இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 340, 341, 342 பிரிவுகள் கல்வியில், சமுதாயத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு இடஒதுக்கீட்டு உரிமையை வழங்குகின்றன. இதனடிப்படையில்தான் மேற்கூறப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டன. குறிப்பாக 340(1)ஆவது பிரிவு சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கியோரின் நலனை ஆய்வு செய்வதற்கு ஓர் ஆணையத்தை அவ்வப்போது அமைத்து ஒடுக்கப்பட்டவர்களின் நலனை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறது.
இந்த அரசமைப்புச் சட்டத்தின் வழிதான் காகா கலேல்கர் குழுவின் முதல் அறிக்கை 1955இல் அளிக்கப்பட்டது. இவ்வறிக்கை நிலவுரிமை, நிலப்பங்கீடு, பொருளாதாரக் கூறுகள் என எல்லாவற்றையும் ஆய்ந்துதான் பின்தங்கியோர்க்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரையும் வழங்கியது. காகா கலேல்கர் அறிக்கை எழுத்தறிவு பெற்றவர் களின் எண்ணிக்கை பொதுவாகக் குறைந்த அளவில்தான் வளர்ந்து வருகிறது. பின்தங்கியோரில் எழுதப்படிக்கத் தெரிந்தோரின் எண்ணிக்கையோ மிக மோசமான அளவில் குறைந்து காணப்படுகிறது என்று தனது அச்சத்தை வெளிப் படுத்தியது. பல்கலைக் கழகப் பட்டப்படிப்புகளிலும் உயர் கல்வியிலும் ஆய்வு மையங்களிலும் பின்தங்கிய மாணவர்கள் படிப்பதற்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரை வழங்கியது. காகா கலேல்கரின் மேற்கூறிய பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் சமூகநீதி புறந்தள்ளப்பட்டது. அரச மைப்புச் சட்டம் 340(1) பிரிவின்படி 1979ஆம் ஆண்டு மண்டல் குழுவைப் பிரதமர் மொரார்ஜி தேசாய் நியமனம் செய்தார். ஏழு உறுப்பினர்கள் அடங்கிய சமூக ஆய்வாளர்கள் பல்வேறு அளவுகோல்களை எடுத்துக்கொண்டு ஆய்வு செய்து தங்களது அறிக்கையை மண்டல் குழுவிடம் அளித்தனர்.
1980இல் மண்டல் குழுவும் தனது பரிந்துரையைப் பல சமூகப் பொருளாதாரக் காரணிகளை முழுமையாக ஆய்ந்து, மாநிலங்கள் அளித்த பின்தங்கியோரின் பட்டியலையும் இணைத்து 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை அளித்தது. உச்சநீதி மன்ற ஆணையின்படி மொத்த இடஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டிற்குள் இருக்க வேண்டும் என்பதால்தான் குறைந்த அளவிலான 27 விழுக்காட்டு அளவினை இதரப் பிற்பட்டோர்க்கு அளிக்க வேண்டும் என ஒன்றிய அரசு முடிவு செய்தது. பல புள்ளிவிவரங்கள்நில உடைமை உட்பட பொருளாதார-சமூக ஆய்வுகள் அடிப்படையில் மண்டல்குழுப் பரிந்துரையை வழங்கி யிருந்தாலும் குறைந்த அளவான 27 விழுக்காடு இட ஒதுக் கீட்டை அளித்தது. அபபோதைய பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான ஒன்றிய அரசுப் பொருளதார அடிப்படையில் 10 விழுக்காடு இட ஒதுக்கிட்டினை வழங்க முயன்றது. உச்ச நீதி மன்றம் இந்த இட ஒதுக்கீட்டைச் செல்லாது என்று அறிவித்தது.
