நாம் கெட்டவர்களின் உலகில் வாழ்வதாக நினைத்து அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றோம், ஆனால் உண்மையில் நாம் கேடு கெட்டவர்களின் உலகில் வாழ்ந்து வருகின்றோம். இப்பொழுதெல்லாம் கெட்டவர்கள் தங்களை கேடுகெட்டவர்களாகவே உலகிற்குப் பிரகடனப் படுத்துகின்றார்கள். அவர்களின் உலகத்தில் மான, அவமான உணர்ச்சி என்று எதுவுமே கிடையாது. அவர்களின் உலகங்கள் எப்போதும் இருட்டாகவே இருக்கின்றன. அவர்கள் வெளி உலகிற்கு ஏகபத்தினி விரதத்தின் மகிமைகளை பாராயணம் செய்து கொண்டே, தங்களின் அந்தப்புரங்களில் யாருக்கும் தெரியாமல் ‘ஆன்மீக ஆராய்ச்சி’ செய்கின்றார்கள். அப்படி ஆன்மீக ஆராய்ச்சி செய்வதில் வல்லவர்கள் நாட்டில் பலர் இருந்தாலும், அதை சமூக மாற்றத்தோடு இணைத்து முன்னெடுத்து சென்றவர்தான் சீமானந்தா சுவாமிகள்.

அவர் ஆராய்ச்சி செய்யும் காணொளிகளை தினம் தினம் கண்டு களித்து தங்களை பரவசப்படுத்திக் கொள்ளும் அவரின் சீட கோடிகள் எந்தவித தயக்கமும், தர்மசங்கடமும், சங்கோஜமும் இன்றி ஆன்மீக ஆராய்ச்சியின் சிறப்புகளையும் அதன் மேன்மைகளையும் முச்சந்திகளில் நின்று கொண்டு பரப்புரை செய்து கொண்டு இருக்கின்றார்கள். இருந்தாலும் சீமானந்தாவின் சீடர்களைப் போல குடிகள் அனைவருமே ஆன்மீக ஆராய்ச்சியை ஏற்றுக் கொள்வதில்லை. சிலர் அதை ஆண் விபச்சாரம் என்கின்றார்கள். ஒரு சிலரோ சீமானந்தா சுவாமிகள் முற்றும் துறந்த முனிவர் என்கின்றார்கள். இன்னும் சிலரோ அது சுவாமிகள் உடற்பயிற்சி செய்யும் காணொளி என்று தலைமேல் சத்தியம் செய்கின்றார்கள்.

உலகில் ஒவ்வொரு சுவாமிக்கும் ஒரு தனித்தன்மை இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் சில சமயங்களில் அந்தத் தனித்தன்மையே அவர்களுக்கு கேடும் விளைவித்து விடுகின்றது. கதவை திறந்து வைத்தால் காற்று வரும் என்ற பிரம்ம ரகசியத்தைக் கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்த ஒரு சுவாமியின் நிலை என்னானது? இன்று நாட்டை விட்டே ஓடிப் போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதற்கு காரணம் என்ன? அவரின் மனம் மட்டுமல்ல, அண்டர்வேயரும் வெள்ளை என்ற உண்மையை வெளிப்படுத்திய ஆன்மீக ஆராய்ச்சி காணொளிகள்! பொதுவாக சுவாமிகளின் பெயர்கள் எல்லாம் வேறு, வேறாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒன்றுபடும் புள்ளி என்பது ஆன்மீக ஆராய்ச்சிதான். சதா சர்வகாலமும் அவர்களின் சிந்தனை அதிலேயே லயித்திருக்கின்றது. தங்களின் உடல், பொருள், ஆவி என அனைத்தையுமே அவர்கள் ஆன்மீக ஆராய்ச்சிக்காகவே அர்ப்பணிக்கின்றார்கள்.

