10% EWS இட ஒதுக்கீடு சட்டத் திருத்தத்தின் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு முற்றிலும் எதிர்பாராதது அல்ல என்றாலும், ஏற்கனவே இட ஒதுக்கீட்டை அனுபவித்து வருபவர்களிடையே இது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புதிதாக இட ஒதுக்கீடு பெறப்போகும் EWS பிரிவினரின் மீதான பொறாமையில் இல்லை என்றாலும், வேலைவாய்ப்பிலும், கல்விக்கான உரிமையிலும் சாதி ரீதியான இட ஒதுக்கீடு பெறுபவர்களை EWS இட ஒதுக்கீடு பெறுபவர்கள் பின்னுக்குத் தள்ளக்கூடும் என்ற அச்சமே அதிர்ச்சிக்கும் ஏமாற்றத்திற்கும் காரணம்.

குறிப்பாக நாட்டில் வேலையில்லாமல் திண்டாடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு NDTV இன் ரவீஷ் குமார் "இத்தகைய EWS இட ஒதுக்கீடு ஒரு பிரச்சினை அல்ல” என்று கருதும் கூச்சலைச் சரியான முறையில் நிராகரித்துள்ளார். அதே நேரம், இந்த 10% EWS இட ஒதுக்கீட்டின் முழு நோக்கமும் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தொல்லை தருவதுவும், நாட்டை மோசமான நிலைக்குத் தள்ளும் சாபக்கேடாகவும் இருப்பதாலும், அதுசார்ந்த ஆளும் வர்க்கங்களின் சிந்தனையின் மீது வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கும் சில ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

10% EWS இட ஒதுக்கீட்டை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்த மூவரில் இரண்டு நீதிபதிகள், இட ஒதுக்கீடு எவ்வளவு காலம் தொடர அனுமதிக்கப்படவேண்டும் என்ற கேள்வியை எழுப்பினர். இந்த ஏற்பாடு நீண்ட காலமாகப் பல முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பில் இவ்வாறு செய்வது சாத்தியமில்லை. எனவே அது கைவிடப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.Supreme Court 424இட ஒதுக்கீட்டின் பின்னணியில் இருந்த எண்ணம், அது எப்போதும் இருக்க வேண்டும் என்பதல்ல. மாறாக நமது அரசியலமைப்பை நிறுவிய முன்னோர்கள் வேறுபட்ட கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தனர். முன்னேறிய உயர்சாதிகளுக்கும் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கும் இடையிலான ஏற்றத் தாழ்வு மிக அதிகமாக இருந்தது. அதைக் குறைப்பதற்காகவும், பாரம்பரியமாக இருந்து வரும் சமத்துவமின்மையைப் போக்குவதற்கும் இட ஒதுக்கீடு தேவைப்பட்டது. உயர்சாதி ஏழைகள் இந்த கருத்தோட்டத்தில் சமமற்றவர்கள் அல்ல, ஏனெனில் அவர்களின் சமூக அந்தஸ்து காரணமாக, முன்னேறுவதற்கான தடைகளை கடந்து செல்ல பல நல்ல வாய்ப்புகள் சமூகத்தில் அவர்களுக்கு உள்ளன.

உயர்சாதியில் சிலர் தற்பொழுது ஏழைகளாக இருந்தாலும், அவர்களுக்கு வாய்த்திருக்கும் சமூக ரீதியான சிறப்புரிமைகளும், ஏராளமான மூலதனங்களும், பாரம்பரியமாக கற்றுத்தரப்படும் சில திறன்களும், ஏனைய SC, ST மக்களுக்கு வாய்க்கவில்லை. எனவே இந்த இரு குழுக்களுக்கும் இடையில் வாய்ப்புகளை சமமாக பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், உயர்சாதியினரின் ஏழ்மை நிரந்தரமானதல்ல. அதைக் களைவது மிக எளிது. சாதி ரீதியில் ஒடுக்கப்பட்டுள்ள மக்களின் பிற்படுத்தப்பட்ட நிலை மிக எளிதில் களையக் கூடிய ஒன்றாக இல்லை.

