சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நீதியர் எம். துரைசாமியும் கே. முரளிசங்கரும் நவம்பர் முதல் நாள் வழங்கியுள்ள தீர்ப்பு வன்னிய சாதியினருக்கு 10.5 விழுக்காடு தனி இடஒதுக்கீடு செல்லாது என்று அறுதியிட்டு உறுதியாகச் சொல்லி விட்டது.
இந்தத் தீர்ப்பு வன்னிய சாதி மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி போல் காட்டி அம்மக்களிடையே சாதி வெறியூட்டும் முயற்சிகள் நடைபெறுகின்றன. வன்னியர்களுக்கு இதுவரை இருந்த இடஒதுக்கீடே இந்தத் தீர்ப்பினால் பறிபோய் விட்டது போல் பீதியூட்ட முயல்கின்றனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்கு வழங்கப்படும் 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில் வன்னியர்கள் பெற்று வந்த பங்கில் இந்தத் தீர்ப்பினால் எந்தக் குறையும் வந்து விடவில்லை. 10.5 விழுக்காடு தனி இடஒதுக்கீட்டினால் இந்தப் பங்கு கூடுமா? குறையுமா? என்பதற்குத் தெளிவான விடை காண்பதற்கான தரவுகள் ஏதுமில்லை. சில மாவட்டங்களில் கூடலாம், வேறு சிலவற்றில் குறையலாம். ஆனால் வன்னியர்கள் உட்பட ஒடுக்குண்ட மக்களின் எல்லாச் சிக்கல்களுக்கும் இடஒதுக்கீட்டை மட்டுமே தீர்வாகக் காட்டுவது சாதி அரசியலை வளர்க்கத்தான் பயன்படும். தமிழ்த் தேசியச் சமூகநீதிக்கான போராட்டத்திலிருந்து அவர்களை விலக்கி நிறுத்திப் பதவி அரசியல் சதுரங்கத்தில் பகடைகளாக்கி விடும்.
உழைக்கும் பெருந்திரளாகிய வன்னியர்களை ஏனைய மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் போட்டிக்காரர்களாக முன்னிறுத்தியதுதான் 10.5% தனி இடஒதுக்கீட்டால் கண்ட பலன். இந்தத் தனி இடஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் செல்லாதடித்து விட்டதையே ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்தி வன்னியர்களிடையிலான சாதி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க சமூகநீதி ஆற்றல்கள் முன்னுக்கு வர வேண்டும்.
வன்னியருக்கான இடஒதுக்கீட்டுச் சட்டம் ஏன் செல்லாது? என்பதற்கான காரணங்களை உயர்நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது. இவற்றுள் பலவும் நாம் முன்பே (சமூகநீதியும் சாதி அரசியலும், உரிமைத் தமிழ்த் தேசம், 2021 சூலை) சுட்டிக்காட்டியவைதாம்.
இந்திய அரசமைப்பு ஒரு சாதியை மட்டும் தனி அலகாய்க் கொண்டு இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யவில்லை. சமூகவகையிலும் கல்விவகையிலும் பிற்பட்ட வகுப்புகள் (SOCIALLY AND EDUCATIONALLY BACKWARD CLASSES – SEBC) என்பதே அரசமைப்பு குறிப்பிடும் வரையறை. அட்டவணைச் சாதிகள் (SC), அட்டவணைப் பழங்குடிகள் (ST) தவிர. ஏனைய பிற்பட்ட வகுப்புகள் (OBC) என்ற தொகுப்புகள் மட்டுமே சட்டப்படி செல்லும். தமிழ்நாட்டைப் பொறுத்த வரை ஏனைய பிற்பட்ட வகுப்புகளைத்தான் பிற்பட்ட வகுப்புகள் (BC) என்கிறோம். அவர்களுக்குள் மிகவும் பிற்பட்ட வகுப்புகள் (MBC) என்ற புதிய தொகுப்பைச் செய்துள்ளோம். இவையல்லாமல் சாதியின் பேரில் வன்னியர் என்ற புதிய தொகுப்பை நுழைப்பது சட்டப்படி செல்லாது. ஒற்றைச் சாதியை இடஒதுக்கீட்டுக்குரிய அலகாகக் கருதும் நடைமுறை எங்கும் இல்லை, சட்டப்படி இருக்கவும் முடியாது.
