியாளருக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்காமல் இழுத்தடிப்பதாக் கூறி தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்விதுறைக்கு 1 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்புகளில் பணியாளர்களுக்கு நீதி கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. அதே சமயம் திமுக அரசின் நடவடிக்கை கார்ப்பரேட் நிறுவனத்தின் நடவடிக்கையைக் காட்டிலும் மனித நேயமற்றதாக இருப்பது வேதனையளிக்கிறது.அரசுப் பணிகளில் ஓய்வூதியம் ஒழிப்பு, தொகுப்பூதிய முறை நியமனம், ஒப்பந்த ஊதிய முறை நியமனம், தற்காலிக நியமனம், தனியார் மூலம் பணியமர்வு போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மற்றும் அமைப்புசார தொழிலாளர் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இப்போராட்டங்கள் அடுத்த தலைமுறைக்குமான போராட்டம் என்றோ, ஜனநாயக அரசமைப்பு நிர்வாக முறையைப் பாதுகாப்பதற்கான போராட்டம் என்றோ, அனைத்துப் பிரிவுகளையும் சார்ந்த உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டம் என்றோ பார்க்கப்படுவதில்லை. மக்களின் வரிப்பணத்தில் பெருமளவு அரசு ஊழியர்களின் ஊதியத்திற்கே செலவாகிறது. இதனால், மக்களுக்கு நலத்திட்டங்களை நிறைவேற்ற அரசாங்கத்தால் போதிய நிதி ஒதுக்க முடிவதில்லை என்று ஆட்சியாளர்களால் மக்களிடம் சொல்லப்படுகிறது. தொழில் வளர்ச்சியில் உலகளாவிய போட்டிகளை எதிர்கொள்ளவும் அந்நிய முதலீடுகளை அதிகரிக்கவும் தொழிலாளர்களின் வேலைநேரம் அதிகரிப்பு தவிர்க்க முடியாதது என்றும் தொழிலாளர்களின் வாழ்வாதார உரிமைப் போராட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவை என்றும் பொய்ப் பரப்புரை செய்யப்படுகிறது. உண்மை இது தானா? என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டியுள்ளது.
நாட்டில் உள்ள பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான கோடிகளில் உயர்கிறது. லஞ்சம், ஊழல், வரி ஏய்ப்பு, சட்டவிரோதமான சுரங்கம் மற்றும் நில விற்பனைத் தொழில், கல்வி வணிகக் கொள்ளை, அரசு கட்டுமானத் தொழில் ஒப்பந்தங்களில் தரகு போன்ற சமூகப் பொருளாதாரக் குற்றங்களால் கருப்புப் பணப் பதுக்கல் கோடிக்கணக்கில் பெருகி வருகிறது. கடுமையான புதிய வரி உயர்வுகளுக்கும் விலைவாசி உயர்வுகளுக்கும் மக்கள் அடிக்கடி ஆளாக்கப்படுகின்றனர். மற்றொரு புறம் அரசு வாங்கும் கடன்கள் அதிகமாகி நிதி நெருக்கடிகள் முற்றி வருகின்றன.
உலகளாவிய முதலாளித்துவ வளர்ச்சிக்காக விமான நிலையங்கள் விரிவாக்கம் துறைமுகங்கள் விரிவாக்கம், சாலை வசதிகள் விரிவாக்கம் ஆகியவற்றிற்கு தாராளமாக நிதி ஒதுக்கப்படுகிறது. முதலாளித்துவ சந்தைப் போட்டிகள் மற்றும் ஆதிக்கப் போட்டிகளின் விளைவாக இராணுவம் மற்றும் பாதுகாப்புச் செலவுகளுக்கு மக்கள் வரிப்பணத்தில் பெருமளவு செலவிடப்படுகிறது. தனியார் பெரு நிறுவனங்களுக்கு கட்டுப்பாடற்ற வரிச் சலுகையும், வங்கி வராக்கடன் தள்ளுபடியும் வழங்கப்படுகின்றன. இயற்கை வளங்களைச் சுரண்டுவதும் சுற்றுச் சூழலைக் கெடுப்பதும் தடையின்றி நடக்கிறது. தொழில் வளர்ச்சி என்பது பெரு முதலாளிகளின் இலாபமாக மட்டுமே பார்க்கப்படுகிறது, ஒரு சதவீதக் கூட்டத்திடம் 90 சதவீத செல்வம் குவிகிறது. முறையற்ற செல்வப் பகிர்வும் செல்வம் சேர்ப்பும் சட்டத்தின் மூலமே அனுமதிக்கப்படுகிறது.
