அ.மார்க்ஸ் மீண்டும் பா.ம.க-வை முன்னிறுத்துகிறார். பா.ம.க-வின் மறைந்த தலைவர் குரு பலமுறை வெளிப்படையாகவே அறிவித்ததுபோல் அது வடமாவட்டங்களில் நக்சல்பாரி இயக்கங்களுக்கு மாற்றாக வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி என்பது பாதிதான் உண்மை. அது சிபிஐ, சிபிஐ(எம்) உள்ளிட்ட தேர்தல் பாதை பொதுஉடமை கட்சிகளுக்கும் மாற்றான கட்சி என்பதுதான் மீதி உண்மை.
அந்த உண்மையை பா.ம.க-வின் தலைவர்கள் ஒருபோதும் ஒத்துக் கொண்டதில்லை. ஆனால், அதை வளர்த்துவிட்ட அ.மார்க்ஸ் மாதிரியான அரசியல் கைக்கூலிகள் பலமுறை ஒத்துக் கொண்டுள்ளனர். இப்போதும் அப்படியொரு ஒப்புதல் வாக்குமூலத்தைத்தான் அ.மார்க்ஸ் வெளிபடுத்தியுள்ளார்.
ஜூலை 16 அன்று இந்து தமிழ் நாளிதளில் வெளிவந்த பா.ம.க தலைவர் இராமதாசின் நேர்காணலையொட்டி ஜூலை 18 அன்று தனது முகநூலில் அ.மார்க்ஸ் திருவாய் மலர்ந்திருப்பதாவது-
“வடக்கே கன்ஷிராம் வெற்றிகரமாக முயன்றதுபோல மிகப்பிற்படுத்தப்பட்டவர்கள் + தலித்கள் + சிறுபான்மையர் என்கிற கூட்டணியை உருவாக்கும் ஒரு மனப்பூர்வமான முயற்சியில்தான் அவர் அரசியல் களமிறங்கினார். 'நிறப்பிரிகை' தொடங்கிய காலகட்டம் அது. நாங்கள் அவரை நெருக்கமாகக் கவனித்துக் கொண்டிருந்தோம்…
…தன்னுடைய சொந்த சாதியினரின் சாதி உணர்வுக்கே எதிராக அவர் தொடங்கிய போராட்டத்தை அவர் தொடரவில்லை என்பது உண்மை. ஆனால் அப்படியானதற்கு அவர் மட்டுமே காரணமில்லை. இது தொடர்பாக அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அவ்வளவு எளிதாகப் புறக்கணிக்கத்தக்கவை அல்ல…
…இனி எதிர்காலத்தில் அந்த மதவாதக் கட்சியுடன் கூட்டணி இல்லை என அவர் உறுதியாகச் சொல்லியுள்ளதை நாம் நம்பலாம்…
…முஸ்லிம்கள் அதிகமாக உள்ள நாகப்பட்டிணம் மாவட்டத்திற்கு இருந்த காயிதே மில்லத் மாவட்டம் என்கிற பெயரை நீக்க வேண்டும் எனச் சங்கிகள் அப்பகுதியில் போராடியபோது நான், தோழர் உ.இராசேந்திரன் (Rajendran Uthrapathy) ஆகியோர் மன்னார்குடியில் பேரணி, பொதுக்கூட்டம் ஆகியவற்றை நடத்தியபோது டாக்டர் அவர்கள் எங்கள் அழைப்பை ஏற்று வந்து முழங்கிய பின் சங்கிகள் அடங்கினார்கள். அதை மறக்க இயலாது…
…டாக்டர் அவர்களின் கருத்துக்கள் காய்தல் உவத்தலின்றி ஆய்வுக்குரியன.
…முப்பது ஆண்டுகளுக்கு முன் அவரது கிளினிக்கில் அவரைச் சந்தித்து விரிவாக உரையாடியதைப் போல இன்னொரு முறை உரையாட வேண்டும்”
தங்களது ஆசானாகவும், அறிஞராகவும் கொண்டாடுகிற சிபிஐ, சிபிஐ(எம்) கட்சிகளின் கவனத்திற்கு...
