goats in californiaகிராமப் புறங்களில் ஆடு வளர்ப்பு என்பது இயல்பானதாக இருக்கும். ஏனெனில், அதற்குப் பிரத்தியேகமாக ஏதும் செலவு செய்து தீவனம் வாங்கத் தேவையில்லை. வயக்காட்டு ஓரங்களில், குளங்களை ஒட்டிய காடுகளில், ஆற்றுப் படுகைகளில், உடைமரம் அதிகம் இருக்கும் பகுதிகளில் உள்ள புற்களை மேய்ந்து விடும், பின்னர் அதுவே செரிமானமாகி வெளிவரும் ஆட்டுப் பழுக்கைகள் சூழலியலுக்கு ஏற்றதாக மாறிவிடும்.

எங்கள் ஊர்ப் பகுதிகளில் பெரிய ஆட்டு மந்தைகள் வைத்திருக்கும் குடும்பங்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் ஆடுகளை வெவ்வேறு வயக்காட்டுப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று 'ஆட்டுக் கிடை' அமைப்பார்கள். பகல் முழுவதும் ஆடுகள் காட்டுப் பகுதியில் மேய்ச்சல் செய்துவிட்டு, இரவில் அந்த கிடைகளில் தட்டி வைத்து உறங்க வைத்து விடுவார்கள். காலையில் அவை படுத்திருந்த இடங்கள் முழுவதும் ஆட்டுப் புழுக்கைகளாக இருக்கும். அடுத்த நாள் வேறு இடத்திற்கு மாற்றி விடுவார்கள். இப்படிச் செய்வதால் நுண்ணுயிர்கள் பெருகும், இயற்கை உரம் அந்த மண்ணில் கால்நடைகள் மூலமாகக் கிடைத்துவிடும்.

அமெரிக்காவிலும் இந்த முறையைக் கையாளுகின்றனர். இயற்கை உரத்திற்காக அல்ல. காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் ஒரு பகுதியாக - ஆடுகளை மலையோர காட்டுப் பகுதிகளில் இருக்கும் காய்ந்த புற்களை மேய்வதற்காக!

'கலிபோர்னியா' என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது 'ஹாலிவுட்' இல்லை என்றால் 'சிலிக்கான் பள்ளத்தாக்கு' (Silicon valley). ஆனால், அமெரிக்க மக்களைக் கேட்டால் வேறு விதமாக 'Shake, Bake & Spin' எனச் சொல்வார்கள்.

ஆம், கலிபோர்னியாவில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் ஏதாவது ஒரு மலைக் காடுகளில் தீ எரிவது வழக்கமாக உள்ளது. 2018ல் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள பேரடைஸ் பள்ளத்தாக்குப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ, (camp fire) அந்தப் பகுதியையே சாம்பல் காடாக்கியது. ஒரு வாரத்திற்கு மேலாகத் தொடர்ந்து எரிந்த காடுகள், பல மனித உயிர்களையும் வன விலங்குகளையும் பலி கொண்டது. இதில் தோராயமாக 600,000 ஏக்கர் பரப்பளவில் வனக் காடுகள் எரிந்தது.

கடந்த ஆண்டு அதேபோல் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகில் உள்ள காட்டுப் பகுதியிலும், மாலிபு பள்ளத்தாக்கிலும் ஏற்பட்ட காட்டுத் தீ (Woolsey fire), சுமார் 100,000 ஏக்கர் பரப்பளவில் காடுகளை சாம்பலாக்கியது.

2017, 2018 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட காட்டுத் தீ, கலிபோர்னியா வரலாற்றில் மிகவும் தீவிரமான அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது ஆகும்.

2019 ஆம் ஆண்டும் காட்டுத் தீ, கலிபோர்னியா மாகாணத்தை மிகக் கொடூரமாக சேதப்படுத்தியது. இவையனைத்தும் புவி வெப்பமயமாதலுடன் தொடர்பு உடையது என்பதும் குறிப்பிடத் தக்கது.

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தீயணைப்புத் துறையினரும், சில நகரங்களில் அரசுத் துறையினரும் காட்டுத் தீ பரவுவதைத் தவிர்க்க, புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில் ஒன்றுதான் கால்நடைகளை புற்கள் அதிகம் உள்ள பகுதியில் மேய்ச்சலுக்குப் பயன்படுத்துவது. இது அந்த நகரத்தில் உள்ள மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு தென்கிழக்குப் பகுதியில் உள்ள அனாகிம் நகரின் நகராட்சி நிர்வாகம். காட்டுத் தீ பரவாமல் இருக்க ஒரு திட்டமாக (Anaheim, City Hall) ஆட்டு மந்தைகளைப் பயன்படுத்தலாம் என்று ஒரு தனியார் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளனர். புகழ் பெற்ற 'டிஸ்னி லேண்ட்' இந்தப் பகுதியில் தான் உள்ளது.

