இந்தியாவில் எல்லா மதங்களிலும், பிற்படுத்தப்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள்! ஆனால், இந்திய ஆட்சிப் பணிகளிலும், மாநில ஆட்சிப் பணிகளிலும், கல்வியிலும் - பிற்படுத்தப்பட்டவர்கள் மிகக்குறைவாகவே இருக்கிறார்கள்!

ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவில் பிரிட்டிஷ் மாகாணங்கள் 11 இருந்தன. அத்துடன் குட்டி சுதேச அரசுகள் 460-க்கு மேல் இருந்தன; அய்தரா பாத், மைசூர், பரோடா முதலான பெரிய சுதேச அரசுகளும் இருந்தன.

பிரிட்டிஷ் மாகாணங்கள் 1947 வரையில் வெள்ளை ஆளுநர்களால் ஆளப்பட்டன. பிரிட்டிஷ் மாகாணத் துக்குட்பட்ட மாவட்டங்களை பிரிட்டிஷ் ஆட்சியர்கள் (Collectors) ஆட்சி செய்தார்கள். மாவட்ட ஆட்சியருக்குக் கீழ் எழுத்தர், தலைமை எழுத்தர் போன்ற உயர் அதிகார எழுத்துப் பணிகளில் வடநாட்டில் பார்ப்பனர்களும் காயஸ்தர்களும் இருந்தார்கள். தென்னாடு எனப்பட்ட சென்னை மாகாணத்தில் பார்ப்பனர்கள், அடுத்து கார்காத்தார், துளுவர், ரெட்டி, நாயுடு, நாயர் முதலான மேல்சாதிக்காரர்கள் இருந்தார்கள்.

நீதிக்கட்சி ஆட்சியில் சென்னை மாகாணத்தில் 1921இல் கீழ்நிலை அரசு வேலைகளில் 100 இடங்களும் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார், இசுலாமியர், கிறித்துவர், ஆதித்திராவிடர் என அய்ந்து வகுப்புகளுக்குப் பிரித்தளிக்கப்பட்டன.  ஆனால் இது நடப்புக்கு வரவில்லை.

1926-இல், நீதிக்கட்சி மாகாணத் தேர்தலில் தோல்வி அடைந்தது. சுயேச்சை அமைச்சரவை டாக்டர் ப.சுப்பராயன் தலைமையில் அமைந்தது. மேற்சொன்ன வகுப்புவாரி இடப்பங்கீட்டு ஆணை 1928இல்தான் முதன்முதலாக நடப்புக்கு வந்தது.

சென்னை மாகாணத்தில், 1947 நவம்பரில் முதலமைச்சர் ஒமந்தூரார், பார்ப்பனரல்லாத இந்துக்களில் பார்ப்பனரல்லாத இந்து பிற்படுத்தப்பட்டவர் என்னும் ஒரு பிரிவை ஏற்படுத்தி அவர்களுக்கு 14 இடங்களில் 2 இடங்கள் அதாவது 14 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்தார்.

1947-இல் வெள்ளையர் வெளியேறினர். இந்திய அரசமைப்புச் சட்டம் 9.12.1946 முதல் 26.11.1949 வரை எழுதப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. அச்சட்டம் 26.01.1950 முதல் நடைமுறைக்கு வந்தது.

அச்சட்டம் எழுத அமைக்கப்பட்ட குழுவுக்குத் தலை வராக இருந்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், ஏற்கெனவே பட்டியல் வகுப்பு மக்களுக்கு இடஒதுக்கீடு பெற்றுக் கொடுத்திருந்தார். மய்ய அரசுப் பணிகளில் இப்போது மத்திய அரசு வேலைகளிலும், மாநில அரசு வேலைகளிலும் எல்லாப் பிற்படுத்தப் பட்ட வகுப்புகளுக்கும் இட ஒதுக்கீடு அளிக்க வழி செய்தார்.

