தொடர் 1 - பாட்டாளி வர்க்கத்தின் தேசியமும் சர்வதேசியமும்

தமிழகத்தில் பார்ப்பன – பனியா பாசிசத்தை வீழ்த்துவதில் இருவகை போக்குகள் உள்ளன. ஒன்று இந்தியப் புரட்சியை ஏற்றுக் கொண்டவர்களால் முன்வைக்கப்படுகிறது. மற்றொன்று தமிழ்த் தேச விடுதலைப் புரட்சியை ஏற்றுக் கொண்டவர்களால் முன்வைக்கப்படுகிறது. இருவரதும் அதிகபட்ச திட்டம், குறைந்தபட்ச திட்டம், குறிப்பான திட்டம் ஆகியன பற்றியும், இத்திட்டங்களை வகுப்பதில் பங்காற்றும் அடிப்படை, முதன்மை முரண்பாடுகளைக் கண்டறிவது பற்றியும் நாம் ஆராய்வோம். முதலில் இத்திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கான பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசிய கண்ணோட்டத்திலான தேசியத் திட்டம் பற்றி பார்ப்போம்.

dimitrovகம்யூனிஸ்ட் அகிலத்தின் ஏழாவது பேராயத்தில் (1935 ஆகஸ்டு 2) சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் இறுதி பத்தியில் டிமிட்ரோவ் கூறுகிறார். “லெனினிய தேசியக் கொள்கையைச் சரியாகவும், நடைமுறையிலும் செயல்படுத்திக் காட்டுவது தலையாய முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது பாசிஸ்டுகளின் தேசிய வெறித்தனத்தை எதிர்த்த வெற்றிகரமான போராட்டத்திற்கும், பாசிஸ்டுகளுக்கு மக்கள் மீதுள்ள தத்துவார்த்த செல்வாக்கின் முதன்மை கருவியாக உள்ள இந்த தேசிய வெறிதனத்தை எதிர்த்த வெற்றிகரமான போராட்டத்திற்கும் கேள்விக்கிடமில்லாத ஒரு அவசியமான ஆரம்ப நிபந்தனையாகும்.” (ஒற்றுமை முன்னணி பற்றி – டிமிட்ரோவ்)

டிமிட்ரோவின் இம்மேற்கோளானது சர்வதேசிய கண்ணோட்டத்தின் அடிப்படையிலான தேசியக் கொள்கை பற்றிய தெளிவான விளக்கமாகும். இதனை உறுதிப்படுத்தும் விதமாக டிமிட்ரோவின் அறிக்கையில் முன் பகுதியில் உள்ள சில மேற்கோள்களை காணலாம்.

“கம்யூனிஸ்டுகளாகிய நாம் பூர்ஷ்வா தேசியவாதத்திற்கும் (Bourgeoise Nationalism) அதன் எல்லா வடிவங்களுக்கும் கோட்பாட்டில் விட்டுக் கொடுக்காத எதிராளிகளாகும். ஆனால் அதே சமயத்தில் நாம் தேசிய மறுப்பு வாதத்தையும் (National Nihilism) ஆதரிப்பவர்களல்ல. அதை நாம் நிச்சயமாகச் செய்யவும் முடியாது. பாட்டாளி வர்க்க சர்வ தேசியத்தின் உணர்வில் தொழிலாளர்களையும் சகல உழைக்கும் மக்களையும் போதனைப்படுத்த வேண்டியது ஒவ்வொரு கம்யூனிஸ்டுக் கட்சியினுடைய அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். ஆனால் உழைக்கும் மக்களின் விரிவான மக்கள் திரள் பகுதியின் தேசிய உணர்ச்சிகளைப் பற்றி எள்ளி நகையாடலாம் என்று நினைத்தால் அவர் ஒரு உண்மையான போல்ஷ்விக் அல்ல. அவர் தேசியப் பிரச்சனையைப் பற்றிய லெனினிய கொள்கைகள் பற்றி எதையும் புரிந்து கொள்ளவில்லை.” – டிமிட்ரோவ் (ஒற்றுமை முன்னணி பற்றி – பாசிசம் ஒரு மார்க்சிய ஆய்வு – பக்கம் 98 புதுமை பதிப்பகம்)

“தோழர்களே! பட்டாளி வர்க்க சர்வதேசியம் சொல்லப் போனால் ஒவ்வொரு நாட்டிலும் 'தன்னைத்தானே இணக்கப்படுத்தி' இருந்து கொண்டு அதன் சுதேசி நாட்டில் ஆழமாக வேர் விட்டுக்கொள்ள வேண்டும். பாட்டாளி வர்க்க வர்க்கப் போராட்டத்தில் தேசிய வடிவங்கள் மற்றும் தனிப்பட்ட நாடுகளில் உள்ள தொழிலாளர் இயக்கம் ஆகியவை பாட்டாளி வர்க்க சர்வதேசியத்திற்கு முரண்பட்டதல்ல. அதற்கு நேர்மாறாக உண்மையில் இந்த வடிவங்களில் தான் பட்டாளி வர்க்க சர்வதேச நலன்கள் வெற்றிகரமாக பாதுகாக்கப்படுகிறது.” – டிமிட்ரோவ் (மேற்படி நூல் - பக்கம் 101, அடிக்கோடு நாம்)

