இந்துத்துவ பாசிச மோடி ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும். இதில் இடதுசாரிகளும், ஜனநாயக ஆற்றல்களும் ஒரே நிலைபாட்டை பின்பற்றுகின்றனர்.

கம்யூனிஸ்ட்டுகளைப் பொறுத்த அளவில் முதலாளிய பாராளுமன்றங்களிலும் சட்டமன்றங்களிலும் நடைபெறும் தேர்தலில் அடையும் வெற்றியும், தோல்வியும் புரட்சியின் இலக்கின் ஒரு சிறு பகுதியே! அச்சிறு பகுதியில் அடையும் வெற்றியும், தோல்வியும் மக்கள் புரட்சியை முன்னெடுக்க அதன் செயல்பாடுகளுக்கு வழிகாட்டும்.

தமிழ்த் தேச இறையாண்மை அமைப்பை பொறுத்த அளவில் மக்களின் இன்றைய உடனடி தேவைகளையும் அவர்களின் செயல் ஆற்றல்களையும் கணக்கில் கொண்டும், அமைப்பின் பலம், பலவீனம் மற்றும் ஆளும் வர்க்கக் கட்சிகளுக்கு இடையிலான அணிசேர்க்கை, மக்களின் அரசியல் உணர்வு மட்டம் அல்லது தயார் நிலை ஆகியவற்றினை கணக்கில் கொண்டும் தேர்தல் செயலுத்தியை வகுத்துள்ளது.

 தமிழ்த்தேசிய இனத்தின் இறையாண்மை அரசியல் அதிகாரத்தை குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் அதே நேரத்தில் மோடி ஆட்சி உடனடியாக வீழ்த்தப்பட வேண்டும். அதற்கான குறிப்பான திட்டத்தை வரைவு அறிக்கையாக முன் வைத்து, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பி. பாசிச மோடி ஆட்சிக்கு எதிராக அனைவரையும் அணி திரட்ட வேண்டும். மோடியின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பாசிச ஆர்.எஸ்.எஸ். பிஜேபி மோடி கும்பல் ஆட்சித் துறையில் (government) மட்டுமல்ல, அதிகாரத்திலும் (state) எல்லா மட்டங்களிலும் ஊடுருவி உள்ளது. இவை முற்றாக துடைத்தெறியப் பட வேண்டும்.modi and annamalai in campaignஆர்.எஸ்.எஸ். என்ற பார்ப்பன வெறி பிடித்த அமைப்பின் வழிகாட்டுதலில் செயல்படும் பி.ஜே.பி. மோடி ஆட்சியானது பார்ப்பனிய கொள்கைகளையும் நிலவுடமை பிற்போக்கு கொள்கைகளையும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான கொள்கைகளையும் செயல்படுத்தி வந்துள்ளது. இக்கொள்கைகளுக்கு எதிராக போராடிய மகாராஷ்டிராவில் நரேந்திர தபோல்கர், கோவிந் பன்சாரே, கல்புர்கி, கர்நாடகத்தில் கௌரி லங்கேசு ஆகியோர் படுகொலைச் செய்யப்பட்டனர். தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் அவர்களது கொலைப் பட்டியலில் சிலர் உள்ளனர்.

அதானி, அம்பானி போன்ற குஜராத் முதலாளிகளுக்காகவும் பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்காகவும் அதாவது இவர்களது சந்தை விரிவாதிக்கத்திற்காகவே அகண்ட பாரதக் கனவுகளுடன் செயல்படும் மோடி அரசு இந்தியாவை 100 ஜனபத மண்டலங்களாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே காஷ்மீரை மூன்றாகப் பிரித்தது. தமிழ்நாட்டை மூன்று ஜனபத மண்டலங்களாக பிரித்து மாற்றும் திட்டத்துடன் உள்ளது. ஜனபதம் என்பது பார்ப்பனர்களை தலைமை இடத்தில் வைக்கும் சாதிய அமைப்பு முறையாகும். இதன் மூலம் தேசிய இனங்களை பிரித்து மோதவிட்டு இன அழிப்பு செய்வதாகும்.

