நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேரங்கள் தொடங்கி விட்டன. நேற்றுவரை அயோக்கியர்களாக, அரசியல் களத்தில் இருந்து துடைத்து எறியப்படப் வேண்டியவர்களாக, மக்கள் விரோதிகளாக சித்தரிக்கப்பட்டவர்கள், பேரங்கள் சுமூகமாக முடிந்தவுடன் மக்கள் நல விரும்பிகளாக, சமூகத்தைக் காக்க வந்த அவதார புருசர்களாக இனி சித்தரிக்கப்படுவார்கள். ஆசை வெட்கம் அறியாது என்பது எதற்குப் பொருந்துமோ இல்லையோ, அது தேர்தல் அரசியலுக்கு மிக நன்றாகப் பொருந்தும். தேர்தல் அரசியலுக்கு வந்துவிட்டால் நீங்கள் முதலில் கற்றுக் கொள்ள வேண்டியது, நேற்றுவரை நீங்கள் எதை உண்மை என்று மக்களை நம்பச் சொன்னீர்களோ, அதையே இன்று பொய் என்று அதே மக்களிடம் நம்புமாறு சொல்ல வேண்டும். நேற்றுவரை அம்மணத்தை அசிங்கம் சொன்ன நீங்கள், இன்று அதே வாயால் அம்மணம் என்பதை முக்தி என்றோ, வீடுபேறு என்றோ, பரிபூரண நிலை என்றோ விளக்கம் அளிக்க வேண்டும். அதை அரசியல் களத்தில் யாரும் பிழைப்புவாதம், கள்ளத்தனம், களவாணித்தனம், பச்சோந்தித்தனம் என்றெல்லாம் எப்பொழுதும் பொருள் கொள்ள மாட்டார்கள் அதை மிக நாகரிகமாக அரசியல் சாணக்கியத்தனம் என்றே அழைப்பார்கள். மக்களும் கூட அப்படி சொல்லத்தான், நினைக்கத்தான் பயிற்றுவிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.
தேர்தல் அரசியலில் கூட்டணி என்பது எப்போதுமே கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதாலும், கொள்கை என்றால் என்னவென்று நம் மக்களில் பெரும்பாலோனோருக்குத் தெரியாததாலும், நம் அரசியல் கட்சித் தலைவர்கள் எப்போதுமே தங்களின் அரசியல் பச்சோந்தித்தனத்திற்காக வெட்கப்படுபவது கிடையாது. அதனால்தான் அவர்களால் ஒவ்வொரு தேர்தலிலும் எங்கு பேரம் படிகின்றதோ, அந்த இடத்தில் நின்று கொண்டு விசுவாசமாக வாலாட்ட முடிகின்றது. தேர்தல் அரசியலின் இந்த சூடு சுரணையற்ற அரசியல் போக்கை நன்றாகப் புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டவர்களால்தான் மிக எளிதாக முதலாளித்துவ ஜனநாயகத்தில் தேர்தல் பாதையில் நின்று வெற்றி பெற முடிகின்றது. அதற்கு மாறாக நீதி, நேர்மை, கொள்கை, கோட்பாடு என்று பேசிக்கொண்டு, அதில் கறார்தன்மையைக் கடைபிடிக்கும் பிழைக்கத் தெரியாத பேர்வழிகள் எல்லாம், இயக்கம் சார்ந்த அரசியலில் தங்களைப் புதைத்துக் கொள்கின்றார்கள். அவர்கள் கடைசி வரைக்கும் மக்களிடம் தங்களின் புனிதத் தன்மையை நிரூபிப்பதில் மட்டுமே கவனமாக இருப்பவர்கள். அதனால் முதலாளித்துவ ஜனநாயக அமைப்பில் இது போன்ற இயக்கங்களை தங்களுக்குக் கிடைத்த சிறந்த கொள்கை பரப்பு அடிமைக் கூட்டமாக பல முதலாளித்துவ கார்ப்ரேட் கட்சிகள் எப்பொழுதும் பயன்படுத்திக் கொள்கின்றன.