இதற்காக 16(4) என்ற விதியை எழுதினார். அவ்விதியாவது, “அரசு நிருவாகப் பணிகளில் அல்லது வேலையில் எந்தப் பிற்படுத்தப்பட்ட வகுப்புக் குடிமக்கள் போதிய பிரதிநிதித்துவம் பெறவில்லை என அரசு கருதுகிறதோ அவர்களுக் குச் சாதகமாக இடஒதுக்கீடு செய்ய எந்த ஏற்பாடு செய்வதையும் இந்த விதியில் உள்ள எதுவும் தடுக்காது” எனக் கூறுகிறது.

“ஓமந்தூரார் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளித்ததனால், முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த எனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை” என்று சண்பகம் துரைராஜூ என்பவர் வழக்குத் தொடுத்தார். அவ்வழக்கில் சண்பகம் துரைராஜூக்குச் சார்பாகத் தீர்ப்பளிக்கப்பட்டது. அதனால் இந்திய அரச மைப்புச் சட்டத்தில் 15(4) என்ற உட்பிரிவு சேர்க்கப் பட்டது. அதற்கு, முழுமுயற்சியையும் பெரியார் செய்தார்.

1951இல் பட்டியல் வகுப்பினருக்கும் பழங்குடியினருக் கும் 15 விழுக்காடு, பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு 25 விழுக்காடும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீதம் உள்ள 60 விழுக்காடு பொதுப் போட்டிக்கு ஒதுக்கப்பட்டது.

1954-இல் முதலமைச்சராக வந்த கு.காமராசர் பட்டியல் வகுப்பினருக்கும் பழங்குடியினருக்கும் அளிக்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை 15 விழுக்காட்டிலிருந்து 16 விழுக்காடு என உயர்த்தினார். பிற்படுத்தப்பட்ட வகுப்பு களுக்கு அளிக்கப்பட்டு வந்த 25 விழுக்காடு அப்படியே தொடர்ந்தது. இதனால் மொத்த இடஒதுக்கீடு 41 விழுக்காடு ஆனது.

1967 மார்ச்சில் தி.மு.க. பதவிக்கு வந்தது. சி.என். அண்ணாதுரை அவர்கள் 03.02.1969 வரை முதல்வராக இருந்தார். அவர் மறைந்தவுடன், கலைஞர் மு. கருணாநிதி முதலமைச்சர் ஆனார்.

இடையில் கர்நாடக மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அது செல்லாது என்று மைசூர் உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்தன. அப்படி இருப்பினும், 33 விழுக்காடு வரை பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கலாம் எனப் பெரியார் கோரினார்.

முதலமைச்சரான கலைஞர் மு. கருணாநிதி பெரியாருடைய கோரிக்கையை ஏற்று, இடஒதுக்கீட்டில் 8 விழுக்காடு அதிகப்படுத்தினார்; 1971இல்  பிற்படுத்தப் பட்டோருக்கு 6 விழுக்காடும், பட்டியல் வகுப்பினருக்கு 2 விழுக்காடும் அதிகப்படுத்தினார். இரண்டு வகுப்புகளுக்கும் சேர்ந்து மொத்தம் இடஒதுக்கீடு 49 விழுக்காடு ஆயிற்று.

அ.தி.மு.க. 1977-இல் ஆட்சிக்கு வந்த பிறகு, “1979இல் கல்வி ஆண்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள்ள 31 விழுக்காடு அளிப்பதில், பொருளாதாரத்தில் வசதி உள்ள வர்களை நீக்கிவிட்டு, வசதியில்லாதவர்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு தர வேண்டும்” என்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஆணையிட்டார். மா.பெ.பொ.க. உட்பட எல்லாக் கட்சிக்காரர் களும் இதை எதிர்த்தார்கள். ஆனால், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி - நன்கு சிந்தித்து பிற்படுத்தப்பட்டவர்களுக்குத் தமிழ்நாட்டில் உள்ள நிலைமையை விளக்கி,  எம்.ஜி.ஆர். அவர்களைச் சந்தித்து 19.8.1979-இல் ஒரு கோரிக்கை ஆவணம் அளித்தது. அதில், “தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டவர்கள் 67.5 விழுக்காடாக உள்ளனர். இது அரசுக் கணக்குப்படி. அதனால், பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு அளிக்கும் இடஒதுக்கீடு 31 விழுக்காட்டை உயர்த்தி, 60 விழுக்காடு அளிக்க வேண்டும்” என்று கோரியது. எம்.ஜி.ஆர். இசையவில்லை.

