மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்ய மூன்று அடிப்படைகள் தவிர்க்க முடியாதது.

1) நிலம் 2) நீர் 3) மனித உழைப்பு.

farmers against high voltage towerஇந்தியா போன்ற தொழில் வளர்ச்சி தற்சார்பற்றதாக இருக்கும்போது இங்கு பெரும்பான்மையான மக்கள் உழவுத் தொழிலையே நம்பி வாழ வேண்டி உள்ளது.

உணவுத் தேவையை நிறைவு செய்வதில் சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் பங்களிப்பே முதன்மையானது. இந்தச் சூழலில் உலக மயத்தின் விளைவாக உருவாகியுள்ள மேட்டுக்குடி நுகர்வியச் சந்தைக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதே நாட்டின் வளர்ச்சியாக, தொழில் வளர்ச்சியாக ஒரு பிம்பம் கட்டமைக்கப் பட்டுள்ளது.

இந்த மேட்டுக்குடித் தேவைக்கான தொழிலுக்காக மக்கள் பயன்படுத்தி வரும் வாழ்வாதாரங்களை முற்றாக கார்பரேட் முதலாளிகள் அபகரித்து வருகின்றனர்.

மத்திய, மாநில அரசுகள் மக்களின் வாழ்வாதரங்களான நிலம், நீர், காடுகள், கடல் வளங்கள் ஆகிய அனைத்தையும் மக்களிடமிருந்து பறித்து கார்பரேட் முதலாளிகளுக்குத் தாரை வார்த்து வருகின்றனர். இந்த கார்பரேட் தரகு வேலை செய்வதற்கு அமைச்சர்களும், அதிகாரிகளும், பல அரசியல் தலைவர்களும் கோடி, கோடியாய் கமிசன் வாங்கித் தின்னும் பணப்பேய்களாக அலைகின்றனர்.

அறமற்ற முறையில் குவித்த பணத்தைப் பயன்படுத்தி தேர்தல்களில் பணத்தை இறைத்து பதவிகளைக் கைப்பற்றி விடுகின்றனர்.

பணம் > பதவி > அதிகாரம் என்ற இந்த நச்சுச் சக்கரத்தில் சமூகம் சிக்கித் தவிக்கிறது.

உழவர்கள் தமது நிலங்களைக் கார்பரேட் கம்பெனிகளின் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு போராடி வருகின்றனர்.

உயர்மின் கோபுரங்கள், கெய்ல், IDPL போன்ற நாசகாரத் திட்டங்கள், இராணுவத் தளவாட உற்பத்தி மையங்கள், விமான நிலைய விரிவாக்கம், எட்டுவழிச் சாலை, பெட்ரோலிய மண்டலமாக மாற்றியது போன்ற எண்ணற்ற பகட்டான பெயரில் வரும் திட்டங்கள் அனைத்துமே எளிய மக்களின் வாழ்க்கையை நாசமாக்கி அழிக்கும் மக்கள் விரோதத் திட்டங்களேயாகும்.

'தேசபக்தி' பற்றி அன்றாடம் வாய் கிழியப் பேசும் இந்த ஆட்சியாளர்கள் பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதரங்களை அழித்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாற்றி வருகின்றனர். வாழ்வாதாரம் இழந்த மக்களை சட்டப்படியே அகதிகளாக்கும் முயற்சியே NPR, NCR, CAA.

இந்தச் சதித் திட்டத்தை மூடி மறைக்க அந்நியர்களின் ஊடுருவலை குறிப்பாக இசுலாமிய மக்களின் ஊடுருவலைத் தடுப்பதாக தேசபக்தி ஆரவாரம்.

எனவே கார்பரேட்களின் நில ஆக்கிரமிப்புகளை எதிர்த்து மண் உரிமை காக்கப் போராடும் உழவர்களோடு அனைவரும் இணைந்து நிற்க வேண்டுகிறோம்.

நமது நிலம்! நமது உரிமை!

- கி.வே.பொன்னையன், தற்சார்பு விவசாயிகள் சங்கம்

Pin It