பட்டாளி வர்க்க சர்வதேசியம் தனிப்பட்ட அந்தந்த நாடுகளில் உள்ள உழைக்கும் மக்கள் தங்கள் தேசிய சமுதாய கலாச்சார சுதந்திரத்திற்காக நடத்தும் போராட்டத்திலிருந்து முரண்பட்டதல்ல என்பதுடன் சர்வதேச பட்டாளி வர்க்கத்தின் கூட்டு ஒருமைப்பாடும் போராட்ட ஒற்றுமையும் இந்தப் போராட்டத்தின் வெற்றிக்கு அவசியமான ஆதரவைக் கொடுக்கவும் உறுதியளிக்கிறது.” – டிமிட்ரோவ் (மேற்படி நூல் - பக்கம் 102, அடிக்கோடு நாம்)

ஆக டிமிட்ரோவ் சர்வதேசக் கண்ணோட்டத்திலான பாட்டாளி வர்க்கத் தேசியத் திட்டம் மற்றும் அதன் அவசியம் பற்றி விளக்குகிறார்.

இலெனினின் சில கூற்றுகளைப் பார்க்கலாம்.

“தேசிய இனம், தேசிய அரசு என்ற பிரச்சினைகளையும் அதே வரலாற்று அடிப்படையில்தான் மார்க்சிய சோசலிசம் வைக்கிறது. சென்ற காலத்தை விளக்குவது என்ற அர்த்தத்தில் மட்டுமல்ல, எதிர்காலத்தை அச்சமின்றி முன்னறிந்து கூறி, அதனை சாதிப்பதற்கு துணிவான நடைமுறைப் பணிகளை மேற்கொள்வது என்ற அர்த்தத்திலும் நாம், தேசங்கள் என்பவை சமுதாய வளர்ச்சியின் முதலாளித்துவ சகாப்தத்தில் தவிர்க்க முடியாதபடி உண்டாகிற ஒரு படைப்பு, ஒரு வடிவம் ஆகும். தொழிலாளி வர்க்கம் 'தன்னையும் தேசத்துக்குள் ஒரு பகுதியாக்கிக் கொள்ளாமல்' தானும் தேசியத் தன்மை பெறாமல் (இந்த சொல்லின் முதலாளித்துவ அர்த்தத்தில் அல்ல) அது பலம் பெற முடிவதில்லை. பக்குவம் பெற முடிவதில்லை. உருவாக முடிவதில்லை." - லெனின் (காரல்மார்க்சும் அவரது போதனையும் - பக்கம் 52, அடிக்கோடு நாம்)

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும் அனைத்து நாட்டுத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்! என்றுதான் சொல்கிறது. “அனைத்து நாடுகளின் தொழிலாளர்களே! என்பதைத்தான் எளிமைப்படுத்தி உலகத் தொழிலாளர்களே! என விளிக்கிறோம் என்று விளக்கம் தரலாம். ஆனால் தொழிலாளர்களுக்கு மொழியும் தேசமும் உண்டு என்பதை நிறுவ வேண்டிய தேவை இருக்கும்போது மூலவர்களின் சொற்களை அப்படியே எடுத்துக்காட்டுவது தான் சரி! தொழிலாளர்கள் பல்வேறு நாடுகளில் இருப்பதையும், அந்தந்த நாட்டில் அவர்கள் தலைமை ஆற்றலாக உயர வேண்டிய தேவையையும் பொதுமை அறிக்கையே தெளிவாக எடுத்துக் காட்டுகிறது என்பதால் இதில் ஐயத்துக்கிடமளிக்காமல் இருப்பதே சரியானது. எனவே, உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை கூறுவதாக எழுதுவதும் பேசுவதும் இனி தவறாகும்” என்கிறார் தோழர் தியாகு. (தமிழ்த் தேசமும் மார்க்சியமும் - பக்கம் 16-17)

“பாட்டாளி வர்க்கம் ஒடுக்கப்படும் அனைத்து வர்க்கங்களையும் தனது தலைமையில் அணி திரட்டவும், அரசியல் மேலாண்மை பெறவும், அரசியல் அதிகாரத்தை கைப்பற்றவும், தேசத்தின் தலைமை ஆற்றலாய் வளர்ச்சி பெறவும் முதலாளியத்தை அன்றைய நிலையில் தேசிய எல்லைக்குள்தான் கணக்கு தீர்த்ததாக வேண்டும். பொருள் உற்பத்தி முறையில் முதலாளியம் சர்தேசத் தன்மை பெற்று இருந்தாலும் அதன் அரசு அதிகாரம் தேசிய எல்லையைக் கொண்டதாக இருப்பதால் பாட்டாளி வர்க்கம் அரசு அதிகாரத்தை கைப்பற்றும் அளவுக்கு தேசியத்தன்மை கொண்டதாகவே இருக்கிறது. முதலாளிய தேசியம் தனது பொருளுற்பத்தி மற்றும் அரசியல் நலனுக்காக இனவாதமாக வெளிப்படுகிறது, செயல்படுகிறது. பாட்டாளி வர்க்கத்தின் தேசியம் முதலாளியத்திற்கு எதிராக, அரசியல் மேலாண்மை பெறுவதற்காக – அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக முதலாளிய இனவாதத்திற்கு எதிராக சர்வதேசியத் தன்மை கொண்ட தேசியமாக இருக்கிறது. மிக முக்கியமாக நாம் இங்கு கவனிக்க வேண்டிய விடயம் பாட்டாளி வர்க்கம் அரசியல் மேலாண்மை பெறுவதாகும். தேசம் முழுமைக்கும் தலைமை அளிப்பது என்பது பாட்டாளி வர்க்கம் தேசியத் தன்மை பெறாமல் சாத்தியமும் இல்லை. தேசியத் தன்மை பெறாமல் அரசியல் மேலாண்மை பெறுவதும் சாத்தியம் இல்லை”. என்கிறார் தோழர் திருமொழி (தமிழ்த் தேசமும் மார்க்சியமும் - பக்கம் 26)

