கலைஞர் கருணாநிதி கதை-வசனம் எழுதிய பராசக்தி திரைப்படத்தில் நீதிமன்றத்தில் சிவாஜிகணேசன், “இதுபோன்ற விசித்திரமான வழக்கை இந்த நீதிமன்றம் சந்தித்ததில்லை” என்று பேசுவார். அதுபோல் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா 27.11.2017 அன்று உச்சநீதிமன்றத்தில், “இதுபோன்ற விசித்திரமான வழக்கைச் சந்தித்ததில்லை” என்று கூறினார்.

hadiya 350அப்படியென்ன விசித்திரமான வழக்கு அது? கேரளத்தில் வைக்கத்தைச் சேர்ந்த அகிலா என்ற இந்துப் பெண் இசுலாம் மதத்திற்கு மாறினார்; ஹாதியா என்று பெயரை மாற்றிக் கொண்டார்; ஷபின் ஜகான் என்ற இசுலாமிய இளைஞரைத் திருமணம் செய்து கொண்டார்.

இருபது அகவையைக் கடந்த ஒரு பெண், தான் நம்புகின்ற ஒரு மதத்தைப் பின்பற்று வதும், தான் விரும்புகின்ற ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதும் அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையாகும்.

இதில் என்ன விசித்திரம் இருக் கிறது? ஆனால் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆர்.எஸ்.எஸ்., பாரதிய சனதாக் கட்சி முதலான சங் பரிவாரங்கள் உருவாக்கியுள்ள “முசுலீம் வெறுப்பு” உணர்வும் சிந்தனையும் உயர் அதிகார வர்க்கத்திலும் உயர்நீதித்துறையிலும் ஊடு ருவியிருப்பதால், இது விசித்திரமான வழக்காக மட்டுமின்றி, பயங்கரவாத வழக்காகவும் மாற்றப்பட்டிருக்கிறது.

கேரளத்தைச் சேர்ந்த அகிலா 2010ஆம் ஆண்டில் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். உடன் படிக்கும் நான்கைந்து பெண்களுடன் வாடகை வீட்டில் தங்கியிருந்தார். உடன் பயின்ற இசுலாமியப் பெண்களின் நட்பால் இசுலாமிய மதக்கருத்துகளால் ஈர்க்கப்பட்டார். 2015ஆம் ஆண்டில் இசுலாமிய மதத்திற்கு மாறி, தன் பெயரை ஹாதியா என்று மாற்றிக் கொண்டார். அந்நிலையில் சேலத்தில் தன்னைச் சந்திக்க வந்த தன் தந்தையைச் சந்திக்காமல் தவிர்த்தார்.

அகிலா (ஹாதியா)வின் தந்தை அசோகன் இராணு வத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தன் மகளின் மதமாற் றத்தைத் தடுக்கும் நோக்கத்துடன் 2016 சனவரி 19 அன்று அசோகன் கேரள உயர்நீதிமன்றத்தில் தன் மகள் காண வில்லை என்று ஆட்கொணர்வு விண்ணப்பம் செய்தார். கேரளக் காவல் துறையினர் ஹாதியாவை சேலத்திலிருந்து அழைத்து வந்து உயர்நீதிமன்றத்தில் நேர் நிறுத்தினர். தன் சொந்த விருப்பத்தின் பேரில் தான் இசுலாமிய மதத்தைத் தழுவியதாக ஹாதியா நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதனால் ஹாதியாவின் தந்தையின் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆயினும் அசோகன் 2016 ஆகத்து 17 அன்று கேரள உயர்நீதிமன்றத்தில் தன்மகள் குறித்து மீண்டும் ஒரு மனு கொடுத்தார். அம்மனுவில், தன் மகளை வெளிநாட்டுக்குக் கடத்திச் சென்று, இசுலாமியர் ஒருவருக்குத் திருமணம் செய்து கொடுத்து, அவரைத் தீவிரவாத அமைப்பில் சேர்க்க முயற்சி நடப்பதாக அசோகன் குற்றம் சாட்டியிருந்தார். ஹாதியா வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக அவரைக் காவல் துறையின் கண் காணிப்பு வளையத்துக்குள் வைக்குமாறு உயர்நீதிமன்றம் ஆணையிட்டது.