ஆனால் திருவாளர் மோடி உயர்சாதியினருக்கு10 விழுக் காட்டு இடஒதுக்கீட்டை அளிக்கும் 124வது அரசமைப்புச் சட்டப் பிரிவைத் திருத்துவதற்கு எவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் களை ஏமாற்றி உள்ளார் என்பதை நாடாளுமன்ற, சட்டமன்ற ஆய்வு மையத்தின் தலைவரும் அமைப்பாளருமான மாதவன் ஜனவரி 12 2019 நாளிட்ட இந்து நாளிதழில் விளக்கியுள்ளார். ஜனவரி 7ஆம் நாள் ஒன்றிய அரசின் அமைச்சரவை கூடி 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் தீர்மானம் ஒன்று நிறை வேற்றப்படும்; மக்களவையில் அரசமைப்புச் சட்டத்திருத்த வரைவு ஜனவரி 8ஆம் நாள் கொண்டுவரப்படும் என்ற செய்தி வெளியிடப்பட்டது.
இதில் என்ன வேடிக்கையென்றால் 8ஆம் நாள்தான் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின் இறுதி நாளாகும்.
இந்தச் சட்டத்திருத்தத்தை நிறைவேற்றுவதற்காக நாடாளு மன்ற மேலவையில் ஒரு நாள் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஒன்றிய அரசினுடைய ஊடகத் தகவல் மையம் இதைப்பற்றி ஊடகங்களுக்கு ஒரு செய்தியாகக் கூட அறிவிக்கவில்லை. நாடாளுமன்ற மக்களவை விதிகளின்படி எந்த ஒரு சட்டத்தையும் அறிமுகப்படுத்து வதற்கு இருநாள்களுக்கு முன்பு அந்த வரைவுச் சட்டத்தை அனுப்ப வேண்டும். இந்த இரண்டு நாள்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்ட வரைவைப் படித்து, திருத்தங்களையும் எதிர்ப்பினையும் தெரிவிப் பதற்கு வாய்ப்பு வழங்கப்படும். ஆனால் 10 விழுக்காட்டு இடஒதுக்கீடு சட்ட வரைவை செவ்வாய்கிழமை (ஜனவரி 8) வரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பப்படவில்லை. ஜனவரி 8ஆம் நாள் 11 மணி அளவில் முற்பட்ட வகுப்பில் உள்ள ஏழைப் பிரிவி னருக்குக் கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு சட்டம் வருகின்றதா? என்று கேள்வி எழுப்பப்பட்ட போது இக்குறிப்பிட்ட சட்டவரைவைக் கையாளும் அமைச்சகம் ஒன்றிய அரசிற்கு அது போன்று எவ்வித எண்ணமும் இல்லை என்று பதிலளித்தது. ஆனால் அதே நாள் பகல் 12.46 மணிக்கு இந்தச் சட்ட வரை வின் படிகள் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. பொதுவாக நாடாளுமன்ற மரபுப்படி நிலைக்குழுக்குத்தான் இது போன்ற சட்ட வரைவுகள் அனுப்பப்படும். இந்நிலைக்குழு தனது பரிந்துi ரயை நாடாளுமன்றத்திற்கு அளிக்கும் முன்பு பொது மக்களிட மிருந்தும் வல்லுநர்களிடமிருந்தும் கருத்துகளைக் கேட்கும். இத்தகைய முக்கிய அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த முன்வந்த ஒன்றிய அரசு, எவ்வித நடைமுறையையும் நாடாளுமன்ற மரபுப்படி பின்பற்றவே இல்லை. மாலை 5 மணிக்கு நாடாளு மன்ற மக்களவையில் விவாதம் தொடங்கி இரவு 10 மணிக்குத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற மேலவை ஒரு நாள் இச்சட்ட வரைவை விவாதத்திற்காக நீடிப்பு செய்யப்பட்டாலும் அங்கும் இந்தச் சட்டம் மதியம் 2 மணிக்கே அளிக்கப்பட்டு இரவு 10 மணிக்கு வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. சிறிய கட்சிகளைத் தவிர நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் அதிக எண்ணிக்கை கொண்ட கட்சிகள் ஆய்ந்து நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வைக்க வில்லை. ரூபாய் 8லட்சம் ஆண்டு வருமானம் 5 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் கூட இந்த 10விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பெற முடியும் என்ற திட்டத்தை வகுத்தது யார்? எந்த நிதி வல்லுநர்? கூற முடியுமா? ஏன் இந்த அவசரம்? யாரை ஏமாற்றா.
நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென் பொதுப்பிரிவில் பொருளா தாரத்தில் பின்தங்கிய முற்பட்ட சமூகத்திற்கு இடஒதுக்கீடு அளிக்கும் அரசமைப்புச் சட்டத்திருத்தம் குழப்பம் செய்வதற் காகவே உருவாக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்திலும் அரசியல் தளத்திலும் அதிர்ச்சித் தரும் வினாக்களை எழுப்புகிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சென் பொருளாதாரத்தில் இந்தியா உயர்வளர்ச்சியை அடைந்து வருகிறது என்று கூறப்பட்டாலும் அனைவருக்கும் கல்வி, மக்கள் நல்வாழ்வு, வறுமையை, ஒழிப்பு ஏற்றத்தாழ்வுகளைக் களைதல், வேலை வாய்ப்புகளைப் பெருக்குதல் ஆகியவற்றில் அத்தகைய வளர்ச்சியை உண்மை யில் காண முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பல மொழிகள், இனங்கள், பல்வேறு சாதிகள் அடங்கிய ஒவ்வொரு மாநிலத்திற்கும் முற்றிலும் வேறுபட்ட சமூக அமைப்பு கள் கொண்ட இந்திய நாட்டில் உயர்வகுப்பினருக்குப் பொருளா தார அடிப்படையில் 10 விழுக்காட்டு இடஒதுக்கீடு அளிப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தையே அவமதிக்கும் செயலாகும். சான்றாக 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை புள்ளிவிவரங்கள் தலித் பழங்குடியின மக்களின் எழுத்தறிவு, விளக்குகிறது. ஓவ்வொரு மாநிலத்திலும் பிற்படுத்தபட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மக்கள் தொகையின் அளவு மாறுபடுகிறது. இவ்விதம் இருக்கும்போது 10 விழுக்காடு உயர்ந்த வகுப்பினர் என்று இந்தியா முழுவதற்கும் ஒரு சரிசம அளவைப் பின்பற்றுவது படுமோசமான அயோக்கியத்தனம் ஆகும். மக்களாட்சி முறையை இழிவுப்படுத்தும் செயலாகும். இதரப் பின்தங்கியோர் குறித்த புள்ளிவிவரங்கள் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் எடுக்கப்படாததால் புள்ளிவிவரங்கள் இல்லை. இதரப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் புள்ளி விவரங்களைக் கணக்கெடுக்காதது சமூக நீதிக்கு எதிராகப் புது தில்லி ஏகாதிபத்திய அரசின் உயர்பதவிகளில் உள்ள உயர்சாதியினர் செய்த திட்டமிட்ட சதியே ஆகும். இந்தப் புள்ளிவிவரம் வந்துவிட்டால் பிற்படுத்தப் பட்டோர்க்கு 40-50 விழுக்காடு அளவிற்கு இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும்.
