புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறந்த பிறகு பல்வேறு செய்திகள் வந்தவண்ணமே உள்ளன. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதமர் முதலமைச்சர்கள், ஆளுநர்கள், உள்ளாட்சி அமைப்பின் தலைவர்கள் பற்றிய அதிகாரங்கள் தெளிவான முறையில் வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்தந்த அமைப்புகளுக்கும் தலைவர்களுக்கும் வழங்கப்பட்ட அதிகார எல்லையை மீறி தன்னிச்சையாக தான்தோன்றித்தனமாக ஒன்றிய அரசின் நிருவாகம் செயல்படுவது பலருக்கு அதிர்ச்சியாகக்கூட இருக்கலாம்.

சனாதனத்தை முழுமையாகக் கடைப்பிடிக்கும் ஆட்சியாக பாஜக ஒன்றிய அரசு செயல்பட வாய்ப்புள்ளது என்பதை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வரையறைக் குழுத் தலைவராக இருந்த அண்ணல் அம்பேத்கர் அன்றே கணித்து இருந்தார். அரசமைப்புச் சட்ட அவையில் 1948 நவம்பர் 4ஆம் நாள் அரசமைப்புச் சட்டத்தின் வரைவு (Draft) பற்றிய தீர்மானத்தில் அண்ணல் அம்பேத்கர் உரை நிகழ்த்திய போது, “அரசமைப்புச் சட்ட நெறிகளுக்கும் நிருவாகத்திற்கும் நெருங்கிய தொடர்பும் உறவும் உள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் நெறிகளை ஒட்டி நிருவாகம் இயங்கினால் சரியான முறையில் அமையும். அரசமைப்புச் சட்டத்தின் விதிகளை மாற்றாமலேயே நிருவாகம் அரசமைப்புச் சட்ட உணர்வுகளுக்கு எதிராகவும் முழு அளவில் செயல்பட வாய்ப்புள்ளது. அரசமைப்புச் சட்ட நெறியானது இயற்கையாக ஏற்படாது. அதனை வளர்த்தெடுக்க வேண்டும். நமது மக்கள் இதை உணர்ந்து புரிந்து செயல்பட வேண்டும். இந்தியாவின் ஜனநாயகம் இந்திய மண்ணின் ஒரு அலங்காரமாகும். அடிப்படையில் அது ஜனநாயகத்திற்கு எதிரானது (Constitutional morality is not a natural sentiment. It has to be cultivated. We must realize that our people yet to learn it. Democracy in India is only a top dressing on an Indian soil, which is essentially undemocratic)” ஆகும் என்று அறிவுறுத்தினார்.modi in new parliament 670இந்த அலங்காரத்தைத் தான் பிரதமர் நரேந்திரரின் உடை நடை பாவனையிலும் அதை வழி நடத்திய ஆகம வேதங்களை ஓதிய பார்ப்பனர்களின் செயல்களிலும் வேடிக்கை பார்த்து மகிழ்ச்சியால் துள்ளிய அரை நிர்வாண ஆதினங்களின் ஆட்டங் களிலும் காண முடிந்தது. இதுவரை புதிய நாடாளுமன்றத்தின் வெளி வடிவத்தைத்தான் பார்த்தார்கள். ஆனால் உட்புறம் செங்கோலைவிட ஆபத்தான ஒரு மதச்சார்பான சிலைகள் வடிவங்கள் எல்லாம் அமைக்கப்பட்டுள்ளன என்பது வெளியாகி வருகிறது. கோல்களில் பல வகை உண்டு. அவற்றில் ஒன்று கண்ணக்கோல். செங்கோல் பிடிக்கும் ஒருவன் கண்ணக்கோல் பிடிக்கும் கள்வனென்றால் நீதியெங்கே குடியிருக்கும் என்ற ஒரு திரைப்படப் பாடல் வரிகள் இன்றைய புதிய நாடாளுமன்றக் காட்சிகளை அம்பலப்படுத்துவது போல் அமைந்துள்ளது அல்லவா?

