Bhagat Singh1907 செப்டம்பர் 28 அன்று பகத்சிங் பிறந்த காலத்தில் இந்தியா பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் அடிமைப்பட்டு இருந்த காலம். இந்திய தேசத்தின் விடுதலைக்கு பலரும் அமைப்பாகவும் தனிநபராகவும் போராடிக் கொண்டிருந்த நிலையில், இந்திய விடுதலைப் போருக்கு உத்வேகமாகவும் இளைஞர்களின் எழுச்சிக்கு உந்து சக்தியாகவும், சோசலிச புரட்சி வானில் துருவ நட்சத்திரமாகப் பிரகாசித்தார் மாவீரன் பகத்சிங். காந்திஜிக்கு இணையாக கீர்த்தி பெற்று இருந்தார் என்று காங்கிரஸ் கட்சியின் வரலாற்று ஆசிரியர் பட்டாபி சீதாராமையா எழுதுகிறார்.

பகத்சிங் குறித்து ஜாலியன்வாலாபாக் படுகொலைக்குப் பிறகு லண்டனுக்குச் சென்று 20 ஆண்டுகள் கழித்துக் கொலையாளியைப் பழி வாங்கிய உத்தம்சிங் பின்வருமாறு நினைவு கூறுகிறார். ஜாலியன் வாலாபாக் படுகொலை செய்தியைக் கேள்விப்பட்டவுடன் 12 வயதான பகத்சிங் பள்ளிக்குச் செல்லாமல் புகைவண்டியில் ஏறி அமிர்தசரஸ் சென்று அந்த இடத்தைப் பார்த்தான்.

அந்த இடத்திலேயே உயிரற்றவனைப் போல பல நிமிடங்கள் நின்றுக் கொண்டிருந்த அவன் அந்த மண்ணை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டான். கொஞ்சம் மண்ணை எடுத்து கண்ணாடிப் புட்டியில் போட்டு வைத்துக் கொண்டான். அன்று இரவு முழுவதும் உண்ணாவிரதம் இருந்தான்.

பகத்சிங் குடும்பத்தினர் கூற்றுப்படி அவன் தினந்தோறும் புத்தம் புது மலர்களை அந்த இரத்தம் தோய்ந்த மண்ணில் வைத்து பூஜித்து அதன் மூலம் எழுச்சி பெற்றுக் கொண்டிருந்தார் என கூறுகிறார்கள். தன்னுடைய 13 வயதில் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்த பகத்சிங், 1922 இல் சௌரி சௌரா சம்பவத்துக்காகக் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திய போது, பெரிதும் ஏமாற்றம் அடைந்தார்.

அதனால் 1924 ஆம் ஆண்டு ஹிந்துஸ்தான் குடியரசு கழகத்தில் இணைந்தார், 1926 ஆம் ஆண்டு நவ ஜவான் பாரத் சபா என்ற இளைஞர் அமைப்பை நிறுவினார். கதார் கட்சி ஆதரித்தார். பின்னர் பகத்சிங் பல புரட்சி இயக்கத்தினரையும், இளைஞர்களையும் ஒருங்கிணைக்க பல்வேறு ரகசிய பிரச்சாரங்களை மேற்கொண்டு இருந்தார்.

1928 இல் தங்களது அமைப்பின் மத்திய சபைக்கு ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் என்று பெயர் வைத்தனர் இதில் மக்கள் பிரச்சாரத்திற்குப் பகத்சிங் பொறுப்பேற்றார்.

பகத் சிங்கின் தந்தை அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் அதன்பொருட்டு அவரின் தாய்க்கு வாக்குறுதி கொடுத்து விட்டதாக கூறி பகத் சிங்கிற்கு கடிதம் எழுதுகிறார். தந்தைக்கு பதில் கடிதம் எழுதுகிறார் பகத்சிங்.

தந்தையே பாரதத்தாய் கண்ணீர் சிந்தி கொண்டிருக்கிறார் அதைத் துடைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் என் முன் உள்ளது நான் பாரதத்தாயின் மகன் என்பதையும் உணருங்கள் என்று.