அதன்பின் 2016 திசம்பர் 19 அன்று ஹாதியா, ஷபின் ஜகான் என்ற இசுலாமிய இளைஞரை முறைப்படி திருமணம் செய்து கொண்டார். 2017 மே 24 அன்று கேரள உயர்நீதி மன்றத்தில் ஹாதியா வழக்கின் விசாரணை நடந்தது. இசுலாமிய இளைஞருக்குத் திருமணம் செய்வித்து, வெளிநாட்டில் தீவிரவாத இயக்கத்தில் ஹாதியா சேர்க்கப் படுவார் என்று அவருடைய தந்தை வழக்குத் தொடுத்துள்ள நிலையில், ஹாதியா, ஷபின் ஜகானைத் திருமணம் செய்து கொண்டது குறித்து ஹாதியாவிடம் கேள்விகளைக் கேட்டது, உயர்நீதிமன்றம். அதன்பின், ஹாதியா - ஷபின் ஜகான் திருமணத்தை இரத்து செய்வதாக அறிவித்தது. ஹாதியா அவருடைய தந்தையின் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்று ஆணையிட்டது.

சிறையில் இருப்பவரை அல்லது ஒரு தீவிரவாதியை ஒரு பெண் திருமணம் செய்வதற்குச் சட்டப்படியான தடை எதுவும் இல்லை என்று உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறி யுள்ளது. அதேபோன்று ஒருவர் தீவிரவாத இயக்கத்தில் இருந்தாலும் அவர் தீவிரவாதக் குற்றச் செயல்களில் ஈடுபடாத வரையில் அவரைக் குற்றவாளியாகக் கருத முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே ஷபின் ஜகான் - ஹாதியா திருமணம் செல்லாது என்று  கேரள உயர்நீதிமன்றம் கூறியதற்கு ஒரே காரணம் அகிலா என்கிற இந்துப் பெண் ஒரு இசுலாமிய இளைஞரைத் திருமணம் செய்து கொண்டதைத் தடுக்க வேண்டும் என்கிற இந்துத்துவ சிந்தனைக்கு ஆட்பட்டுவிட்டதே ஆகும்.

மேலும் கேரள உயர்நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில், ஹாதியா 24 அகவையினராக உள்ள போதிலும் பெண் என்பதால் மனஉறுதி இல்லாதவர் என்றும் மற்றவர்களால் எளிதில் ஏமாற்றப்படக் கூடிய நிலையில் இருப்பவர் (Weak and Vulnerable Person)) என்று கூறியிருக்கிறது. மேலும், இந்திய நாட்டின் மரபுப்படி, ஒரு பெண்ணை முறைப்படித் திருமணம் செய்துகொடுக்கும் வரையில், அப்பெண் பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருப்பதே முறையானதாகும் என்றும் உயர்நீதிமன்றம் கருத்துரைத்துள்ளது. ஒருபெண் திருமணத் துக்குமுன் தந்தைக்கும், திருமணத்திற்குப்பின் கணவனுக் கும், கட்டுப்பட்டவளாக இருக்கவேண்டும் என்று மனுஸ் மிருதி இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் வகுத்த ஆணாதிக்க விதியைத் தீர்ப்பாக வழங்கும் அளவுக்கு உயர்நீதித் துறையில் இந்துத்துவச் சிந்தனைக் கோலோச்சுகிறது.

இந்தியா என்பது இந்துக்களின் நாடு; எனவே இது இந்து மத சாத்திரங்களின் சட்டங்களால் ஆளப்பட வேண்டும் என்கிற சங்பரிவாரங்களின் குறிக்கோளை நிறைவேற்றுவது போன்று உயர்நீதித்துறையின் பல தீர்ப்புகள் இருக்கின்றன. பெண்கள் சுதந்தரமாகச் சிந்தித்து முடிவு எடுக்கும் தகுதியில்லாதவர்கள் - ‘பலவீனமானவர்கள்’ என்று எல்லா மதங்களும் சொல்கின்றன. இதை வழிமொழிவதுபோல் கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இருக்கிறது. 24 அகவை கொண்ட ஒரு ஆண், இவ்வாறு மதம் மாறியிருந்தாலோ, மற்றொரு மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டிருந்தாலோ கேரள உயர்நீதிமன்றம் இதுபோன்ற தீர்ப்பை வழங்கியிருக்குமா?

