நாகாலாந்தில் வோர்க்கா (Wokha) மாவட்டத்தில் உள்ள பாங்டி (Pangti) கிராமம். நாகரீக வசதிகள் எவையும் நுழையாத ஆதிவாசிகளின் நாடு. அங்கே ஆண்டுதோறும் அரங்கேறும் ஆகாய அதிசயத்தின் கதைதான் இது. இலட்சக்கணக்கான அமுர் வல்லூறு (Amur falcon) பறவைகள் கூட்டம் கூட்டமாக இங்கே பறந்து வருகின்றன. அவற்றை ஆதிவாசிகள் சுவையான பறவை இறைச்சிக்காக போட்டி போட்டுக் கொண்டு வேட்டையாடி ஒரு பறவையை பத்து ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்றனர்.

வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. தொலைதூர மாவட்டங்களில் இருந்து இறைச்சி வாங்க ஏராளமானோர் வந்தனர். ஆண்டுக்கணக்கில் நடந்து வந்த பறவை வேட்டை, விற்பனை பற்றி மிகத் தாமதமாகவே வெளியுலகம் அறிந்து கொண்டது. இயற்கை ஆர்வலர்கள் ஒன்றுசேர்ந்து வேட்டையை எதிர்த்து 2012ல் குரல் எழுப்பினர். மெல்ல மெல்ல இது பலன் தரத் தொடங்கியது. உலகம் அறிந்திராத ஒரு கிராமம் மெல்ல மெல்ல பறவைகள் பாதுகாப்பின் சொர்க்கபூமியாக மாறியது. புதிய வரலாறு எழுதப்பட்டது.

இது உலகம் முழுவதும் பரவியது. பறவை வேட்டை தடை செய்யப்பட்டது. நாகர்கள் சினந்து எழுந்தனர். அம்பையும் வில்லையும் ஏந்தி போராடத் தயாராயினர். கிராமம் போராட்டக்களமானது. ஆனால் வனத்துறையினரும், மாநில அரசும் நிலைமையை உணர்ந்து செயல்பட்டனர். பல சூழல் அமைப்பினரும், மாணவர்களும், இளைஞர்களும் களத்தில் குதித்தனர். ஆதிவாசிகளை வனப் பாதுகாப்பிற்காக செயல்பட உற்சாகப்படுத்தினர். சிறிதுசிறிதாக அவர்களுக்கு மாற்று வாழ்வாதாரத்தைக் கண்டறிய திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டன.pangti villageஆதிவாசிகளின் கோபம் அடங்கியது. இயற்கை ஆர்வலர்கள் ஒன்றுசேர்ந்து ஓர் இயக்கமாக செயல்படத் தொடங்கியதுடன் மக்கள் மனம் மாறினர்.

பாங்டியில் மலைப்பகுதிகளில் எங்கும் காணப்படும் அமுர் வல்லூறு என்ற இந்த சின்னஞ்சிறிய பறவையை இன்று இங்கு வாழும் கிராம மக்கள் எவரும் வேட்டையாடுவது இல்லை. கிராம மக்களின் நலவாழ்வுத் திட்டங்களை நடைமுறைப்படுத்த பல தன்னார்வ நிறுவனங்கள் உதவின.

கிராமம் பறவைகள் பாதுகாப்பில் உலகப் புகழ் பெறத் தொடங்கியது. இது கிராம மக்களை மகிழ்ச்சியடையச் செய்தது. இந்தியாவிற்கு உள்ளேயிருந்தும் வெளியில் இருந்தும் பல தன்னார்வ நிறுவனங்கள் வரத் தொடங்கியதுடன் கிராமத்தின் முகச்சாயல் மெல்ல மாறியது. கிராம கவுன்சிலர் ஆர் ஷிரி அவர்களின் ஆலோசனையின்படி கிராம மக்கள் செயல்பட்டனர். கிராம மக்களின் நலவாழ்விற்கு முன்னுரிமை தரப்பட்டது. பறவை பாதுகாப்பில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

அமுர் வல்லூறு என்னும் அதிசயம்

பறவை ஆர்வலர்களுக்கு என்றும் ஒரு அதிசயமாக இருக்கும் அமுர் வல்லூறுகள் அக்டோபர் மாதத்தில் மங்கோலியா, சைபீரியாவில் இருந்து லட்சக்கணக்கில் நாகாலாந்திற்கு வருகின்றன. ஒன்றரை மாதம் வரை அவை இந்த கிராமத்தில் தங்குகின்றன. பத்து இனங்களைச் சேர்ந்த சிறிய மற்றும் பெரிய பிராணிகளே இவற்றின் முக்கிய உணவு. இடைவேளைக்குப் பிறகு இவை மகாராஷ்டிரா வழியாக இந்தியப் பெருங்கடலைக் கடந்து தென்னாப்பிரிக்காவை நோக்கி பறக்கின்றன.