அப்பொழுது தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சராக இருந்த பண்ருட்டி எஸ்.இராமச்சந்திரனை நானும், சேலம் அ. சித்தய்யன் அவர்களும் நேரில் சந்தித்து அவரிடம் சட்ட விவரங்களை விளக்கினோம்.

பண்ருட்டி எஸ். இராமச்சந்திரன் அவர்கள் சனவரி பிற்பகுதியில் எம்.ஜி.ஆர். அவர்களைச் சந்தித்தார். எம்.ஜி.ஆர்., உடனேயே வந்து கோட்டையில் அதிகாரிகளை அழைத்துப் பேசினார், “01.02.1980 முதல் தமிழ்நாட்டுப் பிற்படுத்தப்பட்டோருக்கு அரசு வேலையிலும், கல்வியிலும் 50 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்படும்” என அறிவித்தார்.

இப்போது தமிழ்நாட்டில் 69 விழுக்காடு வழங்கப் படுகிறது. அதை நிலைப்படுத்துவதற்காக, தி.க. தலைவர் கி. வீரமணி, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அட்டவணை 9-இன்கீழ் சேர்க்க ஒரு திட்டத்தை முன்மொழிந்து, 1988-இல் அத்திட்டத்தை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிடம் அளித்தார். அத்திட்டத்தை ஏற்று, அதை இந்திய அரசுக்கு முதலமைச்சர் அனுப்பி வைத்தார். இந்திய அரசமைப்புச் சட்டம் அட்டவணை 9-இல் அது சட்டமாக இடம்பெற்றது. நிற்க.

வடநாட்டில் எந்த மாகாணத்திலும் அல்லது மாநிலத்திலும் 1978 வரையில் அரசுப் பணிகளில் வகுப்புவாரி பங்கீடு தரப்படவில்லை.

8.8.1976-இல் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடை மைக் கட்சி சீர்காழியில் தொடங்கிய போதே, “இனி நாம் பெரியாரின் கொள்கைகளுள் வகுப்புவாரி உரிமைக் கோரிக்கை ஒன்றையாவது முழுவதுமாக வென்றெடுக்கப் பாடுபடுவோம்” என்று முடிவெடுத்தோம்.

அரசமைப்புச் சட்டப் பிரிவு 340இன் படி பிற்படுத் தப்பட்ட மக்களுக்குப் பரிநதுரைகள் என்னென்ன செய்ய வேண்டும் என்று கண்டு பரிந்துரை செய்ய முதலாவது பிற்படுத்தப்பட்டோர் குழுவை காகா கலேல்கர் தலைமையில் 29.01.1953-இல் நேரு அமைத்தார். காகா கலேல்கர் குழு அறிக்கையை 30.3.1955-இல் நேருவிடம் அளித்தது.

அறிக்கையைப் பெற்ற நேரு 1961 வரை அதை நடை முறைப்படுத்தாமல் -

அ. காகா கலேல்கர் கண்டபடி, 2999 சாதிகள் பிற் படுத்தப்பட்டோர் என்பதை ஏற்க முடியாது எனவும்; அவர்களுக்கு இடஒதுக்கீடு மத்திய அரசுப் பணிகளில் அளிக்கவும் முடியாது எனவும் இந்திய அமைச்சரவை முடிவு செய்கிறது என்று, 1961-இல் தீர்மானித்தார்.

ஆ. சில மாதங்கள் கழித்து, மாகாண முதலமைச் சர்களுக்கு ஒரு கமுக்க மடல் (Demy Official Letter) அனுப்பினார். அதில், “பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கல்வி யிலும் வேலையிலும் சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு தரக்கூடாது எனவும், அவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமானால் பொருளாதார உதவி செய்யலாம் என்றும் எழுதினார்.”