இந்திய அரசியல் வரலாற்றை உன்னிப்பாக ஆய்வு செய்தால் காங்கிரசுக் கட்சி தொடக்கக் காலத்தில் எவ்வாறு செயல்பட்டது. காங்கிரசு இயக்கம் 1885ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போது இருந்த கருத்துக்கு முற்றிலும் எதிரான இந்துத்துவா கருத்துகளைப் புகுத்த 1909ஆம் ஆண்டிலிருந்தே பல தலைவர்கள் முற்பட்டனர். 1885 டிசம்பர் 29 அன்று மும்பையில் நடந்த முதல் காங்கிரசு அமர்வில் அன்றைய காங்கிரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உமேஷ் சந்தர் பானர்ஜி மத, இன, மாநில வெறுப்புணர்வுகளை எல்லாம் கடந்து நாம் இயக்கத்தைக் கட்டமைக்க வேண்டும்; ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்று கூறினார். சுருங்கக் கூறின் ஒருங்கிணைந்த தேசியம் (Inclusive Nationalism) என்று இதை அழைக்கலாம். காங்கிரசின் இரண்டாவது தலைவராக இருந்த தாதா பாய் நௌரோஜி பிரித்தானியப் பொருளாதாரச் சுரண்டலை எதிர்த்துப் போராடி உள்நாட்டுப் பொருளாதாரக் கூறுகளை வளர்த் தெடுப்பதுதான் தேசியம் என்று கூறினார். குறிப்பாக 1886இல் உள்ள ஆவண அறிக்கையில் நாட்டினுடைய பொது நலன் களைக் கருதி இந்துக்கள் கிறித்தவர்கள் இசுலாமியர்கள் பார்சிகள் இடம் பெற்று பொதுவான மதச்சார்பற்ற தன்மைக் கூறுகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1895இல் காங்கிரசு தலைவராக இருந்த சுரேந்திர நாத் பானர்ஜி சீக்கியர்கள் பார்சிகள் கிறித்தவர்கள் இசுலாமியர்கள் இந்துக்கள் இணைந்த பொதுத்தளத்தில்தான் நாம் நிற்க வேண்டும். இதுதான் இந்தியாவை ஒருங்கிணைக்கும் காங்கிரசு அமைப்பாகும் (It is the Congress of United India) என்று குறிப்பிட்டார்.

ஆனால் காலப்போக்கில் இந்த நிலைமைகள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தோன்றிய பிறகு மாறத் தொடங்கியது. காங்கிரசு இயக்கத்தில் திலகர், லாலா லஜபதி ராய் போன்ற மதவாதப் பிற்போக்குத் தலைவர்களின் கருத்துகளால் காங்கிரசு இயக்கத்திற்குள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நுழைந்துவிட்டது. 1909க்குப் பிறகு எப்படிச் செயல்படத் தொடங்கியது என்ற உண்மைகள் தெரிய வரும். மதன் மோகன் மாளவியா 1909, 1932ஆம் ஆண்டுகளில் இரு முறை காங்கிரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனால் காங்கிரசு இயக்கத்தில் பங்கு பெற்றுக்கொண்டே அகில பாரத இந்து மகா சபா என்ற இந்துத்துவா அமைப்பை 1915இல் உருவாக்கினார். இந்த அமைப்பின் வழியாக இந்துத்துவா கொள்கைகள் காங்கிரசுக் கட்சியில் இடம் பெறுவதற்கு ஒரு அழுத்தம் தரும் அமைப்பாக இயக்கினார். இக்காலக்கட்டத்தில் 1925ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று விஜயதசமி நாளன்று அவரது இல்லத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புத் தொடங்கப்பட்டது. கேசவ பாலிராம் ஹெட்கேவர் தலைமையில் ஆர்.எஸ்.எஸ்.தொடங்கிய நேரத்தில் அவருடன் பங்கு பெற்றவர்கள் மூஞ்சே, வி.டி.சவர்காரின் அண்ணன் பாபா ராவ் சவர்கார், பரஞ்ச்பே, வி.வி. தக்கார் ஆகிய 4 நபர்கள். இந்த 5 மத வெறியர்களால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு பல்வேறு நிலைகளில் பல்வேறு வடிவங்களில் பல்வேறு தளங்களில் இந்தியா முழுவதும் ஊடுருவியது.

