இட ஒதுக்கீட்டின் முக்கிய நோக்கம் சாதி காரணமாக கல்வி, வேலை மறுக்கப்பட்ட மக்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முன்னேற்றுவது. ஆங்கிலேயே அரசு கொண்டு வந்த இந்தத் திட்டத்தை மேலும் விரிவுப்படுத்தி திராவிட அரசியல் கட்சிகள் நடைமுறைப்படுத்தின. அதனை தங்கள் வாழ்நாள் சாதனையாகவும் சொல்லிக் கொள்கின்றன.

இந்த இட ஒதுக்கீடுத் திட்டங்கள் அரசு கல்வி நிறுவனங்கள், அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளில் ஓரளவு பின்பற்றப்படுகின்றன என்ற போதிலும் 100% நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்றால் இல்லை என்றே எல்லாரும் சொல்வார்கள். இப்படி அரசின் மேற்பார்வையில் இருக்கும் நிறுவனங்களில் கூட இட ஒதுக்கீடு ஒழுங்காகப் பின்பற்றப்படுவதில்லை.

இந்த நிலையில்தான் 1990க்குப் பிறகு புதிய பொருளாதாரக் கொள்கையான LPG புகுத்தப்பட்ட பிறகு அரசு நிறுவனங்கள் ஒவ்வொன்றாக தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு என்பது கிடையாது. அதற்காக பல போரட்டங்கள் நடைபெற்றாலும் தனியார் துறை இட ஒதுக்கீடு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.

reservation in higher education

(உயர் கல்வியில் இடஒதுக்கீடு விழுக்காடு)

பன்னாட்டு தனியார் நிறுவனங்களுக்காக இந்தியாவின் சட்டங்கள் திருத்தப்படுமே தவிர இந்தியாவிற்காக பன்னாட்டு நிறுவனங்கள் தனக்கு விரோதமான இந்திய சட்டங்களை ஏற்கப்போவதில்லை.

காரணம், இந்தியா பன்னாட்டு நிறுவனங்களுக்காக தான் எந்த விரோதப் போக்கையும் செய்வதில்லை என பல பன்னாட்டு நிறுவனங்களோடு mou க்களில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

அந்த ஒப்பந்தத்தை மீறி இந்திய அரசு (எந்தக் கட்சி ஆட்சி வந்தாலும்) செயல்படப் போவதில்லை.

தனியார் துறை நிறுவனங்களின் நிலைமை இப்படியிருக்க, ஏற்கனவே கல்வியை கைப்பற்றிய இந்திய உள்ளூர் அதிகார வர்க்கத்தினரும், தரகு முதலாளிகளும் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை ஏட்டளவில்கூட பின்பற்றுவதில்லை என்பதே எதார்த்தம். காசை மட்டுமே நோக்கமாகக் கொண்ட இந்த தனியார் கல்வி நிறுவனங்களில் நியாயத்தை எதிர்பார்ப்பது அநியாயம்தான்.

இந்த தனியார் கல்வி நிறுவனங்களுக்காக அரசு கல்வி நிறுவனங்கள் திட்டமிட்டு மொக்கைகளாக்கப்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளில் சேர்ப்பது கௌரவம் என்ற மனநிலைக்கு மக்களை மாற்றி வருகின்றனர்.

இந்தச் சூழலில் கல்வியை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் உலக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டு அதற்கான சட்ட வரைவு முன் மொழியப்பட்டாகிவிட்டது.

இவையும் நிறைவேற்றிவிட்டால் முற்றிலும் கல்வி என்பது சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாகிவிடும். இந்த லட்சணத்தில் எங்கு போய் இட ஒதுக்கீட்டை கேட்பது?

மேற்கண்ட இவையெல்லாமும் இட ஒதுக்கீட்டை நாங்கள்தான் கொண்டு வந்தோம் என மார்த்தட்டும் திராவிட அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் வந்தவையே.

இப்படி இட ஒதுக்கீடு முறையை முற்றிலும் சிதைக்கும் தனியார் மயத்தை ஆதரிக்கும் கட்சிகள் தாங்கள் தான் சமூக நீதிக் காவலர்கள் என சொல்லிக் கொண்டிருப்பது ஏமாற்று வேலையல்லாம‌ல் வேறென்ன?

திராவிட அரசியல் கட்சிகளின் சமூக நீதி அரசியல் எல்லாம் முதலாளித்துவ ஆக்டோபஸிற்குள் மூழ்கத் தொடங்கிவிட்டன.

LPG யை ஆதரித்துக் கொண்டு இந்த நாட்டில் மக்களுக்கான எந்த அரசியலும் செய்ய முடியாது என்பதையும், அது முதலாளிகள் நலனுக்கான ஆட்சியாகத்தான் முடியும் என்பதையும் உணர வேண்டும்.

தனியார் மயத்தை ஆதரித்துக் கொண்டு சமூக நீதி பேசுவது ஓட்டு பொறுக்க மக்களை ஏமாற்றும் ஒரு யுக்தியே.

இட ஒதுக்கீடு என்ற சமூக நீதியைப் பெற வேண்டுமானால் அதை சிதைத்துக் கொண்டிருக்கும் தனியார்மயத்தை ஒழித்தாக வேண்டும்.

- திராவிடன் தமிழ்

Pin It