வள்ளலாரின் அருட்பாடல்கள் பாமரனையும் கேட்டு பரவசமடையச் செய்யும்; மனிதர்களின் மனம் பக்குவமடைந்து நல்ல சிந்தையுடன் நடைபயிலத் தூண்டும்; எளிமையும் இனிமையும் புதுமையும் இயைந்த தமிழையே வழங்கிடும்.

Vallalarதமிழ் மொழியில், ‘உரைநடை ஒழுக்கம்’ பேணப்படாத காலத்தில் வள்ளலார் ‘மனுமுறை கண்ட வாசகம்’, ’ஜீவகாருண்ய ஒழுக்கம்’, உபதேசங்கள், வியாக்யானங்கள், விண்ணப்பங்கள், கடிதங்கள், அழைப்புகள், கட்டளைகள், மருத்துவக் குறிப்புகள் எனப் பல பகுதிகளைக் கொண்ட உரைநடைக் களஞ்சியத்தைத் தமிழில் இயற்றி அளித்துள்ளார்.

வள்ளலாரின் முதல் உரைநடை நூல் 1861 ஆம் ஆண்டிலேயே பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. வள்ளலாரின் சீடரும், பெரும்புலவருமான தொழுவூர் வேலாயுதனார் 1867 ஆம் ஆண்டு, ‘திருஅருட்பா’ திருமுறைகளைத் தொகுத்து வெளியிட்டார். மேலும், ‘திருஅருட்பா’ ஆறு திருமுறைகளாகப் பதிப்பிக்கப் பெற்று உள்ளது. ஐந்தாம் திருமுறை 1880 ஆம் ஆண்டும், ஆறாம் திருமுறை 1885 ஆம் ஆண்டும் வெளியிடப்பட்டது. அவை, ‘திருஅருட்பா உரைநடைப் பகுதி’ என அழைக்கப் பெற்றது. ‘திருஅருட் பிரகாச வள்ளலார்’ எனும் சீரிய பெயரை வள்ளலாருக்கு வழங்கியவர் தொழுவூர் வேலாயுதனார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊரன் அடிகள், திருஅருட்பாவைக் கால வரிசைப்படி, பாடல்களைச் சந்தி பிரித்து விளங்குமாறு வகைப்படுத்தி, அரும்பொருள் அகராதி முதலியவை தொகுத்து, வனப்பும், சிறப்பும் மிக்க வசனப் பகுதியையும் குறிப்புகளோடு பதிப்பித்துள்ளார்.

‘அருட்செல்வர்’ நா.மகாலிங்கம், ‘இராமலிங்கர் பணி மன்றம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, ஊரன் அடிகளிடம் அனுமதி பெற்று, திருஅருட்பா பாடல்களில் முதல் ஐந்து திருமுறைகளை ஒரு பகுதியாகவும், ஆறாம் திருமுறையை ஒரு பகுதியாகவும், உரைநடைகளை ஒரு பகுதியாகவும் மூன்று தொகுதிகளாக வெளியிட்டு வள்ளலாரின் கருத்துக்கள் பரவிட உதவியுள்ளார்.

‘ஒழிவிலொடுக்கம்’ ‘தொண்டை மண்டல சதகம்’ ‘சின்மய தீபிகை’ முதலிய தமிழ் நூல்களை வள்ளலார் பதிப்பித்துள்ளார்.

‘தெய்வமணிமாலை’, ‘கந்தர் சரணப்பத்து’ முதலிய பக்திப் பாடல்கள் அடங்கிய நூல்களையும் வள்ளலார் தமிழுலகுக்கு அளித்து உள்ளார்.

“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற பாடல்வரி வள்ளலாரின் கொள்கை அறிவிப்பாக அமைந்துள்ளது. மக்களின் பசிப் பிணியைப் போக்கிட வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தை முன்வைத்து, உயிர்களிடத்தில் அன்பு செய்தல் வேண்டும் என்பதை உலகுக்கு அறிவித்தார்.