அடுத்ததாக இந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பில் பின் தங்கியோரும், தலித், பழங்குடியின மக்களும்தான் இன்றளவும் குறைந்த ஊதியத்திலும் குறைந்த வருவாயிலும் உள்ளனர் என்பதைத்திட்டமிட்டு ஆதிக்கச் சாதியினரால் மறைக்கப்பட்டு வரும் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் மக்களைப் பற்றி அறிய ஒன்றிய அரசின் திட்டக்குழு டெண்டுல்கர் என்கிற பொருளாதார அறிஞர் தலை மையில் ஒரு குழுவினை 2011இல் அமைத்தது. அக்குழு நகர்ப்புற, கிராமப்புற மக்களின் அன்றாட வருமானத்தை உரிய முறையில் எடுத்துக்காட்டவில்லை என்று கடும் விமர்சனம் வந்தது. டெண்டுல்கர் நகர்ப்புறத்தில் ரூ.33க்குக் குறைவாகச் செலவிடும் தனிநபரும் ஊர்ப்புறத்தில் ரூ.27க்குக் குறைவாகச் செலவிடும் தனிநபரும் வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்பவர்கள் என்று குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து மன்மோகன் சிங் அரசில் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றிய சி.ரங்கராசன் தலைமையில் ஒரு குழு 2013இல் அமைக்கப்பட்டது. இக்குழு 2014இல் புள்ளிவிவரங்களை வெளியிட்டது. இக்குழுவின் அறிக்கையின்படி நகர்ப்புறத்தில் ரூ.47க்குக் குறைவாகச் செலவிடும் தனிநபரும் ஊர்ப்புறத்தில் ரூ.32க்குக் குறைவாகச் செலவிடும் தனிநபரும் வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்பவர் களாகக் கணக்கிட்டது. உலகளவில் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களில் ஒரு அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூபாய் 71) வருமானத்தை ஒரு தனிநபர் ஒரு நாளில் பெறவில்லை என்றால் வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்கிறார் என்று அளவீடு செய்தனர். அதன்படி 51 விழுக்காடு இந்திய மக்கள் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழ்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு பல அரசு அமைப்புகளும் தனியார் ஆய்வு அமைப்பு களும் குறிப்பிட்ட புள்ளிவிவரங்களின்படி மேற்கூறிய 51 விழுக்காட்டு மக்களில் 90 விழுக்காட்டு மக்கள் பிற்படுத்தப்பட்ட, தலித், பழங்குடியின மக்கள்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்கள் கல்வியிலும் சமூகத்திலும் காலம் காலமாக பின்தங்கியிருந்ததால் தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் கல்வியில் சமூகத்தில் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
மண்டல் குழுவின் பரிந்துரையை 1989இல் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் நிறைவேற்றினார். இவரை எதிர்த்து வாக் களித்தவர்கள்தான் இன்றைய ஆளும் பாஜகவினர் என்பதை மறந்துவிட முடியாது. இவர்கள் செய்த தடைகளின் காரணமாகக் காங்கிரசின் பிரதமராக இருந்த நரசிம்மராவ் 1994இல் இடஒதுக்கீட்டை அரசு அரசு உதவி பெறும் அமைப்புகளில் 27 விழுக்காட்டை அளித்தார்.பல ஆண்டுகளுக்குப் பின்னர் 2004இல் மன்மோகன் சிங் தலைமையில் அமையப்பெற்ற அரசில் திமுக தலைவர் கலைஞர் 27 விழுக்காட்டு இடஒதுக்கீட் டைப் பின்தங்கிய சமூகத்தினருக்கு ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களிலும் உடனடியாக அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதன் தொடர்பாக ஒரு மடலையும் அன்றைய பிரதமருக்கு எழுதினார்.
தமிழ்நாடு திட்டக்குழுவின் துணைத்தலைவர் என்ற முறையில் சட்ட வல்லுநர்களுடன் கலந்து அம்மடலை இறுதி செய்து முதல்வருக்கு அனுப்பினேன். அக்கருத்தை முதல்வர் கலைஞர் அப்படியே ஏற்றார். இதன் தொடர்ச்சியாக அன்றைக்கு ஒன்றிய அரசின் நிருவாகச் சீர்த்திருத்த ஆணையத்தின் தலைவராக இருந்த வீரப்ப மொய்லியை தில்லியில் தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இக்கட்டுரையாசிரியர் சந்தித்து 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை உடனடியாக உறுதி செய்ய வலியுறுத்தினார்.