இந்தத் தீமையான ஒரு பாசிச வடிவத்தைக் கண்டு அஞ்சி மனம் நொந்த மோதிலால் நேரு, “1926ஆம் ஆண்டு தனது மகனான ஜவகர்லால் நேருவிற்கு ஒரு எச்சரிக்கை மடல் எழுதினார். அப்போது காங்கிரசுப் பல இடங்களில் தேர்தல்களில் போட்டியிட்டது. அதை உற்று நோக்கிய மோதிலால் நேரு மத வெறுப்புணர்ச்சியும் அதிக அளவில் வாக்காளர்களுக்குப் பணம் அளித்து ஊழல் செய்வதுதான் இன்றைய நடைமுறையாக உள்ளது. இதைக் கண்டு முழுமையாக நான் மனச்சோர்வை அடைந்துள்ளேன். பொது வாழ்விலிருந்து விலகிவிடலாமா என நான் கடுமையான முறையில் சிந்தித்து வருகிறேன். எனது வாழ்நாளை எப்படி இனிமேல் கழிப்பது என்பதில் கவலையுற்று உள்ளேன். கவுகாத்தி காங்கிரசு மாநாட்டிற்காகக் காத்திருக் கிறேன். அதுவரை அமைதியாக இருப்பேன். மாளவியா, லாலா லஜபதி ராய் கும்பல் பிர்லா அவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு காங்கிரசைக் கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் (The Malavia-Lala gang aided by Birla’s money are making frantic efforts to capture the congress)” என்று அம்மடலில் குறிப்பிட்டுள்ளார்.

 1928ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் நாள் சைமன் குழுவிற்கு எதிராக லாகூரில் நடந்த ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கினார் லாலா லஜபதி ராய். அமைதியான முறையில் போராட்டம் அமைந்தாலும் பிரித்தானியக் காவல் அதிகாரி ஸ்காட், லாலா லஜபதிராயைக் கடுமையான முறையில் தாக்கினார். லாலா லஜபதி ராய் நவம்பர் 17 அன்று 1928ஆம் ஆண்டு மறைந்தார்.

அப்போது இந்தியாவில் பிரித்தானிய அடக்குமுறை ஒடுக்குமுறையை எதிர்த்து நிற்க எந்த ஆண்மகனும் இல்லையா? என்ற கேள்வியை வங்கத்தின் சிங்கம் என்று போற்றப்பட்ட சி.ஆர்.தாசின் மனைவியும் விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்ற வீராங்கனையுமான வசந்தி தேவி எழுப்பினார். ஆனால் இந்துத்துவா கொள்கைளை ஆதரித்த காங்கிரசுக் கட்சியின் சில தலைவர்களும் இந்து மகாசபையைச் சார்ந்தவர்களும் மௌனமாக இருந்தார்கள். இந்த எழுச்சிக் குரலைக் கேட்டு பிரித்தானியக் காவல் அதிகாரி ஸ்காட்டை பழி வாங்க முற்பட்டார் மாவீரர் பகத்சிங். ஆனால் ஸ்காட்டுக்குப் பதிலாக சான்டரஸ் என்ற மற்றொரு அதிகாரியைத் தான் பகத் சிங்கும் அவரது நண்பர்களும் பழி தீர்த்தார்கள். இதன் தொடர்ச்சியாக 1929 ஏப்ரல் 8 அன்று அன்றைய பாராளு மன்றமாக இயங்கிய மத்திய சட்டமன்றத்தின் மீது மாவீரர் பகத் சிங் தலைமையில் வெடிகுண்டு வீசப்பட்டது. மோதிலால் நேரு, ஜின்னா, மாளவியா ஆகியோர் அப்போது மன்றத்து நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருந்தனர்.