மோடியின் மேக் இன் இந்தியாவை ஆராய்ந்தால் அதில் சீழ்நெடி வீசுகிறது. உலக அளவில் வறுமை குறியீட்டில் 111வது நாடாகவும் கல்வியில் பங்களாதேஷ், நேபாளத்தைக் காட்டிலும் கீழான நிலையிலும் இந்தியா உள்ளது. அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் கடன்களில் 25 லட்சம் கோடியை இரத்து செய்ததுடன் அவர்களுக்கு ஆண்டுக்கு 10 இலட்சம் கோடியை வரி சலுகையாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில் விவசாயிகளையும் தொழிலாளர்களையும் வறுமையில் நெட்டித் தள்ளியுள்ளது. 2014இல் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தப் போவதாக கூறிய மோடி அரசு 3 வேளாண் சட்டங்களை வெளியிட்டது. அதனை எதிர்த்து விவசாயிகள் 14 மாதங்கள் போராடியுள்ளனர். அதில் 700 விவசாயிகள உயிரிழந்தனர். அப்பொழுது உலகையே சுற்றி வந்த மோடி விவசாயிகளின் போராட்டத்தை எட்டிக்கூட பார்க்கவில்லை. தற்போதும் விவசாயிகள் போராடிக் கொண்டுள்ளனர். ஒரு நாளைக்கு 30 விவசாயிகளும் 17 விவசாயக் கூலிகளும் வறுமையில் இறப்பதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. 2019ல் விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன் ஒரு லட்சம் வழங்கப் போவதாக அறிவித்தது. ஆனால் யாருக்கும் வழங்கவில்லை. ஜி.எஸ்.டி. வரியால் மாநிலங்களில் உள்ள சிறு முதலாளிகள் நடுத்தர வர்க்கங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டில் கோவையும் திருப்பூரும் பாதிப்படைந்துள்ளது.

மோடி குஜராத்தில் முதல்வராக இருந்த போது மத்திய அரசின் வருவாயில் 50 விழுக்காடு கேட்டார். தற்போது தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் வெட்கமில்லாமல் பணம் கேட்பதாக சாடுகிறார். தமிழ்நாட்டிற்கான மத்திய அரசின் ஜி.எஸ்.டி. தொகையை தரவில்லை. தமிழ்நாட்டில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது சிறு தொகையும் தராத மோடி குஜராத்திற்கு வாரி வழங்குகிறார். சென்ற தேர்தலில் கருப்பு பணங்களை கைப்பற்றி குடும்பத்திற்கு 15 லட்சம் வழங்கப்படும் என வாய்ச்சவடால் அடித்தார். இவரது பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையால் நூற்றுக்கணக்கானோர் வங்கியின் வரிசையில் நின்று இறந்து போனது தான் மிச்சம். பெட்ரோல், டீசல், கேஸ் விலை விண்ணை முட்டுகிறது. கேஸ் விலை 400 ரூபாயிலிருந்து 1000 ரூபாய்க்கு உயர்த்தி தற்போது தேர்தலுக்காக 100 ரூபாய் குறைத்து மோடி நாடகமாடுகிறார். ஊழலையே சட்டபூர்வமாக்கியவர்கள் பிஜேபி கும்பல் என்றால் மிகையில்லை. தேர்தல் பத்திரம், பிஎம்.கேர் என அரசமைப்பு விதிகளை வளைத்து கோடி கோடியாய் கொள்ளை அடித்துள்ளது மோடி கும்பல்.

மோடியின் பத்தாண்டு கால ஆட்சியில் பெண்களும் இளைஞர்களும் பெரும் இன்னல்களுக்கும் இழிவுகளுக்கும் உள்ளாகியுள்ளனர். 2014ஆம் ஆண்டு தேர்தலில் ஆண்டிற்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்றார். ஆனால் 2013இல் 17.3 இலட்சம் மத்திய அரசு பணியில் இருந்த ஊழியர்களை 2022 ல் 14.6 லட்சம் ஆக குறைத்தார். இந்தியாவில் வேலை இல்லாதோர் 24 விழுக்காடாக உயர்ந்துள்ளது. நீட், கியூட் போன்ற நுழைவுத் தேர்வின் மூலம் ஏழைகளின் கல்வி உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

“பேட்டி பசாவோ” மோடி கும்பல் பெண்களை பாதுகாப்பது என்கிறது. பிங்கிஸ்பானு, உன்னங் சிறுமி, மணிப்பூர் பெண்கள், புதுச்சேரி ஆர்த்தி ஆகியோர் சூறையாடப்படுகின்றனர். உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக இந்தியா இருக்கிறது என்று 2018 ஆம் ஆண்டு தாம்சன் சாய் தார் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.