“நம்முடைய வரலாற்று மரபைக் கற்று, அதனை ஆய்வுக்குட்படுத்தி தொகுத்தெடுப்பதற்கு மார்க்சிய அணுகுமுறையைக் கையாள வேண்டும். அதுவும் நம்முடைய கடமைகளில் ஒன்று. நம்முடைய (சீன நாட்டு) தேசிய வரலாறு பல்லாயிரம் ஆண்டு நீண்ட வரலாற்றைக் கொண்டது. அதற்கேயுரிய தனி இயல்புகள் உள்ளன. அது கொண்டுள்ள அளவிடற்குரிய செல்வங்களின் வரலாற்று அறிவைப் பொறுத்தவரை நாம் பள்ளிச் சிறுவர்கள். தற்காலச் சீனா கடந்த காலச் சீனாவிலிருந்தே உதித்தெழுந்தது. வரலாற்றை மார்க்சிய கண்ணோட்டத்தில் அணுகுபவர்களாகிய நாம் நம்முடைய வரலாற்றை வெட்டியெறிந்து விடக்கூடாது. கன்பியூசிசு தொட்டு சன்யாட்சன் வரையிலான நம்முடைய வரலாற்றை நாம் தொகுத்துப் பார்க்க வேண்டும். அவ்வரலாற்றின் சிறப்பான மரபுகளை நமதாக்கிக் கொள்ள வேண்டும். இன்றைய மாபெரும் இயக்கத்தை வழிநடத்துவதற்கு அது இன்றியமையாதது. மார்க்சிஸ்டுகளாகிய, கம்யூனிஸ்டுகளாகிய நாம் சர்வதேசக் கண்ணோட்டம் உடையவர்கள், ஆனால் நம்முடைய நாட்டிற்கேயுரிய தனி இயல்புகளுடன் சர்வதேசியம் ஒன்றிணைக்கப்படவேண்டும். அச்சர்வதேசியம் ஒரு தெளிவான தேசிய வடிவத்தைப் பெற வேண்டும். அப்போது மட்டுமே மார்க்சியத்தை நாம் நடைமுறைப்படுத்த முடியும். எல்லா நாடுகளிலும் இருக்கின்ற சரியான புரட்சி நடைமுறையுடன் ஒன்றுபடுவதிலேயே மார்க்சிய – லெனினியத்தின் மாபெரும் வலிமை இருக்கிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கூட அது சீனாவிற்கேயுரிய தனிச் சூழல்களில் மார்க்சிய – லெனினியக் கோட்பாட்டை செயல்படுத்த கற்றுக் கொள்வதைப் பொறுத்ததே. சதையோடு சதையாய், இரத்தத்தோடு இரத்தமாய் இரண்டறக் கலந்த நிலையில் மாபெரும் சீன மக்களின் ஒரு பகுதியினராகவே சீனக் கம்யூனிஸ்டுகள் இருக்கின்றனர். சீனாவிற்கேயுரிய இயல்புகளிலிருந்து பிரிந்து நின்று மார்க்சியம் பேசுவது வெறும் அருவமான மார்க்சியமே – வெற்று மார்க்சியமே. மார்க்சியத்திற்குரிய ஒவ்வொரு வெளிப்பாடும் சங்தேகத்திற்கிடமற்ற வகையில் சீனத் தன்மையைப் பெற வேண்டும். அவ்வகையில் சரியான முறையில் மார்க்சியத்தைச் செயல்படுத்துவதைப் பற்றி கற்றுத் தீர்வு காண்பது சீனத்திற்கேயுரிய தனித்தன்மைகளின் அடிப்படையில் மார்க்சியத்தை செயல்படுத்துவதாகும். அதுவே கட்சி முழுவதற்கும் உடனடிச் சிக்கலாக இருக்கிறது. பிற நாடுகளின் போலிமாதிரிகளைப் பின்பற்றுவது ஒழிக்கப்படவேண்டும். வெறுமையும் அருவமும் தோய்ந்த மொட்டுகளில் பாடுவது குறைய வேண்டும். வறட்டுத்தனத்தைக் குழிதோண்டிப் புதைக்க வேண்டும். சீன மக்கள் விரும்புகின்ற புத்தம் புதிய, உயிரோட்டம் கொண்ட சீன நடையும் உணர்வும் அங்கே இடம் பெற வேண்டும். சர்வதேசிய உள்ளடக்கத்தை தேசிய வடிவத்திலிருந்து பிரித்துப் பார்ப்பது சர்வதேசியம் பற்றி அரிச்சுவடி கூட தெரியாதவர்களின் செயலாகும். மாறாக சர்வதேசியத்தையும் அதனுடைய தேசிய வடிவத்தையும் நாம் நெருக்கமாக இணைக்க வேண்டும். இதில் கடுமையான தவறுகளை நம் அணிகளிடையே பார்க்கிறோம். உணர்வுப்பூர்வமாக அத்தவறுகளை நாம் களைய வேண்டும்” தோழர் மாவோ (தேர்வு நூல் 2, பக்கம் 209-210) (அடிக்கோடு நாம்)