பிரதமர் நேரு எதை ஏற்க முடியாது என்று சொன்னாரோ, அதை ஏற்றுப் பிரதமராக இருந்த வி.பி. சிங் 13.8.1990-இல் ஆணை பிறப்பித்தார். நம் பேரவையின் கோரிக்கை வென்றது. எப்படி?

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு பெற்ற நாம், இந்தியாவில் உள்ள எல்லா வடமாநிலங்களிலும் மத்திய அரசிலும் பிற்படுத்தப்பட் டோருக்கு இடஒதுக்கீடு பெறவேண்டும் என்கிற கோரிக் கையை முன் வைத்து, இந்திய அரசுக்கும், நாடாளு மன்றத்துக்கும், விதி 15(4) விதி 16(4) இவற்றின்படி இந்தியா முழுவதிலும் உள்ள எல்லா மாநிலங்களிலும் மத்திய அரசிலும் விகிதாசார இடஒதுக்கீடு பிற்படுத்தப் பட்டோர், பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடி யினர், மதச்சிறுபான்மையினர் ஆகியோருக்கு விகிதா சாரம் அளிக்க இந்திய அரசு வழிசெய்ய வேண்டும் என்று வே. ஆனைமுத்து, மா. முத்துசாமி, தாதம்பட்டி எம். இராஜு ஆகியோர் முடிவு செய்து கொண்டு, தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் கோரிக்கை ஆவணம் அச்சிட்டுக் கொண்டு, மூவர் மட்டும் தில்லி நோக்கிப் புறப்பட்டோம்.

29.4.1978 காலை தில்லி அடைந்தோம். நேரில் ஒப்புதல் பெற்றிருந்தபடி புதுதில்லியில் 94, நார்த் அவென்யூ என்கிற வாழப்பாடி கூ. இராமமூர்த்தி அவர் கள் வீட்டில் நாங்கள் மூவரும் ஓர் ஆண்டில் ஓரிரு மாதங்கள், தங்கி 13 ஆண்டுகள் - 1991 வரையில், அன்றாடம் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கண்டு, அவர்களுக்குக் கோரிக்கை ஆவணங்களை அளித்தோம்.

7.5.1978-இல் உத்தரப்பிரதேசப் பிற்படுத்தப்பட் டோர் மாநாட்டில் நானும், மா. முத்துச்சாமியும், பீகார் நாடாளுமன்ற உறுப்பினர் இராம் அவதேஷ் அவர்களும் பங்கேற்றோம். நான் அந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தேன்.

8.5.1978-இல் நானும், மா. முத்துச்சாமி, சேலம் எம். இராஜு, காலை 10 மணிக்கு இந்திய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டியைப் பார்த்து, கோரிக்கை விண்ணப்பத்தை அளித்தோம். அவர் மேல்சாதி ரெட்டி வகுப்பினர். ஆதலினால், “சென்னையில் இந்தி எதிர்ப்பு மாநாடு போடுங்கள்; நான் அதைத் தொடங்கி வைக் கிறேன்” எனத் திசை திருப்பினார்.

எதிர்பாராத விதமாக இந்திய அரசு உள்துறை இணை அமைச்சர் தணிக்லால் மண்டல் அவர்களை 12.5.1978 மாலை அவருடைய இல்லத்தில் சந்தித்தோம். அவர், நம் கோரிக்கையை இருகை நீட்டி வரவேற் றார். உடனே, அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, “சென்னையில், 24.6.1978-இல் அகில இந்திய விகி தாசார இடஒதுக்கீடு மாநாடு நடத்துகிறோம்; நீங்கள் அதைத் தொடங்கி வைக்க வாருங்கள்” என்று கோரிக்கை வைத்தோம். அவர் ஒப்புதல் தந்தார். சென்னையில் மாநாடு வெற்றிகரமாக நடந்தது.