உயர்கல்வி நிறுவனங்களான இந்தியத் தொழில்நுட்பக் கழகம், இந்திய மேலாண்மை கழகம், ஆகியவற்றில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று வீரப்பமொய்லி உறுதிக்கூறினார். ஒன்றிய அரசின் உயர்க்கல்வி நிறுவனங்களில் 27 விழுக்காட்டின் அடிப்படையில் மாணவர்கள் சேர்வதால் அதற்குரிய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். அதற்குரிய நிதியுதவியை ஒன்றிய அரசு அளிக்க ஆணையம் பரிந்துரை செய்ய முன் வந்துள்ளது. இதை ஒன்றிய அரசின் அமைச்சரவையும் ஒப்புக்கொண்டு அதிக நிதியை ஒதுக்கியது. எனவே முதலாண்டில் 9 விழுக்காடு தொடங்கி மூன்றாம் ஆண்டில் 27 விழுக்காடு உயர்ந்துவிடும் என்று வீரப்ப மொய்லி தமிழ்நாடு அரசின் சார்பில் சென்றிருந்த இக்கட்டுரை ஆசிரியரிடம் குறிப்பிட்டார். அதனடிப்படையிலேயே கல்வி நிறுவனங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு 2011இல்தான் முழுமையாக நடைமுறைக்கு வந்தது. மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ஏற்கனவே கல்வி, பொதுச் சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீட்டைக் கடந்த நான்காண்டுகளில் குறைத்துள்ளது. காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை யும் கடந்த நான்கு ஆண்டுகளில் 50 விழுக்காடு அளவிற்குக் குறைத்துள்ளது. இதன்காரணமாக பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வருமானம் குறைந்து ஏற்றத்தாழ்வு பெருகியுள்ளது என்பதைப் பல புள்ளிவிரங்கள் சுட்டுகின்றன.
இந்த 10 விழுக்காட்டு இடஒதுக்கீட்டுச் சலுகையை உயர் சாதியினரில் 1 விழுக்காட்டிற்கு குறைவானவரே பலன்களையும் பயன்களையும் அடைவர். வருமான வரம்பு உறுதி செய்வதற்கு ஆண்டுக்கு 8 இலட்சம் வருமானமும் 5 ஏக்கர் நிலமும் என்று வரையறை செய்திருப்தால் இப்பிரிவில் உள்ள பணக்காரர் களுக்கே இச்சலுகை போய் சேரும். இந்தியப் பொருளதார கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy-CMIE) 2018இல் வேலைவாய்ப்பு இந்தியாவில் குறைந்து வருவதைப் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. 2017இல் வேலைவாய்ப்பு கிடைப்பதில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. 2018இல் 7.4 விழுக்காடு வேலைவாய்ப்பு குறைந்து விட்டது. வேலையிலிருந்து நீக்கப்பட்ட வர்கள் எண்ணிக்கை 2017 இலிருந்து 2018 வரை ஒரே ஆண்டில் ஒரு கோடியே 10 லட்சம் பேர் ஆகும். இவ்வித கொடுமை கடந்த 10 ஆண்டுகளில் நடைபெறவேஇல்லை. பொரு ளாதாரத்தில் நலிந்தவர்கள் இடையில் 82ரூ விழுக்காடு ஊரகப் பகுதியில் வாழ்பவர்கள் வேலையிழந்துள்ளனர். இதில் பெண்கள் 80 விழுக்காடாகும். தற்காலிகப் புள்ளிவிபரங்கள் அடிப்படையில் இந்தக் கணக்கீடு செய்யப்பட்டாலும் இறுதி செய்யப்பட்ட புள்ளிவிவரங்கள் வெளிவந்தாலும் இந்தப் போக்கில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்று பொருளாதாரக் கண்காணிப்பு மையம் எச்சரித்துள்ளது.
உலக சமூகக் கண்ணோட்டம்- வேலைவாய்ப்பு அறிக்கையில் (World Employment and Social Outlook Trends: 2018), பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு ( International Labour Organisation -ILO) ஐந்தில் ஒரு பங்குக்குக் குறைவானவர்கள் நிலையான வேலைவாய்ப்பினைப் பெற்று நிரந்தரமான ஊதியம் பெருகிறார்கள்; 5 இல் இரண்டு பங்கினர் குறைவான ஊதியம் பெறுகின்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அஜிம் பிரேம்ஜி பல்கலைக் கழகம் தனது ஆய்வில் நிலையான வேலை வாய்ப்பினைப் பெறும் மக்கள் தொகையில் குறைந்த கூலியைப் பெறுவது பெரும் பிரச்சினையாக உள்ளது. இதில் அமைப்பு சாராத் தொழிலாளர்கள்படும் துயரத்தைச் சொல்லத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் வேலைவாய்ப்பைப் பெருக்கும் முயிற்சியில் எவ்வித அதிரடி நடவடிக்கையும் எடுக்காத மோடி அரசு, இந்த 10 விழுக்காடு இடஒதுக்கீட்டை அளித்து கல்வி, வேலைவாய்பினை அளிப்போம் என்பது மோசடியில் பெரும் மோசடியாகும்.