மேலே கண்ட மேற்கோள்கள் காட்டுவது பாட்டாளி வர்க்கத்திற்கு பிழையின்றி சர்வதேசக் கண்ணோட்டத்திலான தேசியக் கொள்கை வேண்டும் என்பதே. ஆக, தமிழகப் பாட்டாளி வர்க்கம் தமிழ்ச் தேசியத்தில் ஊன்றி நின்று, தமிழ்த் தேசிய உணர்வு பெற்று (முதலாளித்துவ அர்த்தத்தில் அல்ல) தனது சர்வதேசியக் கொள்கையை வகுக்க வேண்டும். பல்தேசிய இந்திய அரசு எல்லைக்குள் இருக்கும் தமிழக பாட்டாளி வர்க்கம் தனது தேசியக் கொள்கையை எப்படி வகுத்துக் கொள்வது? தமிழ்த் தேசிய அடிப்படையிலா? இந்திய பல்தேசிய அடிப்படையிலா? இந்திய அரசின் எல்லைக்குள் ஒரு கட்சியா? தமிழகத்திற்கென்று ஒரு கட்சியா? மொழி வழி தேசிய எல்லைக்குள் கட்சிகளா? என்பதை இந்தியாவில் சனநாயகப் புரட்சியின் உள்ளடக்கம் பல்வேறு மொழிவழி தேசிய வடிவங்களில் நடைபெறும் என்ற புரிதலில் வரலாற்று உண்மைகளை ஆய்வு செய்ய வேண்டும்.

பல்தேசிய அரசு சமூகத்தில் பாட்டாளி வர்க்கக் கட்சி கட்டுவதை ஆய்வு செய்த தோழர் கார்முகில் “பாட்டாளி வர்க்க கட்சி ஒவ்வொன்றும் ஒரு வேலைத்திட்டத்தைக் கொண்டதாகும். ஒன்றுக்கு மேற்பட்ட வேலைத்திட்டங்களுடன் ஒரு கட்சி இயங்க முடியாது. அவ்வாறு நோக்கின் ஒரு பல்தேசிய அரசு சமூகத்தில் ஒடுக்கம் தேசிய இனம் மட்டுமே சலுகையான சுயநிர்ணய உரிமை பெற்றதாக இருக்கிறது. மற்ற ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு அவ்வுரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. ஒடுக்கும் தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கம் தனது சொந்த ஆளும் வர்க்கங்களை எதிர்த்த வர்க்கப் போராட்டத்தை எதிர்கொள்ளும் அதேவேளையில் ஒடுக்கப்படும் தேசிய இனத்தைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கம் உடனடியாக தேசிய விடுதலை மூலம் தேசிய அரசு அமைத்தல் என்ற கடமையினை எதிர்கொள்கிறது. எனவே இரு தேசிய இனப் பாட்டாளிகளுக்கும் வேலைத்திட்டம் ஒன்றாக இல்லை. இந்நிலையில் அவை எதிர்கொள்ளும் வேறுபட்ட கடமைகளின் காரணமாக அவை தனித்தனிக் கட்சிகளாக அமைவதே தர்க்கப் பொருத்தமாகும்.

ஆனால் ஒடுக்கும் தேசிய இனத்தில் பாட்டாளி வர்க்கம் பலமாகவும், புரட்சியை முன்னெடுத்துச் செல்லும் நிலையிலும் இருக்குமாயின (இரசியா, சீனா போல) இரு தேசிய இனப் பாட்டாளிகளும் ஒரே வேலை திட்டத்தின் கீழ் ஒரே கட்சியில் இணைவதும் சாத்தியமே. அதாவது ஒடுக்கும் தேசிய இனப் பாட்டாளி வர்க்கம் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து ஆதரித்து அதற்காக போராடுமாயின் ஒடுக்கப்படும் தேசிய இன பாட்டாளி வர்க்கம் தேசிய விடுதலை என்ற கோரிக்கையை தானும் சுயநிர்ணய உரிமை என்பதாக மாற்றிக் கொண்டு அதனுடன் ஒரே கட்சியில் ஒன்றிணைய முடியும்: இது சாத்தியம் என்பது மட்டும் அல்ல, இத்தகைய நிலைமையில் இதுவே பாட்டாளி வர்க்க சர்வதேசியமும் ஆகும். காரணம் ஒடுக்கும் தேசிய இனப் பாட்டாளி வர்க்கத்தின் வெற்றி பிற ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் விடுதலைக்கும் வழிவகுக்கக் கூடியதாகும்.