ஆனால் அவர்கள் யாரும் சீமானந்தா சுவாமிகளிடம் கிட்ட நெருங்கக் கூட முடியாது. காரணம் மற்ற சுவாமிகள் தாங்கள் ஆன்மீக ஆராய்ச்சி செய்து மாட்டிக் கொண்ட போதுதான் கேடுகெட்டவர்கள் என்ற உண்மை உலகிற்குத் தெரிய வந்தது. ஆனால் சீமானந்தா சுவாமிகளோ முக்காலமும் அறிந்தவர் என்பதால் மாட்டிக் கொள்ளும் முன்பே, அதாவது ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த காலத்திலேயே தன்னை கெட்டவன் அல்ல, கேடுகெட்டவன் என்று பிரகடன ப்படுத்தியவர். அந்த வகையில் வருங்கால ஆன்மீக ஆராய்ச்சியாளர்களுக்கு வழிகாட்டியாய் திகழ்பவர்.

சீமானந்தாவின் சீடர்கள் சீமானந்தா இந்த நாட்டில் ஆன்மீக ஆராய்ச்சி செய்வதற்கு முழு சுதந்திரம் உண்டெனவும், அதை மறுப்பது ஜனநாயக விரோதம் என்றும் முசுமுசுக்கின்றார்கள். அவர்கள் அதற்காக சிறப்புரிமையும் கோருகின்றார்கள். நாட்டில் எவன் செய்யாத தவறையும் சீமானந்தா சுவாமிகள் செய்யவில்லை என்றும், அவருக்கு முன்பே வரலாற்றில் அது போன்ற பல ஆன்மீக ஆராய்ச்சி காணொளிகள் வெளிவந்திருப்பதால் வரலாறு தெரியாமல் பேச வேண்டாம் என்றும் மிரட்டுகின்றார்கள். சீமானந்தா விடயத்தில் அனைவரும் பாரபட்சமாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டுகின்றார்கள்.

நாட்டை ஆட்சி செய்யும் அதிபருக்கு வீட்டை மட்டுமல்ல, நாட்டையே அந்தப்புரமாக நடத்தும் உரிமை இருக்க வேண்டும் என்று முதலில் உரிமைக் குரல் கொடுத்தது யார்? அது தங்கள் சீமானந்தா சுவாமிகள் என்பதை நன்றியோடு நினைத்துப் பார்க்குமாறு நினைவூட்டுகின்றார்கள். உலகில் யார்தான் ஆன்மீக ஆராய்ச்சி செய்யவில்லை? கண்டவனெல்லாம் செய்யும் போது வருங்கால அதிபராகக் கூட வருவதற்கான தேஜஸ் நிறைந்த எங்கள் சீமானாந்தா அவர்களுக்கு அந்த உரிமை எப்படி இல்லாமல் போய்விடும் என்று முஷ்டியை முறுக்கி முழங்குகின்றார்கள்.

அதனால் சீமானந்தாவின் ஆன்மீக ஆராய்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் நியாயம் கேட்டால், அவரை அவுசாரி என்றும், தே**யா என்றும், பல பேரைப் பார்த்தவர் என்றும் பட்டம் கட்டுகின்றார்கள். ‘அதிபர் பெண்களுக்கு ஐம்பது சதவீதம் இடம் கொடுத்தவர், அப்படிப்பட்டவருக்காக பெருந்தன்மையாக நீ உன் கட்டிலில் கொஞ்சம் இடம் கொடுத்ததால் குறைந்து போய் விடமாட்டாய், இன்னும் சொல்லப் போனால் அது நீ செய்த பெரும்பாக்கியம்’ என்கின்றார்கள்.

காஷ்மீரில் கத்துவாவில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக நடந்த ஒரு பேரணியில் பாஜக அமைச்சர்கள் சௌதரி லால் சிங் மற்றும் சந்தர் பிரகாஷ் கங்கா இருவரும் கலந்து கொண்டது போல, வருங்கால அதிபராக அவர்கள் கருதும் சீமானந்தாவுக்கு ஆதரவாக அதே போல மாபெரும் கண்டனப் பேரணியும், போராட்டமும் செய்ய திட்டமிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனெனில் அதை ஒத்தே அவர்களது கருத்துகளும் வெளிப்படுகின்றன.