நீங்கள் மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் நீண்ட நெடுங்காலமாக ஆட்சி செய்தீர்கள். விட்டுவிட்டு என்றாலும் கேரளாவிலும் ஆட்சி செய்து வருகிறீர்கள். உங்களை உங்கள் ஆசான் முன்னுதாரணமாக எப்போதும் சொல்லியதில்லை. நிறைய குறைகளை சொல்லியிருக்கிறார். ஆனால், மக்கள் ஒற்றுமையை சாதிப்பதில் கன்ஷிராம்தான் முன்மாதிரி என்றும்; அவர் வழியில் தமிழகத்தில் உண்மையில் முயற்சித்தது இராமதாஸ்தான் என்றும் வழிமொழிகிறார்!
“...அவரது மக்களுக்கு எதிராக தலித் பிணமொன்றுடன் அவர்களோடு அவர் சென்றதையும் அருகிருந்து கண்டவர்கள் நாங்கள்...” என்று யாரும் செய்யாத சாதனையை இராமதாஸ் செய்ததாக பிரமிக்கிறார்.
அப்படியானால், சீனிவாசராவ், ஏ.கே.கோபாலன், நெடுங்காடி ராமசந்திரன், மணலூர் மணியம்மை, மணலி கந்தசாமி, பி.எஸ். தனுஷ்கோடி, கணபதி, ஏ.எம். கோபு, சித்தமல்லி சுப்பையா, தம்பிகோட்டை நாராயணன், ராமு, பாங்கல் தனுஷ்கோடி, அமிர்தலிங்கம் பிள்ளை, வெங்கடேச சோழகர், பட்டுராசு களப்பாடியார், எஸ்.ஜி.முருகையன் போன்ற தோழர்களும், இளமையிலே தங்கள் இன்னுயிரை இழந்த களப்பால் குப்பு, ஆம்பலாப்பட்டு ஆறுமுகம், வாட்டாக்குடி இரணியன், சம்பவான் ஓடை சிவராமன் போன்ற தலைவர்களும் முன்னணி வீரர்களும் செய்ததெல்லாம்?
சாணிப்பால், சவுக்கடி; கணவன் மனைவி தகராறுக்கு கூட ஒருவர் சிறுநீரை மற்றவரை குடிக்க வைப்பது; இருவரையும் இரு தூண்களில் கட்டி வைத்து சவுக்கால் அடிப்பது; பண்ணையார் நிலத்தில் தென்னம்பிள்ளை நடும்போது சேரியிலிருந்து ஒருவரை வரவழைத்து, அவர் எதிர்பார்க்காதபோது மூளை சிதறும் அளவிற்கு ஒரே அடியில் வீழ்த்தி அவரை குழியில் தள்ளி தென்னம்பிள்ளையை நடுவது; உழைக்கும் சேரி மக்களுக்கு கெட்டுப்போன சோற்றை போடுவது; பண்ணையாரை எதிர்த்தால் குடிநீருக்கான கிணற்றில் மலத்தை அள்ளி போடுவது; எதிர்த்தவரை மரத்தில் கட்டிவைத்து உடம்பில் வெல்லத்தைக் கரைத்து ஊற்றி எறும்பு கடிக்கும்படி செய்வது; கட்டை விரலை வெட்டுவது ஆகியவை எப்படி ஒழிக்கப்பட்டதாம்?
4000 பேர் உயிரைக் கொடுத்து, 10,000-க்கும் மேற்பட்டவர்கள் பல ஆண்டுகள் கடும் சிறைவாசம் அனுபவித்து, உழுபவருக்கே நிலம் சொந்தம் என்ற கோட்பாட்டின்படி 10 லட்சம் ஏக்கர் நிலம் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட; வெட்டி வேலை என்னும் கட்டாய உழைப்புமுறை ஒழிக்கப்பட்ட; விவசாயத் தொழிலாளர்களின் கூலி உயர்த்தப்பட்ட; முதன்முறையாக இலட்சக்கணக்கான விவசாயிகள் தினமும் இருமுறை சாப்பிட வழிப்பிறந்த வீர தெலுங்கானாப் போராட்டம் என்னவாம்?
தாழ்த்தப்பட்டோர், வண்ணார்கள், நாவிதர்கள், கும்மாரி ஆகிய அடிப்படை மக்களோடு, சிறுவியாபாரிகள், ஏழை, நடுத்தர விவசாயிகள் போன்றவர்களான நாயுடு, ரெட்டி ஆகிய சமூகப்பிரிவினரும் சிறுபான்மையினரும் அணிதிரட்டப் படாமலா இவையெல்லாம் நடந்தது?