ஆனால் ஒடுக்கும் தேசிய இனம் என்று ஒன்று இல்லாத நிலையில் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் அதன் பாட்டாளி வர்க்க இயக்கம் முன்வைக்கும் சுயநிர்யணய உரிமையை ஏற்றுக் கொண்டு ஒன்றிணைவதற்கு இடமில்லை. பிறவற்றின் விடுதலைக்கும் வழிவகுக்காது என்பதால் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் அனைத்தும் தேசிய விடுதலை என்ற தமது தேசியத் திட்டத்தை சுயநிர்ணய உரிமை என மாற்றிக் கொண்டு ஒன்றிணைவதற்கான வாய்ப்பு இல்லை. இதனால் இத்தகைய நாடுகளில் ஒவ்வொரு தேசிய இனப்பாட்டாளி வர்க்கக் கட்சியும்; தமது சொந்த தேசிய விடுதலைத் திட்டத்துடன் தனித்தனிக் கட்சியாக அமைவதன்றி வேறு வழி எதுவும் இல்லை.

எனவே ஒரு பல்தேசிய அரசு சமூகத்தில் பாட்டாளி வர்க்கக் கட்சி பல்தேசிய அரசு எல்லையின் அடிப்படையில் அமைவதா தேசிய இன பிராந்திய அடிப்படையில் அமைவதா என்பது முற்றிலும் ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தின் பலம் மற்றும் நடத்தையைச் சார்ந்தே இருக்கிறது. ஒடுக்கும் தேசிய இனம் என்று ஒன்று இல்லாத நிலையில் பாட்டாளி வர்க்கக் கட்சி தேசிய எல்லை அடிப்படையில் அமைவது என்பதில் விவாதத்திற்கு இடமில்லை”. (பாட்டாளி வர்க்கத்தின் தேசியக் கொள்கை – கார்முகில், பக்கம் 35,36)

“உலகம் முழுவதிலும் தேசிய அரசு என்பது பொது விதியாக இருக்கிறது. அதே நேரத்தில் பல்தேசிய இன அரசு என்பது விதிவிலக்காக இருக்கிறது”. - இலெனின் (தொகுதி 41 பக்கம் 314)

“மிகவும் அதிக மக்கள் நெருக்கமாக வாழும் கண்டமாகிய ஆசியாவின் பெரும் பகுதி 'பெரும் வல்லரசுகளின்' காலனி நாடுகளாகவோ அல்லது தேசிய நோக்கில் படுமோசமாகச் சார்ந்திருக்கின்ற ஒடுக்கப்படுகின்ற அரசுகளாகவே கொண்டதாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான். ஆனால் ஆசியா முழுவதிலும் சப்பானில் மட்டும் அதாவது ஒரு சுதந்திரமான தேசிய அரசில் மட்டுமே பண்ட உற்பத்தியின் மிகவும் முழுமையான வளர்ச்சிக்கும்; மிகச் சுதந்திரமான, விரிவான, வேகமான முதலாளித்துவ வளர்ச்சிக்கும் தேவையான நிலைமைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த சந்தேகமற்ற உண்மையை வேறு எவ்விதத்திலும் அசைக்க முடியுமா என்ன? சப்பான் ஒரு பூர்சுவா அரசு. அந்தக் காரணத்தினால் அது மற்ற தேசிய இனங்களை ஒடுக்கி, காலனிகளை அடிமைப்படுத்தத் தொடங்கிவிட்டது. முதலாளித்துவம் குலைந்து வீழ்வதற்கு முன்னால் சுயேட்சையான தேசிய அரசுகள் என்ற அமைப்பு முறையை ஐரோப்பாவைப் போல் உருவாக்குவதற்கு ஆசியாவிற்கு காலமிருக்குமா என்பதை நாம் சொல்வதற்கில்லை: ஆனால் முதலாளித்துவமானது ஆசியாவைத் தட்டி எழுப்பிவிட்டதன் விளைவாக அக்கண்டத்திலும் கூட எல்லா இடங்களிலும் தேசிய இயக்கங்களை தோற்றுவித்திருக்கிறது என்பதும், இவ்வியங்களின் போக்கு ஆசியாவில் தேசிய அரசுகள் உருவாவதற்கு வழி செய்யும் பாதையை நோக்கிச் செல்லும் என்பதும், இத்தகைய அரசுகள்தான் முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கேற்ற மிகச் சிறந்த நிலைமைகளை உண்டாக்கும் என்பதும் மறுக்க முடியாத உண்மைகள்." (தேசியக் கொள்கையும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும்: சில பிரச்சினைகள் – பக்கம் 77, 78, தமிழ் பதிப்பு மாஸ்கோ 1969)

தேசிய அரசு முதலாளித்துவ கால கட்டத்தின் விதியும், பொது வழக்கும் ஆகும் என்பதை லெனின் வழிகாட்டுதல்களிலிருந்து புரிந்துகொண்ட தமிழகப் பாட்டாளி வர்க்கம், பல்தேசிய இந்தியாவில் தேசிய அரசுகள் தத்தமது மொழிவழி தேசிய விடுதலைப் புரட்சிகளை முன்னெடுப்பதன் மூலம் அடைய முடியுமா? அல்லது பல்தேசிய ஜனநாயக புரட்சியை முன்னெடுப்பதன் மூலம் அடைய முடியுமா? என்பதை தோழர்கள் அனைவரும் ஆழ்ந்து பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அயர்லாந்து, நார்வே, போலாந்து, செக் மக்கள், தென் ஸ்லாவியர்கள் மற்றும் இரசியா, வியட்நாம், சீனா ஆகிய நாடுகளின் படிப்பினைகளிலிருந்து (தமிழ்த்தேசமும் மார்க்சியமும் நூலில் விரிவாக இப்படிப்பினைகள் கொடுக்கப்பட்டுள்ளன) தேசிய இனச் சிக்கலில் ஒரு தேசிய இனம் பிரிந்து போவதை பாட்டாளி வர்க்கம் மூன்று நிலைமைகளில் மட்டுமே எதிர்க்க வேண்டும்.

