42 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் 6 வது பெரும் பணக்காரராக இருந்த அனில் அம்பானி இன்று தனது சொத்து மதிப்பு ஜீரோ என்று பிரிட்டன் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கின்றார். சீன தொழிற்துறை மற்றும் வர்த்தக வங்கியின் மும்பை கிளை, சீன வளர்ச்சி வங்கி மற்றும் சீனா - வின் EXIM வங்கி ஆகிய 3 வங்கிகளிடம் இருந்து 2012ஆம் ஆண்டு வாங்கிய 717 மில்லியன் டாலர் பணத்தை 21 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று கடந்த மே மாதம் பிரிட்டன் நீதிமன்றம் அம்பானிக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் 21 நாட்களுக்குள் அனில் அம்பானி கடனைத் திருப்பி செலுத்தாததால் அந்த வங்கிகள் மீண்டும் நீதிமன்றத்தை அணுகின. இந்த வழக்கின் விவாதத்தில்தான் அனில் அம்பானி, "தன்னிடம் பணம் இல்லையென்றும், தனது சொத்து மதிப்புப் பூஜ்ஜியம்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு சொந்தமாக இருக்கும் 3.2 பில்லியன் டாலர் மதிப்பிலான கார்கள், தனியார் ஜெட், தனது மனைவி டினா அம்பானிக்குப் பரிசாகக் கொடுத்த ஹெலிக்காப்டர், மும்பை கடற்கரையின் கஃப் பரேட்டில் இருக்கும் 2 அடுக்கு வீடு அனைத்தும் நிறுவனத்தின் பெயரில் தான் உள்ளது என்றும் தன்னுடைய சொத்து என்று எதுவும் இல்லை என்றும் டிசம்பர் 31, 2019 இல் 40.2 லட்சம் ரூபாயாக இருந்த தன்னுடைய வங்கி இருப்பு ஜனவரி 1, 2020 இல் 20.8 லட்சம் ரூபாயாக ஒரே இரவில் குறைந்தது என்றும் அதுமட்டுமல்லாமல் தான் தனது தாய்க்கு 500 கோடி ரூபாயும், மகனுக்கு 310 கோடி ரூபாயும் கடனாக வழங்க வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் கடன் கொடுத்த வங்கிகள் அனில் அம்பானி தனது சொத்துகளை பறிமுதல் செய்யாத வகையில், தனது கார்ப்பரேட் நிறுவனங்களின் பெயரில் வாங்குவதாக குற்றம் சாட்டியிருக்கின்றன. ஊர் முழுவதும் சீட்டு நடத்துவதாக சொல்லி மக்களிடம் பணம் வாங்கி ஏமாற்றும் ஒரு பக்கா மோசடி பேர்வழியின் செயலுக்கு எந்தவகையிலும் குறைந்தது இல்லை அனில் அம்பானியின் செயல்.
நம்ம ஊரில் கூட ஊர் முழுவதும் கடன் வாங்கி அதை பொண்டாட்டி பிள்ளைகளின் மீதும் பினாமிகள் பெயரிலும் எழுதி வைத்துவிட்டுச் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு கடன் கொடுத்தவர்கள் கடனைத் திருப்பிக் கேட்கும் போது மஞ்சள் நோட்டிஸ் கொடுக்கும் பல வெள்ளை வேட்டிகளை நாம் பார்த்திருக்கின்றோம்.
ஆனால் அனில் அம்பானியுடன் ஒப்பிட்டால் இவர்கள் கிட்டகூட நெருங்க முடியாது. காரணம் நம்ம ஊர் மோசடி பேர்வழிகள் சிக்கிக் கொண்டால் நிச்சயம் கம்பி எண்ண வேண்டிய சூழ்நிலை இருக்கும் ஆனால் அனில் அம்பானிகளுக்கு அந்தப் பிரச்சினையே இல்லை. காரணம் அரசு அமைப்புகளில் பல பேர் அம்பானிவீட்டு நாய்களாக வாழ்ந்து சாவதில் பெருமை கொள்பவர்களாக இருப்பதால்தான்.
அனில் அம்பானி சீன வங்கிகளை மட்டும் ஏமாற்றவில்லை சுவீடனைச் சேர்ந்த எரிக்சன் நிறுவனத்திடமும் இப்படித்தான் ரூ. 550 கோடி பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றினார். இது தொடர்பாக அந்த நிறுவனம் உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி ரூ. 453 கோடியை நான்கு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் மீறினால் மூன்று மாத சிறை தண்டனை என்றும் தீர்ப்பளித்தது.