இந்துஸ்தான் சோசலிசக் குடியரசுக் கட்சியின் சார்பில் பகத் சிங் மற்ற தோழர்கள் இதில் பங்கு பெற்றனர். பிரித்தானிய ஏகாதிபத்தியம் ஒழிக என்று முழக்கமிட்டனர். வழக்கு விசாரணையைத் தீவிரப்படுத்திய பிரித்தானிய அரசு பகத் சிங், ராஜகுரு சுகதேவ் ஆகியோர்க்கு மரண தண்டனை வழங்கியது. மத்தியச் சட்டமன்றத்தில் இவ்வழக்குப் பற்றி ஜின்னா ஒருவர்தான் சிறந்ததொரு உரையை நிகழ்த்தினார். “இந்தத் தீவிரவாதத்திற்கு பிரித்தானிய ஏகாதிபத்தியம்தான் காரணம். வெடிகுண்டு வெடிக்கும் போது மத்திய நாடாளுமன்றத்தில்தான் இருந்தேன். எந்த உயிரிழப்பும் இல்லை. இந்த வழக்கைத் தீவிரப்படுத்தித் தண்டனை வழங்க பிரித்தானிய ஏகாதிபத்திய அரசு முயற்சி செய்வது தவறு” என்று சுட்டிக் காட்டினார். பலர் மத்திய நாடாளுமன்றத்தில் பேசினாலும் பிரித்தானிய ஏகாதிபத்திய அரசு மரண தண்டனை வழங்கியது. அப்போது மீண்டும் ஜின்னா ஒரு கருத்தை முன்மொழிந்தார். இந்த வழக்கில் உரிய முறையில் விசாரணையை மேற்கொள்வதற்குப் பதிலாக பிரித்தானிய அரசு அவர்களை விசாரிக்க விரும்புகிறதா? அல்லது துன்புறுத்த விரும்புகிறதா? (do you wish to prosecute them or persecute them?) என்று ஜின்னா முழங்கினார். மேலும் நீதி நெறியைச் சிறிதளவாவது பின்பற்றுகிற எந்த ஒரு நீதிபதியும் மனச்சான்று இன்றி விசாரணை மாண்புகளைப் புறந்தள்ளி இது போன்ற மரண தண்டனையை வழங்க மாட்டார் என்றும் கூறினார். இது போன்ற பல நிகழ்வுகள் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து 1947 வரை நடந்தேறின. கோழை சாவர்கார் போன்றே இந்த இந்துத்துவாவாதிகள் பிரித்தானிய ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக வாய் திறக்கவில்லை. மாறாக பிரித்தானிய அரசை ஆதரித்தார்கள்.

காங்கிரசுக் கட்சிக்குள் ஊடுருவியதால்தான் 1947ஆம் ஆண்டு விடுதலைப் பெற்ற இந்தியாவில் ஜவகர்லால் தலைமையில் அமைந்த முதல் அமைச்சரவையில் இந்து மகா சபையைச் சார்ந்த சியாமா பிரசாத் முகர்ஜி முதன்மையான தொழில் துறை அமைச்சராகப் பொறுப்பேற்க முடிந்தது. 1948ஆம் ஆண்டு மகாத்மா காந்தி ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் படுகொலை செய்யப்படுகிறார். இந்தப் படுகொலைக்குச் சதித்திட்டம் தீட்டிய கோழை சாவர்கர் ஒரு கொடியவர் என்பதை இந்திய வரலாற்றின் பல நிகழ்வுகளில் காண முடிகிறது. தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று மன்னிப்புக் கடிதம் கேட்ட போது காந்தியின் ஆதரவைக் கோரியவர்தான் இந்த சாவர்கர். ஆனால் சனாதனவாதி என்று தன்னை அழைத்துக் கொண்ட காந்தி 1947க்குப் பிறகுத் தன் நிலையை மாற்றிக் கொள்கிறார். இந்து-முசுலிம் ஒற்றுமை பற்றிப் பேசுகிறார் என்பதால் தான் உரியக் காவல் துறை பாதுகாப்பு இன்றி இருந்த காந்தியைச் சுட்டுக் கொன்றான் கோட்சே.

ஆனால் இந்த வழக்கு விசாரணையின் போது சாவர்கர் மீண்டும் ஒரு கோழை போலச் செயல்பட்டான் என்பதை அண்மையில் வெளிவந்த கொலையாளி மன்னர் பக்கிரி (The Murderer-The Monarch and the Fakir, 2021) என்ற தலைப்பில் வந்த நூலின் ஆசிரியர்களான திரு.அப்பு எஸ்தோஸ் சுரேசு, பிரியங்கா கோட்டமாரு ஆகியோர் சாவர்கர் காந்தி கொலை வழக்கில் எப்படித் தொடர்புடையவர் என்பதைப் புதிய தரவுகளைக் கொண்டு பல கருத்துகளை முன் வைத்துள்ளனர். காந்தி கொலையாளிகளுடன் சாவர்கர் நீண்ட நாட்கள் தொடர்பில் இருந்தார் என்பதற்குப் பல தரவுகளை இந்நூலில் அளித்துள்ளனர். காந்தியைச் சுடுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கோட்சே தனது ஆயுள் காப்பீட்டு ஆவணத்தைத் தன் பெயரில் இருந்து ஆப்தே மனைவி பெயரிலும் தனது தம்பி கோபால் கோட்சே பெயரிலும் மாற்றியுள்ளார்.