1. பல்தேசிய நாட்டில் ஒடுக்கும் தேசிய இனத்தில் பலமான தொழிலாளர் வர்க்கம் இருந்து, அது ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் தன் தீர்வு உரிமையை ஏற்று தேசிய ஒடுக்குமுறைக்கு முற்றுபுள்ளி வைக்கும் நிலையில்.

2. ஒரு தேசிய இனத்தின் பிரிவினை உலகப் போரையோ அல்லது பெரும் அழிவுப் போரையோ தோற்றுவிக்கும் நிலையில்.

3. ஒரு தேசிய இனத்தின் பிரிவினை பிற்போக்கு வல்லரசுக்கு உதவும் நிலையில்.

மற்ற எல்லா நிலைமைகளிலும் பிரிவினையை பாட்டாளி வர்க்கம் ஆதரிக்கவோ அல்லது தலைமை ஏற்கவோ வேண்டும்.

இரசியாவில் ஒடுக்கும் பெரும் தேசிய இனமான இரசியா தேசிய இனமும் அதன் தலைமையிலான பாட்டாளிவர்க்க இயக்கமும் பிற ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் தன் தீர்வு உரிமையை ஏற்றுப் புரட்சியை ஒன்றுபட்டு நடத்தியது போல, இந்தியாவின் முழுமையிலும் ஒரே கட்சியின் தலைமையில் புரட்சி நடத்த இயலாது. இங்கு ஒடுக்கும் தேசிய இனமோ, அதில் பலமான பாட்டாளி வர்க்க இயக்கமோ அல்லது முதலாளிய ஜனநாயக இயக்கமோ ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் தன் தீர்வு உரிமையை ஏற்று புரட்சியை முன்னெடுக்கும் நிலையில் இல்லை. இந்நிலையில் தமிழ்த் தேசிய இனம் தனது தேசிய அரசுரிமைக்கான போராட்டத்தினூடாகவே சனநாயகப் புரட்சியை ஈட்ட முடியும்.

ஜனநாயகப் புரட்சியும் தேச உருவாக்கமும் பிரிக்க முடியாத ஒரே நிகழ்வு என்பதையும், இது தேசிய இன அரசு (அதாவது தேசிய ஜனநாயக குடியரசு அல்லது மக்கள் ஜனநாயகக் குடியரசு) அமைவதுடன் தேசிய இன இயக்கத்தின் மூலம் நிறைவேற்றப்படுகிறது என்பதையும், ஐரோப்பிய, ரஷ்ய, சீன, வியட்நாம் ஆகிய புரட்சிகளின் படிப்பினைகளில் இருந்தும், லெனின், ஸ்டாலின் ஆகியோரின் கூற்றுகளிலிருந்தும் உறுதிபட முன்வைக்கிறோம்.

“நிலபிரபுத்துவத்தை ஒழித்து முதலாளித்துவம் வளர்ந்து வந்த அதே நேரத்தில் தான் மக்கள் தேசங்களாக இணைந்து அமையப் பெற்றார்கள். உதாரணமாக இதற்கு மேற்கு ஐரோப்பாவை சொல்லலாம். நிலபிரபுத்துவத்தில் ஏற்பட்ட பிளவை வெற்றிக் கொண்டு முதலாளித்துவம் வெற்றிகரமாக முன்னேறியபோது தான் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்றவை தேசங்களாக உருவாயின.

அதே நேரத்தில், மேலே சொல்லப்பட்ட தேசங்கள் உருவான நிகழ்ச்சிகள் அவைகள் எவ்வாறு சுதந்திர தேசிய அரசுகளாக மாற்றப்பட்டன என்பதையும் குறிப்பாக சொல்கிறது. பிரிட்டன் பிரெஞ்சு இதர தேசங்கள் அதே நேரத்தில் அரசுகளாகவும் இருந்தன. (மார்க்சியமும் தேசிய இனப்பிரச்சனையும் - ஸ்டாலின் சென்னை புக் ஹவுஸ் 1981 தமிழ்ப் பதிப்பு பக்கம்-19)