                “கூவுகின்ற சமயம் எலாம்

                                மதங்கள் எலாம் பிடித்துக்

                கூவுகின்றார் பலன் ஒன்றும்

                                கொண்டறியார் வீணே”

என்ற பாடல் வரிகள் மூலம் சமூகம் சாதியாலும், மதத்தாலும் பிளவுப்பட்டுக் கிடப்பதையும், சாதி, மத வெறியால் மக்களுக்கு பயன் ஏதும் கிடையாது என்பதையும் அக்காலத்திலேயே வலியுறுத்தி உள்ளார்.

“கலையுரைத்த கற்பனையே

                நிலை எனக் கொண்டாடும்

கண்மூடி வழக்கம் எலாம்

                மண்மூடிப் போக”

என்ற பாடல் வரிகள் மூலம் சமுதாயத்தில் நிலவும் மூடப்பழக்கங்கள், சடங்கு சம்பிரதாயங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை ஓங்கி உரைத்துள்ளார்.

வள்ளலாரின் சிந்தனைகள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளன. நாள்தோறும் சாதி, மதச் சண்டைகள் நடந்தேறி வருவதும் மக்களின் ஒற்றுமை பாதிக்கப்படுவதும் வெட்கக்கேடானது. மூடப்பழக்கங்கள் விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சி வளர்ந்து வருவது கண்கூடு. படித்தவர்கள் பகுத்தறிவைப் புறந்தள்ளிவிட்டு மூடநம்பிக்கைகளில் மூழ்கித் திளைப்பது மனித வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக விளங்கி வருகிறது. சமய வேற்றுமைகளையும் சாத்திரக் குப்பைகளையும் கண்மூடிப் பழக்கங்களையும் கண்டித்துள்ளார் வள்ளலார். வள்ளலார் முன் வைத்த கருத்துக்களும், சிந்தனைகளும் சமுதாயத்தில் நிலைபெற வேண்டியவை.

வள்ளலார் சமுதாயச் சீர்திருத்தக்காரராகவும், தமிழ் வளர்த்த அருட் கவிஞராகவும், சித்த மருத்துவக் குறிப்புகள் அளித்தவராகவும், சமுதாய மாற்றம் காணும் சித்தராகவும் விளங்கி உள்ளார்.

வள்ளலார் சென்னையில் வாழ்ந்த காலத்தில், அன்றிருந்த சங்கராச்சாரியார், “சமஸ்கிருதம், எல்லா மொழிகளுக்கும் தாய் மொழி, உயர்ந்த மொழி” எனக் கூறியதை அறிந்து கொதிப்படைந்தார்; அவரும் அவரது நண்பர்களும் உண்மை விளக்கம் பெற வேண்டி சங்கராச்சாரியாரிடம் நேரில் சென்று, “சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்மொழி ஆகுமெனில், தமிழ் மொழி எல்லா மொழிகளுக்கும் தந்தைமொழி ஆகும்” என்று விளக்கினார். அத்துடன், ‘தமிழ்’ என்னும் சொல்லுக்கு உரை விளக்கம் செய்யும் கட்டுரையும் வரைந்தார் வள்ளலார் என ஊரன் அடிகள் ‘இராமலிங்கரும் தமிழும்’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து வள்ளலார் தமிழ் மொழியின் மீது கொண்டிருந்த பற்றும், ஈடுபாடும் விளங்கும்.

வள்ளலார் ‘சமரச சன்மார்க்கங்க சங்கம்; ‘சத்திய ஞான சபை’, ‘சத்திய தருமச் சாலை’ என முப்பெரும் அருள் நிலையங்களை நிறுவிச் சென்றுள்ளார்.

                வள்ளலாரின் புகழ் தமிழ் உள்ளவரை நிலைத்து நிற்கும்.

- பி.தயாளன்

Pin It