வறுமையும், பொருளாதார ஏற்றத்தாழ்வும் அகற்றப்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் வளர்ச்சித் திட்டங்கள், கல்வி, அடிப்படை மருத்துவ வசதிகளை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு போன்ற பிற வழிகளின் மூலம் செய்ய முடியும். ஆனால், உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீடு என்பது சமத்துவ இலட்சியத்தை நோக்கிய சாதி ரீதியான இட ஒதுக்கீட்டை கேள்விக்குள்ளாக்கிவிடும்.

அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் எதிர்கால நன்மையை நோக்கமாகக் கொண்ட தனித்துவமான ஆவணம் என்பதை மக்கள் தற்போது மறந்து விட்டனர். இந்தியச் சமூகம் சமத்துவமற்ற, மிகவும் இறுக்கமான சமூகமாக இருக்கிறது. அந்த சமூகத்தை அமைதியான முறையில், சமத்துவத்தை சாத்தியப்படுத்தும் புரட்சியை நோக்கிக் கொண்டு செல்லும் ஒரு கருவியாக அரசியலமைப்புச் சட்டம் இருக்கிறது. நன்கு திட்டமிட்டு, ஜனநாயக நிறுவனங்களைத் நிறுவுவதன் மூலம் மாபெரும் முன்னேற்றத்தை அடைய முடியும் என்று நேரு நினைத்தார். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், வைஸ்ராய் அரசாங்கத்தில் குறுகிய காலம் பணியாற்றியதன் மூலம், இந்தியாவின் மாறுபட்ட பன்முகத் தன்மை வாய்ந்த பரந்து விரிந்த சமூகத்தின் முழு கட்டமைப்பையும் அதன் தன்மையையும் குறுகிய காலத்தில், சரியான அரசு நடவடிக்கைகள் மூலம் மாற்ற முடியும் என்ற மகத்தான நம்பிக்கையை அம்பேத்கர் உருவாக்கினார்.

இந்த சமூகத்தில் வேரூன்றியுள்ள தீய சக்திகளிடமிருந்தும், வழக்கொழிந்து போன நிறுவனங்களிடமிருந்தும் தங்கள் நோக்கங்களுக்கு எதிரான எதிர்ப்புகளையும் நாசவேலைகளையும் சந்திக்க வேண்டி இருக்கும் என்று இருவரும் கருதியிருக்க வாய்ப்பில்லை. பல நூறு ஆண்டுகளாக வேரூன்றியுள்ள சாதிய ஏற்றத்தாழ்வுகளை பதினைந்தே ஆண்டுகளில் ஒழிக்கமுடியும் என்று திட்டமிட்டது பரிதாபகரமானது. மேலும் இந்த சீர்திருத்தத்திற்கு எதிராக புதிய புதிய வடிவங்களில் மீண்டும் மீண்டும் வந்த பல தடைகளை எதிர்கொள்வதற்கும் அது போதுமானதாக இல்லை. மற்றொரு சாத்தியக்கூறு என்னவென்றால், தலித் மக்களில் வருங்காலத்தில் முன்னேறக்கூடிய சாத்தியக்கூறு இருப்பவர்களுக்கு எதிராக, உயர்சாதியினர் வியூகம் வகுக்க ஏதுவாக இது அமையும்.

உண்மையில் சமத்துவம் பற்றிய விவாதங்களில் சமூக, கலாச்சார ஏற்றத்தாழ்வுகள் பொருளாதார சமத்துவமின்மையை விட மிகவும் உறுதியானதாகவும் தீயதாகவும் கருதப்படுகிறது. பாரம்பரிய சமூக அமைப்பில் உள்ள சாதிய ஏற்றத்தாழ்வுகள் வரலாற்று ரீதியானவை. அவை நீண்ட காலம் நிலைபெற்று, இறுகிப் போய்விட்டன. எனவே அவற்றை சரிசெய்வது மிகவும் கடினம். மறுபுறம் பொருளாதார சமத்துவமின்மையைப் பொருளாதார திட்டங்களால் மிக விரைவில் குறைக்க முடியும்.

