வால்பாறை மனிதர்கள் சக மனிதர்கள் மீது மட்டுமல்ல... வாயில்லா ஜீவன்கள் மீதும் அன்பு செலுத்துவதில்... ஈடு இணையற்றவர்கள். அது ஒரு வாழ்வியல் முறையாகவே மாறி இருந்ததை தூரத்து மாட்டு சித்திரத்தின் வாயசைவில் நினைவு கூர்கிறேன்.
லைனுக்கு ஒரு வீட்டிலாவது மாடு வளர்த்தல் இருந்த கால கட்டம் அது.
நாங்கள் கூட மாடு வைத்திருந்தோம். மாட்டுக்கு புல் கொண்டு வருவதே ஒரு வேலையாக இருக்கும். வேலை முடிந்து திரும்பும் மாமாவோ... அத்தையோ... தாத்தாவோ... புற்கள் பிடுங்கி கட்டித் தூக்கி வருவது காலம் வரைந்த ஓவியமாய் இன்றும் பத்தாம் நம்பர் சாலையில் இருந்து மேலெழுந்து கொண்டே இருக்கிறது.
மாடுகள் மேய்வதற்கென்றே எஸ்டேட்டில் இடம் கூட இருக்கும். மாடு மேய்த்தல் ஒரு கலை. வரம் பெற்ற சிலருக்கே அது வாய்க்கும். தவம் செய்வது போல மாடுகளோடு வரும் அவர்களைக் கடந்திருக்கிறேன்.
பால் பாக்கெட் எல்லாம் இப்போது வந்தது தானே. அப்போது மாடு உள்ளோரிடம் பால் வாங்குவது தான் இயல்பாய் இருந்தது. மாட்டுக்கு ஏதும் உடல் நிலை பிரச்னை என்றால் மூத்த தாத்தாக்களை அழைத்து வந்து பார்ப்பது அனுபவம் சார்ந்த உதவி மற்றும் கற்றுக் கொள்ளல்.
பால் கறக்கும் முறைமைகளை அனுபவசாலிகள் சொல்ல கத்துக்குட்டிகள் கவனமாக கேட்டுக் கொள்வார்கள். முதல் சீம்பாலை பக்கத்து வீட்டுக்கு... நண்பர்கள் வீட்டுக்கு கொடுத்து... பகிர்ந்து உண்பது மிக இயல்பாக நடக்கும் அந்நியோன்யம்.
'மாடு மாதிரி நிக்கற' என்று ஏளனமாக பேசுவோரிடம் சொல்ல வேண்டும். மாடு மாதிரி இருப்பது மனிதனால் முடியாது. மாடுகள் மேய்வதே தவம் செய்தல்தான். அத்தனை கவன குவிதல் அங்கு இருக்கும்.
கற்றுக் கொள்ள வேண்டிய காட்சியை- பள்ளி விட்டு வருகையில்... அங்கங்கே தனியாக... கூட்டமாக... தலையும் தலையும் முட்டியபடி... கிழக்கும் மேற்குமாக... என்று நினைத்த திசையில் நின்று அசைப் போட்டுக் கொண்டே இருக்கும் மாடுகளை ஆசையாக பார்ப்பேன்.
வெள்ளை செவலை நிறத்தில் இருக்கும் மாடுகளை விட கருப்பு நிறத்தில் மினுங்கும் மாடுகள்... கவர்ச்சிகரமானவை. சில குறும்பு மாடுகளுக்கு காலோடு சேர்த்தி கட்டி விட்டிருப்பார்கள். பார்க்க பாவமாக இருந்தாலும்... அதன் பாதையின் வேகத்துக்கு தடை தேவை தான்.
மாடுகளுக்கு வீட்டையொட்டி பிரத்யேக மாட்டுப் பட்டிகள் இருக்கும். மேய்ச்சல் முடிந்து அது பாட்டுக்கு வந்து உள்ளே அடைந்து கொள்ளும் அழகு இன்னமும் மனதுக்குள் கண்கள் சிமிட்டுகிறது. அதுவும்... ஒற்றையடி குறுக்கில் மெல்ல நிதானமாக ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வரும் காட்சி எந்த கிராபிக்சிலும் கிடைக்காதது. அதே நேரம் மாட்டை கவனிக்கும் அந்தந்த மாட்டுக்கார்கள்.... ஒழுங்கமைவோடு நடந்து கொள்வார்கள்.
அதன் ஓய்வில் தான் அவர்கள் ஓய்வெடுப்பார்கள். மழை வெளுத்து வாங்கும். ஆனாலும் புற்கள் சுமந்து வந்து போடுவார்கள். அன்புக்கு அங்கு எல்லைகள் இல்லை.
மாட்டுப் பொங்கலுக்கு வழக்கம் போல... கொண்டாட்டம் கொம்பு முளைத்து திரியும்.
எஸ்டேட் காளை மாடு ஒன்று ஒருமுறை பாதுக்காப்பாளரையே குத்தி தூக்கி வீசி எறிந்த சம்பவமும் நினைவிருக்கிறது. வயிறு கிழிந்து குடல் சரிந்து விழுந்தவரை காலம் காப்பாற்றி விட்டது. அந்த காளை மாட்டை என்ன செய்தார்கள் என்பதை மறந்து விட்டேன்.
மாட்டு சாணத்தை கூட காசுக்கு வாங்கும் நகர மயமாதலுக்கு வெகு தூரத்தில் தான் வால்பாறை மாடுகள் மேய்ந்தன. காலம் எல்லா திசையிலும் கை வைத்தது. அங்கும் மெல்ல மெல்ல மாடுகள் குறைந்தன. அடுத்தடுத்த தலைமுறைகளால் மனிதர்களையே பார்த்துக் கொள்ள முடியாத போது மாடுகளை எப்படி பார்த்துக் கொள்ள.
இடப்பெயர்வு மனிதர்களையே தூக்கி அடிக்கும் போது மாடுகள் இயல்பாகவே காணாமல் போவது தானே எதிர் வினை.
கடந்த பத்தாண்டுகள் வரை கூட உருளிக்கல் செல்லும் வழியில் இருக்கும் 'பெரியார் நக'ரில் நிறைய மாடுகள் இருப்பதை பார்த்திருக்கிறேன். இப்போது மாடு வளர்ப்பு எஸ்டேட் மக்களிடம் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.
"மாட்டுக் கொம்பு மேலே ஒரு பட்டாம்பூச்சி போல...." கபிலனின் வரிக்கு வாழ்ந்த காலத்தில் இருந்து வெகு தூரம் வந்து விட்ட போதும்... வீட்டுக்கு பின்னால் இருந்த மாட்டுப்பட்டியில் இருந்து அதிகாலையோ நள்ளிரவோ அடித் தொண்டையில் இருந்து திடும்மென முளைக்கும் ..."ம்ம்மா..." உருளிக்கல் காற்றில் அலைந்து கொண்டிருக்கும். ஒலிக்கு முடிவேது. அதுவும் விருப்பமான ஒலிக்கு முடிவேது.
மாடு வளர்த்தல் மனிதனின் நம்பிக்கை சார்ந்தது.
- கவிஜி