அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதன் மூலம் கோயில் கர்ப்பக்கிரகத்தில் நிலைநாட்டப்பட்டுள்ள ‘சூத்திர’ இழிவை ஒழிக்க பெரியார், தன் வாழ்நாள் இறுதியில் போர்க்களத்தில் நின்றார். 1971 அன்று கலைஞர் அரசு இதை நிறைவேற்ற சட்டசபையில் சட்டம் இயற்றியது. சட்டத்தை எதிர்த்து பார்ப்பனர்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து முடக்கி விட்டார்கள்.

எம்.ஜி.ஆர். முதல்வரான பிறகு - பெரியார் நூற்றாண்டையொட்டி, இது பற்றி ஆராய நீதிபதி மகாராஜன் தலைமையில் ஒரு குழுவை நியமித்தார். அந்தக் குழு அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஆகமங்கள் தடை விதிக்கவில்லை என்று கூறியது. பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, திருச்சி கம்பரசம் பேட்டையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் ‘வேத - ஆகம’ பயிற்சிக் கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

அப்போது ஜெயலலிதாவை ‘சமூகநீதி காத்த வீராங்கனையாக்கி’ புகழாரம் சூட்டிக் கொண்டிருந்த தி.க. தலைவர் கி.வீரமணி, இதற்கும் ஜெயலலிதாவுக்கு பாராட்டுரைகளை வழங்கிவிட்டு, பிரச்சினையை முடித்துக் கொண்டார். உண்மையில் கம்பரசம்பேட்டையில், அனைத்து சாதியினருக்கும் பயிற்சி தரப்படவில்லை. பார்ப்பனர்கள் மட்டுமே பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தனர்.

பார்ப்பன ஜெயலலிதா தொடர் நடவடிக்கை எதையும் மேற்கொள்ளாத நிலையில், பிரச்சினை கிடப்பில் போடப்பட்டது. திராவிடர் கழகமும் இதை மறந்தே போனது. அதன் பிறகு பெரியார் திராவிடர் கழகம் தான் 2003 ஆம் ஆண்டு ஜூலையில் புதுவையில் நடந்த பெரியார் திராவிடர் கழக மாநாட்டில் இந்தப் பிரச்சினையை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து, போராட்டத்துக்கு தயாரானது.

2004 ஜனவரி 30 ஆம் தேதி காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்குள் கருவறை நுழைவுப் போராட்டத்தை நடத்தி, ஆயிரத்துக்கும் அதிகமான பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் கைதானார்கள். அதற்குப் பிறகு தான் பிரச்சினை வெளி வரத் தொடங்கியது. திராவிடர் கழகம் அதற்குப் பிறகு தான் விழித்துக் கொண்டு இதைப் பேசத் தொடங்கியது. கலைஞர் ஆட்சி மீண்டும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் கொண்டு வந்தது.

இப்போது தமிழக சட்டசபையில் 25.4.2008 அன்று அற நிலையத் துறை மான்ய கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய அறநிலையத் துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன், இது தொடர்பான தகவல்களைத் தெரிவித்துள்ளார். தற்போது 6 இடங்களில் துவங்கப்பட்டு நடைபெற்று வரும் அர்ச்சகர் பயிற்சி நிலையங்களில் மொத்தம் 207 பேர் அர்ச்சகர் பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் இடஒதுக்கீட்டுக் கொள்கையின்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த 76 பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த 55 பேரும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த 34 பேரும் பயிற்சியில் சேர்க்கப்பட்டுள்ளனர். வரும் ஜுன் திங்களோடு பயிற்சி முடிந்து, கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

10 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த 15 முதல் 24 வயதுள்ள இளைஞர்கள் பயிற்சியைப் பெற்று வருகிறார்கள். திருவள்ளூர் மாவட்டம் நரசிங்கப்புரத்தைச் சார்ந்த கோகுலகிருஷ்ணன் என்ற பயிற்சி பெறும் இளைஞர் கூறுகையில் “நான் தீட்டுப்படும் சாதி; மாமிசம் சாப்பிடுகிறவன்” என்று கூறி, எனது ஊர்கோயிலில் நான் பூசாரியாக இருக்கக்கூடாது என்று, சாதி வெறியர்கள் என்னை விரட்டி அடித்தனர். இப்போது நான் முறையாக பயிற்சி பெற்று, நீதிமன்ற அதிகாரத்துடன் அர்ச்சகர் பயிற்சிப் பெற்றுள்ளேன். மீண்டும் அதே கிராமத்தில் அர்ச்சகர் ஆக வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று கூறுகிறார்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நடக்கும் அர்ச்சகர் பயிற்சி வகுப்பில் - அனைத்து சாதிகளையும் சேர்ந்த 32 இளைஞர்கள் மிகவும் ஆர்வத்தோடும், அர்ப்பணிப்போடும் பயிற்சி பெற்று வருகிறார்கள் என்று, இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பி.ஜெயராமன் கூறுகிறார். இவர்கள் அனைவரும் அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, சைவமாகிவிட்டதோடு, பூணூலையும் அவர்களாகவே போட்டுக் கொண்டு விட்டார்களாம்.

தமிழ்மொழி வழியாகவே அவர்களுக்கு பாடல்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. கோயில் நுழைவுக்கே போராட்டம் நடத்த வேண்டியிருந்த சமூகத்தில் கோயில் நுழைவு உரிமைச் சட்டம் 1947 இல் வந்தது. இப்போது தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் கோயில் அர்ச்சகர்களாகும் உரிமை பெற்று அர்ச்சகர்களாகும் நிலை - தமிழ்நாட்டில் உருவாகியிருக்கிறது. இது பார்ப்பன வர்ணாஸ்ரமத்தின் மீது விழுந்த மரண அடியாகும்.

ஆள்பவனிடம் பேசும் உரிமை - தங்களுக்கும், தங்களது சமஸ்கிருதத்துக்கு மட்டுமே உண்டு என்ற பார்ப்பன இறுமாப்பு, தகர்க்கப்பட்டுள்ளது. பெரியார் கொள்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

Pin It