உச்ச நீதி மன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் நியமனக் குழுவில் (collegium) பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், மத சிறுபான்மையினரும் இடம் பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறி உள்ளனர். மதுரையில் 18.1.2016 அன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர்கள் சங்கக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய நீதிபதிகள் பி.ஆர்.சிவக்குமாரும், டி.பரந்தாமனும் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட நாடாளு மன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு இட ஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்படும் போது, அச்சட்டங்கள் செயல் படுவதைக் கண்காணிக்கும் அதிகாரம் கொண்ட நீபதிகளை நியமிப்பதில் ஏன் பின்பற்றப்படுவது இல்லை என்று வினாக்களை எழுப்பினர். இன்று பதவி வகிக்கும் 1,200க்கும் மேற்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 18 பேர்கள் மட்டுமே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதைச் சுட்டிக் காட்டிய நீதிபதி சிவக்குமார், இவ்வாறு நீதிபதி நியமனங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் புறக்கணிக்கப் படுவதை உயர்நிலைத் தீண்டாமை என்று கூறினார். இந்த உயர்நிலைத் தீண்டாமையை ஒழிப்பதற்கு நீதிபதிகள் நியமனக் குழுவில் வலிமையான எண்ணிக்கையில் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் இடம் பெற வேண்டும் என்றும் கூறினார்.

supreme court 255மேலும் அரசியல் நிர்ணயச் சட்டத்தின் நோக்கங்களுக்கு எதிரான முறையிலும், களங்கம் கற்பிக்கும் விதத்திலும் குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் இட ஒதுக்கீட்டையும் ஊழலையும் ஒப்பிட்டுப் பேசியதைச் சுட்டிக் காட்டிய அவர் நீதித் துறையின் மனநிலை இவ்வாறு இருப்பது நாட்டிற்கு நல்லது அல்ல என்று கூறினார்.

நீதிபதி ஹரிபரந்தாமன் பேசுகையில், இட ஒதுக்கீடு திறமைசாலிகளைத் தேர்ந்தெடுக்கும் வழியில் உள்ள தடைக் கல் என்ற கருத்து முழுக்க முழுக்க அபத்தமானது என்று கூறினார். அதுவும் கல்வி வணிகமயமாக்கப் பட்டு உள்ள இக்காலத்தில் இக்கருத்தை மாற்றிக் கொள்ளாமல் இருப்பது வியப்பாக உள்ளது என்றும் அவர் கூறினார். இறுதியாக இட ஒதுக்கீட்டுக் கொள்கையை எதிர்ப்பவர்கள் அயோக்கியர்கள் (Scoundrels) என்று கூறிய அவர், இந்து மதம் அடிப்படையில் மாற்றம் அடையாத வரை இட ஒதுக்கீட்டுக் கொள்கை பின்பற்றப்பட்டே ஆக வேண்டும் என்று கூறினார்.

திறமைசாலிகளைத் தேர்ந்தெடுக்கத் துப்பற்ற பொதுப் போட்டி முறைக்கு எதிராகவும், திறமைசாலிகளை ஓரளவிற்குத் தேர்ந்தெடுக்கும் இட ஒதுக்கீட்டு முறைக்கு ஆதரவாகவும் நீதிபதிகள் போர்க் கொடியை உயர்த்தி இருப்பது ஒரு வரவேற்கத் தகுந்த முன்னேற்றமே. நீதிபதிகள் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் உரிமைகளுக்காகப் போராட்ட களத்திற்கு வழி வகுக்கும் போது ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் மவுனம் சாதிப்பது ஏன்?

திறமையற்றவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவதை முற்றிலும் ஒழித்துக் கட்ட, பொதுப் போட்டி முறையையே முற்றிலும் ஒழித்து விடவேண்டும். கல்வி, வேலை வாய்ப்பு, சமூக, பொருளாதார நடவடிக்கைகள் அனைத்திலும், அனைத்து நிலைகளிலும் கல்வியையும் வேலை வாய்ப்புகளையும், இதர பணிகளையும் விகிதாச்சாரப் பங்கீடு முறையில் பிரித்து அளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அனைத்து வகுப்பிலும் உள்ள திறமைசாலிகள் உயர்நிலைகளிலும், அனைத்து வகுப்பிலும் உள்ள திறமைக் குறைவானவர்கள் அடுத்த நிலைகளிலும் வேலை செய்யும் சூழ்நிலை உருவாகும். எந்த வகுப்பு மக்களும் மற்ற வகுப்பு மக்களின் வாய்ப்பைத் தட்டிப் பறித்துக் கொண்டதாகக் குற்றச்சாட்டு எழாது.

பொது மக்களே! நீங்கள் மவுனம் சாதிப்பதை விட்டு விட்டு, உங்களிடம் வாக்கு கேட்க வரும் வாக்கு வேட்டை அரசியல் கட்சிகளிடம் விகிதாச்சாரப் பங்கீட்டு முறையைச் செயல்படுத்தும் அரசியல் கட்சிக்கே வாக்களிப்பதாகக் கூறுங்கள். மற்றவர்களை அண்டவே விடாதீர்கள்.

வாக்கு வேட்டை அரசியல் கட்சியில் இணைந்து இருக்கும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களே! உங்கள் கட்சித் தலைவர்களிடம் விகிதாச்சாரப் பங்கீட்டு முறையைக் கட்சியின் முதல் கொள்கையாக ஆக்கும்படி கேளுங்கள். அவ்வாறு செய்ய மறுக்கும் கட்சிகளில் தொடர்ந்து இருப்பது உங்கள் குழந்தைகளுக்குச் செய்யும் துரோகம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் உரிமைகளுக்காகப் போர்க் கொடி உயர்த்தி இருக்கையில், பொது மக்கள் தங்க் மவுனத்தைக் கலைத்து விட்டுத் தெருவில் இறங்கிப் போராடுவதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.

- இராமியா

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 14.2.2016 இதழில் வெளி வந்துள்ளது)

Pin It