எப்படி சீன வங்கிகளை ஏமாற்ற பிரிட்டன் நீதிமன்றத்தில் தான் ஒரு பிச்சைக்காரன் என்ற அளவுக்கு அனில் அம்பானி அடித்து விட்டாரோ அதே போலத்தான் அன்று உச்சநீதி மன்றம் “அனைத்து திட்டங்களிலும் தங்களை இணைத்துக் கொள்ளும் அளவுக்கு இவர்களிடம் பணம் உள்ளபோது, நீதிமன்ற ஆணையை மதித்து, ரூ. 550 கோடியை தர பணம் இல்லையா?” என்று கேட்ட போது அனில் அம்பானியின் சார்பில் ஆஜரான மோடி அரசின் அட்டர்னி ஜெனராக இருந்த முகுல் ரோத்கி.
“ஆர்-காமின் சொத்துக்களை ஜியோவிற்கு விற்பதன் அடிப்படையில் கிடைக்கும் தொகையை அளிப்பதாக அனில் அம்பானி கூறியிருந்தார். அதுதான் ஒப்பந்தமாக இருந்தது. ஆனால், 18 ஆயிரம் கோடிக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்ட சொத்துக்கள் வெறும் ரூ. 780 கோடிக்கு விற்பனையாயின.
கடுமையாக முயற்சித்த போதும் அவ்வளவுதான் வந்தது. மேலும், அனில் அம்பானி தனிப்பட்ட முறையில் இந்தத் தொகையை அளிப்பதாக எந்தவித வாக்குறுதியையும் அளிக்கவில்லை” என ஒரு நேர்மையான நீதிபதிக்கே உரிய வகையில் பதில் அளித்தார்.
இதிலே ஹைலைட் என்னவென்றால் இந்த வழக்கு தொடர்பான அமர்வில் அனில் அம்பானி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்ற இணையத்தில் ஏற்றப்பட்ட உத்தரவை, நீதிமன்ற பணியாளர்கள் இருவர் ‘நேரில் ஆஜராக தேவையில்லை’ என மாற்றியதுதான். இது கண்டுபிடிக்கப்பட்டு அந்த இரண்டு பணியாளர்களையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பணியிலிருந்து நீக்கினாலும் அவர்கள் யார் உத்தரவின் கீழ் இப்படி செயல்பட்டார்கள் என்பது குறித்த இதுவரை எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த மார்ச் மாதம் அனில் அம்பானி நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் யெஸ் வங்கியிடம் 12,800 கோடி ரூபாய் கடன் பெற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகி வாக்கு மூலமும் அளித்துள்ளார். அப்போது அவரிடம் கடன் பற்றிய விவரங்கள் கேட்டபோது, தனக்கு முழுமையான விவரம் தெரியவில்லை. அதனால் கொஞ்சம் அவகாசம் கொடுத்தால் அதனை முழுமையாக கொடுப்பதாகக் கூறியதாக தெரிகின்றது.
இவை எல்லாம் அனில் அம்பானி தின்று ஏப்பம் விட்டதில் சிறுபகுதி மட்டுமே இன்னும் இந்திய பொதுத்துறை வங்கிகளில் அவர் வாங்கி கட்டாமல் விட்ட தொகையையும், வங்கிகள் வரா கடன் என்று தள்ளுபடி செய்த தொகையையும், காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆட்சியில் கொடுக்கப்பட்ட வரிச் சலுகைகளையும் சேர்த்தால் அது இதைவிட அதிகமாகவே இருக்கும்.
இது எல்லாம் சாமானிய மக்களுக்குத்தான் வெளியில் இருந்து பார்க்கும் போது திருட்டு செயலாகவும், தேசவிரோத செயலாகவும் தெரியும் ஆனால் ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை இது எல்லாம் தொழிற் திறமைகள்.
நீங்கள் ஒரு நல்ல மோசடி பேர்வழி என்றால் கண்டிப்பாக நீங்கள் ஒரு நல்ல தொழிலதிபர் என்று அர்த்தம். அப்படிப்பட்டவர்களுக்கு தெய்வம் கூரையை பீய்த்துக் கொண்டு மட்டுமல்ல விமானத்தில் வந்து கூட கொட்டும். எப்படி என்று கேட்கின்றீர்களா?
அதற்கு சிறந்த உதாரணம் ரஃபேல் ஊழல். பிரான்ஸுக்கு 2015, ஏப்ரல் 15-ஆம் தேதி சென்ற மோடி, அந்நாட்டு அரசிடம் இருந்து, ஆயுதங்கள் பொருத்தப்பட்டு பறப்பதற்கு தயார் நிலையில் 36 ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கவுள்ளதாக அறிவித்தார். இதையடுத்து, பிரான்ஸிடமிருந்து சுமார் ரூ.60,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் 2016, செப்டம்பர் 23-இல் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் சுமார் ரூ.12,600 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் 126 போர் விமானங்களை ரூ.54,000 கோடியில் கொள்முதல் செய்யக் காங்கிரஸ் அரசு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ரூ.60,000 கோடியில் 36 விமானங்களை மட்டுமே வாங்க ஒப்பந்தம் போட்டுவிட்டு 12600 கோடி சேமித்துவிடோம் என்ற மோடி அரசு சொன்ன பொய் அம்பலமாகி நாடே காறி துப்பியது.