நடுவண் அரசாயினும் சரி, மாநில அரசாயினும் சரி, சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க இந்திய அரசமைப்பில் இடமில்லை.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அஇஅதிமுக ஆட்சி 2021 பிப்ரவரி 26ஆம் நாள் தமிழ்நாட்டுச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கடைசி நாளில் கடைசி அமர்வில் கடைசி நேரத்தில் இயற்றிய சட்டம்தான் வன்னியர் சமுதாய மக்களுக்கு 10.5 விழுக்காடு தனி இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் (தமிழக அரசு சட்டம் 8/2021). 102ஆம் அரசமைப்புத் திருத்தச் சட்டத்துக்கும் (2018) 105ஆம் அரசமைப்புத் திருத்தச் சட்டத்துக்கும் (2021) இடைப்பட்ட காலத்தில் இந்த 2021 பிப்ரவரி 21ஆம் நாள் வருகிறது. அதாவது அந்த நாளில் சட்டப் பேரவைக்கு இப்படியொரு சட்டம் இயற்றும் அருகதை இல்லை.
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்கு 30 விழுக்காடும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்கு 20 விழுக்காடும் இடஒதுக்கீட்டுக்கு வழிசெய்யும் சட்டம் எண் 45 (1994). இந்திய அரசமைப்பின் ஒன்பதாம் அட்டவணையில் வைத்துப் பாதுகாக்கப்படுவதாகும். இந்தச் சட்டத்தை முறைப்படித் திருத்தாமல் மனம்போன போக்கில் மாற்றம் செய்ய முடியாது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 338-பி உள்ள வரை பிற்பட்ட வகுப்புகள் தொடர்பாக எம்முடிவு எடுக்கவும் மாநில அரசுக்கு அதிகாரமில்லை.
பிற்பட்ட வகுப்புகளின் மக்கள்தொகை, சமூகக் கல்வித் தகுநிலை, அரசுப் பணிகளிலான பங்கு ஆகியவை குறித்தான அளவிடத்தக்க தரவுகள் இல்லாமல் இடஒதுக்கீடு வழங்க முடியாது.
அளவிடத்தக்க தரவுகள் இல்லாமல் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களில் வன்னியர்களுக்கு (MBC – V) 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் முடிவு அரசமைப்பின் 14, 15, 16 உறுப்புகளை மீறுவதாகும்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களை ‘மிபிவ – வன்னியர்’ என்றும் ‘மிபிவ – சீர்மரபுச் சமுதாயம்’ என்றும் மூன்று உட்பிரிவுகளாக்குவதற்கு மக்கள்தொகை தவிர புறஞ்சார் அளவுகோல்கள் ஏதுமில்லை.
சாதிக்கு சாதி தனி இடஒதுக்கீடு வழங்கினால் சிறு சாதிகளின் நிலை என்னவாகும்? அவர்கள் இடஒதுக்கீட்டால் பயன்பெறுவது என்பதே முயற்கொம்பு ஆகிப்போகும்.
வன்னியர் தனி இடஒதுக்கீட்டைச் சட்டப்படி செல்லாதென்று அறிவிக்கும் போது உயர் நீதிமன்ற நீதியர் காட்டியுள்ள சிலபல காரணங்கள் மாநிலத் தன்னாட்சிக்கு (சரியாகச் சொன்னால் தமிழ்த் தேச இறைமைக்குப் புறம்பானவை என்பதில் ஐயமில்லை. ஆனால் வன்னியர் தனி இடஒதுக்கீடு ஒன்றையே புனித இலக்காகக் காட்டி சாதி அரசியல் செய்யும் கும்பலுக்கு ஆப்படித்த அளவில் இந்தத் தீர்ப்பு வரவேற்கத் தக்கதே. இந்தத் தீர்ப்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது வீண் வேலை. எடப்பாடி ஆட்சியின் சட்டத்தை அடியொற்றி அரசாணை பிறப்பித்த முக ஸ்டாலின் அரசு இப்போதும் தன் தவற்றை உணரவில்லையா? அல்லது நமக்கேன் வம்பு என்ற மனநிலையா?