இவ்வாறு அதானி, அம்பானி போன்ற உள்நாட்டு வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்காக அனைத்து தரப்பு மக்களும் காவு வாங்கப்படுகின்றனர். இதனை திசை திருப்பி அப்பாவி மக்களை ஏமாற்ற மோடி பாசிச கும்பலுக்கு “ஜெய் ஸ்ரீராம்” முழக்கம் தேவைப்படுகிறது. ஜெய் ஸ்ரீராம் முழக்கம் மக்களை சாதி அடிப்படையில் மத அடிப்படையில் பிரித்து மோதுவிட்டு இரத்தம் குடிக்கும் நோக்கம் கொண்டதாகும். மக்களின் இரத்தத்தை நிரந்தரமாகக் குடிக்கத்தான் அயோத்தியில் இராமருக்கு கோவில்.

ஆர்.எஸ்.எஸ்

1925 ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் நாள் விஜயதசமி அன்று சித்பவன் பார்ப்பனர்களைக் கொண்டு ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு நாக்பூரில் தொடங்கப்பட்டது. தலைவர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை. தற்போது தலைவராய் இருப்பவர் அடுத்த தலைவரை தேர்வு செய்வார். பொதுச்செயலாளர் மட்டுமே மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு செய்யப்படுகிறார். துணைச் செயலாளர்கள் மட்டுமே 20 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் என்ற பார்ப்பனிய அமைப்பு அகண்ட பாரதத்தில் இந்துராக்ஷ்ரம் அமைக்கவே தொடங்கப்பட்டது. ஆர்.எஸ். எஸ்.இன் அரசியல் பிரிவுதான் பிஜேபி. இந்து முன்னணி, இந்து மக்கள் முன்னணி, குரங்கு (பஜ்ரங்தள்) முன்னணி போன்ற 30க்கும் மேற்பட்ட அமைப்புகள் அதிகாரபூர்வமாக ஆர்.எஸ்.எஸில் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றினை சங்பரிவார் கும்பல் என்கிறோம். ஆர்.எஸ்.எஸ் உடன் அதிகாரபூர்வமற்ற முறையில் ஆயிரத்துக்கும் மேலான அமைப்புகள் இயங்கிக் கொண்டுள்ளன. அவ்வமைப்புகள் உழைக்கும் மக்கள் மீது தொடுக்கும் கேடுகளுக்கு ஏற்ப ஆர். எஸ். எஸ். உடன் இணைக்கப்படுகின்றன. எல்லா கட்சிக் கிளைகளிலும் அதிகார மட்டத்திலும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் இரகசியமாக ஊடுருவியுள்ளனர். இவர்கள் எல்லா அமைப்புகளையும் சிதைப்பதை நோக்கமாகக் கொண்டவர்கள். ஆர்.எஸ்.எஸ். தொடங்குவதற்கு முன்பே இந்துத்துவா கொள்கை உடன் பார்ப்பனர்கள் பெருமளவு காங்கிரஸில் செயல்பட்டனர். காந்தியும் நேருவும் மக்கள் தலைவர்களாக பெருமளவு முன்னிறுத்தப்பட்டனர். காந்தி இந்து மதவாதியாக இருந்தாலும் இந்துத்துவ கொள்கையும் இந்து நாடு என்ற கொள்கையும் கொண்டவர்கள் அல்ல. ஆகையால் ஆர்.எஸ்.எஸ்.இன் பின்னணியால் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

காந்தியின் படுகொலையை தொடர்ந்து 1948ல் 1975-1977 அவசரநிலை காலத்தில் 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போதும் ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் மூன்று முறை தடை செய்யப்பட்ட போதும் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் என்ற அளவில் மட்டுமே தடை செய்யப்பட்டது. அகண்ட பாரதத்தில் இந்து இராஜ்யம் அமைப்பது அதன் நோக்கமாகும். அந்த நோக்கத்துடன் தான் குடியுரிமை திருத்தச் சட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் மொழி வழி தேசிய இனங்களை மாநிலங்களை ஜன்பத மண்டலங்களாக பிரித்து இன அழிப்பு செய்வதாகும். அதன் ஒரு பகுதி தான் காஷ்மீரை மூன்றாக பிரித்ததும். தமிழ்நாட்டை மூன்றாக பிரிக்கும் திட்டத்துடன் செயல்படுவதும் ஆகும். ஜனபதம் என்பது பார்ப்பனர்களை மேலாண்மையாகக் கொண்ட சாதி அமைப்பு ஆகும். இந்த நோக்கத்திற்காகவே ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முழக்கங்களை முன்வைக்கின்றனர்.