ஒன்றிய அரசு உடனடியாக 10 விழுக்காட்டு இடஒதுக்கீட்டை மாநிலங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துவது ஒரு சர்வாதிகார அராஜகச் செயலாகும். மாநில உரிமைகளைப் பறிக்கும் செயலாகும். ஒன்றிய அரசின் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்டோருக்கும், தலித், பழங்குடியின ருக்கும் உரிய இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. ஆண்டிற்கு 4.5 இலட்சம் வருமானம் ஈட்டும் குடும்பத்தைச் சார்ந்தவர் களுக்கு (தற்போது ரூ. எட்டு லட்சம்) கல்வி, வேலை வாய்ப்பு களில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்குத் தகுதியானவர்கள் என்ற பொருளாதார அளவுகோளைப் புகுத்தியதால் கடந்த 25 ஆண்டுகள் முழுமையான முறையில் 27 விழுக்காடு இடஒதுக் கீட்டைப் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றிய அரசு வழங்கவில்லை. இதை அட்டவணையில் உள்ள புள்ளி விவரங் கள் மெய்ப்பித்துவிட்டன.
பேராசிரியர்களுக்கான இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு : ஏதுமில்லை
அனைத்து 40 பல்கலைக்கழகங்களிலும் இட ஒதுக்கீடு பிரதிநிதித்துவம்:
பேராசிரியர்கள்
மொத்தம் 1125
தாழ்த்தப்பட்டோர் 39 (3.47%)
பழங்குடியினர் 8 (0.7%)
இதரப் பிற்பட்டோர் 0
பொது 1071 (95.2%)
இணைப்பேராசிரியர்கள்
மொத்தம் 2620
தாழ்த்தப்பட்டோர் 130 (4.96%)
பழங்குடியினர் 34 (1.30%)
இதர பிற்பட்டோர் 0
பொது 2434 (92.90%)
உதவிப் பேராசிரியர்கள்
மொத்தம் 7741
தாழ்த்தப்பட்டோர் 931 (12.02%)
பழங்குடியினர் 423 (5.46%)
இதரப் பிற்பட்டோர் 1113 (14.38%)
பொது 5130 (66.27%)
ஆசிரியரில்லாத ஊழியர்கள்
மொத்தம் 5835
தாழ்த்தப்பட்டோர் 523 (8.96%)
பழங்குடியினர் 248 (4.25%)
இதரப் பிற்பட்டோர் 694 (10.17%)
பொது 4443 (76.14%)
மாற்றுத்திறனாளி இனம் சேர்க்கப்படவில்லை
சான்று: ஏப்ரல்1 2018 வரை பல்கலைக்கழக மானியக்குழு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டவை.
மேற்கூறிய புள்ளிவிவரங்களின்படி உயர்சாதியினர் தான் 50 விழுக்காட்டிற்கு மேல் ஒன்றிய அரசின் கல்வி வேலை வாய்ப்புகளில் பெற்றுள்ளனர். நீட் போன்ற தேர்வுகளை நடத்தி மாநிலங்கள் தங்களின் பொதுச் செலவில் உருவாக்கிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் அதிக உயர்சாதியினரும் வடநாட்டி னரும் சேர்ந்திருப்பது மாநிலங்கள் உரிமைகள் மீதும் மாநிலங் களின் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் மீதும் வீழந்துள்ள பேரிடியாகும். இந்த அநீதிகளைத் துடைப்பதற்குப் பதிலாக ஒன்றிய அரசு மேலும் 10 விழுக்காடு உயர்சாதியினருக் கென்றால் எங்கே சமூக நீதி? யாருக்கு சமூக நீதி?