'ரஷ்யாவில் தேசிய இயக்கங்கள் தோன்றியிருப்பது இதுதான் முதல் தடவை அல்ல, அவை அந்த நாட்டுக்கு மட்டுமே பிரத்தியேகமானதும் அல்ல. உலகம் முழுவதும் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து முதலாளித்துவம் அடையும் இறுதி வெற்றியின் காலப்பகுதி தேசிய இயக்கங்களுடன் இணைந்துள்ளது. பரிவர்த்தனைப் பண்ட உற்பத்தி முழு வெற்றியடைவதற்கு, முதலாளித்துவ வர்க்கம் உள்நாட்டுச் சந்தையைக் கைப்பற்ற வேண்டும். ஒரே மொழி பேசும் மக்களைக் கொண்ட அரசியல் வழியில் ஒற்றுமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் அதற்கு வேண்டும். அந்த மொழியின் வளர்ச்சிக்கும் அதன் இலக்கியம் உருப்பெற்று விளங்கவும் குறுக்கே நிற்கும் தடைகள்யாவும் அகற்றப்பட வேண்டும். இங்கு தான் தேசிய இயக்கங்களின் பொருளாதார அடித்தளம் இருக்கிறது. மனித இடைத் தொடர்புகளுக்கு மிக முக்கியமான சாதனம் மொழியாகும். நவீன முதலாளித்துவத்துக்குச் சரியான வீதத்தில் மெய்யாகவே தடையற்ற விரிவான வாணிகத்துக்கும், பல்வேறு வர்க்கங்களைச் சார்ந்த மக்கள் சுதந்திரமான விரிவான பிரிவுகளாக அமைவதற்கும், இறுதியாக மார்க்கெட்டுடன் ஒவ்வொரு பெரிய சிறிய உரிமையாளரும், விற்போரும் வாங்குவோரும் பரஸ்பரம் நெருக்கமான தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும் முக்கியமான நிபந்தனை மொழியின் ஒற்றுமையும் தங்குதடையற்ற வளர்ச்சியும் தான். 

எனவே, ஒவ்வொரு தேசிய இயக்கத்தில் போக்கும் தேசிய அரசுகளை நிறுவும் திசையிலானதாரும். அவ்வரசுகளின் கீழ் நவீன முதலாளித்துவத்தின் இந்தத் தேவைகள் மிகவும் நன்றாக நிறைவு செய்யப்படும். மிகவும் தீர்க்கமான பொருளாதாரக் காரணிகள் இந்த லட்சியத்தை நோக்கி இட்டுச் செல்கின்றன. எனவே, மேற்கு ஐரோப்பா முழுவதற்கும் ஏன் நாகரிக உலகம் முழுமைக்குமே முதலாளித்துவ காலப் பகுதியில் தேசிய அரசு மாதிரிபடிவமானது சகஜமானது. (தேசங்களின் சுயநிர்ணய உரிமை கட்டுரை-லெனின் பக்கம் 291-292 தேர்வு நூல்கள் 12 தொகுதிகளில் தொகுதி-3) 

ஆக ஜனநாயகப் புரட்சியானது தமிழ்த் தேச உருவாக்கத்துடனும், தமிழ்த் தேசக் குடியரசு அமைவதுடனும், தமிழ்த் தேசிய இயக்கத்துடனும் இணைந்துள்ளது என உறுதியான முடிவுக்கு நம்மை இட்டுச் செல்கிறது.

டிமிட்ரோவ் ஒடுக்கும், ஒடுக்கப்படும் தேசிய இனங்களிலுள்ள கம்யூனிஸ்டுகளின் கடமையாகக் கூறுவது: ‘ஒரு ஒடுக்கப்பட்ட சார்பு நாட்டிலுள்ள கம்யூனிஸ்டுகள் அவர்களுடைய நாட்டில் நடைமுறையில் மக்கள் திரள் இயக்கத்தில் தங்களுடைய நாட்டை அன்னிய நுகத்தடியிலிருந்து விடுவிப்பதற்காகவே உண்மையாக போராடுகிறார்கள் என்பதைக் காட்டாவிட்டால், அவர்களுடைய சொந்த நாட்டு மக்கனிடையே பாசிஸ்டுகளால் ஊட்;டப்பட்ட தேசிய வெறித்தனத்தை வெற்றிகரமாக எதிர்த்துப் போராட முடியாது. மறுபக்கத்தில் ஒடுக்கும் நாட்டில் உள்ள கம்யூனிஸ்டுகள் அவர்கள் நாட்டிலுள்ள சொந்தநாட்டு பூர்ஷ்வா வர்க்கத்தின் ஒடுக்குமுறைக் கொள்கைளை எதிர்த்து உறுதியாக நின்று போராடாமல். அந்த நாட்டு பூர்ஷ்வா வர்க்கத்தால் அடிமைப் படுத்தப்பட்டுள்ள நாடுகளின் பரிபூரண சுயநிர்ணய உரிமைக்காக உறுதியாக நின்று போராடாமல் சர்வதேசிய உணர்வின் அடிப்படையில் போதனையளிப்பதற்கு அவசியமானவற்றைச் செய்ய முடியாது. இதை அவர்கள் செய்யாமல் ஒடுக்கப்பட்ட தேசத்திலுள்ள உழைக்கும் மக்கள் அவர்களுடைய தேசிய தப்பெண்ணங்களிலிருந்து சமாளித்து வரச் செய்வது சுலபமல்ல” டிமிட்ரோ (ஒற்றுமை முன்னணி பற்றி)

திரும்ப, திரும்ப தேசிய இனச் சிக்கலுக்கு முதன்மையான அழுத்தம் கொடுத்து வாதிடுவதன் காரணம், இந்திய புரட்சியாளர்கள் வல்லாதிக்கத்தால் கட்டப்பட்ட இந்திய அரசின் எல்லைக்குள் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் பலவந்தமாக இருப்பதையே பாட்டாளி வர்க்க ஒற்றுமை என்பதாகக் கருதிக்கொள்கிறார்கள். தேசிய இனங்கள் பிரிந்து போவதை பிரிவினைவாதம், இனவாதம் என்கின்றனர். இவர்களது வாதம் மார்க்சியமோ, பாட்டாளிவர்க்க சர்வதேசியமோ அன்று.