காங்கிரசு கட்சி

காங்கிரஸ் கட்சி இந்திய விடுதலையை முதன்மையாக கொண்டு தொடங்கப்பட்ட கட்சி அல்ல. நிலவுடமை முதலாளிய ஏகாதிபத்திய அதிகார வர்க்கங்களின் நலனை முதன்மையாக கொண்டு தொடங்கப்பட்டதாகும். 2000 ஆண்டுகளுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனிய கொள்கை காங்கிரஸ் தலைவர்கள் இடத்திலும் இருந்தது. இன்றுவரை பார்ப்பனிய கண்ணோட்டத்தில் இருந்து காங்கிரஸ் விடுபடவே இல்லை. ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே. பி. ஆகியன முழு பார்ப்பனிய கட்சி என்றால் காங்கிரசு அரைப் பார்ப்பனிய கட்சியாகும்.

திமுக, அதிமுக

பார்ப்பன எதிர்ப்பை முதன்மையாகக் கொண்டு (ஜஸ்டிஸ் கட்சி) நீதி கட்சி இயங்கியது. நீதி கட்சி 1916 ஆம் ஆண்டு தென்னிந்திய நல உரிமை சங்கம் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. 1920களில் நீதிக்கட்சி தேர்தலில் போட்டியிட்டது. 1938 ல் பெரியார் நீதி கட்சியின் தலைவர் ஆனார். 1935 ஆம் ஆண்டு தமிழ்நாடு விடுதலையை பெரியாரும் பல தமிழ் இயக்கங்களும் முன் வைத்தன. 1944இல் நீதி கட்சி மாநாட்டில் பெரியார் நீதி கட்சியை திராவிட கழகம் என மாற்றினார். சாதி பெயர்கள் ராவ் பகதூர், திவான் பகதூர் போன்ற பட்டங்கள் நீக்கப்பட்டன. பிறகு தேர்தலில் போட்டியிடுவதை முழுமையாகக் கைவிட்டார்.

1949ஆம் ஆண்டு திராவிடர் கழகத்திலிருந்து அண்ணா வெளியேறி திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கினார். 1938, 1965 ஆகிய ஆண்டுகளில் இந்தி எதிர்ப்பு போராட்டம் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. 500க்கும் மேற்பட்டோர் இராணுவத்தாலும் காவல்துறையாலும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் பொள்ளாச்சியிலும் உடுமலைப்பேட்டையிலும் மற்றும் கோவை திருப்பூரிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இப்போராட்டத்தை பயன்படுத்தி 1967-ல் திமுக பெரும் வெற்றியை அடைந்தது. தேர்தலில் வெற்றியை அண்ணா பெரியாருக்கு காணிக்கையாக்கினார். நேருவால் பிரிவினை தடைச் சட்டம் வந்தபோது 1962இல் திராவிட முன்னேற்ற கழகம் கட்சியை பாதுகாக்க திராவிட நாடு கோரிக்கை கைவிடப்பட்டது. பிறகு திமுகவின் கொள்கை “மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி” என சுருங்கிப் போனது.

திமுகவின் தமிழ், தமிழர், உலகத் தமிழர் நலன் என்பதெல்லாம் மக்களை ஏமாற்ற பயன்படுத்தப்படும் உத்திகளே. இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் கட்டாய தமிழ் பாடம் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது. ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஒழித்து கட்டுவதில் காங்கிரஸ் வெளிப்படையாக செயல்பட்டது. திமுக மறைமுகமாக செயல்பட்டது. ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.இன் பாசிசத்தை வீழ்த்துவதாக கூறும் இந்திய கூட்டணிக்கு அதன் தலைவர்களுக்கு அதற்கான எந்த செயல் திட்டமும் இல்லை என்பதுடன் இவர்களே பாசிச சட்டங்களை நடைமுறைப் படுத்துகின்றவர்களாக உள்ளனர். ஊபா சட்டத்தை காங்கிரஸ் கொண்டு வந்த போது திமுக அதிமுக அதனை ஆதரித்தன.அதில் கடுமையான திருத்தங்களை பி.ஜே.பி. கொண்டு வந்த போதும் தி.மு.க., அ.தி.மு.க. ஆகியன ஆதரித்த மாநில அதிகாரத்தை பறிக்கும் என்.ஐ.ஏ. என்ற தேசிய புலனாய்வு முகமையை தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஆதரித்தன. இவ்விரு கருப்பு சட்டங்களை பயன்படுத்தி நூற்றுக் கணக்கானோரை இவ்விரு அரசுகளுமே கைது செய்துள்ளது. இவர்களது பாசிச எதிர்ப்பு என்பது வெறும் நாடகமே.