சென்னை மாநாட்டுக்கு வருகை தந்திருந்தார். இராம் அவதேஷ் சிங்கும் நானும், தென் மாநிலங் களில் பயணம் செய்து ஆதரவு திரட்ட வேண்டும். அந்த ஆதரவைக் கொண்டு, அனைத்திந்தியப் பிற் படுத்தப்பட்டோர் பேரவை ஒன்றை அமைக்க வேண்டும்” என்று திட்டமிட்டோம்.

அதன்படி கர்நாடகம், கேரளம், ஆந்திரம் முதலிய மாநிலங்களில் ஆதரவு திரட்டினோம். 19.8.1978 மாலை சென்னை எழும்பூர் பீப்பிள்ஸ் விடுதியில் கூடி, “அனைத்திந்தியப் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப் பினர், பழங்குடியினர், மதச் சிறுபான்மையினர் பேரவை” என்ற அமைப்பை அமைத்தோம். அப்பேர வைக்கு நான் புரவலர்-தலைவராகவும், இராம் அவதேஷ் சிங் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டோம்.

அன்று திட்டமிட்டபடி, நாங்கள் நான்கு பேர் பீகார் மாநிலம் முழுவதும் பயணம் செய்து, இடஒதுக்கீடு பற்றிப் பீகார் மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்குவது என முடிவு செய்தோம்.

அம்முடிவின்படி, வே.ஆனைமுத்து, மா. முத்துச்சாமி, திருச்சி து.மா. பெரியசாமி, வேலூர் நா.ப. செந்தமிழ்க் கோ ஆகியோர் 16.9.1978 அன்று பீகார் தலைநகரம் பாட்னாவை அடைந்தோம். 17.09.1978 முதல் இராம் அவதேஷ் சிங் 31 நாட்கள், 31 மாவட்டங்கள் பயணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார். விரிவாக விளம்பரம் செய்திருந்தார். பீகார் தொடர்வண்டி முழுக்க பெரியார் நூற்றாண்டு விழாவைப் பற்றிச் சுவரொட்டிகள் ஒட்ட ஏற்பாடு செய்திருந்தார். பீகாரில் 31 நாள் விழிப்புரைப் பயணம் செய்தோம்.

18.10.1978 முதல் பீகார், பாட்னா காந்தி மைதா னத்தில் சிறை நிரப்பும் போராட்டம் தொடர்ந்து நடை பெற்றது.

எங்கள் விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பாக, அன்றையப் பிரதமர் மொரார்ஜி தேசாய், 10.10.1978 முதல் பத்து நாள் பீகாரில் பயணம் செய்தார். எங்கள் விழிப்புணர்வுப் பரப்புரையால் விழிப்புப் பெற்ற மக்கள், அவருக்கு எங்கும் பேச இடம் கொடுக்கவில்லை.

அந்த பீகார் பயணத்தில் பிரதமர் தேசாய் கற்ற பாடத் தினால்தான், 20.12.1978-இல் நாடாளுமன்ற மக்கள் அவையில் “உடனே இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆய்வுக்குழு அரசினால் அமர்த்தப்படும்” என்று பிரதமர் மொரார்ஜி தேசாய் அறிவித்தார்.

இது நாம் வட நாட்டில் பெற்ற முதல் வெற்றி.

அப்போதைய பீகார் முதலமைச்சர் கர்ப்பூரி தாகூர் அவர்கள் “பீகாரில் அரசு வேலைகளில் 20 விழுக்காடு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்” என 31.10.1978-இல் அறிவித்தார்.

இது நாம் வடக்கே பெற்ற இரண்டாவது வெற்றி.

பீகார் பயணத்தில், கற்றபடியும், நாடாளுமன்றத்தில் அறிவித்தபடியும் பிந்தேசு வரி பிரசாத் மண்டல் தலை மையில் “இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் குழு 01.01.1979 அன்று அமைக்கப்பட்டது.

23.3.1979 புதுதில்லி போட் கிளப் மைதானத்துக்கு, பழைய தில்லி ஃபெரோஸ்ஷா கோட்லா கிரவுண்ட் மைதானத்திலிருந்து, 30,000 பேர் கொண்ட பேரணி புறப்பட்டது.