Deer Canyon Park பகுதிகளில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மலைக் குன்றுகளில் இருக்கும் காய்ந்த புற்களை மேய்வதற்கு, கால்நடைகள் குறிப்பாக ஆடுகளை அதிகளவில் ஈடுபடுத்த முயற்சிகள் செய்திருக்கிறார்கள். இதனால் அதிகளவில் காட்டுத் தீ பரவுவதைத் தடுக்கலாம். "காடுகளில் ஏற்படும் தீயானது, தொடர்ந்து பரவி அதிகமாக விரிவடைய காய்ந்த புற்கள் அதற்கு 'Fuel' ஆக மாறி விடுகிறது. காய்ந்த புற்களை ஆடுகள் தின்று, செரிமானமாகிய அதன் புழுக்கைகள் நுண்ணுயிர்களுக்கு உணவாக அமையும், அதே வேலையில் தீயையும் கட்டுப்படுத்தலாம். ஒரு வகையில் இது ஒரு சூழலியல் முறை (ecology) தான்" என்கிறார் Environmental Land Management மேலாளர் ஜானி ஹோன்சாலேஸ்.

பேராசிரியர் Bethany Bradley, professor of environmental conservation at UMass Amherst and co-author of the study, "மழை பொழியும் பருவ காலங்களிலும் காட்டுத் தீ ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை, எனினும் அடுத்த பருவம் (Spring) தொடரும் போது இளம் புற்கள் வளர ஆரம்பித்து விடும். இந்த உயிரியல் சுழற்சி தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கும். இப்படி வளரும் புற்களை உண்டு உயிரியலை சுழற்சி முறையைக் காக்க, ஆடுகள் ஆகச் சிறந்த வேலையை செய்கின்றன. ஆடுகள் புற்களை நல்ல மேய்ந்து தின்னும், ஆனால் அதில் உள்ள சிக்கல் என்னவென்றால், அவைகளை வைத்து ஒருமுறை மட்டும் இப்படி செய்தால் போதாது. தொடர்ந்து காட்டில் உயிரியல் சுழற்சி நடைபெற கால்நடைகள் ஒவ்வொரு முறையும் ஈடுபடுத்தப்பட வேண்டும்." (https://www.npr.org/2020/01/05/792458505/california-cities-turn-to-hired-hooves-to-help-prevent-massive-wildfires)

கால்நடைகளைக் கொண்டு மேற்கொள்ளும் இந்த முறையானது, தீ பரவுவதைப் தவிர்க்க பரவலாக சூழலியல் ஆர்வலர்களால் முன்வைக்கும் முறையில் ஒன்று. இதை மறுப்பவர்களும் உண்டு. அதாவது, "ஆடுகளை எல்லா இடத்திலும் கொண்டு போக முடியாது. ஆடுகள் போக முடியாத இடங்களில், பல மடங்கு உயரத்தில் புற்கள் வளர்ந்து இருக்கும். அவைகளை எப்படி அகற்ற முடியும்?" என்கிறார்கள்.

பொதுவாக தீ எந்த இடத்தில் ஏற்பட்டாலும் அது தொடர்ந்து எரிய மூன்று இன்றியமையாத காரணிகள் உண்டு. அதை 'Fire triangle' என அழைப்பார்கள். அதாவது Heat, Fuel, Oxygen. இதில் ஒன்றைத் தடுத்து நிறுத்திவிட்டால் தீ தானாகவே அணைந்து விடும். காடுகளில் தீ தொடர்ந்து எரிவதற்க்கு 'Fuel' ஆக காய்ந்த புற்கள், இலை, தழைகள் அமைந்து விடுகிறது.

ஆதலால் காட்டுத் தீ ஏற்பட்டால் அதிக பரப்பளவில் படராமல் இருக்க கால்நடைகளைப் பயன்படுத்தும் முயற்சியும் வரவேற்க்கத் தக்கது.

- பாண்டி

நன்றி: http://fbs.advantageinc.com/anaheim/summer2018/

https://www.pnas.org/content/116/47/23594.short

Pin It