நாங்களும் சமூகநீதியின் பக்கம் நிற்கிறோம் என்று பெருமை கொண்டாடும் ‘இடதுசாரிகள்’ இப்போதாவது இந்த உயர்நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று ஸ்டாலினுக்கு அறிவுரை சொல்லியிருக்கக் கூடாதா? திமுகவின் பிற தோழமைக் கட்சிகள், பல்வேறு இயக்கங்கள் அமைதி காப்பது ஏன்? கொள்கைக் குழப்பமா? சாதி அரசியலைக் கண்டு அச்சமா? அல்லது வீரத்தை விஞ்சிய விவேகமா? தேர்தல் கூட்டணிகள், சீட்டுப் பங்கீடுகள், கோடிப் பங்கீடுகள், சின்னம் ஒதுக்கீடு எல்லாவற்றுக்குமே விவேகம் தேவைப்படுகிறதே? ’பொருளியலில் நலிந்த பிரிவினர்’க்கு (EWS) 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது ஆதரித்த சிபிஎம் கட்சி அதற்குத் தேர்தலைத்தான் காரணமாக் காட்டிற்று என்பதை மறக்க முடியுமா?
இடஒதுக்கீட்டில் யாருக்கு எவ்வளவு? என்ற பூசல் நடந்து கொண்டிருக்கும் போதே, புதுத் தாராளிய முதலிய வளர்ச்சியின் விளைவுகள் இடங்களையே இல்லாமற்செய்து கொண்டிருக்கிறது. அரசும் பொதுத் துறையுமே சமூகநீதி சார்ந்த இடஒதுக்கீட்டை மறுக்கும் போக்கில் இருக்கும் போது மோதியின் அரசும், அதனைத் தாங்கியும் அதனால் தாங்கப்பட்டும் நிற்கும் அம்பானிகளும் அதானிகளுமா இடஒதுக்கீடு தரப் போகின்றார்கள்? உலக மயமும் தனியார் மயமும் தாராள மயமும் வளர்கின்றன என்றால் சமூகநீதிமயம் சுருங்கி அநீதிமயம் விரிகிறது என்று பொருள். இது வன்னியர்கள் மட்டுமல்ல, இடஒதுக்கீடு வேண்டி நிற்கும் அனைத்து மக்களும் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை.
சமூகநீதிக்கு இடஒதுக்கீட்டின் இன்றியமையாமையை என்றென்றும் வலியுறுத்தும் போதே சமூகநீதி என்றாலே இடஒதுக்கீடுதான் என்ற கிட்டப்பார்வை குறித்து எச்சரிக்கவும் வேண்டும்.
பொதுவாகவே இடஒதுக்கீட்டுக் கோரிக்கையின் மோசமான பக்கவிளைவுகளில் ஒன்று சாதிவழி அணிதிரட்டலாகும். இடஒதுக்கீட்டை ஏனைய சமூகநீதிக் கூறுகளிலிருந்து பிரித்தெடுத்து அதற்கு மட்டுமே மிகையழுத்தம் கொடுப்பது சாதியொழிப்புக்கு அடித்தளமாக இருக்க வேண்டிய சமூகநீதிக் கோரிக்கையை சாதிக் காப்புக்கு அரணாக்கி விடும் ஆபத்து உள்ளது. பக்க விளைவுகளைக் களைந்து முதன்மை விளைவை நோக்கிப் போராட்டத்தை முன்னெடுக்க சாதி அரசியலும் பதவி அரசியலும் உதவ மாட்டா. ஒரே கள்ள நாணயத்தின் இருபக்கங்களான சாதி அரசியலும் பதவி அரசியலும் இந்த உயர் நீதிமன்றத் தீர்ப்பால் சம்மட்டி அடி வாங்கியுள்ளன.
சமூகநீதி சார்ந்த தமிழ்த் தேசியம் இடஒதுக்கீட்டுக்காக விட்டுக்கொடாமல் போராடும் போதே சாதியத்தைக் கட்டோடு எதிர்த்து நிற்கும். தேசியத்தின் பெயரால் இனவாதமும், சமூகநீதியின் பெயரால் சாதியமும் எம் குறிக்கோளுக்குப் பகை! சமூகநீதியின் பெயரால் நடக்கும் சாதி அரசியலை எதிர்ப்பதற்கு இந்த உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஒரு நல்வாய்ப்பு! சாதி அரசியலுக்கு விட்டுக் கொடுப்பதுதான் அரசியல் சாணக்கியம் என்று எண்ணிக் கொண்டிருப்போர் திருந்துவதற்கும் இது நல்வாய்ப்பு!
- தியாகு