• 1.       21 / 06 / 2017 அன்று நீங்கள் வெளியிட்டுள்ள அவதூறு அறிக்கையை சி.பி.எம்.எல் மக்கள் விடுதலை, தமிழ்நாடு அரசியல் தலைமைக்குழுவினுடையது என்று அறிவித்திருக்கிறீர்கள். ஆனால், சி.பி.எம்.எல் மக்கள் விடுதலையின் அரசியல் தலைமைக் குழுவைச் சார்ந்த சில தோழர்களிடம் அதுகுறித்து கேட்டபோது அந்த அறிக்கைக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென மறுத்துள்ளார்கள்.

அ. இந்த விபரம் உங்களுக்குள்ளே இரண்டு தரப்பு இருப்பதை உணர்த்துகிறது.

ஆ. அத்தோடு உங்களது பொய், புரட்டு மற்றும் அராஜகத்திற்கு இன்னொரு தரப்பு ஒத்துழைப்பதில்லை என்பதும் தெரிகிறது.

இ. ஆக ஒருதரப்பாரான நீங்கள் செய்யும் தவறுகளுக்கு ஒட்டுமொத்த கட்சியையும் குறை கூறக் கூடாது என்பதால் உங்களை தோழர் பாலன் தரப்பினர் என்று அழைப்பதே சரி.

  • 2.       தமிழ்நாடு மக்கள் கட்சி பேர் பிரச்சினை 

அ. நீங்கள் தமிழ்நாடு மக்கள் கட்சியை கலைத்துவிட்டதாக அறிவித்தீர்கள், நாங்கள் அப்பெயரை பயன்படுத்தலாம் என நினைத்தோம். மறுபடியும் நீங்கள் தமிழ்நாடு மக்கள் கட்சி பெயரை பயன்படுத்துவதாக கூறினீர்கள், உடனே நாங்கள் அப்பெயரை பயன்படுத்த மாட்டோமென அறிவித்தும் விட்டோம். இதிலென்ன பிரச்சினை?

ஆ. பிரச்சினை என்னவென்றால், உங்களது சி.பி.எம்.எல் – மக்கள் விடுதலை தமிழ்நாடு என்கிற அமைப்பிற்கு தலைவர் மற்றும் பொதுச்செயலர் என இரு உயர்பொறுப்புகள் இருப்பதுபோல், தமிழ்நாடு மக்கள் கட்சிக்கும் தலைவர் மற்றும் பொதுச்செயலர் என இரு உயர்பொறுப்புகள் இருந்தது. அதில் ஒரு பொறுப்பில் இருந்தவர் உங்களுக்கு ஒத்துவராததால் அவரை டம்மியாக்க கட்சியை கலைக்க முயற்சித்தீர்கள். உங்களுக்கு ஒத்துவருகிற ஒருத்தர் மட்டும் பொறுப்பில் இருக்கும்படியாக கட்சியை கூட்டமைப்பாக மாற்ற முயற்சித்தீர்கள்.

அப்படி கூட்டமைப்பாக மாற்றும் முயற்சி தோல்வியடைந்தது. கூட்டமைப்புக்காக நீங்கள் கூட்டிய கூட்டத்தில் கலந்துகொண்ட தோழமை அமைப்புகள் உங்களுக்கு சாதகமான நபரை ஏற்றுக்கொள்ள மறுத்து கூட்டமைப்பையும் நிராகரித்தனர்.

இதனால் வெறுத்துப்போன உங்களுக்கு சாதகமான அந்த நபர், ‘கட்சியையும் கலைத்தாயிற்று, கூட்டமைப்பும் உருவாகவில்லை, எந்த பொறுப்பும் இல்லாமல் நான் டம்மியாக இருப்பதா?’ என கொந்தளித்தார்.

ஆகவே கலைத்த கட்சியை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவர துடித்தீர்கள்.

இது உங்கள் பிரச்சினை. நாங்கள் என்ன செய்தோம்?