எல்லா மக்களும் அரியானா, இராசஸ்தான், பஞ்சாப், உ.பி., பீகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரம், கருநாடகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பட்டியல் வகுப்பு, பழங்குடி மக்களும், சிறுபான்மையினருமாகத் திரண்டனர்.

குறிப்பாகப், பேராசிரியர் சென்னை மு. நாகநாதன், டி.என். அனந்தநாயகி, சென்னை இரா. குசேலர், காஞ்சி தி.க. அரங்க சானகிராமன், க. சுப்பு போன்ற தமிழ்நாட்டுத் தலைவர்கள், போட் கிளப் மைதானத்தில் - வே. ஆனைமுத்து தலைமையில் நடந்த பொதுக் கூட்டத்தில் எதிர்பாரா வண்ணம் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர்.

அது தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவும், டாக்டர் இராம் மனோகர் லோகியா 80ஆம் பிறந்த நாள் விழாவும் ஆகும்.

இராம் அவதேஷ் சிங் வரவேற்புரையாற்றினார். இந்தியத் துணைப் பிரதமர் பாபு ஜெகசீவன் ராம் கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

“சமூகநீதிக்குப் போராடுவோம்” என்ற - தந்தை பெரியாரின் பேச்சு - எழுத்து இந்திமொழி நூலை மத்திய அமைச்சர் ராஜ் நாராயணன் வெளியிட்டார். பல கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினர்.

அண்மையில் 30.4.2019-இல், மறைந்த என் துணைவியார், ஆ.சுசீலா அவர்கள் அப்பேரணியிலும், பொதுக் கூட்டத்திலும் பங்கேற்றார் என்பதைப் பதிவு செய்கிறேன்.

25.3.1979 அன்று, அனைத்திந்தியப் பேரவையின் சார்பில், 25 பேர் கொண்ட குழுவினர், பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களைச் சந்தித்தோம்.

கடுமையான தொனியில் பிரதமர் எங்களிடம் பேசி னார்; நாங்களும் கடும் தொனியில் பேசினோம்.

கடைசியில், “மண்டல் குழுவின் பரிந்துரை வரட்டும்; நான் அதை அமுல்படுத்துகிறேன்” என வாக்களித்தார்.

மண்டல் அவர்கள், 31.12.1980-இல், அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தியிடம் பிற்படுத்தப்பட் டோர் குழு அறிக்கையை அளித்தார்.”

அந்த அறிக்கையில் இந்துக்களில் 52 விழுக்காடு பிற்படுத்தப்பட்டவர்களும், சிறுபான்மையினரில் 52 விழுக்காடாக - சராசரி மொத்த மக்கள் தொகையில் 52 விழுக்காடு இருக்கிறார்கள் என்றும், அவர்களுக்கு 1963-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பை மனதில் வைத்து, கல்வியிலும் வேலைகளிலும் மத்தியிலும் மாநிலங்களிலும் 27 விழுக்காடு மட்டும் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்தார்.

பிரதமர் இந்திராகாந்தி அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த கியானி ஜெயில்சிங் மண்டல் பரிந்துரை பற்றி விவாதிக்க 25.1.1982 அன்று என்னை அதிகாரபூர்வமாக தில்லிக்கு அழைத்தார், நம் தோழர்களும் நானும் அவரிடம் வாதித்ததும், அவர் எங்களைத் தெளி வாகப் புரிந்து கொண்டதும் மிக முதன்மையாகும்.

மேலும், நானும் சேலம் அ. சித்தய்யன் அவர்களும் 29.4.1981, 03.03.1982 இப்படிப் பல நாள்களில், தில்லியில் அரசமைப்புச் சட்ட அவைக் கூடத்தில் (Constitution Club) இடஒதுக்கீடு பற்றிக் குறைந்தது 5 தடவைகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட் டத்தை நடத்தினோம். அவர்களுக்கு, எங்கள் கோரிக் கை பற்றி அப்போது விளக்கினோம்.