அ.மார்க்ஸ் ஏன் இந்த உண்மைகளை மறைத்துவிட்டு இவைகளை சாதித்த இயக்கங்களை ஒழித்துக் கட்ட உருவாக்கப்பட்ட அமைப்பை ஊதி பெருக்குகிறார்? இப்போதும் கூட இசுலாமிய சமூகத்திற்கு ஒரு ஆபத்தென்றால் ஓடிப்போய் நீங்கள் நிற்கும் போது, உங்கள் ஆசான் ஏன் சங்கிகளை எதிர்கொள்ள இராமதாஸ்தான் சிறந்த வீரன் என்று அடையாளம் காட்டுகிறார்? இராமதாசை குறை சொல்லிப் பயனில்லை என்று ஏன் புனிதப்படுத்துகிறார்? பா.ம.க இனி மதவாத சக்திகளோடு கூட்டணி வைக்காது என்று யாருக்கு நம்பிக்கை ஊட்டுகிறார்?
ஏன் என்பதை முடிந்தால் உணர்ந்து கொள்ளுங்கள். ஆனால், இவையெல்லாம் தற்போது இல்லாத நக்சல்பாரி இயக்கங்களை இல்லாதொழிக்க அல்ல என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். இது முழுக்க முழுக்க தேர்தல் அரசியல் சம்பந்தப்பட்டது; அந்த தேர்தல் பாதையில் இருக்கும் உங்களின் நிழலில் இருந்துகொண்டு உங்களுக்கே குழி தோண்டுவது என்பதை உணர முயற்சியுங்கள்!
அ.மார்க்ஸ் பா.ம.க-வின் மூலம் கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்கிறார்!
பா.மகா-வின் பசுமை தாயகம் எல்லாரும் அறிந்ததுதான். பசுமைத் தாயகம் வோர்ல்ட் லங் பவுண்டேஷன் (World Lung Foundation - WLF) என்ற அமைப்பிடமிருந்து நிதியுதவி பெறுகிறது. இந்த WLF-க்கு அமெரிக்காவின் 7-ஆவது பெரும் பணக்காரரும், நியூயார்க்கின் மேயராக இருந்தவருமான மைக்கேல் பொளூம்பெர்க்கின் தொண்டு நிறுவனத்திலிருந்தும், பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷனிலிருந்தும் நிதியுதவி கிடைக்கிறது.
பசுமைத் தாயகம் World Water Forum அமைப்பிற்குமான உறவு வெளிப்படையானது. World Water Forum கோகோகோலா நிறுவனத்திடமிருந்து நிதியுதவி பெற்று வருகிறது.
இப்படி கார்ப்பரேட்டுகளின் அடியாளாக இருந்துவரும் பா.ம.க எப்படி மக்களுக்கான அரசியல் இயக்கமாக இருக்க முடியும்? தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாது இந்தியா முழுமைக்குமான இன்றைய பிரச்சினையே கார்ப்பரேட்டுகள்தானே? கார்ப்பரேட் பொருளாதார ஆதிக்கமானது கார்ப்பரேட் சர்வாதிகாரமாக நிலைபெற்றிருக்கும் இந்த வேளையில் அதற்கு மாற்று என்பது, மாற்று அரசியல் பொருளாதாரக் கொள்கை அல்லவா?
அ.மார்க்ஸ் ஏன் மாற்று கொள்கையைப் பேசாமல் இராமதாஸ் எனும் தனிமனிதர் மேல் நம்பிக்கை கொள்ளச் செய்கிறார்? சிபிஐ, சிபிஐ(எம்)-க்கு மாறாக, பா.ம.க-வை முன்னிறுத்துகிறார்?
ஏனென்றால், அ.மார்க்ஸ் எப்போதும் தனது பின்நவீனத்துவம் என்னும் ஏகாதிபத்திய சேவைக்கான கருத்துருவாக்கும் அடியாள் வேலைக்கு உண்மையாகவே இருக்கிறார். தோழர்கள்தான் ஏகாதிபத்தியத்தின் அரசியல் அடியாளை ஆசான் என நம்பிக் கொண்டிருக்கின்றனர்.
சரி, வேறு வழியில்லை. நம்மை ஒழித்துக் காட்டாமல் ஓய மாட்டேன் என சபதம் எடுத்திருக்கும் அவருக்கொரு விருதினை தயார் செய்யுங்கள் தோழர்களே!
- திருப்பூர் குணா