தி.மு.க.வில் இருந்து பிரிந்த அ.தி.மு.க., தி.மு.க.விற்கு போட்டியான ஒரு கட்சியே தவிர கொள்கையளவில் பெரும் மாற்றமில்லை. அ.தி.மு.க.வை தொடங்கியதில் பார்ப்பனர்களும் காங்கிரசின் சதையாக செயல்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் முக்கிய பங்காற்றியது. தி.மு.க.வினர் பார்ப்பனிய மேலாதிக்கத்தை எதிர்ப்பார்கள் அதே நேரத்தில் பார்ப்பனியத்தின் இன்னொரு கூறான சாதியத்தை தூக்கிப் பிடிப்பார்கள். பி.ஜே.பி. சாதிவாத, மதவாத அமைப்பு என்றால் தி.மு.க சாதிவாத அமைப்பு ஆகும். அதிமுக உட்பட பிற கட்சிகள் இதற்கு விதிவிலக்கு அல்ல. இந்நிலையில் தமிழ்நாட்டின் வரலாற்றில் சாதியத்தையும் மதத்தையும் எதிர்க்கும் சமரசம் அற்ற கொள்கையாளர்களாக பெரியாரும் அம்பேத்கரும் திகழ்ந்தனர். அவர்களது அரசியல் வழியை விமர்சனத்துடன் முன்னெடுப்போம்.

கம்யூனிஷ்டுகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகிய கட்சிகள் தேர்தல் பாதையை தங்களது வழியாக தேர்ந்தெடுத்துக் கொண்டன. மார்க்சிய - லெனினியக் குழுக்கள் தேர்தல் பாதையை பயன்படுத்த தொடங்கி விட்டன. புரட்சியை முன்னெடுக்கப் போவதாகவும் கூறி வருகின்றன. மாவோயிஸ்டுகள் தேர்தலை புறக்கணிக்கின்றனர் என்ற போதிலும் பெரும்பான்மையான மார்க்சிய லெனினியக் குழுக்கள் இந்திய புரட்சி திட்டத்திலேயே செயல்படுகின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகியன தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ளவில்லை. அதே நேரத்தில் பல்வேறு மார்க்சிய லெனினிய குழுக்கள் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டனவையாக உள்ளனவேத் தவிர அதனை முதன்மையாக கொண்டு செயல்படுகின்றனவாக இல்லை. தமிழக விடுதலைப் போராட்டம், காஷ்மீர் விடுதலைப் போராட்டம், வடகிழக்கு தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டம் ஆகியவற்றினை ஜனநாயகப் போராட்டம் என்ற அளவில் அதாவது தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் என்ற அளவில் ஆதரிக்கின்றனவாக மட்டுமே இருக்கின்றன.

தமிழ் தேசிய இறையாண்மை அமைப்பானது தமிழ்த் தேசிய இனத்தின் இறையாண்மையை/அரசுஅதிகாரத்தை மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. அந்த கண்ணோட்டத்தில் இருந்து இந்த தேர்தலை அணுகுகிறது. அதற்கான முழக்கத்தை முன் வைத்துள்ளது.

  • இந்துத்துவ வெறிபிடித்த பி.ஜே.பி. மோடி பாசிச கூட்டணியைத் தோற்கடிப்போம்!
  • தமிழ்த்தேச இறையாண்மையை முன்னெடுப்போம்!
  • இடது சாரிகளையும், ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைப்போம்!
  • பார்ப்பனியம், நிலவுடமையை, முதலாளியம், ஏகாதிபத்தியம் வீழ்த்துவோம்!
  • புரட்சிகர திசை வழியை முன்னெடுப்போம்!

- திருமொழி