ஹாதியாவைத் திருமணம் செய்து கொண்டது செல்லாது என்கிற கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஷபின் ஜகான் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இசுலாமிய தீவிரவாதிகள் ‘காதல் புனிதப் போர்’ (லவ் ஜிகாத்) மூலம் தன் மகளை மதிமயக்கி, சிரியாவின் போர் முனைக்கு அனுப்பப் பார்க்கிறார்கள் என்று ஹாதியாவின் தந்தை குற்றம் சாட்டியிருந்தார். அதனால் உச்சநீதிமன்றம் “லவ் ஜிகாத்” குறித்து விசாரிக்குமாறு தேசிய புலனாய்வு முகமைக்கு ஆணையிட்டது. தேசிய புலனாய்வு முகமை உச்சநீதிமன்றத் தில் அதனுடைய அறிக்கையை அளித்தது. ஹாதியா உள்ளிட்ட 11 இந்துப் பெண்களை “லவ் ஜிகாத்” மூலம் இசுலாமிய தீவிரவாதிகளாக மாற்றுவதற்கு முயற்சிகள் நடப்பதாகவும், கேரள காவல்துறையின் விசாரணையில் இதுபோன்ற 89 வழக்குகள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கேரள மக்கள் தொகையில் இசுலாமியர்கள் 25 விழுக்காட்டினராக உள்ளனர். நூறு விழுக்காடு எழுத்தறிவு நிலையை எய்திவிட்ட கேரளாவில், கல்வி, வேலை வாய்ப்பு முதலான பல்வேறு தளங்களில் இந்து-இசுலாமிய-கிறித்துவ இளம் பெண்களும் ஆண்களும் ஒருவரோடு ஒருவர் கலந்து பழகும் சூழல் நிலவுகிறது. அதனால் வேறு மதத்தவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்வது இயல்பாக நிகழக்கூடியதாகும். இவ்வாறு வேறு மதத்தவரைக் காதலிப்ப தையும் திருமணம் செய்து கொள்வதையும் ‘லவ் ஜிகாத்’ என்கிற தீவிரவாதமாகக் காட்ட முயல்வது கடைந்தெடுத்த கயமையாகும்.

கேரள உயர்நீதிமன்றத்தின் தவறான தீர்ப்பினால், ஹாதியா அவருடைய விருப்பத்துக்கும், உரிமைக்கும் எதிரான வகையில் அவருடைய பெற்றோர் வீட்டில் சிறைக்கைதி போல் அடைக்கப்பட்டார். ஹாதியாவை வேறு எவரும் சந்திக்கவிடாமல் தடுப்பதற்காக வீட்டைச் சுற்றிலும் காவல் துறையினர் நிறுத்தப்பட்டனர். அவருடைய தொலைப் பேசியும் உயர்நீதிமன்றத்தால் பறிக்கப்பட்டதால் வேறு எவருடனும் தொடர்பு கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப் பட்டார். ஹாதியாவைச் சந்திக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மாநில மனித உரிமை ஆணையத் தினர் ஹாதியாவைச் சந்திப்பதற்கு, தேசிய புலனாய்வு முகமை அனுமதி மறுத்துவிட்டது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் ஒருவர் ஹாதியாவைச் சந்தித்து அவரை மீண்டும் இந்துவாக மாறும்படி கேட்டதற்கு அனுமதிக்கப் பட்டார். அதேபோல் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் (ஒரு பெண்) ஹாதியாவைச் சந்திக்க தேசிய புலனாய்வு முகமை அனுமதித்தது. “காதல் மிட்டாய்” காட்டி ஹாதியாவை மயக்கிவிட்டார்கள் என்று அவர் செய்தியாளர் களிடம் கூறினார். அரசு நிர்வாகமும், நீதித்துறையும் இந்துத்துவச் சாய்வு மனப்பான்மையுடனே செயல்படுகின்றன என்பது ஹாதியாவின் செய்தியில் அப்பட்டமாகத் தெரிகிறது.

2017 அக்டோபர் 30 அன்று இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் எ.எம். கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் நவம்பர் 27 அன்று ஹாதியாவிடம் நேரில் விசாரணை செய் வதற்காக அவரை அழைத்து வருமாறு ஆணையிட்டனர். அதன்படி, கேரளக் காவல் துறையினர் ஹாதியாவைத் தில்லிக்கு அழைத்துச் சென்ற போது, கொச்சி வானூர்தி நிலை யத்தில் செய்தியாளர்களை நோக்கி ஹாதியா, “இசுலாமிய மதத்திற்கு மாற என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை; ஷபின் ஜகான் என் கணவர்; அவருடன் வாழ விரும்பு கிறேன்; நான் ஒரு முசுலீம்; எனக்கு நீதி வேண்டும்” என்று உரக்கக் கத்தினார்.