சீமானந்தா சுவாமிகள் இன்னும் கைது செய்யப் படவில்லை என்றாலும், இப்போதே சீமானந்தா சுவாமிக்கு ஆதரவாக பல குரல்கள் ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன. அந்தக் குரல்கள் சீமானந்தா சுவாமி போன்றவர்களின் ஆன்மீக சேவை நாட்டிற்கு மிகவும் தேவை என்றும், அவரை விட்டால் அதைச் செய்வதற்கு நாட்டில் ஆட்கள் இல்லை என்றும், சீமானந்தா போன்றவர்கள் போல் இன்னும் நிறைய பேர் களத்திற்கு வர வேண்டும் என்று கருத்துரைக்கின்றார்கள்.

சீமானந்தா சுவாமிகளை ஆதரிக்கும் யாருக்கும் தன்மானமோ, சுயமரியாதையோ, குறைந்தபட்சம் அறம் சார்ந்த உணர்வோ இல்லை என்பதுதான் உண்மை. அவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் குரலை செவி கொடுத்து, கேட்கக்கூட தயாராகயில்லை. பாதிக்கப்பட்ட நபர் சீமானந்தா தன்னோடு இருந்த அரை நிர்வாணக் காட்சிகள் அடங்கிய காணொளியை வெளியிட்டபோதும், அவர்களின் சீடர்களிடம் கிளுகிளுப்பு உணர்வைத் தவிர வேறு எதையுமே தோற்றுவிக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் சீமானந்தாவின் சீடர்களுக்கும், பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளிகளாக சித்தரித்த அயோக்கியர்களுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. இரண்டு குற்றங்களுமே நம்பிக்கைத் துரோகத்தில் வேர் கொண்டிருக்கின்றன.

பாதிக்கப்பட்ட பெண் பொதுவெளியில் பல லட்சக்கணக்கானோர் முன் தனக்கான நியாயத்தைக் கேட்கின்றார். தன்னை யாரென்றே தெரியாது என்று மறுத்த சீமானந்தா சுவமிகள் தன்னோடு அரை நிர்வாண கோலத்தில் இருந்த காணொளிகளையும் வெளியிட்டு இருக்கின்றார். ஆனால் சீடர்களுக்கோ "யாரென்றே தெரியாது என்று மறுத்த பெண்ணின் வீட்டில் அரை நிர்வாணமாக என்ன செய்து கொண்டிருந்தாய்?" என்று கேட்கத் துப்பில்லை. காரணம் சீடர்களும் ஆன்மீக ஆராய்ச்சி செய்வதை ஆதரிக்கின்றார்கள். இப்போது எதிர்த்தால் நாளை நமக்கும் இதே கதி ஏற்பட்டு விடும் என்று அஞ்சுகின்றார்கள்.

குற்றம் யார் செய்தாலும் குற்றம்தான். அது சீமானந்தாவாக இருந்தால் என்ன? நித்தியானந்தாவாக இருந்தால் என்ன? இல்லை எவ்வளவு பெரிய புடுங்கியாக இருந்தால்தான் என்ன? நாம் கேட்பது நீதியை மட்டுமே. அநீதியின் குழந்தைகள் ஏனோ அதை மறுக்கின்றார்கள். சீமானந்தா சுவாமிகளே தன்னை கேடுகெட்டவன் என்று ஒப்புக் கொண்ட பிறகும், அவரது சீடர்கள் முட்டுக் கொடுக்கின்றார்கள் என்றால் நாம் புரிந்து கொள்ள வேண்டும், சீமானந்தாவின் சீடர்கள் எத்தகையவர்கள் என்று.

- செ.கார்கி

Pin It