1929 ஏப்ரல் 8 ஏகாதிபத்தியம் அதிர்ந்து நின்றது, டெல்லி பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் சென்ட்ரல் அசெம்பிளிங் ஹாலில் வெடிகுண்டுகளை வீசி வெடிக்கச் செய்த பகத்சிங்கும் கேபி. தத்தும் அதிராமல் துண்டுப்பிரசுரங்களை வீசி நின்றனர்.

அவர்களைப் பொறுத்தவரை இது அரசியல் மேடை. அவர்கள் வீசிய பிரசுரத்தில் உள்ள செய்தி இதுதான். இந்தியர்களின் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்ய சைமன் குழு பரிந்துரைப்படி, சுரண்டப்படும் தேசத்தில் தொழிலாளர்களை மென்மேலும் சுரண்டியும், வளர்ந்துவரும் சுதந்திர பொதுவுடைமை உணர்வை தகர்திடவும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தியம், டெல்லி பாராளுமன்றத்தில் கொண்டு வந்த சட்ட முன்வடிவுகலான 1. பொது பாதுகாப்பு சட்டம் 2. தொழில் தாவா சட்டம் என்ற பயங்கரவாத சட்டங்களை எதிர்த்தும், ஜனநாயக முறையில் போராடிய லாலாலஜபதிராய் என்னும் தேசபக்தித் தலைவரை அடித்தே கொலை செய்த பிரிட்டிஷாரின் அராஜகத்தை எதிர்த்து, அநீதியைக் கண்டு சிலையாகி போன நம் தேசத்தின் பெரும்பான்மை மக்களை தட்டி எழுப்பவும், இளைஞர்களின் சவமாகிப்போன உணர்வை மீட்டெடுத்து ஒன்றிணைக்கவும் நாங்கள் வீசிய வெடிகுண்டு உயிர்களைக் கொள்வதற்காக அல்ல, கேளாத செவிகளைக் கேட்கச் செய்வதற்கு உரத்த குரல் தேவைப்படுகிறது என்று தேசத்தின் விடுதலைக்காக வாதிட்டனர்.

24 வயதைக் கூட தாண்டாத பகத்சிங்கும் அவரது தோழர்களும், நடுக்கத்தோடு சிறையிலடைத்தது பிரிட்டிஷ் அரசு, பகத்சிங் உள்ளிட்ட தோழர்கள் நீதிமன்றத்திற்குச் செல்லும் போதெல்லாம் நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்கி மக்களுக்கு பல்வேறு செய்திகளைச் சொல்லி விடுதலைப் போராட்டத்திற்கு அறைகூவி அழைத்தனர்.

போராளிகளுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி கொண்டே செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்தது பிரிட்டிஷ் அரசு, அதனால் நேர்மையற்ற முறையில் மானுட மாண்பு அற்று, இந்த வழக்கில் சாட்சிகளைக் கூட விசாரிக்க தேவையில்லை என்று ஒரு அவசர சட்டத்தின் மூலமாக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், ஆகிய மூவருக்கும் 07/10/1930 அன்று மரண தண்டனை விதித்தது.

இந்த தீர்ப்பு குறித்து அண்ணல் பி ஆர், அம்பேத்கர் அவர்கள் பின்வருமாறு மராட்டிய பத்திரிக்கை "ஜனதா"வில் எழுதுகிறார். அரசியல் காரணங்களுக்காக போலீசாருக்குச் சாதகமாக சட்டத்தை வளைத்து பிரிட்டிஷ் அரசு கபட நாடகம் ஆடி விட்டது என்று கொந்தளித்தார்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒழியட்டும், பொதுவுடமைச் சமூகம் அமைய வேண்டும், இந்தியாவில் மதச்சார்பின்மையை பாதுகாக்க வேண்டும், என்ற இலட்சிய வேட்கையுடன் இருந்த பகத்சிங், ஒரு தூக்கு மேடை கைதி சிறைக்குள் அறுபத்து நான்கு நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம், நீதிமன்றத்திற்கு போகிற போதெல்லாம் போராட்டம், உயிர் தோழர்கள் ஜதின்தாசையும், மகாவீர் சிங்கையும் உண்ணாவிரத போராட்டத்தில் பறிகொடுத்த நிகழ்ச்சி என அனைத்தையும் உளவியல் ரீதியில் எதிர்கொண்டு, சிறைக்குள் சுமார் 151 புத்தகங்களைப் படித்து குறிப்பு எடுத்து ஆறு சிறு நூல்களை பகத்சிங் என்ற இளைஞனால் எழுத முடிந்தது என்றால் அவன் தான் இளைஞர்களுக்கான அடையாளம்.