29.4.1981இல், நடந்த அந்த முதல் நிகழ்ச்சிக்கு எல்லாக் கட்சிகளை யும் சார்ந்த 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந் தார்கள். ஆனால், 03.03.1982 நாடாளுமன்ற உறுப்பி னர்கள் கூட்டத்திற்கு, ஏழு பேர் மட்டும் வந்தார்கள். இது என் மனதைப் பிசைந்தது.

04.03.1982 மதிய வேளை உணவுக்குப் பிறகு “ஜெயில் சிங்கிடம் நான் தனியாகப் பேச வேண்டும்; நீங்கள் அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று மதிப்புமிகு மறைந்த வாழப்பாடி கூ.இராமமூர்த்தி, எம்.பி., அவர்களிடம் தெரிவித்தேன்.

அவர் உடனேயே என்னை மாண்புமிகு ஜெயில் சிங் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று “இவர் என் மதிப்பிற்குரியவர்; இவர் தனியாக உங்களிடம் பேச வேண்டுமாம்; இவருக்கு உதவி செய்யுங்கள்” என்று சொன்னவுடனே, வாழப்பாடி போய்விட்டார்.

அடுத்தகணமே, மதிப்புமிகு ஜெயில் சிங் அவர்கள் தன் வலது காதை என் வாயில் வைத்து, “Tell Me” என்று சொன்னார்.

நான் “I don’t have faith in Indira Gandhi : I“I don’t have faith in Indira Gandhi : Ihave faith in you” என்றேன். மேற்கொண்டு பேசிட, என் வீட்டுக்கு வாருங்கள் என்று சொன்னார். உடனே, “I request you to place Mandal Recommendation“I request you to place Mandal RecommendationReport on the table of the Parliament” என்று வேண்டிக் கொண்டேன்.

4.3.1982இல் மாலை 4.30 மணிக்கு உள்துறை அமைச்சர் ஜெயில் சிங் அவர்கள், “இந்திய அரசு மண்டல் பரிந்துரையை அமுல்படுத்த ஒப்புக்கொள் கிறது; பிற்படுத்தப்பட்டவர்களுக்கு சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படும்” என்று உறுதி கூறுகிறது என நாடாளுமன்ற மக்கள் அவையில் அறிவித்தார்.

இதைத் தம் அறையிலிருந்து கவனித்த பிரதமர் இந்திரா காந்தி, உடனே அன்று மாலையே 5.30 மணிக்கு நாடாளுமன்ற மேலவையில்  “இந்திய அரசு பிற் படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க ஒப்புக்கொள்கிறது; ஆனால் இடஒதுக்கீட்டைப் பொருளாதார அடிப்படையில் கொடுக்க இந்திய அரசு ஒப்புகிறது” என்று, அவருடைய உண்மை நிலையைக் காட்டிவிட்டார். நிற்க.

1986 முதல் 1992 முடிய நம் பேரவைத் தலைவர் இராம் அவதேஷ் சிங் நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினராக இருந்தார். இராம் அவதேஷ் சிங் அன்றாடம் கேள்வி நேரத்தில், விடாமல் மண்டல் பரிந்துரை பற்றித் தவறாமல் வினா எழுப்பினார்.

மேலும், 12.3.1990-இல், குடியரசுத் தலைவர் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில், குறுக்கிட்டுக் கேள்வி கேட்டு, குடியரசுத் தலைவர் தொடர்ந்து பேச முடியாமல், இராம் அவதேஷ் சிங் அவர்கள் தடுத்துவிட்டார். இந்த நிகழ்ச்சி இந்தியாவை உலுக்கியது.

இது பிரதமர் வி.பி. சிங் அவர்களைத் துணிவு கொள்ளச் செய்தது. 06.08.1990இல் பிற்படுத்தப்பட்டோருக்கு மய்ய அரசு வேலையில் 27 விழுக்காடு வழங்கப்படும் என அறிவித்து 13.08.1990இல் ஆணையும் பிறப்பித்தார். இதுவும் நாம் பெற்ற வெற்றி.

