memeஇந்தியத் தேர்தல் ஆணையம், ஆர்.எஸ்.எஸ். சோதிடர்களைக் கலந்து ஆலோசித்து மாசி மாதம் பவுர்ணமி நாளில் வெள்ளிக்கிழமை சுபயோக சுபதினத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளது.

அறிவிப்பு வெளியான 14 நாள்களில் மார்ச் 12 ஆம் நாள் வேட்புமனுத் தாக்கல் தொடக்கம். ஒரு வாரத்தில் மார்ச் 19 இல் வேட்புமனுத் தாக்கல் நிறைவு. மார்ச் 20 வேட்புமனுப் பரிசீலனை. மார்ச் 22 வேட்புமனுத் திரும்பப் பெறக் கடைசி நாள். அதன்பின் 15 நாள்களில் ஏப்ரல் 6 ஆம் நாள் வாக்குப்பதிவு. வேக வேகமாக வாக்குப்பதிவு நடத்தியபின் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு 28 நாள்கள் சற்றேறக் குறைய ஒரு மாதம் காத்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு புதுவை கேரளாவில் ஒரே நாளில் வாக்குப்பதிவு அசாமில் இரண்டு கட்டமாகவும் மேற்கு வங்கத்தில் எட்டு கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறும் என்கிறார்கள். தமிழ்நாடு அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்திடம் வைத்த கோரிக்கைகள் மூன்று.

ஒன்று தேர்தலை பல கட்டங்களாக நடத்தாமல் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்பது. இந்தக் கோரிக்கையைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது. ஆனால் வாக்குப்பதிவு ஏப்ரல் மூன்றாம் வாரத்திலும் வாக்கு எண்ணிக்கையை நான்காம் வாரத்திலும் நடத்த வைக்கப்பட்டக் கோரிக்கை காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டபின் 15 நாள்கள் தான் பரப்புரைக்கான அவகாசம். மக்களைச் சந்தித்துப் பரப்புரை செய்து அவர்களைச் சிந்திக்க வைத்து வாக்களிக்க வைக்க மத்திய மாநில ஆளும் கட்சிகளிடம் எந்தச் சரக்கும் இல்லை.

அவர்களிடம் உள்ள ஒரே ஆயுதம் "சொக்கப்பன்" தான். சொக்கப்பனை வினியோகம் செய்தால் போதும் என்று அவர்கள் கருதுகிறார்கள். அதற்கு அவர்களுக்கு ஒரே ஒரு நாள் போதும்.

ஆனால் மத்திய மாநில அரசுகளின் ஆட்சிக் குறைபாடுகளை, கேடுகளை மக்களிடம் எடுத்துச் செல்ல, அந்தக் குறைகளை எல்லாம் எவ்வாறுக் களையப் போகிறோம், என்னென்ன நல்வாழ்வுத் திட்டங்களை நடத்த இருக்கிறோம் என்பன போன்ற ஏராளமானத் தகவல்கள் எதிர்க்கட்சிகளிடம் உள்ளன.

அவற்றை முழுமையாக மக்களிடம் கொண்டு செல்ல விடாமல் தடுக்கும் விதத்தில் பரப்புரைக்கான கால அவகாசத்தை மிகவும் குறைத்துள்ளார்கள். வாக்களித்த பின் ஒரு மாதம் எந்தப் பணியும் இல்லாமல் காத்திருக்க வேண்டி உள்ளது. இது மக்களையும் அரசியல் கட்சிகளையும் எப்போதும் உச்சகட்டப் பதட்டத்தில் வைத்திருக்கும் நாசிகளின் வேலையை இந்தியத் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

வாக்களித்துவிட்டு காத்திருக்கும் ஒரு மாத காலத்தில் எதுவும் நடக்கலாம். மனசாட்சி, மனிதநேயம், அறிவு நாணயம் எதுவும் இல்லாத மோடியின் ஆட்சியில் எதுவும் நடக்கலாம்.

கடந்த 2016 தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முற்றுப் பெறாத நிலையில், திமுக, அதிமுக இரண்டுக்கும் இடையில் போட்டி கடுமையாக இருந்த நேரத்தில் காலை 10:30 மணிக்கு எல்லாம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அதிமுக வெற்றி பெற்றதாகவும் அதற்காக வாழ்த்தினை செல்வி ஜெயலலிதா அவர்களுக்குத் தெரிவித்தார்.

பிரதமர் தன்னுடைய விருப்பத்தை இதன்மூலம் தெரிவித்தபின் தான் பல்வேறு இடங்களில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் நடைபெற்றன.

குறிப்பாகவும் சிறப்பாகவும் ராதாபுரம் தொகுதியில் உண்மையில் திமுக வேட்பாளர் அப்பாவு அவர்கள் வெற்றி பெற்றிருந்தாலும் தபால் வாக்குகளைக் கணக்கில் கொள்ளாமல் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தார்கள்.

எதிர்க்கட்சிகளைச் செயல்பட விடாமல் தடுத்து ஆளும் கட்சிகளுக்குச் சாதகமான போக்கினைத் தேர்தல் ஆணையம் கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தின் குரல்வளை நசுக்கப்படுகிறது.

ஆனால் இவற்றையெல்லாம் தேர்தல் காலத்தில் மட்டும் மக்களைச் சந்திக்கின்ற கட்சிகளுக்குத்தான் இடையூறுகளும், இடர்பாடுகளும். ஆனால் எப்போதும் மக்களோடு இருந்து தொண்டாற்றி வருகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் அதன் தலைவர் தளபதி அவர்களுக்கும் இவை எல்லாம் ஒரு பொருட்டே அல்ல.

"தடைகள் உண்டெனில் தடம் தோள்கள் உண்டு" என்று மார்தட்டும் திராவிட முன்னேற்றக் கழகம் வருகின்ற தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டும். எடப்பாடி பழனிச்சாமியால் வீழ்ந்துவிட்ட தமிழ்நாட்டின் வளர்ச்சி தளபதியால் சீர்படும்.

- மா.உமாபதி

Pin It