காங்கிரஸ் அரசு மேற்கொள்ளவிருந்த முந்தைய ஒப்பந்தத்தின்படி, 118 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட இருந்தன. இதனால், ஹெச்ஏஎல் நிறுவனம் அந்த ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. ஆனால் புதியதாக மோடி அரசு போட்ட ஒப்பந்தப்படி பறப்பதற்கு தயார் நிலையில் உள்ள விமானங்கள் கொள்முதல் செய்யப்படுவதால் ஹெச்ஏஎல் நிறுவனத்தின் பங்களிப்புத் தேவை ஏற்படவில்லை' என்று கூறி திட்டமிட்டு ஒதுக்கப்பட்டது.
விமான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் இந்திய நிறுவனங்களை தேர்ந்தெடுக்கும் உரிமை பிரான்ஸ் நிறுவனத்துக்கு உள்ளது என்றும் அதில் மத்திய அரசு தலையிட முடியாது என்றும் மறைந்த மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் அளித்தார்.
ஆனால் இந்த ஒப்பந்தம் குறித்து பிரான்ஸ் நாட்டின் புலனாய்வுச் செய்தி நிறுவனமான மீடியாபார்ட் வெளியிட்ட செய்தியில் ``ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில், இந்தியப் பங்குதாரராக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இருக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கட்டாயப்படுத்தப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இந்த தகவல் டசால்ட் நிறுவனத்தின் ஆவணங்களிலேயே உள்ளது எனவும் குறிப்பிட்டிருந்தது. இப்படித்தான் பல ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் குறுக்கு வழியில் பிரான்ஸில் இருந்து அனில் அம்பானிக்கு விமானம் மூலம் கிடைத்தது.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுனவத்திற்கு மோடி அரசு கொடுத்த சலுகையை அவர் எப்படி பயன்படுத்துவார் என்று தெரிந்துகொள்ள ‘ரிலையன்ஸ் நேவல் அண்ட் என்ஜினியரிங் (ஆர்-நேவல்) எனப்படும் கப்பல் கட்டும் நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்புத்துறை, கடந்த 2011-ஆம் ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்தமே ஒரு சிறந்த சாட்சி.
அந்த ஒப்பந்தப்படி ரூ. 2500 கோடி மதிப்பிலான, 5 ரோந்துக்கப்பல்களை கட்டித் தருவதற்கான ஆர்டர்கள் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. ஒப்பந்தப்படி, ‘ஆர்- நேவல்’ 2000 டன் எடைகொண்ட ரோந்துக் கப்பல்கள் ஐந்தை, 2014-15 ஆம் ஆண்டுக்குள் தயாரித்து அளித்திருக்க வேண்டும்.
ஆனால் இதுவரை ஒரு கப்பலைக் கூட தயாரித்து அளிக்கவில்லை. ஆனால் இதுகுறித்து இப்போதுதான் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகமானது, ஆர்- நேவல் நிறுவனத்திற்கு நோட்டீஸையே அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் அனில் அம்பானியை ஒருவகையில் பாராட்டத்தான் வேண்டும், மல்லையா, நீரவ் மோடி, லலித் மோடி போன்றவர்கள் எல்லாம் நாட்டைவிட்டே ஓடிவிட கடன்காரன் எல்லாம் தினம் தினம் பஞ்சாயத்துக்கு இழுத்தாலும் ஒரு உண்மையான தேசபக்தராக அவர் இந்தியாவிலேயே வாழ்கின்றார். அவர் நீதிமன்றத்தை நம்பவில்லை என்றாலும் மோடியை நம்புகின்றார்.
மோடி இருக்கும்வரை இந்திய மக்களின் வரிப்பணத்தை சுரண்டிக் கொழுத்த எந்த ஒரு மோசடிப் பேர்வழிகளும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று. அந்த வகையில் மோடியின் மீது நம்பிக்கையற்று நாட்டைவிட்டு தப்பி ஓடிய மல்லையா, நீரவ் மோடி போன்றவர்களே தேசவிரோதிகள்.
உண்மையில் அனில் அம்பானியிடன் கொடுப்பதற்கு எதுவுமில்லை என்று நாம் நம்ப வேண்டும். அவரைப் போன்ற பரம ஏழையாகிப்போன ஒருவருக்கு ரஃபேல் போன்ற ஒப்பந்தங்கள் கிடைக்க மோடி உதவி செய்வதை தப்பாக நினைக்கும் நாம்தான் எவ்வளவு குருரமானவர்கள். ஏழைகளின் விடிவெள்ளி என்று யார் யாரையோ அழைக்கும் நாம் ஒரு உண்மையான ஏழைகளின் விடிவெள்ளியை கண்டுகொள்ளாமல் வரலாற்று பிழையை செய்துவிட்டோம்!.
- செ.கார்கி