தமிழகத்தில் வசிக்கும் அகவை முதிர்ந்த (60 வயது முடிந்தவர்கள்) தமிழ் அறிஞர்களுக்கு, தமிழக அரசு மாதம் தோறும் ஓய்வூதியமாக ரூ. 3000/= வழங்கி வருகிறது. இத்துடன் தமிழக அரசால் இலவச பஸ் பாஸும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த பாஸில் அனைத்து கழகப் பேருந்துகளிலும் பயணிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் TNSTC மண்டல மேலாளர் கையொப்பமும் இருக்கிறது. ஆனால் SETC (அனைத்தும்) A/C (அனைத்தும்) பேருந்துகளில் நடத்துனர்களால் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

SETCதமிழறிஞர்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம் ஒவ்வொரு நாளும் ஒரு போர்க்களமே; நடத்துனர்களிடம் பஸ் பஸைக் காட்டினால் அதை வாங்கிப் பார்க்காமலே இதற்கெல்லாம் அனுமதிக்க முடியாது என்று எடுத்த எடுப்பிலேயே சொல்லி விடுகிறார்கள். அதில் அலட்சியமும் ஆணவமும் சேர்ந்தே வருகிறது.

இதில் சில நடத்துனர்கள் கட்டாயப் படுத்தி கீழே தள்ளி விடாத குறையாக இறக்கி விடுகிறார்கள். தமிழறிஞர்களுக்கு இதைவிடக் கொடுமை என்ன நடக்க வேண்டும்? அரசுக்கே அடி பணியாதவர்களா நடத்துனர்கள்? அதிகாரிகளின் கையெழுத்தையே அலட்சியப்படுத்துகிற அதிகாரத்தை, நடத்துனர்களுக்கு யார் கொடுத்தது?

ஒருவேளை நடத்துனர்களின் சம்பளத்தில் இருந்து தமிழறிஞர்களுக்கு பஸ் பாஸ் வழங்கப்படுவதாக நினைக்கிறார்களோ, என்னவோ? நடத்துனர்களுக்கு, தமிழறிஞர்களின் உரிமை பற்றி அதிகாரிகள்தான் விளக்க வேண்டும்.

தமிழறிஞர்கள் வறியவர்களாய் பார்ப்பதற்கு பிச்சை எடுப்பவர்கள் போல்தான் இருப்பார்கள். ஆனால் அவர்கள் உள் வாங்கி இருக்கும் தமிழ், அவர்களை பிச்சை எடுக்க விடாது. இதைப் பேருந்து நடத்துனர்கள் உணர வேண்டும்.

தமிழறிஞர்களுக்கு அரசு சலுகை கொடுத்தாலும் நடத்துனர்கள் அரசாணையை ஏற்றுக் கொள்ள மறுத்து வருவது, அரசையே அவமதிப்பதற்கு சமம். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்களுக்கு ஏற்பட்ட அவமானமாகக் கருத வேண்டும். நடத்துனர்களுக்கு கடும் எச்சரிக்கை விட வேண்டும். இனியும் இதை வேடிக்கை பார்க்கக் கூடாது.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழக அரசு மாதம் தோறும் ஓய்வூதியமாக வழங்கும் ரூ. 3000-த்தை ரூ. 5000-ம் ஆக உயர்த்தித் தர தமிழக அரசிடம் கடந்த 5 ஆண்டுகளாக தமிழறிஞர்கள் கோரி வருகிறார்கள். ஆனால் சம்பந்தபட்ட அதிகாரிகள் அதைப் பற்றி தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றார்களா என்பதே கேள்விக் குறியாக உள்ளது.

எனவே இது குறித்து தீர விசாரித்து, தமிழறிஞர்கள் அனைத்து பேருந்துகளிலும் பயணிக்கும் வகையில் புதிய வடிவில் பஸ்பாஸ் கிடைத்திடவும் ஓய்வூதியத்தை உயர்த்திடவும் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரும், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரும் முதல்வரின் ஆலோசனை பெற்று, விரைவில் நல்ல முடிவுகள் எடுத்து அறிவிக்க வேண்டுமென அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் விரும்புகிறார்கள்.

இது அகவை முதிர்ந்த தமிழறிஞர்களின் பேராசை அல்ல. ஆசையற்ற அவர்களின் தீராத் தாகம் ஆகும்; தமிழறிஞர்களின் தாகம் தீர்க்குமா தமிழக அரசு?

- அ. திருமலை, தமிழறிஞர், தேனி மாவட்டம்

Pin It