உண்மையில் ஜனநாயக நாடு, தன்னிறைவு பெற்ற நாடு என்று சொல்லும் தகுதியை இழந்துகொண்டிருக்கிறோம். இருபதாம் நூற்றாண்டில் போராடிப் பெற்ற ஜனநாயக உரிமைகள் அனைத்தும் அடுத்த நூற்றாண்டிலேயே பறிக்கப்படுகின்றன. முதலீட்டாளர்களின் சுரண்டலுக்கு ஏற்ப தொழிலாளர் சட்டங்களில் மறைமுகமான மாற்றங்கள் செய்யப்படுகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களை வைத்தே தொழிலாளர் இயக்கங்கள் நசுக்கப்படுகின்றன. முதலாளித்துவம் மனிதநேயமற்றது மட்டுமல்லாமல் நயவஞ்சகமானது என்பது தற்போது நிரூபணம் ஆகி வருகிறது.
ஆனால், மானுட சமூகம் எப்பொழுதும் அநீதிகளுக்கு எதிராக போராடி முன்னேறிக் கொண்டு தான் இருக்கிறது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முழக்கங்களை உயர்த்திப் பிடித்து முடியாட்சி முறை ஒழிக்கப்பட்டு ஜனநாயக ஆட்சி அமைப்பு முறை நிறுவப்பட்டது. தற்போது நடைமுறையில் உள்ள மனித உரிமைகளும் ஜனநாயக அரசு அமைப்பு நெறி முறைகளும் 18, 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய தொழிலாளர் இயக்கங்கள் மற்றும் மனித உரிமை இயக்கங்களின் பேரெழுச்சியால் உருவானவை. எண்ணற்ற மனிதர்களின் உயிர்த் தியாகத்தின் மூலம் விளைந்தவை.
அரசாங்கப் பணியாட்கள் கண்ணியமாக வாழ்வதற்கேற்ற பணிக்கால ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட வாழ்வாதார உரிமைகள் கிடைத்துள்ளன. ஆனால், இவ்வுரிமைகள் ஆட்சியாளர்களின் கருணையினால் கிடைத்தவை அல்ல. கடந்த நூற்றாண்டில், மனித உரிமைகளுக்காகவும் தொழிலாளர் வர்க்க நலன்களுக்காகவும் உருவான போராட்ட இயக்கங்கள் ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றும் நிலைக்கு வளர்ந்தன. இதைத் தடுப்பதற்காகவே அனைத்து உலக நாடுகளும் மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் நலச் சட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தின. ஜனநாயகம் என்பதை எண்ணற்ற மனிதர்கள் இரத்தம் சிந்தியும் உயிரைக் கொடுத்தும் பெற்றுக் கொடுத்தனர். மானுட சமூகத்தை பின்னோக்கி கொண்டு செல்ல நினைப்பவர்கள் கடந்தகால வரலாற்றுப் படிப்பினைகளை மறந்துவிடக்கூடாது.
அனைவரையும் உள்ளடக்கிய, நீடித்த, நிலையான வளர்ச்சி என்பது தான் ஜனநாயகம். அரசாட்சியை நடத்துவதில் அனைவருக்குமான பாகுபாடற்ற அதிகாரப் பகிர்வு என்பது ஜனநாயகத்தின் உயிர்நாடியாக விளங்குகிறது. வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. அரசுத்துறை ஊழியர்கள் போல தனியார் நிறுவன ஊழியர்களும் அமைப்பாக்கப்படாத தொழிலாளர்களும் வாழ்வாதார உரிமைகளைப் பெற வேண்டும். அதற்கான கொள்கைகளை உருவாக்கவேண்டும். இருக்கின்ற தொழிலாளர் நலச் சட்டங்களை வலிமையாக்கவேண்டும். ஜனநாயகத்தை செயலாக்கம் செய்வதற்காகவே அரசியல் அமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் குறிக்கோள்களுக்கு தீங்கிழைக்கும் கார்ப்பரேட் அதிகாரக் கொள்கைகளைக் கைவிட்டு, அதிகார நாற்காலியில் அமரவைத்த மக்களின் நலன்களைப் பாதுகாக்க திமுக அரசு அக்கறை காட்டவேண்டும்.
- சு.மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர், மக்களாட்சிக்கான கல்வி இயக்கம்.