chennai rally against caaஎங்கெல்லாம் ஜனநாயகமும், நீதியும் மறுக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் மக்களை  குண்டாந்தடிகளே ஆட்சி செய்கின்றன. ஆனால் தன் மீதான ஒடுக்குமுறையும், பாரபட்சமும் அநீதியானது, மனிதகுல விரோதமானது என்று உணரும் மக்கள், அதை மாற்றியமைக்கத் திரண்டு விட்டால், அதில் இருந்து ஒருநாளும் பின்வாங்குவதில்லை. காரணம் கருத்து மக்களின் மனங்களை பற்றிக் கொள்ளும் போது அது ஒரு பெளதீக சக்தியாக மாறி விடுகின்றது.

மத்தியில் ஆளும் மோடி அரசானது ஒரு மதவெறி பிடித்த, நிர்வாகத் திறனற்ற  பாசிச அரசு என்ற உண்மையை நாளும் அதன் செயல்பாடுகளால் அது மெய்ப்பித்துக் கொண்டு இருகின்றது. ஒரு பக்கம் இந்தியாவை பார்ப்பனிய மயப்படுத்தும் வேலையையும், இன்னொரு புறம் இந்தியாவை பன்னாட்டு தரகு முதலாளிகளின் வேட்டைக் காடாகவும் மாற்றும் வேலையை சரியாய் செய்து வருகின்றது. இதன் மூலம் நாட்டில் நிலவும் அசாதாரணமான பொருளாதாரப் பெருமந்தமும், அதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள வேலை இழப்புகள், நுகர்வு வீழ்ச்சி, விலைவாசி உயர்வு போன்றவற்றில் இருந்து மக்களின் கவனத்தை திட்டமிட்டு மடைமாற்றி விடுகின்றது.

 காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் தங்கள் உரிமைக்காகப் போராடும் மக்களை மூர்க்கத்தனமாக, கொலைவெறியேடு பாய்ந்து இந்த அரசு ஒடுக்கிக் கொண்டு இருக்கின்றது. காஷ்மீரைத் துண்டாடி அதை ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றியதோடு, அங்கே நடக்கும் மனித உரிமை மீறல்கள் வெளி உலகிற்குத் தெரியாமல் இருக்க இணையதள சேவையைக் கூட முடக்கி, உச்சபட்ச பாசிசத்தை இந்த அரசு அரங்கேற்றி வருகின்றது. 

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற மத்திய அரசின் பாசிசத் திட்டங்களைக் கண்டித்து போராட்டம் நடத்திய அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மீதும், டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதும் திட்டமிட்ட தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் நுழைந்த டெல்லி காவல் துறை அங்கு நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் மீது மிருகத்தனமாக தாக்கிய வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் குறிப்பாக உ.பி.யில் இந்த சட்டங்களுக்கு எதிராகப் போராடுபவர்கள் மீது மிருகத்தனமான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

  நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற இஸ்லாமிய எதிர்ப்பு பாசிசத் திட்டங்களுக்கு எதிராக முஸ்லிம்களும் அவர்களுக்கு ஆதரவாக முற்போக்கு ஜனநாயக சக்திகளும் தீவிரமான போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். கேரளா போன்ற சில மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் இதை அமுல்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளன. இருப்பினும் மத்திய பாசிச மோடி அரசு கொண்டு வந்திருக்கும் இந்தப் பாசிசத் திட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் நடத்துவதென அதன் கொடூரத்தை உணர்ந்தவர்கள் முடிவு செய்திருக்கின்றார்கள். அந்த அடிப்படையில்தான் தமிழகத்திலும் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மத்திய மோடி அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, போராடும் மக்கள் மீது கடும் அடக்குமுறைகளை ஏவி விட்டிருக்கின்றது. சென்னையில் வண்ணாரப் பேட்டையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய இஸ்லாமிய மக்கள் மீது கொடூரமான தாக்குதலை இந்த அரசு திட்டமிட்டு நிகழ்த்தியதன் விளைவாக, சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. 19/02/2020 அன்று சென்னையில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேரணி சென்றிருக்கின்றார்கள். மேலும் திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கோவை, திருப்பூர், திருநெல்வேலி போன்ற ஊர்களிலும் பல்லாயிரக் கணக்கானோர் தீரத்துடன் பல்வேறு போராட்ட வடிவங்களில் தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றார்கள்.