ஒரு மாபெரும் அறிவுஜீவி, காதல் குறித்து தன் நண்பன் சுகதேவுக்கு கடிதம் எழுதிய அழகியவன்,

சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த பலரும் வெள்ளையன் கையில் இருக்கின்ற ஆட்சி அதிகாரம் இந்தியர்கள் கையில் மாறவேண்டும் என்று மட்டுமே நினைத்தனர்.

ஆனால் வெள்ளை துரைமார்களின் கையிலிருந்து கருப்பு துரைமார்கள் கைக்கு ஆட்சி அதிகாரம் வந்து விடக்கூடாது என்று பகத்சிங் கருதினார். அதாவது துறைத்தனம் இல்லாமல் சமத்துவம் இருக்கக்கூடிய ஒரு சமூக அமைப்பை உருவாக்க விரும்பினார்.

பகத்சிங் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தினார். இங்கிலாந்து மன்னர் ஜார்ஜ் க்கு எதிராக நாங்கள் போர் கொடுத்தோம் என்பது எங்கள் மீதான குற்றச்சாட்டு, ஆமாம் பிரிட்டிஷ் நாட்டுக்கும் இந்திய நாட்டிற்கும் இடையே போர்ச்சூழல் நீடிக்கிறது.

இரண்டாவதாக போரில் நாங்கள் உண்மையிலேயே பங்கு எடுத்துள்ளோம். ஆகவே எங்களைச் சுட்டு கொள்ளுங்கள் என்றனர் நெஞ்சுரம் மிக்க தீரர்கள், 1931 ஆம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி லாகூர் மத்திய சிறையின் விடியல் கருப்பாய் இருந்தது, பாலுக்காக அழாத குழந்தை, பசிக்கு அலையாத மனிதன், கல்விக்கு ஏங்காத மாணவன் உள்ள இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று கனவு கண்ட பகத்சிங், தூக்கு மேடையில் தன் சக தோழர்களுடன் இன்குலாப் ஜிந்தாபாத்! தொழிலாளி வர்க்கம் வெல்லட்டும்! ஏகாதிபத்தியம் ஒழியட்டும்! என கோஷம் இட்டு தூக்குக் கயிறை முத்தமிட்டார்கள்.

நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்படும் என பிரிட்டிஷ் அரசு பயந்தது, சிறையின் பின்பக்க சுவர்கள் உடைக்கப்பட்டு, டிரக் ஒன்றில் வீரர்கள் உடல் ஏற்றிச் செல்லப்பட்டு இரவு 10 மணி அளவில் சட்லெஜ் நதிக்கரையில் சிதையூட்டப்பட்டது.

புரட்சி வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த மூன்று மைல் தொலைவுக்கு பேரணி நடத்தப்பட்டது சட்லஜ் நதிக்கரையில்.

விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை என்பதனை மெய்ப்பிக்கும் விதமாக மாவீரன் பகத்சிங்ன் சிந்தனைக்கு இரத்த சாட்சிகளாய், ஆயிரமாயிரமாய், லட்சம் லட்சமாய், கோடி கோடியாய் சோசலிச பதாகையை உயர்த்திப் பிடித்து இன்குலாப் ஜிந்தாபாத் முழக்கமிடும் இக்காலத்தில். 1929இல் இந்திய பாராளுமன்றம் நம் தேசத்திற்கு எதிரான சட்டங்களை எப்படி இயற்றியதோ அதேபோன்ற நிலைதான் இன்றைக்கு 2020 இல் இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சியின் அரசு கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக இந்திய இறையாண்மைக்கு எதிரான சட்டங்களான