இந்த தீர்ப்பானது நமது இந்திய சமூகத்தில் உள்ள இத்தகைய முரண்பட்ட கருத்துக்களின் விளைவாக வெளிவந்துள்ளது. பட்டியலின, பழங்குடியின மக்கள் அனுபவித்து வரும் துன்பங்களுக்கும் காயங்களுக்கும் உண்மையான வருத்தமும் தவறுகளைச் சரிசெய்வதற்கான வலுவான விருப்பமும் இருந்தாலும், ஆரம்பத்தில் இருந்தே இட ஒதுக்கீட்டை தவறான கொள்கையாக கருதிய உயர்சாதி வர்க்கத்தினர், இட ஒதுக்கீட்டை ஒரு சாபக்கேடாகவே கருதுகின்றனர். அவர்கள் இட ஒதுக்கீட்டை சட்டவிரோதமான செயலாக பார்க்கிறார்கள். குறிப்பாக இப்போது மேல்தட்டு வர்க்கமாக மாறியிருக்கும் மக்களின் வலுவான நம்பிக்கை இது. திறமை என்பதே அவர்களின் முழக்கம். இட ஒதுக்கீட்டை எத்தனை காலம் தான் நீட்டிப்பது என்று கேட்ட, EWS இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளித்த இரண்டு மாண்புமிகு நீதிபதிகளும், மேட்டுக்குடியினரின் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மனப்பான்மையை பிரதிபலித்தனர். மேட்டுக்குடி மக்களின் பொது மனச்சாட்சியின் நீட்சியாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் செயல்பட்டனர்.

 உச்ச நீதிமன்றம் என்பது காலத்தால் அழியாத அறிவின் ஊற்றுக்கண் என்ற பொதுவான கருத்து உண்மையில் வழக்கொழிந்து போன கட்டுக்கதை. சில தனிப்பட்ட நீதிபதிகளைத் தவிர, பல நேரங்களில் நீதிபதிகளின் தீர்ப்புகள் அவர்களின் ஆழ்மனதின் பதிந்துள்ள வர்க்க, சாதிய சார்பில் இருந்தே வருகின்றன. அமெரிக்காவில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் நீதிபதிகளின் பிற்போக்கு அல்லது முற்போக்கு கருத்திலிருந்து வருகின்றன என்பதை மக்கள் எளிதாக ஏற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். அமெரிக்க மக்களின் கருக்கலைப்பு உரிமைகள் மீதான நீதிமன்றத் தீர்ப்புகள் முற்போக்கு, பிற்போக்கு என இரண்டு எல்லைகளையும் தொட்டுள்ளன, அங்கும் இங்கும் அசைகின்றன. ஆனால் இந்தியாவில் அந்த அசைவு நின்று, சமுக மாற்றத்திற்கான, முற்போக்கான மாற்றங்கள் நிகழ்வது நிரந்தரமாக நின்றுவிடக்கூடிய சாத்தியங்கள் இருப்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்..

நெஞ்சை இறுக்கும் பல சாதிய வன்கொடுமை சம்பவங்கள் தனது கண் முன்னே நடந்தேறுவதை, உயர்சாதியினர் பொதுவாக கவனிப்பதில்லை. மகாராஷ்டிராவில் ஒரு தலித் முதுநிலை மருத்துவ மாணவி உயர் சாதியினரின் அழுத்தத்தின் காரணமாகத் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு, ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல நிகழ்வுகளும், தங்கள் கிராமங்களில் நிலவும் சாதி விதிகளுக்குக் கீழ்ப்படிய மறுப்பதற்காக தலித் ஆண்களும் பெண்களும் கொடூரமாகத் தண்டிக்கப்படுவதும், தினந்தோறும் அவமானப்படுத்தப்படுவதும் என நம் இந்தியாவின் அன்றாட செய்தியாக மட்டுமே இருக்கின்றன. சமத்துவம் என்பது நம் சமூகத்தின் மனசாட்சியில் எவ்வளவு தூரம் உண்மையில் ஊடுருவியுள்ளது என்பதை இவை வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது. சமூகத்தின் ஒடுக்கப்பட்ட, சுரண்டப்படும் மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவத்தை நீடித்த போராட்டத்தின் மூலம் மட்டுமே உறுதிப்படுத்த முடியும்.

அதுவரை இட ஒதுக்கீடு குறித்த நமது போராட்டமும் விவாதமும் முடிவு பெறாது.

ஹிரென் கோஹைன்

நன்றி: Countercureents.org இணையதளம் (2022, நவம்பர் 11 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: விஜய், அமெரிக்கா

Pin It