ஜெயலலிதாவின் முதல் மூன்று மாத ஆட்சியை கோர்ட்தான் நடத்தியது என்றால் அது மிகையாகது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் முதலில் கை வைக்கப்பட்டது முந்தைய தி.மு.க ஆட்சியால் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் தான். அதைத் தொடர்ந்து சமச்சீர்க் கல்வி தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போது பழைய பாடத்திட்டத்திற்கான புத்தகங்களை அச்சிடுவது நீதிமன்ற அவமதிப்பு என்று உயர் நீதிமன்ற நீதிபதி அதிமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டதற்கு உயர் நீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

jayalalitha 285சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்று சொல்லவே வேண்டாம். அஇஅதிமுக வின் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா வீட்டிலேயே கொள்ளை போனது. ஜெயாவின் நெருங்கிய தோழி சசிகலா மற்றும் சசிகலாவின் கணவர் நடராஜன் உட்பட கட்சியின் சொந்தங்கள் அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, பின்னர் சசிக்கு மட்டும் பொது மன்னிப்பு கொடுத்து, மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்ட நாடகமும் நடந்தது.

ஜெயலலிதா எப்படிப்பட்டவர் என்பதற்கு அவருடைய அரசியலை சற்றே பின்னோக்கி பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். எம்.ஜி.ஆர் தனது செல்வாக்கு வளருவது கண்டு பொறாமைப்படுகிறார் என்றும், இனி அவரால் முதல்வராக இயங்க முடியாது என்றும், அதனால் தன்னை முதல்வராக்குங்கள் என்றும் அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களுக்கு தன் கைப்பட கடிதம் எழுதியவர் தான் ஜெயலலிதா.

தம்பி வா, தலைமை ஏற்க வா என்று அறிஞர் அண்ணாவால் அழைக்கப்பட்ட நடமாடும் பல்கலைக்கழகமான நாவலரை உதிர்ந்த மயிர் என்ற உலகப்புகழ் பெற்ற வார்த்தையால் வசைபாடியவர். எம்.ஜி.ஆருக்கு பாலில் விஷம் கொடுத்து கொல்ல முயன்றதாக ஜானகி மீது பழி போட்டவர். எம்.ஜி.ஆரின் முன்னாள் நாயகி சரோஜா தேவியை மோர்காரி என்று வசைபாடியவர். 'ராஜீவ்காந்தியைக் கொன்ற கொலையாளி கருணாநிதியுடன் தேர்தல் கூட்டு வைத்த சோனியாவை பத்தினியா' என்று கேட்டு அவரது இத்தாலி பூர்வீகத்தை கேலி செய்தவர். தன்மீது சொத்துக் குவிப்பு வழக்கு போடச் செய்தார் என்பதற்காக உயர்நிதீமன்ற வளாகத்துக்கு அதிமுக மகளிர் அணியை ஏவிவிட்டு சுப்ரமணியசாமி முன்பாக ஆடையை தூக்கிக் காட்டி ஆபாசக் கூச்சல் போடச் செய்தவர்.

சொத்து குவிப்பு வழக்குக்கு அனுமதியளித்தார் என்பதற்காக ஆளுநர் சென்னா ரெட்டி தன்னை மானபங்கப்படுத்த முயன்றதாக பகிரங்கமாக புளுகியவர். 'பணம் வாங்குவதவற்காகவே தம்மை கற்பழித்து விட்டதாக போலிஸ் மீது புகார் கூறுகிறார்கள்' என்று வெட்கமின்றி, மனசாட்சியின்றி தமிழ்ப் பெண்கள் மீது பழிபோட்டவர்தான் இந்த ஜெயலலிதா..!

தருமபுரி பஸ் எரிப்பு சம்பவம் குறித்து ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையின் ஒரு பகுதியில் "தங்கள் கட்சிக்காரர்களுக்கும் தருமபுரி பஸ் எரிப்புக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இச்செயல் நடந்த போது சன் டி.வி. கேமரா குழு சரியாக அங்கிருந்தது எப்படி என்று சந்தேகம் எழுகிறது, இதை திமுகவைச் சேர்ந்த சமூக விரோதிகள் செய்துவிட்டு பழியை தம்மீது போடுவதாகவும், வேண்டுமென்றே தங்களை குற்றம்சாட்டும் நாளிதழ்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் குறிப்பிட்டார். இப்படி ஒரு அறிக்கையை ஒருவர் வெளியிடுகிறார் என்றால் அவர் உண்மையிலே மனசாட்சியுடனா நடந்து கொள்வார்?

தமிழக அரசின் டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் மதுபானக் கடைகளை மூட வலியுறுத்தியும், மாநில முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தும் தான் சார்ந்திருந்த மக்கள் கலை இலக்கியக் கழகம் மூலமாக பாடல்களை பாடிய கோவனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சாதனை படைத்தவர்தான் இந்த ஜெயலலிதா. முதல்வருக்கு எதிராக கருத்து வெளியிட்டதாகக் கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் பல்வேறு பத்திரிகை ஆசிரியர்கள் மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

தமிழக அரசுக்கும், முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியாகி உள்ளது என்றும், இதனை வெளியிட்ட ஆனந்த விகடன் ஆசிரியர், பதிப்பாளர் ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஒரு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. விஜயகாந்த் மனு மீதான விசாரணையில் ‘ஏன் தமிழகத்திலிருந்து இவ்வளவு அவதூறு வழக்குகள்?’ என்று உச்ச நீதிமன்றம் வினா எழுப்பியுள்ளது. இது போன்ற வழக்குகள் இந்த மாநிலத்திலிருந்து அதிகம் வருகின்றன... ஏன்? என்று கடுமையான கேள்விகளை தமிழக அரசுக்கு வைத்துள்ளது.

சூடு சொரணை உள்ள அரசாக இருந்தால் திருத்திக் கொள்வார்கள். மேலே சொன்ன உதாரணங்களை வைத்து நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். மாற்றம் மட்டுமல்ல மாறாதது, ஜெயலலிதாவும்தான்.

- தங்க.சத்தியமுர்த்தி

Pin It