1. தொழிற் பாதுகாப்பு சட்டங்களை நீக்கி உள்ளது,
2. மின்சார சட்டம் 2020
3. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது
4. வேளாண் பொருட்கள் அத்தியாவசிய திருத்தச்சட்டம் 2020
5. குடியுரிமை திருத்த சட்டம்
6. புதிய கல்விக் கொள்கை
7. வேளாண் உற்பத்திப் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம் 2020
8. விவசாயிகள் உத்திரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் 2020
9. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2020
10. மாநில உரிமைகளை பிடுங்கிக் கொண்டது என நாளும் தொடரும் நயவஞ்சக சட்டங்கள் பல,

பல மொழி, பல இனம், பல பண்பாடு கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமை கண்டு வரும் மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு என்ற, இந்திய அரசியல் அமைப்பு சீர்குலைத்திடும் விதத்தில், ஒரே பண்பாடு ஒரே நாடு என்று மானிட மாண்புளுக்கு எதிராகவும், மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்தும், இக்கொடிய குரோனா காலத்திலும் குடியிருக்க வீடு இல்லாமல், குடிக்கக் கஞ்சி இல்லாமலும், வேலை இல்லாமல் வாழும் இந்திய மக்களைப் பற்றி அக்கறை கொள்ளாமல் இந்துக்களையும் அழித்து இந்துத்துவாவை வளர்க்கும் அரசு.

ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டி கொடூரமான அரச பயங்கரவாதத்தை அமுல்படுத்தி வருகிறது.

நாம் நினைவில் கொள்வோம்

1929 அக்டோபர் 19 அன்று லாகூரில் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் நடைபெறும் பஞ்சாப் மாணவர்கள் மாநாட்டுக்கு சிறையிலிருந்து பகத் சிங் வாழ்த்துச்செய்தி சொல்வார்,

தோழர்களே!

இன்று துப்பாக்கிகளையும் வெடிகுண்டுகளையும் கையில் எடுக்குமாறு இளைஞர்களாகிய உங்களை நாங்கள் கோரப்போவதில்லை. இன்று அதைவிட அதிக முக்கியத்துவம் வாய்ந்த பணி ஒன்றை நீங்கள் எதிர்கொண்டு உள்ளீர்கள். வரவிருக்கும் லாகூர் மாநாட்டில் நாட்டின் சுதந்திரத்திற்காக உக்கிரமான போராட்டம் ஒன்றிர்க்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருக்கிறது.

தேச வரலாற்றின் சிக்கலான காலகட்டத்தில் மிகப் பெரும் பொறுப்பை இளைஞர்களே சுமந்தாகவேண்டும். இளைஞர்களை புரட்சிகரமான செய்தியினை நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள அத்துணை பகுதி மக்களிடமும் கொண்டு சேர்க்க ஜனநாயக முறையில் மக்களை திரட்டி விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொள்ளச் செய்ய வேண்டும்.

அப்போதுதான் நாம் சுதந்திரம் அடைவோம், மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமைச் சாத்தியமற்றதாகும், தியாகி யதீந்திராதாஸ்சிடமிருந்து உத்வேகத்தைப் பெற்று எடுத்துக்கொண்டு, அளவற்ற தேச பக்தியுடன் சுதந்திரப் போராட்டத்தில் தடுமாற்றம் இல்லாத மனது உறுதியுடன் போராட உங்களால் முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும். புரட்சி நீடுடி வாழ்க! என முடிப்பார்.

நம் துவக்கம் இங்குதான் உள்ளது. ரத்தம் சிந்தி நம் முன்னோர்கள் பெற்ற சுதந்திரத்தை பேணி பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இன்று 2020 ஆம் ஆண்டில் நம்முன் உள்ளது. கம்யூனிஸ்டுகள் அறைகூவி அழைக்கின்றனர், செங்கொடியின் கீழ் அணி திரள்வீர் என...

களம் தெரிகிறது... கடமை புரிகிறது...

பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காக்க பகத்சிங்ன் சிந்தனைகளிலிருந்து ரத்த சாட்சிகளாய் எழுவோம்!

நாம் வெல்வோம்! நாம் வெல்வது தின்னம்! இன்குலாப் ஜிந்தாபாத்!

 - ஏ.ஆர்.கே.தமிழ்ச்செல்வன்

Pin It