மங்கோலியா, சைபீரியாவில் இருந்து நாகாலாந்து வழியாக தென்னாப்பிரிக்காவை சென்றடையும்போது இவை 30,000 கிலோமீட்டர் தொலைவிற்குப் பறந்திருக்கும். மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தென்னாப்பிரிக்காவில் இருந்து நாகாலாந்து வழியாக இவை புறப்பட்ட இடத்தைச் சென்றடைகின்றன. அதிக தூரம் பறக்கும் வலசைப் பறவைகளில் இதுவும் ஒன்று. பருந்து இனத்தைச் சேர்ந்தது என்றாலும் பார்ப்பதற்கு ஒரு புறாவின் அளவே உள்ள இவற்றின் கால்கள் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இவை வலசை செல்லும் காலத்தில் எங்கும் இடை நிற்காமல் தொடர்ந்து பறக்கும் ஆற்றல் பெற்றவை.

உயிர் பறிக்கும் வலைகள்

பறவை பறக்கும் வழியெங்கும் பெரிய வலைகளைக் கட்டியே கிராம மக்கள் இதை வேட்டையாடினர். மரங்களுக்கு இடையில் கட்டப்பட்ட லேசான வெள்ளை நிறத்தில் உள்ள நீளமான வலைகளை பறக்கும்போது பறவைகளால் பார்க்க முடியாது. வலையில் அகப்படும் அவற்றை கிராமவாசிகள் பிடித்து கால்களைக் கட்டி ஒரு தாங்கியில் தொங்கவிடுவர்.

ஒரு நாளில் ஆதிவாசித் தலைவர் பரிந்துரை செய்யும் ஒரு சிலர் வலை கட்ட அனுமதிக்கப்பட்டனர். அடுத்தடுத்த நாட்கள் மற்றவர்களின் முறை. இவ்வாறு ஒன்றரை மாதத்திற்குள் கிராமவாசிகள் அனைவருக்கும் பறவையைப் பிடிக்க வாய்ப்பு கிடைத்தது.

நாகாலாந்து வன உயிரி உயிர்ப் பன்மயத்தன்மை மற்றும் பாதுகாப்பு அறக்கட்டளை இயக்குனர் பானோ ஹராலு வேட்டைக்கு எதிராகப் போராடியவர்களில் முக்கியமானவர். தூர்தர்ஷனின் செய்தியாளராக பணி புரிந்துள்ள இவர் நாகாலாந்து ஆங்கிலச் செய்தித்தாள்களில் செயல்பட்டு வந்தார்.

இயற்கை நாகாஸ் (Natural Nagas) என்ற அமைப்பின் தலைவர் ஸ்டீவ், கிராம கவுன்சில் தலைவர் ஆர் ஷிரி, வனத்துறையின் தலைமை பாதுகாவலர் லோகேஸ்வர ராவ் ஆகியோர் விழிப்புணர்வு இயக்கத்திற்கு தலைமை வகித்தனர். கிராம மக்களை உற்சாகப்படுத்த ஸ்காட்லாந்து வங்கி (Bank of Scotland) விருதுகளை வழங்கியது. 2017ல் பானோ ஹராலு நாரீ சக்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அதே ஆண்டு சிறந்த அறிவியல் திரைப்படத்திற்கான விருது சினோ இகோஷு (Sino Yhoshu) இயக்கிய பாங்டி கதை (The Pangti story) என்ற திரைப்படத்திற்குக் கிடைத்தது. வேட்டைக்காரர்களாக இருந்த நாகர்களின் கிராமம் எவ்வாறு பறவைகளின் காவல் பூமியாக மாறியது என்பதே திரைப்படத்தின் மையக்கதை.

பாங்டி இன்று உலகப் பறவை சுற்றுலா வரைபடத்தில்

இப்போது அக்டோபரில் உலகில் பல பகுதிகளில் இருந்தும் பறவை ஆர்வலர்கள் இங்கு வருகின்றனர். இது சூழல் சுற்றுலா வளர வழிவகுத்தது. இது கிராம மக்களின் வருமான மார்க்கமாக மாறியது. அமெரிக்க பறவையியலாளர் ச்காட் வீடன்சால் (Scott Wiedensaul) எழுதியுள்ள இறக்கைகளின் உலகம் (A World of the wing) என்ற புகழ்பெற்ற நூலில் பாங்டி கிராமவாசிகள் பறவைகள் பாதுகாப்பிற்காக நடத்திய ஆத்மார்த்தமான முயற்சிகளும், பானோ ஹராலுவின் தளராத போராட்டங்களும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

மனமுவந்து மக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் உலகில் எந்த நரகமும் அழகு பூமியாக மாறும் என்பதற்கு ஒருகாலத்தில் வேட்டை கிராமமாக இருந்து இன்று பறவைகளின் கிராமமாக மாறியுள்ள பாங்டி கிராமம் ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டு.

மேற்கோள்: https://www.mathrubhumi.com/travel/features/how-a-nagaland-village-turned-from-hunting-ground-to-safe-haven-for-amur-falcon-1.8313069

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It