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிகள் ஏறக்குறைய தமிழகத்தில் முடிவாகிவிட்டது. அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக போன்றவை ஒரணியிலும் திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக போன்றவை ஓரணியிலும் இந்தத் தேர்தலை சந்திக்கவுள்ளன. இதில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகளும், பாமகவுக்கு 7 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதே போல காங்கிரசுக்கு திமுக கூட்டணியில் 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நாம் முன்பே பார்த்தது போல கூட்டணி என்பது கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுவதல்ல. அது முற்றுமுழுதாக ஒவ்வொரு அரசியல் கட்சியும் கொண்டிருக்கும் வாக்கு சதவீதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படுகின்றன. அதைத் தாண்டி அவர்களுக்குள் வேறெந்த பந்தமும் கிடையாது. நேற்று எடப்பாடி & கோ குருப்பை டயர் நக்கி என்று அன்புமணி சொன்னதைப் பற்றியோ, பிஜேபி அதிமுகவை ஊழல் கட்சி என்று சொன்னதைப் பற்றியோ இன்று யாராவது குறிப்பிட்டு விசனப்படுவார்களேயானால் சென்ற காலங்களில் அவர்கள் திமுகவுக்கும், காங்கிரசுக்கும் இடையேயான மோதல்களையும், விமர்சனங்களையும், இன்று அவர்களின் நிலைப்பாடுகளையும் பார்த்து ஆறுதல் அடைந்து கொள்ளலாம். அரசியல் கட்சிகளைப் பொருத்தவரை அவர்களுக்கு தேர்தலில் வெற்றி என்பது மிக முக்கியமானது. அதைவிடுத்து தேர்தல் அரசியலை ஏற்றுக்கொண்டு அதற்குள் யோக்கிய தன்மையைத் தேடுவது அபத்தமானதாகும்.
தமிழகத்தைப் பொருத்தவரை பிஜேபிக்கு இது ஒரு பொன்னான காலம் என்றுதான் சொல்ல வேண்டும். அரசியல் அநாதையாய், சீண்டுவார் யாருமின்றி இருந்த கட்சிக்கு எல்லா வகையிலும் சீரழிந்த, ஊழல் முறைகேடுகளில் மூழ்கிப்போன, ஆளுவதற்கான பெரும்பான்மையை இழந்த, ஒரு மூளையற்ற அடிமைக்கூட்டம் வசமாய் மாட்டியிருக்கின்றது. அதிமுக அடிமைகள் மீது நிலுவையில் இருக்கும் ஊழல் வழக்குகளை காரணம் காட்டி பலாத்காரம் செய்து இந்த 5 தொகுதிகளையும் பிஜேபி பெற்றிருப்பதாகவே எல்லோராலும் நம்பப்படுகிறது. பாமகவைப் பொருத்தவரை அது ஒரு பச்சோந்திக் கட்சி என்பதும், ராமதாசும் அவரது மகன் அன்புமணியும் கடைந்தெடுத்த பிழைப்புவாதிகள் என்பதும் ஊர் உலகம் அறிந்த செய்தி. அதனாலேயே அரசியல் அநாதைகளாய் தமிழக மக்களால் ஆக்கப்பட்டவர்கள். சாதிவெறி தலைக்கேறிய ஒரு சில குடிசைக் கொளுத்தி தொண்டர்கள் தவிர இன்று அவர்கள் பின்னால் யாருமில்லை. அடுத்ததாக உள்ள தேமுதிக, தமிழக மக்களால் இன்று மறந்து போன ஒரு கட்சியாக மாறியிருக்கின்றது. தமிழகத்தின் முக்கிய பிரச்சினைக்கு அறிக்கைவிடக் கூட ஆளில்லாத அதன் துர்பாக்கிய நிலை, அதை பிஜேபியைவிட கீழான வாக்கு சதவீதத்துக்கு இறக்கி இருக்கின்றது. தற்போதைக்கு அந்தக் கட்சியில் விஜயகாந்த், அவரது மனைவி மகன்கள் மற்றும் மச்சினன் மட்டுமே உறுதியான வாக்கு வங்கியாக உள்ளனர். விபச்சாரியாக இருந்து சீரழிவதைக் காட்டிலும் யாருக்காவது வைப்பாட்டியாய் இருப்பது கொஞ்சம் கெளரவம் என்ற அடிப்படையில்தான் இவர்கள் அனைவரும் அதிமுக பக்கம் போய் இருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் இருந்த அழுகி நாற்றமெடுத்த மொத்தக் குப்பையும் அதிமுக என்ற குப்பைத்தொட்டியில் ஒன்றாக சேர்ந்திருக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகாது.