 டெல்லி ஷாஹீன்பாக்கில் எப்படி இஸ்லாமியப் பெண்கள் தங்களின் குழந்தைகளுடன் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கின்றார்களோ அதே போல தமிழகத்திலும் இஸ்லாமியப் பெண்கள் தீரத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றார்கள். இஸ்லாமியப் பெண்கள் என்றால் புர்கா அணிந்து, கட்டுப்பெட்டித்தனமாக இருப்பவர்கள் என்ற தோற்றத்தை உடைத்தெறிந்து இருக்கின்றார்கள். ஒட்டுமொத்த தமிழக இஸ்லாமிய மக்களும் ஆளும் எடப்பாடி அரசின் மீது முற்று முழுக்காக நம்பிக்கை இழந்து இருக்கின்றார்கள் என்பதையே இது காட்டுகின்றது.

 இந்த அரசு குடியுரிமை சட்டத்தை தமிழகத்தில் அமுல்படுத்த மாட்டோம் என சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்பதுதான் போராடும் மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது. வெறும் வாய்வழியே அளிக்கப்படும் எந்த ஒரு உறுதிமொழியையும் மக்களிடம் நிச்சயம் நம்பிக்கையை விதைக்கப் போவதில்லை. காரணம் இந்த அரசு பாசிச மோடி அரசுடன் கள்ளத்தனமாக அல்ல, நேரடியாகவே நெருக்கமாக இருப்பதுடன் அதன் அடிமையாகவும் செயல்பட்டு வருகின்றது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போன்ற நபர்கள் ஒரு நான்காம் தர சங்கியைப் போல இஸ்லாமியர்களுக்கு எதிராக விஷத்தைக் கக்கும் பேச்சுக்களை பேசி வருகின்றார்கள். அந்தக் கட்சியின் எம்பியாக இருக்கும் ரவீந்தரநாத் குமார் இந்தப் பாசிச சட்டத்தை ஆதரித்து நாடாளுமன்றத்தில் வாக்களிக்கின்றார். அப்படி என்றால் இந்த அரசு ஒரு கட்டுபாடற்ற நிலையில், எவன் வேண்டுமென்றாலும் எது வேண்டுமென்றாலும்  பேசலாம் என்ற நிலையில் இருப்பதாகவே அர்த்தம். இந்த அரசு ஒட்டுமொத்தமாகவே மக்களின் நன்மதிப்பை இழந்திருக்கின்றது. மத்திய அரசு தமிழ் மக்களின் பொருளாதார வாழ்வியலின் மீதும், அவர்களது பண்பாட்டு வாழ்வியலின் மீது நடத்தும் அனைத்து தாக்குதல்களுக்கும் இந்த அரசு உடன்பட்டே வந்திருக்கின்றது.

 ஊழலிலும் அதிகார முறைகேடுகளிலும் கொடி கட்டிப் பறக்கும் இந்த அரசு நிச்சயம் சுயேட்சையான தன்மையுடன் முடிவெடுக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?. தமிழ் நாட்டு மக்கள் அதிமுகவைவும், பிஜேபியையும் ஒரே கட்சியாகவே பார்க்கின்றார்கள். அதிமுகவின் அமைச்சர் பெருமக்கள் அனைவருமே தங்களை சங்கிகளாகவே வெளிக்காட்டிக் கொள்கின்றார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இந்த அரசின் மீது நம்பிக்கை இழந்து மக்கள் வீதிக்கு வந்திருக்கின்றார்கள். மத்திய அரசு இந்த பாசிசத் திட்டங்களை திரும்பப் பெறும்வரை இந்தப் போராட்டம் வலுவாக தொடர வேண்டும். பார்ப்பன எதிர்ப்பு மரபின் தளப்பிரதேசமாக இருக்கும் தமிழகம் இந்தக் கொடிய இஸ்லாமிய  எதிர்ப்பு சட்டத்திற்கு எதிரான பெருந்திரள் மக்கள் போராட்டத்தை நடத்தி இந்தியாவுக்கே வழிகாட்டட்டும். 

- செ.கார்கி

Pin It