இ. செயல்படாத, கைவிடப்பட்ட பெயர்களை மற்றவர்கள் பயன்படுத்துவது இயல்பு. தற்போதைய “நாம் தமிழர் கட்சி” இதற்கு நல்லதொரு உதாரணம்.

ஈ. உங்கள் அமைப்பு பெயர் தமிழ்நாடு மக்கள் கட்சி. எங்கள் கட்சியின் பெயர் “தமிழ்நாடு மக்கள் கட்சி (விடுதலை)”

உ. இதை நாங்கள் 10 / 05/ 2017-லிலேயே பகிரங்கமாக அறிவித்தும் விட்டோம். அப்படியிருக்க உங்களது கட்சியை நாங்கள் அபகரித்ததாக 21 / 06 / 2017 அன்று அதாவது 41 நாட்களுக்குப் பிறகு எழுதுகிறீர்கள். இதன் மூலம் தமிழ்நாடு மக்கள் கட்சி மட்டுமல்ல “தமிழ்நாடு மக்கள் கட்சி (விடுதலை)”-யும் எங்களுக்குதான் சொந்தமென்று சொல்கிறீர்களா? ஏற்கனவே, எல்லாமே எங்களுக்குதான் சொந்தமென்று அடிதடியில் இறங்கியதுபோல் எங்களையும் மிரட்ட நினைக்கிறீர்களா?

  • 3.       பொன்னுலகம் பதிப்பகம் தொடர்பாக

அ. பதிப்பகம் உங்களுடையது என்பதுபோல் காட்ட முயற்சித்துள்ளீர்கள். பதிப்பகம் தொடங்கும் எங்களது முயற்சி உங்களோடு இணைவதற்கு முன்பேயானதாகும். முதல் பதிப்பான எரியும் பனிக்காடுக்கான ஏற்பாட்டு தொகையாக முதன்முதலில் ரூபாய் 30,000 கொடுத்த திருப்பூர் தோழரும் பெற்ற திருப்பூர் குழுவும் பதிப்பகம் யார் பொறுப்பில் எப்படி இயங்க வேண்டுமென்ற அதன் நிபந்தனைகளும் இன்னும் உயிரோடு உள்ளன.

ஆ. உங்களோடு இருக்கும்போது உங்களை சார்ந்த ஒரு தோழரிடம் நான் வாங்கிய கடனை ஒழுங்குபடுத்திய விபரமும் உள்ளது.

இ. இதுபோக, “T-Shirt மற்றும் கொடி” தயாரித்த வகையிலும் மாணவர் மாநாட்டு செலவிற்கான வகையிலும் நான் சார்ந்த திருப்பூர் தோழர்களுக்கும் உங்கள் கட்சிக்கும் பண விவகாரம் ஒன்று உள்ளது. அதிலும் உங்கள் கட்சிதான் எங்களுக்கு பணம் தரவேண்டியுள்ளது. அதற்கான கணக்குகளும் இன்னும் பத்திரமாகவே உள்ளது.

  • 4.    பேச வேண்டியதை பேசாத நீங்கள்

அ. இன்றைய சி.பி.எம்.எல் – மக்கள் விடுதலை, தமிழ்நாடு அமைப்பு ஒரு இலட்சியத்தை உயர்த்திப்பிடித்தவர்களால் கட்டப்பட்டது. தத்துவம், அரசியல், அமைப்பு, நடைமுறை என நான்கு அரங்குகளிலும் கம்யூனிஸ்டுகள் முன்னேறுவதற்கு சிதறி கிடப்பவர்கள் ஒன்றுபட வேண்டும் என்கிற நோக்கில் அது கட்டப்பட்டது.

அதன்மூலம் சில ஒற்றுமைகள் சாதிக்கப்பட்டது. மேலும் ஒற்றுமைக்கான முயற்சி தொடர்ந்தது. அடுத்து ஒன்றுபடும் நிலையில் சில அமைப்புகள் நெருக்கமாக வந்தன.