இதைத்தான் தோழர் தியாகு “தேசியத் தன்தீர்வுரிமையைச் சொல்லளவில் அங்கீகரிப்பது ஒரு சிலருக்கு எளிதாய் உள்ளது. ஆனால் இந்த உரிமையைச் செயலாக்கும் வகையில் தமிழ்த் தேசிய விடுதலைக்காகப் போராடுவது என்றால் இவர்கள் ஐயோ என்று அலறுகின்றனர்” என்கிறார். (தமிழ்த் தேசமும் மார்க்கசியமும் - பக்கம் 18). இங்கு இவர்கள் என்பது இந்தியப் புரட்சியாளர்களையே.

ஆக, டிமிட்ரோ, இலெனின், மாவோ ஆகியோரின் மேற்கொள்களும், தோழர்கள் தியாகு, கார்முகில், திருமொழி ஆகியோரின் விளக்கங்களும் தமிழ்த் தேசமும் மார்க்சியமும் நூலும் காட்டுவது: பாட்டாளிவர்க்க இயக்கமானது சர்வதேசிய கண்ணோட்டத்தில் சொந்த தேசியத்திற்காக போராடுவதும், பாட்டாளிவர்க்க தேசியத்திலிருந்து (தமிழ்த் தேசியத்திலிருந்து) சர்வதேசியத்திற்காகப் போராடுவதும் பிரிக்க முடியாத கடமையாகும். இவையே சர்வதேசியத்திற்கும் தேசியத்திற்கும் ஆன சரியான இயங்கியல் உறவாகும். இதனை மார்க்சிய தமிழ்த் தேசியம் எனலாம்.

இந்தியா போன்ற பல்தேசிய அரசு சமூகத்தில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் பாட்டாளிவர்க்க இயக்கமானது தனது சொந்த தேசிய வேலைத் திட்டத்தின் மூலமே, தமது தேசத்தின் முதலாளிய இனவாதத்திற்கு எதிராகவும், மறுபுறம் இந்தியா மற்றும் பிற வல்லாதிக்கங்களின் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் பெருவாரியான மக்களைத் திரட்டி விட்டுக்கொடுக்காமல் போராட முடியும். இதனைத்தான் லெனின் “தொழிலாளி வர்க்கம் தன்னையும் தேசத்துக்குள் ஒரு பகுதியாக்கிக் கொள்ளாமல் தானும் தேசியத்தன்மை பெறாமல் (இந்த சொல்லின் முதலாளித்துவ அர்த்தத்தில் அல்ல) அது பலம் பெற முடியவில்லை. பக்குவம் பெற முடியவில்லை. உருவாக்க முடியவில்லை” என்றார். (காரல் மார்க்சும் அவரது போதனையும் - பக்கம் 52, தமிழ்ப் பதிப்பு)

மேலும் பாட்டாளி வர்க்கத்தின் தேசிய வேலைத் திட்டம் மட்டுமே தமது சொந்த தேசிய முதலாளிய வர்க்கம் பிற உலக பிற்போக்கு வர்க்கங்களுடன் கூட்டமைத்துக்கொண்டு இந்தியா மற்றும் பிற பன்னட்டு வல்லாதிக்கங்களுடனும் வர்க்க சமரச கொள்ளையை கடை பிடிக்கும்போதும், தன் இனத்தின் மீதான ஒடுக்குமுறையைக் காட்டி மக்களை தன் பின் திரட்டி இந்தியா மற்றும் உலக வல்லாதிக்கங்களுடன் பேரம் பேசும்போதும் அம்பலப்படுத்தி முறியடிக்க முடியும். மேலும் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்திலுள்ள பாட்டாளி வர்க்கம் தனது இனத்தின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடாவிட்டால் அது குட்டி முதலாளிய தீவிரவாதத்திற்கேர் சீர்திருத்தவாதத்திற்கோ இட்டுச் செல்வதை தடுக்க இயலாது. இவைகளுக்கு முடிவுகட்ட வேண்டுமானால் பாட்டாளி வர்க்கத்திற்கு சர்வ தேசிய கண்ணோட்டத்திலான (தமிழ்த்) தேசிய வேலைத்திட்டம் வேண்டும். 'தேசிய ஒடுக்குமுறை இருக்கும் ஒரு நிலையில் தேசிய விடுதலைப் பணியைப் புறக்கணிப்பது சோசலிஸ்டுகளின் நோக்கு நிலையின்படி சந்தேகத்திற்கு இடமற்ற தவறாகும்" என்கிறார் இலெனின். (தேசியக் கொள்கையும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும்: சில பிரச்சினைகள் - பக்கம் 129 மாஸ்கோ வெளியீடு 1969) இவைகளைத்தான் 'பாசிசத்தை வீழ்த்துவதில் லெனினிய தேசியக் கொள்கையை சரியாகவும். நடைமுறையிலும் செயல்படுத்திக் காட்டுவது தலையாய முக்கியத்துவம் வாய்ந்ததாகும்" என தோழர் டிமிட்ரோவ் தமது 7வது உலக பேராய அறிக்கையில் குறிப்பிடுகிறார்.

அடுத்த பகுதி: தமிழ்த் தேச மக்களின் முன்னணி மீதான விமர்சனக் குறிப்புகள்

- ச.பாரி, தமிழ்த் தேச இறையாண்மை

Pin It