voc marudhu kuyiliபுது தில்லி செங்கோட்டை ராஜபாதையில் இந்திய ஒன்றிய மாநிலங்களின் சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுக்க, முப்படையினரின் வலிமையைப் பறை சாற்றும் சாகச நிகழ்ச்சிகளோடு இந்தியக் குடியரசு நாள் விழா ஒவ்வோர் ஆண்டும் சனவரி 26ஆம் நாள் கொண்டாடப்படும்.

மாநில அரசுகள் தங்கள் இன, மொழி, வரலாற்று அடையாளங்களை அலங்கார ஊர்திகளில் தத்ரூபமாக வடித்து தங்கள் தேசிய இன அடையாளத்தை டில்லி ராஜாக்களுக்கு எடுத்துக் காட்டுவார்கள்.

இந்திய அரசு என்று ஓர் அரசு இருக்கிறதே தவிர அந்த அரசுக்கு என்று தனியாக நிலப்பரப்போ மக்களோ கிடையாது. பல தேசிய இனங்களை உள்ளடக்கிய இந்தியப் பெரு நிலப் பகுதியில் மாநில அரசுகளோடு ஒன்றி பொது வேலைத்திட்டங்களோடு செயல்படக்கூடிய அரசாகவே ஒன்றிய அரசு சட்டப்படி அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், மாநில அரசுகளோடு ஒன்றி இருப்பதற்கு இந்திய அரசு எப்போதும் ஒப்புக் கொண்டதே இல்லை. மாறாக மாநில அரசுகளைத் தனது ஆளுகைக்கு உட்பட்ட காலனி அரசுகளாக நடத்தி மேலாதிக்க இன்பம் காண்பதிலேயே ஒன்றிய ஆட்சியாளர்கள் எப்போதும் முனைப்பாக இருந்திருக்கிறார்கள், இப்போதும் இருக்கிறார்கள்.

எனவே, மாநில மக்களுக்கு ஒன்றிய ஆட்சியாளர்கள் மீதும் ஒன்றியக் கட்சிகள் மீதும் பெரிய நம்பிக்கையோ, பற்றோ, பிடிமானமோ இருந்ததில்லை. காரணம் தங்களை மதிக்காத ஒன்றியக் கட்சிகள், ஆட்சிகள் மீது மக்கள் ஏன் நம்பிக்கையோ மதிப்போ வைக்கப் போகிறார்கள்?

அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டு மக்களுக்கு எப்போதும் ஒன்றிய ஆட்சியாளர்களால் துன்பமே மிகுந்து இருக்கும் போது நமக்கும் விருப்பு எப்படி இருக்கும்? வெறுப்புதான் இருக்கும்!

இதிலே பரிதாபத்திற்கு உரியவர்கள் இப்போதைய ஒன்றிய ஆட்சியின் கட்சிக்காரர்கள்தான். தமிழ்நாட்டு தட்ப வெப்பம் இவர்களுடைய இந்து, இந்தி, இந்திய பக்தியை எள்ளளவும் ஏற்காத ஒன்றாகவே இருந்து வருகிறது.

இமய மலையில் இருந்து குமரிக்கடல் வரை ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்த காலத்திலேயே ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்று வெஞ்சமரில் சாதல் கண்ட வீரஞ்செறிந்த பூமி தமிழர் பூமி. ஆனால், இந்திய விடுதலைப் போராட்டம் என்கிற வரலாற்றை 1857ஆம் ஆண்டு மீரட்டில் நடந்த சிப்பாய்க் கலகத்தில் இருந்து எழுதுகிறது இந்தியா.

ஆனால், இந்த சிப்பாய்கள் எல்லாம் வெள்ளை அதிகாரிகளின் கட்டளைக்கு அடிபணிந்து சேவகம் செய்து கொண்டிருந்தவர்கள் என்பதும் இவர்களிடையே தூண்டிவிடப்பட்ட மத உணர்வின் காரணமாகத் தங்கள் எசமானர்களை எதிர்த்துக் கலகம் செய்திருக்கிறார்கள் என்பதும் அவர்களே மறைக்கமுடியாத ஆவணமாக இருக்கிறது.

நேற்றுவரை கட்டளைக்கு அடிபணிந்து செயல்பட்டவன் இன்று கட்டளையை மீறுவது அல்லது கட்டளையிடுபவனுக்கு எதிராகச் செயல்படுவது என்பது ஒருவகை கிளர்ச்சிதான். ஆனால், இந்தக் கிளர்ச்சியையே விடுதலைப் போராகச் சித்தரிக்க முயலுகிறவர்களுக்கு நம்மிடையே சில கேள்விகள் இருக்கின்றன.

1857-இல் நடந்த சிப்பாய்க் கலகத்திற்கு 51 ஆண்டுகள் முன்பாகவே, வேலூர்க் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த மைசூர் புலி திப்புசுல்தானின் மகன்களும், படையினரும் திட்டமிட்டு ஆங்கிலேயப் படைகளைத் தாக்கியழித்தனர்.

1806 சூலை 10ஆம் நாள் நடைபெற்ற இப்புரட்சி ஒரே நாளில் அடக்கப்பட்டது என்றாலும் சிறைக்குள் இருந்தபடி படைதிரட்டி, கிடைத்த ஆயுதங்களுடன் போரிட்டு வெள்ளை ஆதிக்கத்தை எதிர்த்து நின்ற புரட்சிகர நிகழ்வைப் புறந்தள்ளிவிட்டு அதன் பிறகு அரை நூற்றாண்டு கழித்து நடந்த ஒரு கிளர்ச்சியை முதல் விடுதலைப் போராட்டம் என்று வரலாற்றைத் திரிப்பது ஒன்றிச் செயல்படுகிற தன்மைக்குப் புறம்பான ஒன்றா இல்லையா?