27.11.2017 அன்று உச்சநீதிமன்றத்தில் ஹாதியா நேர் நிறுத்தப்பட்டார். அப்போது நடுவண் அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் மனிந்தர் சிங், “தேசிய புலனாய்வு முகமை யின் அறிக்கையின்படி, மூளைச்சலவைச் செய்யப்பட்டு இசுலாமிய தீவிரவாத மனநிலையில் இருக்கும் ஹாதியாவிடம் பேசுவது பயனற்றது; அப்படிப் பேசுவதாக இருந்தாலும், தேசிய புலனாய்வு முகமையின் அறிக்கையை முதலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று வாதிட் டார். தேசிய புலனாய்வு முகமையின் வழக்குரைஞரும் இதே கருத்தை முன்வைத்தார். ஒருமணிநேரத்திற்குமேல் நடந்த இந்த விவாதம் தன்னைப் பற்றியதாக இருந்தபோதிலும் ஹாதியா வாய்திறந்து பேச வாய்ப்பில்லாமல் நின்று கொண்டிருந்தார்.

ஹாதியாவிடம் நேரில் அவருடைய கருத்தைக் கேட்டறிய வேண்டும் என்பதற்காக அவரை அழைத்துவரச் சொன்ன நீதிபதிகளுக்கு முதலில் ஹாதியாவின் கருத்தைக் கேட்கும் வகையில் வழக்கை நடத்த வேண்டும் என்பதுகூட தெரி யாமல் தடுமாறினார்கள். இந்த நிலையில்தான் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, “இதுபோன்ற விசித்திரமான வழக்கைச் சந்தித்ததில்லை” என்று சொன்னார். நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலையிட்ட பிறகே ஹாதியாவின் கருத்தைக் கேட்டனர்.

ஹாதியாவின் விருப்பம் என்ன என்று நீதிபதிகள் கேட்ட போது, “நான் என் கணவருடன் சுதந்தரமாக வாழ விரும்பு கின்றேன்” என்று சொன்னார். “வேறு மதத்தைப் பின்பற்று வது, படிப்பைத் தொடருவது ஆகியவற்றில் ஒரே நேரத்தில் கவனம் செலுத்த முடியுமா?” என்று நீதிபதிகள் கேட்டதற்கு, ஹாதியா, “இந்த நாட்டின் நல்ல குடிமகள் என்ற முறையில் நான் விரும்பும் இசுலாம் மதத்தைப் பின்பற்ற முடிவு செய்துள்ளேன்; அதேநேரத்தில் தொடர்ந்து என் படிப்பை முடித்து நல்ல மருத்துவராக இருப்பேன்” என்று கூறினார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஹாதியா சேலம் ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில் நிலுவையிலுள்ள பத்து மாத பயிற்சிக் காலத்தை முடித்திட உரிய ஏற்பாடுகளைச் செய்துதர வேண்டும் என்றும், கல்லூரியின் முதல்வர் ஹாதியாவின் பாதுகாவலராக இருப்பார் என்றும் ஆணையிட்டனர். இந்த வழக்கின் அடுத்த விசாரணை 2018 சனவரி மாதம் மூன் றாம் கிழமையில் நடைபெறும் என்று அறிவித்தனர்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹாதியா - ஷபின் ஜகான் திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் அதை மேற்கொண்டு விசாரணைக்கு உட்பட்டதாக ஆக்கியிருப்பது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரான தாகும். ஹாதியாவோ, ஷபின் ஜகானோ தீவிரவாதக் குற்றச் செயலில் ஈடுபட்டிருந்தால் தண்டிப்பது என்பது வேறு செய்தி. அதற்காக அவர்களின் திருமணத்தை இரத்து செய்யப்பட்ட நிலையிலேயே நீடிக்க விடுவது அநீதியாகும். கேரள உயர்நீதிமன்றம் ஹாதியாவை வீட்டுச் சிறையில் அடைத்தது. அதிலிருந்து மட்டும் விடுதலை அளித்துள்ளது உச்சநீதி மன்றம். ஆனால் தனியொருவரின் மத உரிமையை, திருமண உரிமையை, சனநாயக உரிமையைப் பாதுகாக்க வேண்டிய இடத்தில் இருக்கும் உச்சநீதிமன்றம், இந்துத்துவ ஆட்சியில், ஹாதியா வழக்கில் என்ன மாதிரியான முடிவை எடுக்கப் போகிறது என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

இராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றம் 15.12.2017 அன்று மதமாற்றத்தை அனுமதிப்பதற்காகப் பத்து வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவித்துள்ளது. திருமணத்திற்காகக் கட்டாய மத மாற்றம் செய்வதைத் தடுப்பதற்காகவும், சமூகத்தில் அமைதியை நிலைநாட்டுவதற் காகவும் இந்தப் பத்து விதிகளை அறிவித்திருப்பதாக உயர்நீதி மன்றம் கூறியுள்ளது. மத மாற்றம் குறித்த விதிமுறைகளை அரசு வகுக்கும் வரையில் இந்த வழிகாட்டி நெறிமுறைகள் நடப்பில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

hadiya police 350ஜோத்பூரைச் சேர்ந்த 22 அகவையினரான ஆரிஃபா முசுலீமாக மதம் மாறி, ஒரு இசுலாமிய இளைஞரைத் திருமணம் செய்து கொண்டார். அகிலா மதம் மாறிய போது ஆட்கொணர்வு

மனு தாக்கல் செய்யப்பட்டது போலவே இதிலும் செய்யப்பட்டது. நவம்பர் மாதம் ஆரிஃபா பர்தா அணிந்து கொண்டு உயர்நீதிமன்றத்திற்கு வந்து, தன் சொந்த விருப்பத்தின் பேரில் மதம் மாறியதாகவும், திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கோபால் கிருஷ்ணன் வியாஸ், வி.கே. மாத்தூர் ஆகியோர் ஆரிஃபாவை முதலில் பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பினர். இறுதியில் அவருடைய கணவருடன் செல்ல அனுமதித்தனர்.

இந்த வழக்கின் 38 பக்கங்கள் கொண்ட இறுதித் தீர்ப்பில் திருமணத்திற்காகக் கட்டாய மதமாற்றம் செய்வதைத் தடுப்பதற்காக நீதிபதிகள் பத்து வழிகாட்டி நெறிமுறைகளை அறிவித்துள்ளனர். ஒரு பெண்ணோ அல்லது ஆணோ மதம் மாற விரும்பினால் அதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்குத் தெரிவிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அதைப் பற்றி அறிவிப்பு பலகையில் வெளியிடுவார். அவ்வாறு அறிவிக்கப் பட்ட ஒரு கிழமை கழித்துதான் மதம் மாறியவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

மதம் மாறியவருக்குத் திருமணம் செய்து வைக்கும் மதப்புரோகிதர், மதமாற்றம் குறித்து மாவட்ட ஆட்சியருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இந்த வழிகாட்டி முறைகளைப் பின்பற்றாத நிலையில், இதனால் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தால், அத்திருமணம் செல்லாததாக அறிவிக்கப்படும் என்று அத்தீர்ப் பில் கூறப்பட்டுள்ளது.

தான் விரும்புகின்ற மதத்தைப் பின்பற்றுவதற்கான உரிமை அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமை பகுதி யில் உறுதிசெய்யப்பட்டுள்ள போதிலும், இந்து மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறுவதைத் தடுப்பதே இராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் நோக்கமாக உள்ளது.

இந்தியாவில் இன்று 130 கோடி மக்கள் உள்ளனர். இவர்களில் 30 கோடிப் பேர் இசுலாமியர்கள்; 3 கோடிப் பேர் கிறித்தவர்கள். மற்றவர் இந்துக்கள். எனவே ஒரு மதத்தைச் சேர்ந்தவர் இன்னொரு மதத்தைச் சேர்ந்தவரைக் காதலிப்பதும், திருமணம் செய்து கொள்வதும் இயல்பாக நிகழ வாய்ப்பு உள்ளது. இதை மதங்கள் சார்ந்த பிரச்சனையாக மதவெறி சக்திகள் பார்க்கின்றனர்.

எனவே திருமணம் என்பதை மத அதிகாரத்தின் பிடி யிலிருந்து விடுதலை செய்ய வேண்டும். எல்லாத் திருமணங் களும் அரசு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதைச் சட்டமாக்க வேண்டும். திருமணங்களைப் பதிவு செய்வது என்பது கட்டாயம் என்ற நிலை ஏற்படும்போது, மதச் சடங்குகளின்படி திருமணம் செய்வது என்பது படிப்படியாகக் குறையும். சாதி மாறி, மதம் மாறி திருமணம் செய்து கொள்ளும் நிலையும் பெருகும்.

Pin It