1925ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவாவதற்கும் சாவர்கர்தான் காரணமாக இருந்தார். சாவர்கர், ஆப்தே, கோட்சே ஆகிய மூவரும் பார்ப்பனர்களே என்று இந்நூலில் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு புதிய புதிய நூல்கள் வட நாட்டிலிருந்து வெளியிடப்படும் நேரத்தில் கோழை கொலைகார சாவர்கர் பிறந்தநாளில் புதிய நாடாளுமன்ற வளாகத்தினைத் திறப்பது எத்தகைய மோசடி என்பதை மக்கள் உணரும் காலம் வந்துவிட்டது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நேரடியான இந்துத்துவா கொள்கையைப் பரப்பும் அமைப்புகள் இந்து மகாசபை, விசுவ இந்து பரிசத், பஜ்ரங் தளம், ராம ஜென்ம பூமி அறக்கட்டளை, இந்து ஜனஜாக்குருதி சமிதி, வீடு திரும்புதல் தர்ம ஜாக்ரண் சமிதி (இந்துக்களிலிருந்து மதம் மாறியோரை மீண்டும் இந்துக்களாக மதம் மாற்றும் அமைப்பு) முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் (முஸ்லிம்களின் வளர்ச்சிக்கான அமைப்பு) ராஷ்டிரிய சீக்கியர் இயக்கம், இந்து முன்னணி, தமிழ்நாடு இந்து இளைஞர் சேனை, விராட் இந்துஸ்தான் சங்கம் என்று பல வடிவங்களில் உள்ளன.

மக்களுக்குத் தொண்டு செய்யும் அமைப்புகள் என்ற பெயரில் ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு வடிவங்களில் இந்த அமைப்புகளுக்கு உதவி செய்யும் அமைப்புகள் உள்ளன. இவை செய்யும் நிதி மோசடிகள் எத்தகையன என்பதை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த சட்டமன்றத் தொடரில் சுட்டிக் காட்டினார். தொண்டு நிறுவனம் என்ற போர்வையில் இயங்கி வரும் அட்சய பாத்திரம் என்ற அமைப்பு இந்துத்துவா சார்புடையது. இந்த அமைப்புக்குச் சட்டத்திற்குப் புறம்பாக நிலம் எடப்பாடி ஆட்சியில் அதிமுக அரசு மிரட்டப்பட்டு வழங்கப்பட் டுள்ளது. தமிழக மக்கள் அளிக்கும் வரிப்பணத்தில் பல கோடி ரூபாயை இந்நிறுவனத்திற்கு ஆளுநர் இரவி நிதி விதிகளுக்குப் புறம்பாக மாற்றம் செய்துள்ளார் என்று சட்டசபையிலேயே அறிவித்தார். இதுவரை இது தொடர்பாக ஆளுநர் இரவி எந்தவித உரிய விளக்கத்தையும் அளிக்க முன் வரவில்லை.

இதுபோன்ற தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் அதானி, அம்பானி போன்ற குஜராத்திய நிறுவனங்களும் மற்றைய முதலாளித்துவ நிறுவனங்களும் ஏராளமான நிதியுதவிகளை அளித்து வருகின்றன. இதைப் பற்றி உரிய ஆய்வை நேர்மையான உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் மேற்கொண்டால் பல உண்மைகள் வெளிவரும். இராமாய ணத்தில் வாலியை மறைந்திருந்து தாக்கிய இராமன் காட்டிய சதி வழிதான் இந்த சங்க பரிவாரங்களின் நடைமுறையாகும். இதற்குப் பல முன்னுதாரணங்கள் உண்டு. 1951ஆம் ஆண்டு இந்துத்துவாவின் அரசியல் வடிவான ஜனசங்கத்தை உருவாக்கியவர் சியாமா பிரசாத் முகர்ஜி. ஜனசங்கம் அரசியல் கட்சியாக உருவெடுத்த பிறகு அதற்கு நானாஜி தேஷ்முக், பால்ராஜ மத்தோக் போன்ற தலைவர்கள் இணைந்து பணி யாற்றினார்கள். இந்த இரு தலைவர்களும் தங்களின் அரசியல் நடவடிக்கைகளில் ஆர்.எஸ்.எஸ். தலையிடுகிறது என்று குற்றம் சாட்டினர். இவர்கள் பதவியில் நீடிக்க முடியவில்லை.