வேலூர் புரட்சிக்கு ஓராண்டுக்கும் முன்பு சூழ்ச்சியால் கைது செய்யப்பட்டு 1805 சூலை 31ஆம் நாள் தூக்கிலிடப்பட்ட தீரன் சின்னமலை,

ஈரோடு காவிரி ஆற்றின் கரையில் 1801ஆம் ஆண்டும் ஓடாநிலையில் 1802ஆம்

ஆண்டும் அறச்சலூரில் 1804ஆம் ஆண்டும் என இடையறாத போரில் ஆங்கிலேயப் படைகளை விரட்டியடித்தானே, அது விடுதலைப் போரில் சேருமா? சேராதா?

1801ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் நாள் ‘ஜம்புத் தீவு பிரகடனம்’ என்ற பெயரில் திருச்சி திருவரங்கத்திலிருந்து வெளியிட்ட அறிக்கை மூலம் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒருங்கிணைந்த போருக்கு அறைகூவல் விடுத்துப் படை நடத்தி அதே ஆண்டு அக்டோபர் 24ஆம் நாள் திருப்பத்தூர் கோட்டையில் தூக்குக் கயிற்றில் வீரமரணம் தழுவிய மருது சகோதரர்கள் விடுதலைப் போராளிகள் பட்டியலில் சேர மாட்டார்களா?

ஆங்கிலப்படை தன் கணவனைக் கொன்று கைப்பற்றிய சிவகங்கைச் சீமையை மீட்க ஹைதர்அலியின் துணையோடு பெரும்படை திரட்டி ஆங்கிலேயரை விரட்டி அடித்துவிட்டு அரசவையின் ராணியாக விளங்கிய வேலுநாச்சியாரும், வேலு நாச்சியார் படையின் தற்கொலைப் போராளியாக வெள்ளையரைச் சிதறடித்த குயிலியும், 1799ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பெரும் போரைச் சந்தித்து அதே ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் கயத்தாரில் தூக்கிலிடப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனும், ஊமைத்துரையும், வீரன் சுந்தரலிங்கமும் நடத்தியது விடுதலை போர்களா இல்லையா?

இதை எல்லாம் கடந்து வெள்ளையருக்கு எதிராக சுதேசி வணிகம் என்ற பெயரில் கப்பலோட்டிய தமிழன் வஉசி நடத்தியது விடுதலைப் போராட்டம் இல்லையா ?

வஉசி செக்கிழுத்தும் கல்லுடைத்தும் சிறையிலே சித்திரவதை செய்யப்பட்டது வரலாற்றிலே பேசக்கூடாதவையா?

இவற்றில் எந்தக் கேள்விக்கும் ‘ஒன்றா’ அரசிடமிருந்து பதில் வரப்போவதில்லை என்பது நமக்குத் தெரியும். அதேநேரம் இந்து - இந்தி - இந்திய மயக்கத்தில் ஆழ்த்தப்படுகிற இளைஞர்களுக்கு வரலாற்று உண்மைகளை எடுத்துக்காட்டவே இந்தக் கேள்விகளை முன்வைக்கிறோம்.

ஒவ்வோரு ஆண்டும் சனவரி 26 குடியரசு நாளில் தில்லி செங்கோட்டை ராஜபாதையில் வலம் வருகிற அலங்கார ஊர்திகளில் இப்படியான வரலாறுகள்தானே வலம் வரத் தகுதியாக இருக்க முடியும்!

ஆனால், ஆங்கிலேயே அரசுக்கு சேவகம் செய்தும், தயவு பெற்றும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர்கள், ஆங்கிலேய அரசுக்கு எதிரான போராட்டங்களைக் காட்டிக் கொடுத்தவர்கள், அடக்குமுறை கண்டு அஞ்சி மன்னிப்புக் கடிதங்களால் மண்டியிட்டு உயிர்ப்பிச்சை கேட்டவர்கள் என்று நீளுகிற பட்டியலின் வாரிசுகளுக்கு, வீரபாண்டிய கட்டபொம்மனும், மருது சகோதரர்களும், வேலுநாச்சியாரும், தீரன் சின்னமலையும், கப்பலோட்டிய தமிழன் வ உ சி யும் ஏற்புடையவர்களாக மாட்டார்கள் என்பதுதானே உண்மை!

அதனால்தான் ராஜபாதை அலங்கார அணிவகுப்பில் இந்த மாவீரர்கள் மறுதலிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், தமிழ்நாட்டின் ஆட்சியிலிருந்து அடிமைகள் அகற்றப்பட்டு சுயமரியாதை அரியணை ஏற்றப்பட்ட காரணத்தால், டில்லிப் பட்டணத்தில் ஏற்க மறுத்த எம்மாவீரர்களின் அணிவகுப்பை செந்தமிழ் நாட்டில் நகர்வலம் விடுவோம் என்று ஓங்கி முழங்கியிருக்கிறார் தமிழ்நாட்டு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.

ஆம்! சனவரி 26 அன்று தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம், பட்டிதொட்டியெங்கும், நாடு நகரமெல்லாம் வேலுநாச்சியாரும் தீரன் சின்னமலையும் கப்பலோட்டிய தமிழனும் ஊர்வலம் செல்லட்டும்!

‘வீரம் நாம் கேட்ட தாலாட்டு, மரணம் நாம் ஆடிய விளையாட்டு!’ என்கிற வரலாற்றை டில்லியின் செவிகளில் அறைந்து சொல்வோம்! அணிவகுப்போம்! தமிழனென்று சொல்லுவோம்! தலை நிமிர்ந்து நிற்போம்!

கா.சு.நாகராசன்