ஆனால் இதை வைத்துக் கொண்டு நம்முடைய அரசியல் விஞ்ஞானிகள் சிலர் திமுக அமைத்திருப்பதுதான் உண்மையான மக்கள் நலக் கூட்டணி என சொம்பு தூக்க ஆரம்பித்து விட்டார்கள். கடைசி வரை பாமக, திமுக உடன் கூட்டணி பேரம் பேசியது என்பதையோ, இல்லை திமுக வலிய போய் ஆதரிக்கும் ஈஸ்வரன் அப்பட்டமான கவுண்டர் சாதிவெறி பிடித்தவர் என்பதைப் பற்றியோ முற்போக்கு யோக்கிய சிகாமணிகள் மறந்தும் வாய் திறக்க மாட்டார்கள். இன்னும் சில துரோகிகள் இந்தத் தேர்தல் முடியும் வரை திமுக அமைக்கும் கூட்டணி பற்றி வாயே திறக்கக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளார்கள். இன்னும் சில பெரிய சொம்புகள் ஒருபடி மேலே போய் திமுகவுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை எல்லாம் பிஜேபி ஆதரவாளர்கள் என்றோ, அதிமுக ஆதரவாளர்கள் என்றோ சொல்லும் சைக்கோ மனநிலைக்குச் சென்றிருக்கின்றார்கள்.
நாட்டை பார்ப்பனியத்தின் பிடியில் இருந்தும், முதலாளித்துவத்தின் பிடியில் இருந்தும் விடுவிக்க யாராவது வருவார்களா என சமூக மாற்றத்திற்காக தினம் உழைப்பவர்கள் ஏங்கிக் கிடக்கின்றார்கள். அதே பிஜேபி, அதே காங்கிரசு. அதை ஆதரித்த, அதை எதிர்த்த அதே நாக்குகள் என திரும்பத் திரும்ப இந்தப் போலியான அரசியல் நாடகம் அரங்கேற்றப்படுகின்றது. ஒவ்வொரு முறையும் இந்த அசிங்கங்களுக்கு அரிதாரம் பூசி நம்மை புதிது என்று நம்பச் சொல்கின்றார்கள். நம்ப மறுத்தால் நம்மை துரோகிகள் என்கின்றார்கள். சீமான் கூட தைரியமாக கூட்டணி இல்லை என்று அறிவிக்கின்றார். ஆனால் CPM-ம், CPIயும் இரண்டு சீட்டுக்காக பட்டாபட்டியை தேய்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கின்றார்கள். சுயமாக வாழ்வதைவிட ஒட்டுண்ணியாக வாழ்வதன் சுகத்தை அவர்கள் பல ஆண்டுகளாக அனுபவித்து இருப்பதால் அதில் இருந்து அவர்கள் மீள்வார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. கடைசிவரை முதலாளித்துவ கட்சிகளுக்கு முட்டுக் கொடுத்து வாழவே அவர்கள் ஆசைப்படுகின்றார்கள். எல்லோருக்கும் கொடுத்தது போக ஏதாவது மிச்ச மீதி இருந்தால் நிச்சயம் வீசி எறிவார்கள் என்பதால் தோழர்கள் ‘தன்மானம்’ பார்க்காமல் காத்திருக்க வேண்டும்.
தேர்தல் அரசியல் எவ்வளவு இழிவானது என்பது இங்கு நடக்கும் கூட்டணிக் கூத்துக்களைப் பார்த்தாலே ஒருவர் நன்றாகத் தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு கணிசமான செல்வாக்கு இருந்தால் நீங்கள் சாதிவெறி பிடித்தவர் என்றாலும், மதவெறி பிடித்தவர் என்றாலும் உங்கள் காலை நக்கி வரவேற்பார்கள், வேட்டியை அவிழ்த்து வெண்சாமரம் வீசுவார்கள். ஆனால் உங்களிடம் கொள்கை மட்டும்தான் இருக்கின்றது என்றால், உங்களை நாய்களைப் போல காக்க வைப்பார்கள். ஆண்டைகள் வைக்கும் பந்தியில் அடிமைகள் எச்சில் இலைக்காக காத்துதான் கிடக்க வேண்டும் என்பதுதான் வரலாறு. தேர்தல் அரசியலை முழுமையாக ஏற்றுக் கொண்ட மனம், வெட்க மானம் எல்லாம் பார்ப்பதில்லை என்பதால் நாமும் அதை நினைத்து துயரப்படாமல் வழக்கம் போல மக்கள் பணியாற்றுவோம்.
- செ.கார்கி