இரத யாத்திரை மேற்கொண்டு இந்தியாவில் மதவெறியைத் தூண்டிய அத்வானி, ஆர்.எஸ்.எஸ். கூறியதனால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். 2005ஆம் ஆண்டு சென்னையில் கூடிய பாரதிய ஜனதா கட்சியின் கூட்டத்தில் இவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தியது. வாஜ்பாய் வலியுறுத்தியதனால் அத்வானி நீக்கப்படவில்லை. இந்த அத்வானி யார்? 2002இல் குஜராத்தில் கலவரம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான இசுலாமியர்கள் கொல்லப்பட்ட போது முதல்வராக இருந்த நநேரந்திர மோடியைப் பதவி விலக வேண்டும் என்று பலரும் வலியுறுத்திய போது அதைத் தடுத்து நிறுத்திக் காப்பாற்றியவர்தான் அத்வானி.

அத்வானி மீது ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு ஏன் இந்தக் கோபம்? 2005ஆம் ஆண்டு மே மாதம் அத்வானி பாகிஸ்தானிற்குச் சென்ற போது அங்கு இருந்த பாரதப் போரைச் சித்தரிக்கும் ஒரு கோயிலுக்குச் சென்றார். அதற்குப் பிறகு ஜின்னா நினைவிடத்திற்குச் சென்றார். இந்தியாவை விடச் சிறந்த முறையில் இந்துக் கோயில்களை மிகவும் தூய்மையான முறையில் பாகிஸ்தான் பாதுகாக்கிறது என்று குறிப்பிட்டார். ஜின்னாவை ஒரு தேசியத் தலைவர் என்று குறிப்பிட்டார். சில மாதங்களிலேயே இவர் தலை உருண்டது. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக இருந்த மோடியைக் காப்பாற்றிய அத்வானி எங்கே இருக்கிறார்? வாஜ்பாயின் அமைச்சரவையில் நிதியமைச்சராக பணியாற்றிய ஜஸ்வந்த் சிங் ஜின்னாவைப் பற்றி 2009ஆம் ஆண்டு ஒரு நூல் எழுதினார். இவரும் தூக்கியடிக்கப்பட்டார். துரத்தப்பட்டார். இன்னொருவர் யஷ்வந்த சின்கா. சங்க பரிவாரங்கள் இவரை விரும்பவில்லை. இவரும் தூக்கியடிக்கப்பட்டார்.

இந்தியக் காங்கிரசுக் கட்சியில் இணைந்து பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.வெங்கட்ராமன் காமராஜர் அமைச் சரவையில் தொழில்துறை அமைச்சராகப் பணியாற்றியவர். 1976இல் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட போது காங்கிரசை விட்டு விலகி நின்றார். மீண்டும் 1980இல் காங்கிரசு ஒன்றிய அரசில் ஆட்சியமைத்த போது நிதியமைச்சராக, பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பணியாற்றிப் பின்பு துணைக் குடியரசுத் தலைவராகவும் குடியரசுத் தலைவராகவும் பணியாற்றினார்.

2004இல் ஜெயலலிதா ஆட்சியில் சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஆந்திராவில் கைது செய்யப் பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இதைக் கண்டித்து தில்லியில் உண்ணாநிலைப் போராட்டத்தில் வாஜ்பாயுடன் இணைந்து வெங்கட்ராமன் கலந்து கொண்டார். அப்போது காங்கிரசுத் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் நிதி அமைச்சராகப் பணியாற்றிய பிரணாப் முகர்ஜி அமைச்சரவைக் கூட்டத்திலேயே மாநில அரசிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதே பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து 2017இல் ஓய்வு பெறுகிறார். 2018இல் நாக்பூர் சென்று ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார். 2019இல் பிரணாப் முகர்ஜிக்கும் ஜனசங்கத்தின் தலைவராக இருந்து நானாஜி தேஷ்முக்கிற்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இத்தகைய நிகழ்வுகள் எல்லாம் 2014இல் பாஜக நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசை ஆட்டிப்படைப்பது சங்க பரிவாரங்கள்தான் என்பதையே உறுதி செய்கின்றன.