இது தமிழக வரலாற்றில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது.

ஆ. அந்த ஒற்றுமையை சாதிக்க காரணமானவர்களில் ஒருவனான என்னை முதலில் வெளியேற்றினீர்கள். அடுத்து ஒன்றுபடும் நிலையில் நெருக்கமாக சில அமைப்புகள் இருந்தும் அது நடக்கவே இல்லை. மாறாக அமைப்பு திட்டமிட்ட வகையில் மேலும்மேலும் சிதறடிக்கப்படுகிறது.

இதானால் தமிழகத்தில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்திய நிலை மாற்றப்பட்டு அவநம்பிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த போக்கிற்கு காரணமான நீங்கள் அதை ஞாயப்படுத்தி மேலும் அமைப்பை சிதறடிப்பதை விரிவுபடுத்தவும் செய்கிறீர்கள். ஒரே கட்சிக்குள் இரண்டு தரப்பினராக நீங்கள் செயல்படுவதே இதற்கு சான்று.

ஆ. தத்துவம், அரசியல், அமைப்பு, நடைமுறை என நான்கு அரங்குகளிலும் முன்னேற வேண்டுமென்று ஒன்றுபட்ட சி.பி.எம்.எல் – மக்கள் விடுதலை, தமிழ்நாடு அமைப்பு இன்று கேலிக்கு ஆளாக நீங்கள்தான் காரணம். ‘கொள்கை இல்லாமல் ஒன்றுபட்டார்கள், அதன் காரணமாகவே உடைந்து கொண்டிருக்கிறார்கள்’ என்று மாற்று அமைப்புகளும், பார்வையாளார்களும் கேலி பேசும் நிலைக்கு ஆளாக்கியிருக்கிறீர்கள்.

இ. N.G.O-க்களும் பின்நவீனத்துவவாதிகளும் கம்யூனிஸ்ட் கட்சியில் நுழைந்து அதை சீரழிப்பவர்கள் என்பது உலகுக்கே தெரியும். உங்களோடு நெருக்கமாக இருக்கும் N.G.O-க்கள் மற்றும் பின்நவீனத்துவவாதிகளின் கட்சி கலைப்பு நடவடிக்கையால்தான் இப்போது சி.பி.எம்.எல் – மக்கள் விடுதலை சிதறடிக்கப்படுகிறதா?

ஈ. உங்களோடு கட்சி பொறுப்பில் இருக்கும் சிலர் ஆரம்பத்தில், கொத்தடிமை மீட்பு என்கிற பேரில் N.G.O நடவடிக்கையில் இருந்தவர்கள் என்பது உண்மையா? அவர்களின் N.G.O நடவடிக்கையும் கூட கட்சி கலைப்பிற்கு காரணமாக இருக்கலாமென சொல்லப்படுகிறதே உண்மையா?

உ. திட்டமிட்ட வேலைமுறைகள் தேவையில்லை என்றும் தன்னெழுச்சியாக வரும் மக்கள் போராட்டங்களில் தலையீடு செய்தால் போதுமென்றும் கூறுகிற உங்கள் நிலைப்பாடும் N.G.O நடவடிக்கையும் ஒன்றுதானே?

ஊ. புரட்சிகர நடைமுறையோ, அதற்கான புரட்சிகர கட்சியோ தேவையில்லையென்று ஒரு பிரிவினரை நீக்கிவிட்டு, ஒரு நபரை மட்டும் கட்சிக்குள் இரகசியமாக செயல்பட அனுமதித்திருந்தது என்ன நோக்கத்திற்காக?

இதுபோன்ற இன்னும் பல கேள்விகள் உங்கள் முன்னிருக்க நீங்கள் வேறு எதையோ பேசி பிரச்சினையை திசைதிருப்புவது வேடிக்கையானது. நீங்கள் விரும்பினால் ஆரோக்கியமாக அனைத்தையும் விவாதிப்போம். 

- திருப்பூர் குணா

Pin It