29.4.1978-இல் நாம் தொடங்கிய இந்தியப் பய ணத்தில், 18.10.1991, 19.10.1991, 20.10.1991 ஆகிய நாள்களில், தில்லியில், மவ்லங்கர் மண்டபத்தில் நடந்த மூன்று நாள் மாநாடுகளும் மிக முதன்மையாகும்.

18.10.1991 வெள்ளி மண்டல் பரிந்துரை அமலாக் கக் கருத்தரங்கு இந்தியக் கூட்டாட்சிக் கொள்கைக் கருத்தரங்கு 19.10.1991 சனி மண்டல் பரிந்துரை போராட்ட விளக்க மாநாடு பெரியார் 113ஆவது பிறந்த நாள் விழா 20.10.1991 ஞாயிறு இந்தியக் கூட்டாட்சிக் கொள்கை விளக்க மாநாட்டுத் தீர்மானங்கள் நிறை வேற்ற தமிழ்நாட்டிலிருந்து, ஆடவரும் மகளிரும் - நாங்கள் 200 பேர், தில்லி மாநாடுகளுக்குப் போயிருந் தோம்.

அந்த மாநாட்டின் வழியாகத்தான், மா.பெ.பொ.க. “இந்தியக் கூட்டாட்சி” என்கிற கோட்பாட்டுக்குக் கால்கோள் நாட்டியது. அங்கு நடந்த வகுப்புவாரி உரிமை மாநாட்டில் தான், “வகுப்புவாரி விகிதாசார உரிமைக்கு அடித்தள மிட்டது.”

அந்த மாநாட்டுக்குப் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ச.இராமதாசு அவர்கள், 400 தோழர்களுடன் வருகை தந்து சிறப்பித்தார்.

மூன்று நாள் மாநாடுகளுக்கும் தில்லி மாநகர மா.பெ.பொ.க. செயலாளர் ச.தமிழரசு, புதேரி தானப்பன், ஆகியோர் நிறையப் பங்களிப்புச் செய்தனர்.

மூன்று நாள் மாநாட்டை அடுத்து, 10 நாள்கள் பயணமாக, கான்பூர், அலிகர் (தங்கல்), லக்னோ (2 நாள் தங்கல்), பீகார் மாநிலம் பாட்னா (தங்கல்), மேற்கு வங்கம் - கல்கத்தா (தங்கல்) என, தொடர்வண்டி, வழியாக 50 ஆண்கள், 10 பெண்கள் ஆக 60 பேர் வடநாட்டுப் பயணத்தை மேற்கொண்டோம். எல்லா இடங்களிலும் அந்தந்த நகரத்திலிருந்த நம் பேரவைத் துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் நல்ல உணவு, வசதியான தங்குமிடம், உள்ளூரில் பயணம் செய்யப் பேருந்து, ஆக எல்லா வசதிகளையும் செய்து அளித்தனர். எங்கள் வடநாட்டுப் பயணம் முடிந்து, 31.10.1991 அன்று சென்னை சென்ட்ரல் தொடர் வண்டி நிலையம் அடைந்தோம்.

எங்களோடு பயணம் வந்த 60 பேர்களும் மகிழ்ச்சி பொங்க, அவரவர் ஊருக்கு-வீட்டுக்குப் பயணப்பட்டோம்.

இவ்வளவு அலைச்சலையும் என்னுடன் பங்கு போட்டுக் கொண்ட என் தோழர்களையும், தோழியர்களையும் என்றும் மறவேன்.

20-10-1991 அன்று தொட்டு, வகுப்புவாரி விகிதாசார உரிமைக்குப் பாடுபட்ட நாம், இன்று, நம் கொள்கை எதிரிகளோடு வலிவாகப் போராட வேண்டிய ஈன நிலை யிலிருக்கிறோம்.

தொடர்ந்து போராடுவோம்! இடையறாப் போராட்டம், நம்மை வெற்றி நோக்கி இட்டுச் செல்லும்!

Pin It