1966 நவம்பர் 7 அன்று காங்கிரசு ஆட்சியில் அகில இந்தியக் காங்கிரசுத் தலைவராக இருந்தப் பெருந்தலைவர் காமராஜரின் இல்லம் ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரங்களால் தாக்கப்பட்டது. அப்போது தில்லியில் ஒன்றிய அரசின் கல்வி ஆலோசகராக இருந்த கல்வி நெறி காவலர் நெ.து.சுந்தர வடிவேலு இந்தத் தாக்குதல் சம்பவத்தை நினைவலைகள் என்ற நூலில் குறிப்பிடுகிறார். தங்கள் வீடு தாக்கப்பட்டதா? என்று ஆம்பூர் ராஜகோபால் நாயுடு வினவினார். “ஆமாங்கறேன். இன்று மத்தியானம் என் வீட்டைச் சுற்றி கலாட்டா செய்தார்களாம். எனக்கு ஒன்றும் தெரியாது. நான் வழக்கம் போலப் பகல் உணவு உண்டதும் போய் உறங்கிவிட்டேன். தூங்கிக் கொண்டிருந்த என்னை உதவியாளர் அம்பி வந்து எழுப்பி ஒன்றும் சொல்லாமல் நேரே பின்பக்க நுழைவாயிலின் வழியாக அழைத்துச் சென்று காரில் ஏற்றி இங்குக் கொண்டு வந்துருக்கான். வருகிற வழியில் சாமியார்கள் என் வீட்டை முற்றுகையிட்டார்கள். தீ மூட்ட முயன்றார்கள். அவ்வளவே எனக்குத் தெரியும். வெறிப்பயல்கள் இருந்தால் என்ன செய்திருப்பார்களோ சொல்ல முடியாது” எனக் கலகலப்பாக காமராஜர் பதில் கூறினார். 1948இல் காந்தி கொலை செய்யப்பட்டார். காமராஜர் இல்லம் 1966ஆம் ஆண்டு தாக்கப்பட்டது.

சாதி வெறி, கொலை வெறி, மதவெறி தளங்களில்தான் சனாதனம் இயங்குகிறது. தமிழ்நாட்டில் மட்டும்தான் இவர்களுடைய ஆட்டம் முழு அளவில் நடைபெறவில்லை. இதன் தொடர்ச்சிதான் புதிய நாடாளுமன்ற வளாகத் திறப்பும் தொடர்ந்து நடைபெற்ற சனாதன ஆதிக்க நிகழ்வுகளும் என்பதைப் பறைசாற்றுகின்றன. சங்க பரிவாரங்களின் சர்வாதிகார ஆட்சிதான் ஒன்றிய அரசில் கோலோச்சுகிறது என்பதும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்வு என்ன என்பதை ஆந்திராவைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மனித உரிமை செயல்பாட்டாளர் மறைந்த கே.ஜி.கண்ணபிரான் எழுதிய இந்திய அரசமைப்புச் சட்டம் பேசுகிறது (The Speaking Constitution, 2022, p.194) என்ற நூலில் சுட்டப்பட்டுள்ளது.

பழமைவாதத்தையும் தெளிவில்லாத மதம் சார்ந்த கருத்துகளையும் தான் உயர்ந்த சாதி என்ற எண்ணத்தையும் மக்கள் மீது பார்ப்பனர்கள் திணித்ததற்கு எதிராகச் சுயமரியாதை இயக்கத்தின் வழியாகப் பெரியார் ஈ.வெ.ராமசாமி ஓர் அறிவுப் போரைத் தொடுத்தார். இத்தகைய உறுதியான மரபு அழியாமல் தொடர்வதுதான் பிரேமானந்தாவையும் சங்கராச்சாரியாரையும் சட்டத்தின் வழியாகத் தண்டிப்பதற்கு உதவியது என்று விளக்கி       திராவிடம் ஒன்றே ஆரியத்தைச் சாய்க்கும் அறிவாயுதம் என்பதை மூத்த வழக்கறிஞர் கண்ணபிரான் தனது நூலில் அழகுறத் தெளிவுறக் குறிப்பிட்டுள்ளார்.

சனாதனம் சாய, மாநிலங்கள் முழு உரிமை பெற, மதச்சார்பின்மை தழைத்தோங்க, பன்முகத் தன்மைகள் மீண்டும் ஏற்றம் பெற சங்க பரிவாரங்களின் அடிமையாகச் செயல்படும் ஒன்றிய ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும். அப்போது தான் மக்கள் ஜனநாயகம் மீண்டும் உயிர்த்தெழும்.

பேராசிரியர் மு.நாகநாதன்

Pin It