2013ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கூடங்குளத்திலிருந்து வெளியேறும் கழிவுகளை அணு உலை பக்கத்திலேயே சேமிக்காமல், தொலை தூரம் சேமிக்க வழி காண வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் இன்று வரை கழிவுகள் அணு உலைக்கு அருகில் தான் சேமிக்கப்படுகின்றன.

இந்திய அணுசக்தி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணண் கூடங்குளம் அணு உலையில் நிறுவப்பட்டுள்ள அனைத்துக் கருவிகளும் தரமற்றவை என்று பகிரங்கமாகக் கூறியுள்ளார்.

இந்திய கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ராம்தாஸ் தலைமையிலான குழு, ரஷ்யாவிடமிருந்து பெற்ற அனைத்துக் கருவிகளும் தரமற்றவை; அலகு நான்கு மற்றும் ஐந்தின் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. ( ஆதாரம்- தி இந்து 23/08/2016)

chennai oil spill

இந்தியாவிற்கு தமிழகம் தருவதென்ன?

தமிழகத்தில் உள்ள நெய்வேலியிலிருந்து ஒரு நாளைக்கு 11 கோடி யூனிட் மின்சாரம் கேரளத்திற்கும், கர்நாடகத்திற்கும் செல்கிறது. இதே போல் கல்பாக்கம், கூடங்குளம் அணு உலையிலிருந்தும் மின்சாரம் வெவ்வேறு மாநிலங்களுக்கு செல்கிறது.

இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்திற்கு (ஓஎன்ஜிசி), தமிழ்நாட்டிலுள்ள காவிரிப் படுகை இந்தியாவிலேயே உயர்தரமான பெட்ரோலியத்தையும், எரிவாயுவையும் வழங்குகிறது. தமிழ்நாட்டுத் தென்மாவட்டங்கள் தோரியம் மணல் வழங்குகின்றன. இதன் ஏற்றுமதி ஏராளமான அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகிறது.

இந்தியா முழுவதும் கடலுணவு ஏற்றுமதியில் கிடைக்கும் அந்நியச் செலாவணியில் மூன்றில் ஒரு பங்கு தமிழ்நாட்டிலிருந்து மட்டும் கிடைக்கிறது. உள்ளாடை ஏற்றுமதி மூலம் ஓராண்டுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணியை நம் திருப்பூர் மட்டுமே ஈட்டித் தருகிறது. பதனிட்ட தோல் ஏற்றுமதியில் இந்தியா ஈட்டும் அந்நியச் செலாவணியில் மூன்றில் ஒரு பங்கு தமிழ்நாட்டிலிருந்து கிடைக்கிறது. இந்தியா முழுவதிலுமிருந்து, வேலையற்ற பல லட்சம் பேர் தமிழகம் வந்து வேலை பெற்று வாழ்கின்றனர். (ஆதாரம்: தி இந்து 20/09/2016)

மத்திய அரசுகளின் கைம்மாறு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு, பாதுகாப்பு இல்லாத கூடங்குளம் அணுமின் நிலையம், விவசாய நிலங்களைப் பறிக்கும் கெயில் எரிவாயுத் திட்டம். சிறு வணிகர்களை துரத்தும் ஆன்லைன் வர்த்தகம், கார்ப்பரேட் பொருளாதார சீர்கேடு என பல துரோகங்களைப் பட்டியல் போடலாம்.

ஏன் எங்களுக்கு துரோகம் செய்கிறீர்கள் எனக் கேள்வி கேட்டால் இலவச இணைப்பாக தேசத்துரோகிகள் பட்டம்.

வருடந்தோறும் பட்ஜெட்டில் தமிழகத்திற்கென்று தனியாக எதையும் ஒதுக்காத பேருள்ளம் என இன்னும் அதிகமான கைம்மாறுகளை மத்திய அரசு தொடர்ச்சியாக செய்து கொண்டே தான் இருக்கிறது. இதில் தமிழக அரசின் கையாலாகத்தனமும் சேர்ந்து, இன்று தமிழகம் தனித்து விடப்பட்டதாகவே தமிழக மக்களால் உணரப்படும் சூழ்நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

டேங்கர் கப்பலும் கூடங்குளமும்

டேங்கர் கப்பல்களின் அமானுஷ்ய உராய்வின் காரணமாக ஏற்பட்ட எண்ணெய்ப் படலத்தை அகற்றவே ஒரு வாரமாக தமிழக அரசு வாளியைக் கொண்டு தள்ளாடும் நிலையில், பாதுகாப்பில்லாத கூடங்குளத்தில் விரிசல் ஏற்பட்டால் மீண்டும் 'அதிநவீனக் கருவி'யான வாளியைத் தவிர தமிழக அரசுக்கு வேறு உயர்ரக நவீன பாதுகாக்கும் கருவி இல்லை என்பது தமிழகத்தின் பரிதாப நிலை.

மக்கள் தேர்ந்தெடுத்த அரசு மக்கள் விரோதப் போக்கை கையாளும் மோசமான சூழ்நிலையில் தான் தமிழகம் இன்றுள்ளது.

- அபூ சித்திக்

Pin It